Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

எத்தனை காலம்தான் ஏமாறுவோம் இந்த நாட்டிலே?

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களால் மறக்கப்பட்டுக் கவனிக்கப்படாமலும், கண்டு கொள்ளப்படாமலும், அனாதரவாக சிறையில் வாடி வதங்கிய இளைஞர்களின் "சாகும் வரையிலான உண்ணாவிரதம்" இலங்கையின் அரசியல் களத்தில் பலவிதமான நாடகங்களையும் - உணர்ச்சி வசப்படும் வசனங்களையும் - வாக்குறுதிகளையும், வீரப்பிரதாபப் பிரகடனங்களையும் எம் முன்னே தாராளமாக வழங்கி விட்டுச் சென்றுள்ளது. எனினும் அரசியல் கைதிகளின் ஒரேயொரு கோரிக்கையான பூரண விடுதலை நிறைவேற்றப்படவில்லை.

இன்று இலங்கை அரசாங்கம் அடுத்த 2016ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. தென்னிலங்கையில் அது தொடர்பாக கருத்துக்கள்-கண்டனங்கள்-ஆர்ப்பாட்டங்கள் காணப்படுகின்றன. நாட்டு மக்களின் அன்றாட வாழ்வாதாரங்களின் அடிப்படையே அந்த வரவு-செலவுத் திட்டத்தில்தான் தங்கியுள்ளது. ஆனால் இது பற்றிய எந்தவிதமான கரிசனையோ கண்ணோட்டமோ வட கிழக்கில் காட்டப்படவில்லை.

இலங்கையில்,

நீண்ட காலமாக கல்வி காசுக்கு விற்கப்படும் சந்தைப் பொருள் ஆக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரம் ஏழை மக்களுக்கு எட்டாக் கனியாக ஆக்கப்பட்டுள்ளது.

விவசாயம் சர்வதேச பரிசோதனைக் கூடங்களுக்கு ஏற்புடையதாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.

மீன்பிடி வளங்கள் உள் நாட்டு அபிவிருத்திக்குப் பதிலாக வெளிநாட்டுக் குத்தகைக்கு விடப்படுகிறது.

இயற்கைக் காடுகள் அழிக்கப்படும் விதமாக காணிகள் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு ஏலம் விடப்படுகிறது.

சுற்றுலாத் துறை என்ற பெயரில் நாட்டின் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுத்தப்பட்டு வருகிறது.

நாட்டு மக்களின் இறைமை அந்நியரிடம் மேலும் ஆழமாக அடகு வைக்கப்படுகிறது.

இவைகள் யாவுமே வட கிழக்கு மக்களின் அன்றாட வாழ்வுடன் சம்பந்தப்பட்ட விடயங்களே. ஆனால் நாங்களோ எமது வாழ்வு பற்றியோ எமது இளைய தலைமுறையினரின் எதிர்காலம் பற்றியோ கவலைப்படவில்லை. பாதிக்கப்பட்டுப் பராமரிப்பு இன்றி வாடும் எமது மக்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை. எம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட சபை உறுப்பினர்களோ தங்களுக்குள்ளே பதவிப் போட்டிகளிலும் பங்குச் சண்டைகளிலும் ஈடுபட்டு தினமும் அறிக்கைப் போர் நடாத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அமைதியுடன் வாழும் நயினாதீவைத் தூக்கிப் பிடித்து வைத்தபடி போர் முரசம் கொட்டுகிறார்கள் எமது மக்கள் பிரதிநிதிகள். இலங்கை அரச கட்டமைப்பின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பாராளுமன்றம் சென்று ராஜதந்திர பாஸ்போட் பெற்று உலக வலம் வருபவர்கள் - இலங்கை அரசாங்கத்தின் ஊதியத்தையும், அனுகூலங்களையும், நிதி ஒதுக்கீடுகளையும் ஒழுங்காகப் பெற்றுக் கொள்பவர்கள்; இப்போது வவுனியா மாவட்டச் செயலாளர் தமிழராக இருக்க வேண்டும் என அடம் பிடிக்கிறார்கள். தப்பித் தவறி அரசாங்கம் நாளை ஒரு தமிழரை நியமித்தாலும் கூட "இந்தத் தமிழர் வேண்டாம். அந்தத் தமிழர்தான் வேணும்" என்று அதற்கும் கொம்பு முறிப்பார்கள்.

மக்களாகிய நாமோ "நமக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை. எதிராளிக்குச் சகுனப்பிழை ஆவதே முக்கியம்" என்ற பரம்பரை பாணியில் அறிவைக் கோட்டை விட்டு அவர்கள் பின்னால் அணி திரண்டு ஆர்ப்பரித்து அழிவுப் பாதையிலேயே தொடர்ந்தும் பயணிக்கிறோம். எமது மத்தியில் உண்ண உணவின்றி, உடுப்பதற்கு உடையின்றி, உறங்குவதற்கு இடமின்றி, கல்வி கற்க வழியின்றி லட்சக் கணக்கானோர் அந்நியரின் தயவை வேண்டி கையேந்தி நிற்பது தெரிந்தும்; அது பற்றிய கரிசனை கொள்ளாமல் அதனைப் புறந்தள்ளி விட்டு ஒருமாவட்டச் செயலாளருக்காக அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுவதற்காகவா நாம் இவர்களைத் தெரிவு செய்தோம்.

சுயநலத்தால் சுயம் இழந்தவர்கள் நாம். நமது தவறுகளை மறைக்க மற்றவர்கள் மேல் குற்றம் சுமத்துகிறோம். அவரவர் நலன்கள் கருதி அடுத்தவரை மிதித்து நமக்கான அதிகாரம் தேடும் அரசியலை ஊக்குவிக்கிறோம். இந்த அதிகாரம் தேடும் அரசியலில் நீதி நியாயம் என்பது கிடையாது. நம்மவர் பலர் அன்று காணாமல் போனதற்கும், கடத்தப்பட்டதற்கும், கொல்லப்பட்டதற்கும் 1970-80களிலேயே நாம் அக்கறை காட்டியிருந்தால்; இன்று ஜ.நா., அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா என கெஞ்ச வேண்டிய நிலை எமக்கு வந்திருக்காது.

கறுப்புக் கொடி, கர்த்தால், கடையடைப்பு என ஆரம்பித்த அரசியல்தான் இன்று எம்மை இன்றைய கையறு நிலைமைக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளது. மரணங்களைக் காட்டி பழிக்குப் பழி உணர்வூட்டும் அரசியல் பண்பாடு சுய இருப்பை அழிக்குமே ஒழிய சுதந்திர வாழ்வைத் தராது.

இலங்கையின் சாதாரண மக்கள் மத்தியில் ஒரு பரந்தளவிலான மனந்திறந்த உரையாடலும் கருத்துப் பரிமாறலும் இதுவரை சிங்கள-தமிழ் அரசியல்வாதிகளால் திட்டமிட்ட வகையில் தவிர்க்கப்பட்டே வந்துள்ளது. இன்று அதனை முறியடிக்கும் வகையில் நீதி நியாயம் வேண்டிய போராட்டங்களில் இனபேதம் தாண்டி மக்கள் இணைந்து செயற்படுவதை நாம் காண்கிறோம். மாறி மாறி வரும் அரசாங்கங்களின் பிரித்தாளும் தந்திரத்தை இந்த மக்களின் இணைவாக்கம் ஒன்றேதான் முறியடிக்க முடியும். அப்படி முறியடிப்பதன் ஊடாகவே எமது நாட்டின் இரத்தக்களரிக் கலாச்சாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கமுடியும்.

எமது வாழ்க்கையின் உத்தரவாதத்தை நாங்களே எங்கள் கையில் எடுத்துக் கொள்ள ஏதுவாக இன்று எம்மிடையே முகிழ்ந்து வரும் "இணைவாக்கம்" என்ற சமூக இயக்கத்தில் நாமும் ஒருவராவோம். நீதி - நியாயம் - மனிதநேயம் - மனிதாபிமானம் உள்ள மக்களுக்கு மொழி மத சாதி பால் உயர்வு தாழ்வு என்பது ஒரு தடைச்சுவர் அல்ல.

அழிவு நோக்கிய அரசியலை அடியோடு நிராகரிப்போம்.

ஆக்கபூர்வ அரசியலுக்குக் கைகொடுப்போம்.