Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

காணாமல் போனவர்களிற்காக ஆயிரம் பேர், என்றுமே காணாத முருகனிற்காக மூன்று லட்சம் பேர்

இலங்கை அரசு என்னும் மக்கள் விரோத கொடுங்கோலர்களால் எந்த ஒரு குற்றமும் இழைக்காத ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். அரச கொலைகாரர்களால் ஆயிரக்கணக்கானவர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனார்கள். தமிழ் மக்களிற்காக தமது தனிப்பட்ட வாழ்வை சிந்திக்காது, தமது அன்புக்குரியவர்களை விட்டு விட்டு போரிட வந்தவர்களும் இலங்கை அரச கொலைகாரர்களால் கொல்லப்பட்டனர்; கடத்தப்பட்டு காணாமல் போயிருக்கிறார்கள்.

தம் உயிருக்கு உயிரானவர்களை தேடி அவர்களின் அன்புக்குரியவர்கள் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். இருள்வெளிகளில் மறைக்கப்பட்ட தமது மகனையோ, மகளையோ யாராவது தேடித் தர மாட்டார்களா என்று அவர்கள் கண்ணீரால் கரைந்து போன குரல்களால் யாசிக்கிறார்கள். இப்போது யாழ்ப்பாணம் வந்து போன ஐக்கிய நாடுகள் சபையின் பான் - கி- மூன் இடமும் தங்களின் மாறாத மனவலியை சொல்ல எரிக்கின்ற வெய்யிலில் தெருக்களில் கூடினார்கள்.

தமிழ் மொழி பேசுபவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கடத்திக் காணாமல் போகப் பட்டவர்கள், தமிழ் மக்களிற்காக போராடியதற்காக கடத்திக் காணாமல் போகப் பட்டவர்கள் என்ற எம் தமிழ் மக்களிற்காக இந்த ஆர்ப்பாட்டங்களில் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள், அன்புக்குரியவர்களையும் சேர்த்து வெறும் ஆயிரத்துக்கும் குறைவானவர்களே கலந்து கொண்டனர். எமது மக்களிற்காக நடத்தப்படும் போராட்டங்களில் நமது பங்களிப்பு இவ்வளவு தானா? எமக்காக போராடியவர்களிற்கு நாம் காட்டும் நன்றிக்கடன் இது தானா?

தங்களோடு இரத்தம் தசையாக வாழ்ந்து காணாமல் போனவர்களிற்காக வராத கூட்டம் என்றும், எவரும் காணாத கடவுள்களிற்காக இலட்சக்கணக்கில் கூடுகிறது. தமது தனிப்பட்ட வாழ்வை துச்சமாக தூக்கி எறிந்து விட்டு மக்களிற்காக போராடியவர்களிற்கு கூடாத கூட்டம் கற்சிலைகளிலும், புராணப் புளுகுகளிலும், புனித நூல்கள் என்று சொல்லப்படும் பொய் மூட்டைகளிலும் மட்டும் இருக்கும் கடவுள்களிற்காக இலட்சக்கணக்கில் கூடுகிறது.

காணாமல் போனவர்களிற்கான ஆர்ப்பாட்டத்தில் வெறும் ஆயிரம் பேர்கூடிய இதே யாழ்ப்பாணத்தில் தான் என்றுமே காணாத முருகனிற்காக மூன்று லட்சத்திற்கும் அதிகமானவர்கள் சேர்ந்து தேர் இழுத்தார்கள். முள்ளிவாய்க்காலில் இத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டபோது வராத கற்களிற்காக காவடி எடுப்பவர்கள் தம் கடைசிச் சொட்டு உயிர்த்துளி இருக்கும் மட்டும் மக்களிற்காக போராடியவர்களிற்காக வராமல் இருக்கும் மடமையை யார்க்கு எடுத்துரைக்க, யாருடன் நோக?

மகிந்த ராஜபக்ச என்ற கொலைகாரன் மலேசியாவிற்கு போயிருக்கிறான். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து அவனை மலேசிய மண்ணில் காலடி எடுத்து வைக்க அனுமதிக்க கூடாது என்று போராடுகிறார்கள். ஒரு வயது முதிர்ந்த வீரத்தாய் அங்கு தன் உடலும் உணர்வும் பொங்க " சின்னப் பிள்ளைகளை எல்லாம் கொன்ற இவனை இங்கே அனுமதிக்கக் கூடாது; இவன் இங்கே வந்திருக்கிறதை எண்ணி என் உயிர் துடிக்கிறது; இவன் ஒழிந்து போகட்டும்" என்று அழுகிறாள்.

ஆனால் இந்த பக்த கோடிகள் கூடித் தேர் இழுத்த இதே நல்லூர் கந்தசாமி கோவிலில் கொலைகாரன் மகிந்தாவிற்கு மாலை போட்டு மரியாதை செய்தார்கள். கோயிலிற்கு உள்ளே அல்ல வெளிவீதியில் செருப்பு போட்டு கொண்டு போனால் கூட கோயிலின் புனிதம் கெட்டு விடும் என்று நல்லூர் கோயில் மணியகாரர் மாப்பாணரும், அவர் தம் அல்லக்கைகள் சைவ மகா சபையும் விளக்கு பிடித்துக் கொண்டு புனிதப் போர் செய்கிறார்கள். "நாமார்க்கும் குடியல்லோம், நமனையும் அஞ்சோம்" என்ற வீர வசனங்கள் எல்லாம் இனப்படுகொலையாளி மகிந்தாவிற்கு முன்னாலே எங்கே பறந்து போனது. சட்டையைக் கழட்ட வேண்டும்; செருப்பைக் கழட்ட வேண்டும் என்ற புனித லிஸ்ட்டில் கொலைகாரனிற்கு மாலை போட்டு மரியாதை செய்ய வேண்டும் என்பதும் அடங்கி இருக்கிறதா?

போப்பாக வரக்கூடியவர் என்று சொல்லப்படுபவரும், கொழும்பின் பிசப்பும், கார்டினலுமான மல்கம் ரஞ்சித் பட்டபந்திகே இலங்கை வரலாற்றில் கொடூரக் கொலைகாரனான கோத்தபாய ராஜபக்சவிற்கு கெளரவ கலாநிதி (Doctor of Letters) பட்டத்தையும், இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவிற்கு (Doctor of Law) என்ற கெளரவ கலாநிதி பட்டத்தையும் "முள்ளிவாய்க்காலில் யுத்தத்தை வெற்றி " கொண்டதற்காக வழங்கினார். அப்போது அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்தார். பிறப்பவர்கள் எல்லோரும் இறப்பார்கள் என்பது இயற்கையின் நியதி. ஆனால் "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று பம்மாத்து சொல்லும் இவர்களிற்கு கொலை செய்யும் மரண வியாபாரிகள் கெளரவ கலாநிதிகளாகத் தான் இருப்பார்கள்.

மல்கம் ரஞ்சித் போன்றவர்கள் அதிகாரத்தில் இருக்கும் தேவாலயங்களிற்கு போய் வரும் கிறீஸ்தவர்கள் தம்மவர்களும், தம் அயலானவர்களும் காணாமல் போனதற்கு நியாயம் கேட்கும் இடங்களில் காணப்படுவதில்லை. "உன்னைப் போல் உன் அயலானை நேசி" என்பது சுவரில் மாட்டிக் கொள்ளும் அலங்கார வாசகமாகவே இருக்கிறது.

கொல்ல வரும் சிங்கங்களை காட்டெருமைகள் கூட்டமாக கூடி எதிர்க்கும். தன்னைக் கொல்ல வரவில்லை; மற்ற எருமையைத் தானே கொல்லப் போகிறது என்று அவை தயங்குவதில்லை; ஒதுங்குவதில்லை. எமது போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களிற்காக சேர்ந்து போராடுவோம். போராடாத மனிதர்கள் அழிந்ததை தான் வரலாறு முழுக்க காண்கிறோம். போராடாமல் வாழ்க்கை இல்லை.