Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

இடதுசாரி கட்சிகளின் பொது வேட்பாளருடன் 'லங்காவிவ்ஸ்" நடத்திய நேர்காணல்.

நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளும் விதம் குறித்து பல்வேறு கட்சிகளும் குழுக்களும் விளக்கமளித்துள்ளன. முன்னிலை சோஷலிஸக் கட்சி உட்பட இடதுசாரிக் கட்சிகளின் பொது வேட்பாளராக களத்தில் குதித்துள்ள முன்னிலை சோஷலிஸக் கட்சியின் தோழர் துமிந்த நாகமுவ அவர்களுடன் 'லங்காவிவ்ஸ்" நடத்திய நேர்காணல்.

இடது சாரிகளின் பொது வேட்பாளர் என்ற வகையில் நீங்கள் ஏன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்?

நாங்கள் நினைக்கின்றோம் சமூகம் எதிர்கொண்டுள்ள சமூக பொருளாதார பிரச்சி​னைகளுக்கு தீர்வு இடது சாரியத்திடமே உள்ளதென்று. அதாவது சமவுடமை சமூக முறைக்குள் தான் தீர்வு காண முடியுமென்று.

அதற்கான போராட்டமொன்று இருக்கிறது. அதற்கான அரசியல் செயற்பாடு தேவைப்படுகிறது என்ற நிலைப்பாட்டில் இருந்து தான் முன்னிலை சோஷலிஸக் கட்சி உருவாக்கப்பட்டது. கடந்த பல வருடங்களாக ஏனைய அரசியல் கட்சிகளுடனும் சில செயற்பாடுகளில் ஒன்றாக இருந்தோம்.

அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்  ஒன்றாக வேலை செய்த அரசியல் கட்சிகளிடம் இடது சாரிய கருத்தியலை வலுப்படுத்த வேண்டுமென்ற ஒருமித்த கருத்து இருந்தது. தோன்றும் ஒவ்வொரு அரசியல் நெருக்கடியின் போதும் இந்நாட்டு முதலாளித்துவ கட்சிகளிலிருந்து ஒரு கட்சிக்கு பதிலாக இன்னொரு கட்சியை அதிகாரத்திற்கு கொண்டுவரும் ஒரு கட்சியின் அதிகாரத்தை வலுப்படுத்த அந்த கட்சியை சூழ  மேலும் பலர் ஒன்றுசேரும் முறையொன்று இருக்கின்றது.

ஆகவே அதற்கு பதிலாக இந்நாட்டில் துன்பப்படும் மனிதர்கள் உழைக்கும் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரத்தை ஸ்தாபிக்கும் அரசியல் கடமை எங்களுக்கு உள்ளது. அதனால்தான் ஜனாதிபதித் தேர்தலுக்கு இடது சாரிகளின் பொது வேட்பாளராக ஒருவரை முன்வைக்க வேண்டுமென நினைத்தோம்.

மஹிந்தவின் ஆட்சியை நீங்கள் எப்படி காண்கிறீர்கள்?

2005ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட ஆட்சிக்கும் அதற்கு முன்னர் இருந்த ஆட்சிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதே போன்று பொதுத் தன்மையும் உள்ளது. பொதுத் தன்மையை எடுத்துக் கொண்டால் 1977அம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் செயற்பட்ட நவ தாராளமய முதலாளித்துவ கொள்கையை பற்றி எமக்குத் தெரியும்.

ஜே.ஆர். ஜயவர்தன  இதனை அமுல்படுத்த தொடங்கினார். அதற்கு தேவையான மறுசீரமைப்புகளை துரிதமாக கொண்டு வந்தார். புதிய  அரசியலமைப்பை உருவாக்கினார். ஜே.ஆர். ஜயவர்தன கொண்டு வந்த பொருளாதார கொள்கை மற்றும் பொருளாதார நெருக்கடியால் அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் அரசியல் நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது.

1994ல் அதிகாரத்திற்கு வந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை எடுத்துக் கொண்டால் அவர்களது ஆட்சிக்கு எதிராக பாரிய மக்கள் அலையொன்று காணப்பட்டது. நாடாளுமன்றத்தில் அவர்களது பலம் ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்களை கொண்டதாகவே இருந்தது.

அதற்குப் பின் வந்த அரசாங்கங்களுக்கு இந்த சீர்த்திருத்தங்களை செய்ய வேண்டிய தேவை இருந்தாலும் எதிர்ப்பார்த்த வேகத்தில் செய்ய முடியவில்லை. என்றாலும் 2009ல்யுத்தம் முடிந்த பின்னர் தோன்றிய அரசியல் நிலைகள் இருக்கின்றன.

யுத்தம் முடிந்த பின்னர் நாட்டில் ஒரு அரசியல்; அணிதிரள்வை உருவாக்கவும் மக்கள் மத்தியில் பிரபல கருத்தொன்றை உருவாக்கவும் அரசாங்கத்திற்கு முடியுமாயிருந்தது. இதற்கு ஒரு புறம் யுத்தம் பயன்படுத்தப்பட்டது.

அந்த கொள்ளைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் 2/3பலமும் பெற்றுக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் ஜயவர்தன நடைமுறைபடுத்திய வேலைத் திட்டத்தின் இரண்டாவது அத்தியாயம் தொடங்கியது.

நவ தாராளமய முதலாளித்துவ மறுசீரமைப்புகளை செயற்படுத்தும் அரசாங்கம் என்ற வகையில் 20வருட திட்டத்தை முன்வைத்து பல்வேறு துறைகள் சார்ந்து செயற்பட்டு வருகிறது. நாட்டின் விவசாயத் துறை தொடர்பில் விதைகள் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. கல்வியை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி செய்யப்படுகிறது. அதற்காக சட்டமூலமொன்றும் கொண்டுவரப்பட்டுள்ளது.

நாட்டின் காணிகளை பல்தேசியக் கம்பனிகளிடம் ஒப்படைப்பதற்கு தேவையான மறுசீரமைப்புகள் ஆலோசிக்கப்பட்டுள்ளன. உலக ஏகாதிபத்திய தேவைகளுக்கும், பல்தேசியக் கம்பனிகளின் தேவைக்கும் நாடு மீண்டும் தயார்படுத்தப்படும் யுகம் தான் இது. ஆகவே இது மீண்டும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக பெருமளவு கடன் எடுக்கப்பட்டு பாரிய அரசியல்பொருளாதார நெருக்கடியில் நாடு தள்ளப்படுகிறது. இவற்றுக்கு எதிராக தோன்றும் மக்கள் எதிர்ப்பபை தடுப்பதற்கு கடுமையான அடக்குமுறை செயற்படுகிறது.

இத்தருணத்தில் சட்டவாக்க சபைக்கும் மேலாக நிறைவேற்று அதிகாரம் வலுப்பெற்றிருப்பது தொடர்பில் அரசியலின் கவனம் திரும்பியிருக்கின்றது. இந்த நிலையில் இடதுசாரிய பொது வேட்பாளரின் பாத்திரத்திற்கு எத்தகைய இடம் கிடைக்கும்?

நாம் ஏற்கனவே விளங்கிக் கொண்டதைப் போன்று மக்கள் சமூக சித்தாந்த கோட்பாட்டு  மாயைக்குள் சிக்கவைக்கப்பட்டு ஆளப்படுகிறார்கள். ஒறுபுறம் சமூகத்தின் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அடக்குமுறைக்கு ஆட்பட்டுள்ள மக்கள் மத்தியில் எதிர்ப்பும்; கிளம்பியுள்ளது. ஜனநாயகம் தொடர்பாக பாரிய அரசியல் தேவையும் ஆர்வமும் உருவாகியுள்ளது.

விஷேடமாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அந்த அரசியல் அபிலாஷைகள் வளர்ந்துள்ளன. அதேபோன்று மாணவர் அமைப்புகளின் போராட்டத்திற்குள் இலவசக் கல்வி சம்பந்தமான ஜனநாயகம் சம்பந்தமான அரசியல் அபிலாஷைகள் வளர்ந்துள்ளன.

பொதுவாக போராடும் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மத்தியில் உத்வேகமொன்று உருவாகியுள்ளது. மாத்திரமல்ல போராடிய அனைத்து இடங்களிலும் இந்த ஆர்வம் உருவாகியுள்ளது. நகர்புறங்களில் இருக்கும் அரசியல் நிலைமை இதுதான்.

இப்போது ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் அரசியல் கருத்தை ஒரு குழுவின் அரசியல் அபிலாஷைகளுக்காக பயன்படுத்த பார்க்கின்றனர். இன்னொரு முதலாளித்துவ திட்டத்திற்காக அந்த போர்க்குணத்தை பயன்படுத்தவிருப்பவர்கள் இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலுள்ள ஆர்வத்தை எப்போதும் மட்டந்தட்டவே முயல்கின்றனர்.

இந்த கருத்தாடலை அதிகாரத்தை கை மாற்றிக் கொள்ளும் எல்லைக்குள் நிறுத்துவதே அவர்களின் தேவையாக உள்ளது. இங்குள்ள பிரச்சினை நிறைவேற்று அதிகாரம் சட்டவாக்கச் சபை மற்றும் நீதிமன்றத்திற்கு மத்தியில் சமச்சீரை ஏற்படுத்துவது மாத்திரமா?

அப்படியான பிரச்சினையொன்று இப்போது ஏற்பட்டிருக்கின்றது. தீர்மானங்ளெடுக்கும் முழு அதிகாரமும் நிறைவேற்று அதிகாரத்திடம் இருப்பது உண்மைதான். ஆனால் இந்த பிரச்சினையை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். மேற்குறித்த எல்லைக்குள்ளிருந்தே அவர்கள் இந்தப் பிரச்சினையை பேச விரும்புகிறார்கள்.

உதாரணத்திற்கு நிறைவேற்று அதிகாரம் சட்டவாக்கச் சபையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆனால் சட்டவாக்க சபையை அவ்வாறு கட்டுப்படுத்தாத ஒரு நிலைமையை பார்ப்போம். அந்த சட்டவாக்கச் சபை யாருடைய தேவையை நிறைவேற்றுகிறது என்பதுதான் எமக்குள்ள பிரச்சினை. அந்த நிறைவேற்று அதிகாரம் இந்நாட்டு சாதாரண மக்களின் தேவைகளை நிறைவேற்றுகிறதா?

இந்நாட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்றுகிறதா? இவை இரண்டுக்குமிடையில் புகலிடத்தை​யும் சமநிலையையும் கட்டியெழுப்பிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

உதாரணத்திற்கு வெலிவேரிய பகுதியில் குடியிருக்கும் மக்கள் சுத்தமான குடிநீர் கேட்டு போராடும்போது நிராயுதபாணிகளுக்கு வெடி வைத்தார்கள். தாக்கப்படுகிறார்கள். பேச்சுவார்த்தைகளுக்கு பின்பும் அடிதான் விழுகிறது.

ஜனாதிபதி பாதுகாப்ப அமைச்சராக இருக்கும்போதுதான் இப்படியான தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. மேடைக்கு கொண்டுவரப்படாத இன்னொரு பகுதி இந்தப் பிரச்சினையில் இருக்கின்றது. அதுதான் இந்நாட்டு ஒடுக்கப்பட்ட மக்கள் உண்மையிலேயே எதிர்கொண்டுள்ள பாரதூர பிரச்சனை. பெரும்பாலான மக்கள் முகம் கொடுத்துள்ள பிரச்சனை.

இந்தப் பிரச்சனையை எடுக்காது அமைப்புகளுக்கு அதிகாரத்தை பெற்றுக் கொள்ளல் அதிகாரத்தை சமநிலைபடுத்தல் போன்றவற்றுக்கு பேச்சுக்கள் வரையறுக்கப்படுகின்றன. அந்த பேச்சுக்களில் குறுகிய அரசியல் நோக்கம் இருக்கின்றது. ஜனநாயகம் சம்பந்தமான பேச்சுக்களில் பாதி கூட அங்கு கிடையாது அவர்கள் அரைக்கால்வாசியையே எடுக்கிறார்கள்.

அரைக்கால்வாசி ஜனநாயகம் என்றே அதனை நாங்கள் கருதுகிறோம். என்றாலும் அந்த வரம்பையும் மீறிச் செல்லும் ஜனநாயகப் போராட்டமொன்று எங்களுக்கு உண்டு.

எப்படியான ஜனநாயக போராட்டத்தை பற்றி நீங்கள் கூறுகிறீர்கள்?

தெளிவாக நாங்கள் பேசுவது பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தைப் பற்றி. உண்மையான ஜனநாயகம் இல்லையாயின் முழுமையான ஜனநாயகம் சம்பந்தமான பிரச்சினையைப் பற்றி நாங்கள் பேசுகிறாம். அதைப்பற்றிய பேச்சுக்களை எடுக்காமல் ஏற்கனவே கூறியதைப் போன்று ஜனநாயகம் பற்றிய பிரச்சினையில் அரைக்கால்வாசியை அவர்கள் எடுக்கிறார்கள். 

ஆனால் ஜனநாயகம் என்பது தேர்தலும் தேர்தலில் மக்கள் புள்ளடியிடுவதும் மாத்திரமல்ல. ஒரு குழுவிடம் அதிகாரம் மாற்றப்படுவதை குறித்து எமக்கு பிரச்சினை கிடையாது. மக்கள் அபிலாஷைகளும் அவற்றை நிஜமாக்கும் செயற்பாடுதான் ஜனநாயகம். அந்த உண்மையான ஜனநாயகம் சம்பந்தமாகவே எமது போராட்டம் உள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி பாசிஸ நிலையை நோக்கி வளர்ந்து வருகிறது. அவ்வாறான சூழ்சிலையில் அனைவரும் சேர்ந்து அந்நிலையை தோற்கடிக்க வேண்டுமல்லவா?

மஹிந்தவின் மூன்றாவது பதவிக் காலம் என்பது தெளிவாகவே கடுமையான அடைக்குமுறைக்கான கால கட்டமாக இருக்கக் கூடும். அதற்கான சமூக நிலைக்குள்தான் நாங்கள் இருக்கின்றோம். இந்த பொருளாதார நெருக்கடியினால் மக்கள் போராட்டம் தலை தூக்குகிறது.

போராட்டங்கள் தலையெடுக்கும் போது அவற்றை அடக்கத் தேவையான ஏற்பாடுகள் நடக்கின்றன. பெருந்தொகையான பணத்தை ஒதுக்கி விசாலமான அடக்குமுறை இயந்திரம் தயாரிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. பாதுகாப்பு செலவீனங்களுக்காக ​ வரவு செலவு திட்டத்தில் பில்லியன் கணக்கில் ஒதுக்கப்படுகிறது.

எதிர்வரும் காலங்களில் தலையெடுக்கவிருக்கும் அரசியல் போராட்டங்களை அடக்குவதே இதன் நோக்கம். அவ்வாறான அடக்கு முறையும் சர்வாதிகார வெறியும் ஏன் ஏற்படுகிறது. யாராவது ஆசைப்பட்டு அடக்குமுறையை கையிலெடுப்பதில்லை. விருத்தியடையும் நிலைமைகளுக்குள் அடக்குமுறை தோன்றுகிறது.

சமூகத்தின் ஒவ்வொரு சக்திகளின் தேவைகளை நிறைவேற்ற ஆட்சியினால் முடியாதவிடத்து அந்த தேவைகளுக்காக போராட்டம் தலையெடுக்கிறது. இந்த போராட்டங்களை அடக்கிவிட்டுத்தான் ஏகாதிபத்தியம் உருவாகிறது.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு பதிலாக இன்னொருவரை உருவாக்குவதால் அந்த பிரச்சினை தீர மாட்டாது. அப்படி யாராவது கூறுவார்களேயானால் அவர்கள் மறைக்கும் ஒரு விடயம் இருக்கின்றது. அவர்கள் மறைக்கும் சமூக பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதாயிருந்தால் சமூக பொருளாதார மாற்றமொன்று தேவைப்படுகிறது.

அதை மறந்து விட்டு வேறொரு குழுவிடம் அதிகாரத்தை மாற்றினால் மாத்திரம் அடக்குமுறையோ அல்லது தன்னிச்சையான வெறியோ ஏற்படுவதற்கான காரணி ஒழிக்கப்பட மாட்டாது.

ஆகவே எமது செயற்பாடுகள் இங்கிருந்து தான் ஆரம்பமாக வேண்டும். இதற்காக உண்மையான தீர்வுக்கு குரல் கொடுக்கும் இடதுசாரிய அதிகாரத்தை கட்டியெழுப்ப நேரிடும். அரசியல் என்ற வகையில் செயலிழந்து கவனிப்பாரற்றிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் செயற்பாட்டுக்கு விரைந்து கொண்டுவர வேண்டும். எனவே மக்கள் வீதியிலிறங்கி இந்த வெறி பிடித்த சர்வாதிகாரத்தை தோற்கடிப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

வேறு குழுவிடம் அதிகாரத்தை கைமாற்றும் திட்டங்களால் சர்வாதிகாரியொருவர் உருவாவதற்கான காரணிகளை தோற்கடிக்க முடியாது. அது பொருளாதார நெருக்கடியின் காரணமாகவே உருவாகிறது.  யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களது வழிமுறை என்பது அடக்குமுறைதான்.

ஏற்கனவே தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ள மஹிந்தவினதும் மைத்திரபாலவினதும் போட்டிக்கு மத்தியில் இடதுசாரியத்தை வெல்லவைக்குமாறு கூறுவது எப்படி?

ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள் கவனம் இரண்டு பிரதான வேட்பாளர்களின் பக்கம்தான் இருக்கும். அப்படியான சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலையும் இருக்கிறது. 

ஆனாலும் இதற்கு மாற்று அரசியல் இடைவெளியும் அரசியல் மாற்றீடும் இருக்குமென நாங்கள் கருதுகிறௌம். ஆகவே அந்த அரசியல் கருத்தை சமூகமயப்படுத்தவே நாங்கள் முயற்சிக்கின்றோம்.

அரசியல் கருத்தை சமூகத்திற்குள் கொண்டுவரே அந்த இடைவெளியை பயன்படுத்​ இந்த சமூகம் பயணித்துக் கொண்டிருக்கும் பாதை சம்பந்தமாக மக்களுக்கு தெளிவுபடுத்த இந்த அரசியல் சந்தர்ப்பத்தை பயன்படுத்தவிருக்கின்றோம். அதற்கு தடை இல்லையென்பதே எமது கருத்து. அதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இடையூறுகள் இருக்கவும் கூடும் ஆனாலும் அதற்கான அரசியல் இடைவெளியும் உள்ளது.

அதுவும் இந்த சந்தர்ப்பத்தில் தான். எனவே ஜனாதிபதித் தேர்தலில் எங்களுக்கு கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கையின் மீது மாத்திரம் எமது அரசியல் வெற்றி தீர்மானிக்கப்படாது. இன்றைய அரசியல் சூழலில் இடதுசாரிய கருத்து முன்வைக்கப்படாமல்;

செல்வதை தடுக்க வேண்டுமென்பதே எங்கள் எண்ணமாகும். இச்சந்தர்ப்பத்தில் இடதுசாரிய கருத்தொன்றை முன்வைத்து மாற்றீடு இடதுசாரியத்தில் தான் உள்ளது என்ற கருத்தை சமூகத்தின் மத்தியில் வைப்பதனால் மாத்திரமே அரசியல் வெற்றி கிட்டும்.

நவ தாராளமய அனுகுமுறை மூலம் ஜனநாயக சீர்த்திருத்தம் மேற்கொள்ள முடியுமென்ற கருத்து வெளிப்பட்டிருக்கின்றதே?

நான் நினைக்கிறேன் இன்னும் முடிவு பெறாத முதலாளித்துவ பணிகள் சம்பந்தமாக நீங்கள் வினவுவதாக. முதலாளித்துவம் நெருக்கடியில் தள்ளப்பட்ட காலத்தில் அதுவரை இருந்த அனைத்து சமூக பிளவுகள் மற்றும் சமூகத்திற்குள்ளிருந்த அனைத்து பிளவுகளையும் நீக்கி உற்பத்திக்காக பாரிய சக்தியொன்றை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை முதலாளித்துவத்திற்கும் செல்வந்தர்களுக்கும் இருந்தது.

உதாரணத்திற்கு ஆண் பெண் என்ற வித்தியாசங்களையும் பெண்கள் மீதான அழுத்தத்தையும் நீக்குவதற்கு. இல்லையாயின் சாதிய பிரச்சினையை அகற்றுவதற்கு. நிலவுடமை முறையில் பிரபுக்கள் வசமிருந்த பாரிய அதிகாரத்தை நீக்குவதற்கு. இப்படியான பொருளாதார காரணிகள் மீதே முதலாளித்துவ புரட்சிகர மறுசீரமைப்புகள் தேவைப்பட்டன.

அந்த நோக்கத்திற்கான கருத்தியலொன்றும் உருவாக்கப்பட்டது. அதற்கான லிபரல்வாதிளும் இருந்தனர். நீதி நியாயம் சமதர்மம் இவைதான் முழக்கங்களாக இருந்தன. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் பாரிய மாற்றங்கள் நடந்தன. ஆனால் எம்மைப் போன்ற பின்தங்கிய முதலாளித்துவ வளர்ச்சியுடனான நாட்டில் அது நடக்கவில்லை. பெருமளவு பிரச்சினைகள் எஞ்சியுள்ளன.

அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான பொருளாதார பார்வையோ பொருளாதார ஏற்பாடோ அதற்கு தேவையான அரசில் கருத்தோ கிடையாது. எனவே தற்போதைய முதலாளிகளுக்கு முதலாளிய பிரிவுகளுக்கு ஜனநாயகம் சம்பந்தமாக தொடரும் பணிகளை நிறைவு செய்யும் ஆற்றலும் இல்லை.

ஜனநாயகம் சம்பந்தமான கோரிக்கைகள் மறுசீரமைப்பிற்கான தேவைகள் ஆகியவற்றை கேட்பதையோ அதற்காக போராடுவதையோ நாம் நிராகரிக்கவில்லை. நாங்கள் அதற்காக போராடுகின்றோம்.

ஏனெனில்​ அந்த போராட்டத்தின் ஊடாகத்தான் உண்மையான ஜனநாயத்தை வெல்வது வரையிலான போராட்டத்திற்கு ஒடுக்கபட்ட  மக்களை அழைத்துவர முடியும். ஒடுக்கப்பட்ட மக்கள் இந்த போராட்டத்தின் மூலம்தான் தமது கடந்தகால அபிலாஷைகளை அறிந்து கொள்ள முடியும். அந்த போராட்டம் தேவை.

நிறைவேற்று அதிகாரம் தன்னிச்சையை நிர்மாணிப்பதற்கு சட்டவாக்க சபையை ஈடுபடுத்தி அதனை சமநிலைபடுத்த முடியுமென்ற கருத்து சம்பந்தமாக உங்களது கருத்து?

நிலவுடமை முiறியின் கீழ் அல்லது அரசர்கள் ஆட்சி செய்யும் காலத்தில். அரசர் தன் சுய விருப்பப்படி நாட்டை ஆண்டார். அவரது விருப்பம் கடவுளின் விருப்பம் என்ற அடிப்படையிலேயே அவர் அப்படிச் செய்தார்.

இதனால் மன்னர் கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்டார். உலகில் நடந்த முதலாளித்துவ புரட்சிகளின் போது இந்தக் கருத்து பாரிய தாக்குதலுக்குள்ளானது. விஷேடமாக பிரான்ஸிய புரட்சி அமெரிக்க சுதந்திரப் போராட்டம் போன்றவை இது விடயத்தில் பாரிய தாக்கத்தை செலுத்தின.

அவற்றிலிருந்து கொண்டுவரப்பட்டது தான் இறையான்மை மக்களிடமே உள்ளது என்ற கருத்து. காலத்துக்குக் காலம் மக்கள் இறையான்மையை ஒப்படைக்கின்றனர். என்ற முதலாளித்துவ ஜனநாயக மனப்பாங்கினால் உருவாக்கப்பட்ட கருத்து. அதற்கேற்பத்தான நாடாளுமன்றம் அமைக்கப்படுகிறது.

அதன் அடுத்த கட்டம்தான்; நிறைவேற்று அதிகாரம் சட்டவாக்கச் சபை நீதிமன்றம். இப்படியான நிறுவனங்களிடம் தான்ம இறையான்மை ஒப்படைக்கப்படுகிறது. சட்டவாக்க அதிகாரம் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது.

பிரச்சினை என்னவென்றால் ஒப்படைக்கும் அதிகாரத்தை மீண்டும் எடுக்க மீண்டும் மதிப்பீடு செய்ய வழி கிடையாது. மக்கள் இறையான்மை என்ற அதிகாரம் மக்களுக்கு கிடைக்கும் விதமாக இந்த கட்டமைப்பு அமைந்திருக்கவில்லை. 5 வருடத்திற்கு ஒரு முறை கோட்பாட்டு ரீதியில் வற்புறுத்தி மனிதர்களின் தலையை திருப்பி பெரிய அதிகாரமொன்று உருவாக்கப்படுகிறது.

அதன் பிறகு வாக்களிப்பை நடத்துகிறார்கள். அரசாங்கத்தை அமைக்கிறார்கள். அரசாங்கங்களுக்கு தேவையானவாறு மீண்டும் மீண்டும் ஆட்சி நடத்துகிறார்கள். அந்த ஆட்சி சம்பந்தமான பூர்வாங்க சட்டங்களுடனான அரசியலமைப்பை மக்கள் முன் வைப்பதுமில்லை அவர்களது  அங்கீகாரத்துடன் கொண்டுவரவுமில்லை. 1978அரசியலமைப்பை எடுத்தாலும் 1972 அரசியலமைப்பை எடுத்தாலும் மக்கள் அங்கீகாரத்திற்கு விடப்படவில்லை.

எனவே எங்களை ஆட்டிப்படைக்கும் சட்டங்கள் கூட எங்களுக்காக தயாரிக்கப்படுவதில்லை. ஆகவே பிரச்சினையை அந்த இடத்திற்கு கொண்டுவர வேண்டும். இறையான்மை அதிகாரத்தை கட்டுப்படுத்தும் விதத்தில் இந்த சமூகத்திற்கு கட்டமைப்பொன்றை கொண்டுவர வேண்டும்.

அப்படியான ஆட்சியொன்றுக்கான கோரிக்கையின் அடிப்படையில் போராட்டத்தை இப்போதே தொடங்க வேண்டும். மக்களுக்கான அரசியல் அதிகாரத்திற்குள்தான் அப்படியான ஆட்சியை ஏற்படுத்த முடியும் என்பது வெளிப்படை. அதற்கான கோரிக்கைக்காக முன்வர வேண்டும்.

அதற்காக போராட வேண்டும். அந்த கோரிக்கையை தவிர்த்துச் செல்வதால்தான் அந்த கருத்துக்காக நாம் போராடுகின்றோம்​. இடதுசாரிய தலையீடு இடதுசாரி முழக்கங்கள் இடதுசாரிய பேச்சுக்களை இந்த அரசியல் நிலைமைக்குள் எடுத்து வர வேண்டும். இறையான்மை அதிகாரம் மக்களுக்கு கிடைக்கும் ஆட்சியினால் மட்டுமே பிரச்சினைகள் தீர்க்கப்டும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நாடாளுமன்றித்திற்கு பதில் கூறும் பிரதமர் பதவி வரை திருத்த முடியுமென எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் கூறுகிறார். இதற்கு நீங்கள் உடன்படுகிறீர்களா?

எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் இப்போது தானே வந்துள்ளார். பாடகர் மேடையில் ஏறிவிட்டார். இன்னும் பாடவில்லை. எனவே அவர்கள் அவர்களது கொள்கையை முன்வைக்க வேண்டும். கொள்கைகளை முன்வைத்த பிறகு என்ன செய்வது என்று எங்களால் கூற முடியும். ஆனால் இப்போது சமிக்ஞைகள் தெரிகின்றன.

இவர்களில் எவருமே ஒற்றைக் கருத்திலிருந்து பேசுவதில்லை. உதாரணத்திற்கு ஹெல உருமய இதில் சிலவற்றை சொல்கிறது நிறைவேற்று அதிகாரத்தை நீக்கிவிட்டால் ஜனநாயத்தை பட்டை தீட்ட முடியுமென நினைக்கிறார்கள்.

மேலும் சிலர் சொல்கிறார்கள் நிறைவேற்று அதிகார முறையை நீக்க வேண்டுமென்று. இனி இவர்கள் எல்லோரும் சேர்ந்து என்ன சொல்கிறார்கள் என்பது புரியவில்லை. வாய் திறந்து பாடிய பிறகு தான் தெரியும் என்ன சொல்ல வருகிறார்கள் என்று. எனவு அவர்கள் பாடி முடிக்கும் வரை பொறுத்திருப்பதுதான் சிறந்தது.

இடதுசாரி வேட்பாளருக்காக ஒன்று சேர்ந்திருக்கும் கட்சிகள் மற்றும் அமைப்புகள் எவை?

நாங்கள் தற்போது பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நவ சமசமாஜக் கட்சி ஆதரவளிக்கிறது. சோஷலிஸக் கட்சி பிரக்ஸிஸ் குழுமம் ஜனநாயக மாக்ஸ்- லெனினிஸ கட்சி. மேலும் பல அமைப்பகளுடனும் கட்சிகளுடனும் பேசவிருக்கின்றோம்​.

எதிர்கட்சிகளின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள புதிய நிலைமைகளை கவனித்து இடதுசாரிக் கட்சிகளின் முடிவுகள் குறித்து எதிர்காலத்தில் மீண்டும் கவனம் செலுத்தப்படுமா?

நாம் எடுத்த முடிவுகளை இந்த புதிய நிலைமைகள் சார்ந்து மாற்ற வேண்டியதில்லை. நாம் நடத்தி வந்த கருத்தாடல்கள் இப்போது விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்க அதிகாரம் பெற்ற கட்சியின் பொதுச் செயலாளர் அதிலிருந்து விலகி எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கியதால் அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இது எப்போதுமே நடந்ததுதான். இது பெரிய விடயமல்ல என அரசாங்கத்தில் உள்ளவர்கள் கூறினாலும் பிரச்சினையொன்று உள்ளது. அரசாங்கத்திலிருந்து விலகி நடத்திய முதலாவது ஊடக சந்திப்பை மக்களுக்கு தெரியாமலிருக்கச் செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்தது.

அடுத்தது இந்த பொது வேட்பாளர் என்ற வகையில் முன்வரும் குழு கொள்கை ரீதியில் எதை முன்வைக்கின்றது?

அவர்களது அரசியல் பயனீட்டைப் போன்று அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரைப் பற்றி முன்வைத்த கருத்துக்கள் உள்ளன. அவர்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் கூறிய விடயங்களுக்கு ஏற்ப இப்படியான முன்னணிக்குள் அவற்றை எப்படி தீர்த்துக் கொள்வது? மாற்றுக் கருத்துடையவர்களும் உள்ளார்கள். அதனால் பிரச்சினையொன்று உள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளன. பாதி தீர்மானத்தை கூற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாளை என்ன கூறுவார்களோ தெரியாது. மதஹிந்தவை தோற்கடிக்க வேண்டுமென எஞ்சிய பாதியை கூறுவதில்லை.

இடதுசாரிய வேட்பாளரொருவரை நிறுத்த வேண்டுமென நாங்கள் தீர்மானித்தோம். அதற்கேற்ப செயற்பட்டோம். இப்போது அதற்கான கருத்தொன்றை சமூகத்திற்கு எடுத்து செல்ல எமக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதற்காக சமூக கருத்தை நீண்டகால திட்டத்திற்காக நாங்கள் முதலீடு செய்கின்றோம்​.

இடதுசாரிகளுக்கு அதிகாரத்தை கொடுப்பது என்பது இலேசான காரியமல்ல. விஷேடமா 1990ல் சோவியத் முகாம் வீழ்ந்த பின்பு இந்தக் கருத்து மழுங்ககடிக்கப்பட்டது. அதேபோன்று மக்கள் விடுதலை முன்னணியின் நடவடிக்கைகளிலும் இடதுசாரிய கருத்தியலை மழுங்கடிக்கும் நிலை காணப்பட்டது. எனவே மாற்றீடு இருக்கின்றதா? என்ற கருத்து மக்கள் மனதிலும் உருவாகியுள்ளது.

மக்கள் காந்தத்தைப்போல் ஒரு குழுவில் ஒட்டிக் கொள்கின்றனர். அதில் வெறுப்படையும் போது வேறொரு காந்தக் குழுவில் ஒட்டிக் கொள்கின்றனர்.  இந்த இரு காந்தங்களிலும் ஒட்டிக் கொள்வதை தவிர வேறு மாற்றீடு இருக்கின்றதா? என்ற கேள்வி மக்கள் மனதில் இருக்கின்றது.

கடந்த இரு தசாப்தங்களில் இடதுசாரியம் ரத்துச்செய்யப்பட்டமையால். அந்த பாத்திரம் இல்லாமையால். அப்படியான பாத்திரங்களை உருவாக்குவது இலேசானதல்ல. அது நீண்டகால செயற்பாடாக இருக்குமென நாங்கள் நினைக்கின்றோம். இந்தக் கருத்தை இன்று விளங்கிக் கொள்ளாதவர்கள் நாளை இதனை விளங்கிக் கொள்வார்கள்.

இது நாங்கள் தெளிவாக எடுத்த தீர்மானம். எடுத்த அந்த தீர்மானத்தின் மீதிருந்து சமூகத்திற்கு இடதுசாரிய கருத்தை எடுத்துச் சென்று சமூகத்தில் மாற்றுக் கருத்தொன்றை நிர்மாணிக்க நாங்கள் செயற்படுகின்றோம்.