Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

ஏமாற்றும் தேர்தல் முடிந்து விட்டது மக்கள் பிரச்சனைகள் அப்படியே?

ஜனநாயகத்தின் பெயரில் சடங்காகவும் சம்பிரதாயமாகவும் நடக்கின்ற தேர்தலாகவும், அதற்கு பழக்கப்பட்டு வாக்களிக்கும் மக்களுமாக இருப்பது என்பது தேர்தல் முறையாகிவிட்டது. தேர்தல்முறை மூலமும், வாக்களிப்பதன் ஊடாகவும் தெரிவுசெய்யப்படும் 'மக்கள் பிரதிநிதிகள்" சமூகப் பிரச்சனைகளைத் தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் மக்கள் வாக்களிக்கின்றனர். ஆனால் தேர்தலில் வென்றவர்கள் தனிப்பட்ட செல்வத்தை குவிப்பதற்கும், அதற்காக பதவிகளையும் அதிகாரங்களையும் பெறுவதும் இதன் மூலம் நாட்டையும் மக்களையும் விற்பதுமாக பாராளுமன்றம் இன்று இயங்குகின்றது. தேர்தல் முடிந்தவுடன் தங்கள் பிரச்சனைகளை பாராளுமன்றமும், தாங்கள் தெரிவு செய்த "மக்கள் பிரதிநிதிகளும்" தீர்க்க மாட்டார்கள் என்ற பகுத்தறிவும், அனுபவமும் கிடைக்கின்றது. தேர்தல்முறை மூலம் மாறி வரும் ஆட்சிமாற்றங்கள், இதைத்தான் பறைசாற்றுகின்றது.

இதனால் எங்களை ஏமாற்றும் தேர்தல் முடிந்துவிட்டது என்று உண்மையை உணர்ந்து குவிந்து கிடக்கும் எங்கள் பிரச்சனைக்காக போராடப் போகின்றோமா அல்லது அடுத்த ஏமாற்றும் தேர்தல் வரை வாக்களிக்க
காத்திருக்கப் போகின்றோமா என்ற கேள்வியை எழுப்புகின்றோம். வாழ்வதற்காக நாங்கள் போராடுவதைத்
தவிர, வேறு வழி எமக்கு முன் கிடையாது.

இனரீதியான தேர்தல் கோசங்கள் மக்களை ஏமாற்றுவதற்கே

இனரீதியான தேர்தல் கோசங்கள் மூலம் தங்கள் இன மக்களை பாதுகாக்கவும், முன்னேற்றவும் என்பதற்காக தமக்கு வாக்களிக்கவே இனவாதிகள் கோரினர். சிங்கள - தமிழ் - மலையகம் - முஸ்லிம் என்று இனரீதியாக தங்களை அடையாளப்படுத்தி வாக்குக்கேட்டு வென்றவர்கள் அனைவரும் தேசிய அரசாங்கத்துக்குள்ளும், அரசு ஆதரவு பெற்ற எதிர்க்கட்சி அதிகாரங்களுமாக, இன்று ஒரே போர்வைக்குள் கணவன் மனைவியாகி ஒரு குடும்பமாக மாறி இருக்கின்றனர்.

அவ்வாறான 'குடும்பப்" பொருளாதாரக் கொள்கையால் நவதாராளமயத்தை முன்னெடுக்கும் ஏஜண்டுகளாக இருப்பதுவும், ஆளும் வர்க்கத்திற்காக சேவை செய்வதுமே தங்கள் அரசியல் வாழ்வியலாக - நடத்தையாக முன்னெடுக்கின்றனர். இந்தப் பாராளுமன்ற "குடும்ப" உறுப்பினர்கள் தங்கள் இனத்தைப் பாதுகாப்பதாக கூறிச் சொன்ன இனவாதக் கோசங்களும் - அதற்கான தீர்வுகளும் போலியானதும் - மக்களை ஏமாற்றுவதற்கானதே என்பதும் வெளிப்படையான பொது உண்மையாகி இருக்கின்றது.

இன மொழி கடந்த தேசிய அரசாங்கம் என்னும் மாயை

தேர்தலைத் தொடர்ந்து இன - மொழி - சாதி - மதம் கடந்த தேசிய அரசாங்கத்தை உருவாக்கியதன் மூலம் - சமூகப் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டதாகவும் - தீர்க்கவும் முடியும் என்ற பொது மாயையை உருவாக்கி வருகின்றனர். இதன் மூலம் மக்களை அரசியல் அனாதைகளாக்கி வருகின்றனர். வர்க்க - சமூகப் பிரச்சனைகள் அப்படியே அரசியல் ரீதியாக கைவிடப்பட்டு இருக்கின்றது.

வேடிக்கை என்னவென்றால் தேர்தல் காலத்தில் கோசங்களையும் முரண்பாடுகளையும் செயற்கையாக உருவாக்கி - இறுதியில் இனரீதியாக மக்களை வாக்களிக்க வைத்து வெற்றிபெற்றதன் மூலம், மக்களை
நட்டாற்றில் கைவிட்டு இருக்கின்றனர். தேர்தல் அரசியல் என்பதும் - அதன் கோசங்களும் மக்களை ஏமாற்றுவதாய் இருக்கும் அதேநேரம் மக்கள் பிரச்சனைகளோ இந்தத் தேர்தல் அரசியலுக்கு வெளியில் குவிந்து கிடக்கின்றது.

தேர்தல் கோசத்துக்கும், வாக்களிப்புக்கும் முரணாகவே தேர்தலுக்கு முன்னும் பின்னும் சிங்கள - தமிழ் மொழி பேசும் மக்கள் மொழிபேதமின்றி ஒன்றாக தங்கள் வாழ்க்கை சார்ந்த பொருளாதார உறவுக்குள் ஐக்கியப்பட்டு வாழ்வதும் - அதுவே இன்று நடைமுறை எதார்த்தமாகவும் இருக்கின்றது.

இதற்கு முரணாகவே இனரீதியான கோசங்களை முன்வைத்து - இனரீதியாக மக்களை வாக்களிக்க வைத்து, மக்களை ஏமாற்றும் தேர்தல் மூலம் வென்றவர்கள் - இனபேதமின்றி இன்று ஒரே தேசிய அரசாங்கமாக ஒன்றுபட்டு இருக்கின்றனர்.

இங்கு மக்களும் சரி - இனரீதியாக மக்களை வாக்களிக்க வைத்து தேர்தலில் வென்றவர்களும் சரி, இனரீதியான முரண்பாட்டுடன் நடைமுறையில் வாழ்வதில்லை என்பதே பொது உண்மையாகும். இது தான் இன்றைய பொது எதார்த்தமாகும்.

2009 க்கு முந்தைய யுத்தகாலத்திலான இராணுவ கெடுபிடிகளும் ஒடுக்குமுறைகளும் - 2009 பின் யுத்தம் முடிவுற்ற பின்னரான இராணுவ ஆட்சியும் அதன் தலைமையிலான சிவில் நிர்வாக ஆட்சியும் இன்று முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, முற்றாக சிவில் ஆட்சி அமைப்பு முறைமை உருவாகி வருகின்றது.

இனரீதியான கடந்தகால இராணுவத் தலையீடுகள் அருகிவரும் பொதுச் சூழலில் - இயல்பு வாழ்க்கையில் இனரீதியான முரண்பாடுகள் இருப்பதில்லை. அரசியல்வாதிகளும் - ஊடகவாதிகளும், இனரீதியான முரண்பாட்டைத் தூண்ட வக்கிரம் கொட்டும் இனவெறி செய்திகள் இன்றி - மக்களை தொடர்ந்து பிரித்து வைத்திருக்க முடிவதில்லை.

மக்கள் இனம் - மொழி கடந்த பொருளாதார வாழ்வில் ஒன்றுகலக்கும் போக்கு என்பது இன்றைய எதார்த்தமாகி வருகின்றது. பரஸ்பரம் மொழியைக் கற்பதில் தொடங்கி - வாழ்வின் அனைத்து மட்டத்திலும் இணைவு என்பதே முதன்மையான எதார்த்தமாகும். யாரும் சிங்களவன் - தமிழன் என்று பிரிந்து நின்று, தங்கள் வாழ்வை தனிமைப்படுத்தி அணுகுவதும் வாழ்வதும் கிடையாது.

மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் என்ன?

மக்கள் சந்திக்கின்ற உடனடிப் பிரச்சனை என்பது இனவொடுக்குமுறையோ - இனப்பிரச்சனைக்கான தீர்வோ அல்ல. இப்படிச் சிந்திக்கின்ற - உணர்வுபூர்வமாக உணர்ந்து செயற்படுகின்ற மக்களின் வாழ்வியல்
நடைமுறையோ - அரசியல் நடைமுறையோ கிடையாது.

குறிப்பாக இன்று தமிழ் மொழி பேசுகின்ற தமிழனை எடுத்தால், தமிழனைத் தமிழன் ஆள்வதோ - அதற்கு ஒரு தீர்வு வேண்டும் என்பதோ மக்களின் இன்றைய பிரச்சனையில்லை. எதார்த்தத்தில் தமிழனைத் தமிழன் ஆளும் மாகாணசபைகளும் - நகரசபைகளும் - கிராமிய சபைகளும் - பாராளுமன்ற பிரதிநிதிகளும் - அரசு அதிகாரிகளும் காணப்படுகின்றன. அனைவரும் தமிழராக இருப்பதும் - தமிழனைத் தமிழன் ஒடுக்குவதுமே நடக்கின்றது.

மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளுகின்ற பிரச்சனைகளுக்கும் - மக்களுக்கு இடையிலான பிரச்சனைகளின் போதும் இவர்களே எதிரணியாகவும் - முரண்பாடு கொண்டவராகவும் இருக்கின்றனர். மக்களை அடக்கியாளும் அரசு இயந்திரத்தின் அதிகாரத்தின் ஒரு உறுப்பாகவும் - சமூக ஒடுக்குமுறைகளின் (சுரண்டல் - சாதி - மதம் - பிரதேசவாதம்) பிரதிநிதிகளாகவும் இருக்கின்றனர்.

யுத்தகாலத்தில் காணப்பட்ட பேரினவாத அரசின் நேரடியான இராணுவ ஒடுக்குமுறை வடிவம் அகன்று - தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களே மக்களை ஆளுகின்றவர்களாக - அவர்களே ஒடுக்குகின்றவராக இருக்கின்றனர்.

மக்களின் இன்றைய முதன்மையான பிரச்சனைகள் என்பது, தங்களைச் சுற்றிய வாழ்க்கை முறைக்குள்யேயான முரண்பாடாக மாறியிருக்கின்றது.

இந்த வகையில் மக்களின் உழைப்புக்கு கிடைக்கும் மரியாதை தொடர்பானதாக - கிடைக்கும் கூலி தொடர்பானதாக - தங்கள் உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாகும் விதம் தொடர்பாக - பொருளை நுகர முடியாத வறுமை பற்றியதாக - தங்கள் குழந்தையின் (கல்வி,பாதுகாப்பு) எதிர்காலம் பற்றியதாக - சுற்றுச்சூழல் (உதாரணமாக எடுத்தால் குடிநீர்) பற்றியதாக - இலஞ்சம் கொடுக்காமல் வாழ முடியாத வாழ்க்கைமுறை தொடர்பாக - செல்வாக்கும் மற்றவர் தயவுமின்றி திறமையைக் கொண்டு வாழமுடியாத நிலை தொடர்பாக - ஊரையே இரண்டாக்கி கொட்டமடிக்கும் ஊழல்கள் தொடர்பாக - அதிகாரம் மற்றும் பணம் கொண்டோர் தங்கள் வாழ்வின் மீதான தலையீடுகள் தொடர்பாக சாதிய அவமானங்களும் சமூகக் கொடுமைகளும் தொடர்பாக - மதம் சார்ந்த அத்துமீறல்களும் சமூக ஆதிக்கம் மீதான அடாவடித்தனங்கள் மீதானதாக என மனித வாழ்வு சார்ந்த பிரச்சனைகளே இன்று அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளாக மாறியிருக்கின்றது.

முன்பு போல் யுத்தம் - இராணுவம் - புலி - தேசியம் என்று சமூகத்தின் பிற முரண்பாடுகளையும் அவலங்களையும் மூடிமறைக்கவோ - வேறு ஒன்றை முதன்மைப்படுத்தியோ காட்ட முடிவதில்லை. ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள்.

உழைக்கும் மற்றும் சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக, உழையாத மற்றும் மேலாதிக்க சக்திகள் இன்று மூடிமறைக்கவும் - ஒடுக்கவும், ஒவ்வொரு கிராமத்திலும் சாதியத்தைத் தூண்டி விடுகின்றனர்.

மதத்தை முன்னிறுத்தி மோதல்களை திணித்து - கோயில்களையும் கட்டுவதன் மூலம் மக்களைப் பிரிப்பதும் - ஊழலை செய்வதும் நடந்தேறுகின்றது.

அரசின் நவதாராளவாத வீதிகளையும் அதன் வளர்ச்சியையும் நாட்டினதும் பொருளாதாரத்தினதம் அபிவிருத்தியாகக் காட்டி மக்களை ஏமாற்ற முனைகின்றனர். இப்படி ... பற்பல வேஷங்கள் - கோசங்கள் மூலம், மக்களை மோதவைத்து - பிரித்தாள முனைகின்றனர்.

மக்களை மந்தைகளாக - தங்கள் பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியாதவராக வைத்திருக்க கையாளும் சாதி - மதம் - அபிவிருத்தி என்ற போலியானதும் - அதன் ஊழல் வடிவங்கள் மீது தலையிடுவதும் - அதன் அடிப்படையில் மக்களை கிராமங்களில் இருந்து அணிதிரட்டுவதன் மூலம் ஆதிக்க சக்திகளை தனிமைப்படுத்தி மக்கள் சக்தியை முன்னுக்கு கொண்டுவர முடியும். இந்த தேர்தல் உணர்த்துவதும் இதைத்தான்.