Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மூளை சிந்திக்கும் திறனை இழந்ததன் அறிகுறியே, இனவாதமும் - மதவாதமும்

சொந்த இனத்தின் இனவாதம் குறித்தும், சொந்த மதத்தின் மதவாதம் குறித்தும் கருத்துச் சொல்ல முனையாதவன், இனவாதியாகவும் மதவாதியாகவும் இருக்கின்றான். சாதாரண மனிதன் முதல் அரசியல்வாதிகள் வரை, சொந்த இன-மத ஒடுக்குமுறையை ஆதரிக்கின்றவர்களாக, பிற இன-மத வாதங்களை மட்டும் காட்டி அதை எதிர்ப்பவராகவும் இருக்கின்றனர். இதுவே சமூகத்தின் சிந்தனைமுறையாக இருக்கின்றது.

தான் அல்லாத பிற சமூகம் குறித்தும், இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் எதிரான பெரும்பாலான கருத்துகளும், இனவாதமாகவும் மதவாதமாகவும் இருக்கின்றது.

அனைத்தும் தனக்கில்லை பிறருக்கே என்று கூறுகின்ற தர்க்கங்களும், வாதங்களும், மனிதத் தன்மைக்கு வேட்டு வைப்பதுடன், சமூகத்தில் புரையோடிக்கிடக்கின்றது.

மதத்தின், இனத்தின், சாதியின் பெயரில் வன்முறையில் ஈடுபடும் ஒருவன், தன் மதத்தின் பெயரில் மதவாதியாக, தன் இனத்தின் பெயரில் இனவாதியாக, தன் சாதியின் பெயரில் சாதியவாதியாக இருக்கின்றான். அவன் மட்டுமா இல்லை, சமூக வலைத்தளங்கள் எங்கும் இந்த வக்கிரப்புத்தியே இருக்கின்றது. இது பிறரை குற்றம் சாட்டுகின்ற வன்மமாகவும், வன்முறையாகவும் இருக்கின்றது. அத்துடன் அவரவர் கருத்தாக வன்மம் பெற்று, வக்கிரமடைகின்றது.

 

"மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று சும்மா இருக்கவிடாது" என்ற சொல்லடை போல், சமூக வலைத்தளங்கள் இனவாதத்தையும் மதவாதத்தையுமே விதைக்கின்றது.

இந்த விடையங்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களின் கருத்துச் சொல்லும் போது, தன்னை முதன்மைப்படுத்தி வேறுபடுத்திக் காட்டும் குறுகிய சிந்தனைமுறையே முதன்மை பெற்று, சமூகப் பொதுமையை காண மறுக்கின்றது. தன்னை மையப்படுத்தி பிறரை மறுக்கும் சிந்தனை, மனிதனை பொதுமையாக்கி முன்னிறுத்தும் சிந்தனையை மறுத்து விடுகின்றது. தன்னை முதன்மைப்படுத்தி அடையாளப்படுத்த இனம், சாதி, மதம்.. என்று குறுகிய அடையாளங்கள் மட்டும் தான், முதன்மை பெற்றதாக இருக்கின்றது. மனிதனை பொதுமைப்படுத்தி பார்க்கும் சமூக அறிவும், அது குறித்த கற்றலும் - அதற்கான சமூக நடைமுறையும் அவசியம். இதுவல்லாத கருத்துகள் தனியுடமை சமூகத்தின் இயல்பான சிந்தனை சார்ந்த, மனித வெறுப்பில் பிறப்பதே.

இதன் பொருள் சமூக விடையத்தை ஆராய்ந்து கற்று கருத்துச் சொல்வதில்லை, மாறாக தனது குறுகிய சிந்தனையில் இருந்து, தன்னை முன்னிறுத்திக் கொள்வதும், அதையே நியாயப்படுத்திக்கொள்வதே, அறிவாகி விடுகின்றது.

சமூகம் சார்ந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பொதுக் கருத்து உருவாக முடியாத வண்ணம், கருத்துகள் தனித் துருவங்களாக வக்கிரமடைகின்றது. சமூகம் சார்ந்த பொது விடையங்களில், இதுவே அதிகம் கேடு விளைவிக்கின்றது. குண்டு வைப்பவனை விட மிக மோசமான வன்முறை இதுதான். இதுவே பிறர் மீதான வன்மமாக, வன்முறையாக மாறுகின்றது. திட்டமிட்ட இனவாத, மதவாத வன்முறையைத் தூண்டும் அரசியல் மற்றும் மதவாத பின்னணியில் உருவாக்கப்படும் பொய்ச் செய்திகளை, காவிச் சென்று பரப்புகின்ற பின்னணியில் குறுகிய இந்தச் சிந்தனைமுறை கொண்டவர்களும், வியாபாரத்தை குறிக்கோளாகக் கொண்ட ஊடகங்களும் இயங்குகின்றன. எதிரி கற்பனையில் கட்டமைக்கப்பட்டு காட்டப்படுகின்றது.

இந்தப் பின்னணியில் தகவல்கள் என்பது, பித்தலாட்டமாக மாறுகின்றது. அடிப்படையற்ற, ஆதாரமற்ற, அவதூறுகளை குற்றங்களாகச் சுமத்துவதன் மூலம், போலிக் குற்றவாளிகளை சமூகத்தின் முன் முன்னிறுத்துகின்றனர். அதற்கு இன-மத-சாதி அடையாளத்தைப் பூசிவிடுகின்றனர்.

பரபரப்புக்கும், உணர்ச்சிக்கும் உள்ளாக்கி பிறரைக் கவருகின்ற தனிமனித வக்கிரமென்பது, பிறருக்கு எதிரான வன்மாக பரிணமிக்கினறது. ஆதாரமற்ற, அறிவுபூர்வமற்ற தகவல்களை கொண்டு, பகுத்தறிவின்றி கருத்துகளை விதைக்கும் இடமாக சமூக வலைத்தளங்கள் இருக்கின்றது. இதுவே ஊடகமாகவும், செய்தியாகவும் வியாபாரமாகின்றது.


போலிச் செய்திகள் முதல் கருத்துரீதியான கற்பனைக் கனவுகள் மூலம், மூளையை மாயாஜால கற்பனைகளில் மூழ்கிப்போக வைக்கின்றது. கருத்தை முன்வைப்பதே தீர்வாக காணுகின்ற போதை மயக்கத்தில், சமூகத்தையே குருடாகி விடுகின்றது.

"அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்"யாக தெரிவது போல், அனைத்துக்கும் கண் மூக்கு வைத்து குற்றஞ்சாட்டி விடுவதே அரசியலாக, கருத்தாக பரப்பப்படுகின்றது. இதன் மூலம் இனவாதமும், மதவாதமும், சாதியமும் கொசிப்பாகவும், வாழ்வின் இயல்பான அங்கமாகவும் மாறுகின்றது. இங்கு இனவாதம், மதவாதத்தை, சாதியவாதத்தை ஆதரிப்பதே, மிகச் சிறந்த அறிவாக மாறுகின்றது. இது இனவாதம், மதவாதம், சாதியவாதத்தை எதிர்ப்பதன் பெயரில் நடக்கின்றது.

சொந்த இனவாத, மதவாத, சாதியவாதத்தை எதிர்கின்ற பின்னணியில் இருந்து தான், பிற சமூகம் குறித்து கருத்துக் கூற முடியும். ஆனால் இன்று எதிர்மறையில் இனவாதம், மதவாதம், சாதியவாதம் இயல்பான ஒன்றாக மாறியிருப்பது, பகுத்தறிவற்ற சிந்தனைமுறைக்குள் ஒடுக்குமுறைகள் இயங்குவதையே எடுத்துக் காட்டுகின்றது.

இதற்கு மாறாக இனவாதத்தை - மதவாதத்தை – சாதியவாதத்தை எதிர்ப்பது என்பது, சொந்த இனவாத – மதவாத – சாதியவாதத்தில் இருந்து முதலில் விடுபடுவது தான். மனிதனாக, என்னை நான் உணர்வதில் இருந்து, எல்லா மனிதர்களையும் பொதுவில் நேசிப்பதில் ஆரம்பிக்கின்றது. இதை நோக்கிய பயணம் என்பது, சமூக நோக்குடன் சிந்திக்கும் பகுத்தறிவில் இருந்துதான் தொடங்க முடியும்.