Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

மருந்து வியாபாரத்தில் புதிய விளையாட்டு; அமைச்சர் ராஜித இது குறித்து என்ன சொல்கின்றார்?

ஓளடத கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் லால் ஜயகொடி மற்றும் பிரதித் தலைவர் கிரிசாந்த வீரசூரிய ஆகியோர் அரசியல் வற்புறுத்தல் காரணமாக பதவி விலகியதை ‘ஜனரல’ என்ற சிங்களப் பத்திரிகை இரு வாரங்களுக்கு முன்னர் பிரதான தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தது. சில மருந்துகளுக்கு அங்கீகாரம் வழங்குமாறு சுகாதார அமைச்சர் அதிகாரசபைக்கு உத்தரவிட்டதாகவும், அதனை மறுத்த அதிகாரசபை முக்கியஸ்தர்களை பதவி விலகுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வற்புறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜனரல பத்திரிகையின் கடந்தவார ஆசிரியர் தலையங்கமும் இந்த விடயத்திற்கு முக்கியத்துவமளித்திருந்தது. சுகாதார அமைச்சருக்கு அப்படி கோபம் பொத்துக் கொண்டு வந்தது ஏன் என்பது குறித்தே நாங்கள் அலசிப் பார்க்கின்றோம். இது விடயத்தில் அதிகாரசபை நிபுணர்கள் நடவடிக்கை எடுத்ததற்கான காரணத்தை ஆராய்ந்தால் இதனை அறிந்துகொள்ள முடியும்.

பொதுவாக இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் ஒவ்வொரு மருந்தும் பதிவு செய்யப்படல் வேண்டும். தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை அமைக்கப்பட்டதன் பின்னர் பதிவுசெய்யும் அதிகாரம் அதிகாரசபையின் கைக்கு சென்றது. சில மருந்துவகைகளை பதிவுசெய்ய அதிகாரசபை மறுத்தமையால் இந்த கருத்து முரண்பாடு உருவானது.

இதனை புரிந்துகொள்வதற்கு மருந்து வியாபாரம் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டும். ஒரே மருந்தை பல்வேறு பெயர்களில் மருந்துக் கம்பனிகள் விற்பனை செய்கின்றன. அவை பல்வேறு விலைகளில் விற்கப்படுகின்றன. இந்த விலை நிர்ணயத்தின் ஊடாகத்தான் சுரண்டல் நடக்கின்றது. உதாரணத்திற்கு, கொலஸ்டரோலுக்கு பயன்படுத்தப்படும் அவஸ்டசின் என்ற மருந்திற்கு பல்வேறு வியாபாரப் பெயர்கள் 172 உண்டு. எந்தப் பெயராக இருந்தாலும் மருந்து ஒன்றுதான்.

காஸ்ட்ரைடீஸிக்கு பயன்படுத்தும் ஓம்பிரசோல் 70 வகை உண்டு. நீரிழிவு நோய்கு பயன்படுத்தும் வீக்லசைட் என்ற மருந்து 70 பெயர்களில் விற்கப்படுகின்றது.

பாலியல் பலவீனத்திற்கு பயன்படுத்தப்படும் சில்டெனிபல் இந்த வியாரத்திற்கு நல்ல உதாரணமாகும். அதைப்போன்று 70 வகையான மருந்துகள் இலங்கை சந்தையில் உள்ளன. பாலியல் பலவீனம் என்பது பொதுவாக காணப்படாததினால் அந்தளவு மருந்து வகைகள் அவசியமில்லை. ஆனால், பல வகைகள் உள்ளமையால் நோய் இல்லாதவர்களுக்கும் அந்த மருந்தை பருக்கும் கலாச்சாரத்தினை உருவாக்குகின்றார்கள். சில்டெனபில் பாலியல் சக்தியை அதிகரிக்கும் மருந்து என பொய் சொல்லி, எந்த நோயும் இல்லாதவர்களுக்கு இலங்கை பாமஸிகள் (மருந்து விற்பனை நிலையங்கள்) தொகையாக விற்பனை செய்கின்றன.

மருந்துகளின் விலையில் பல்வேறு வித்தியாசங்களும் காணப்படுகின்றன. உதாரணமாக, டைக்லொபெனெக் சோடியம் என்ற வலி நிவாரண மாத்திரை ஒரு ரூபாவிலிருந்து 40 ரூபா வரையில் விற்கப்படுகின்றது. மருந்துகளின் பெயர்களில் இறக்குமதி செய்ய 1 ரூபா 90 சதம் செலவாகும் அமொக்ஸிலீன் என்ற மருந்து, அமொக்ஸில் என்ற வியாபாரப் பெயரில் 16 ரூபாவிற்கு விற்கப்படுகின்றது. 30 ரூபாவிற்கும் அமொக்ஸின் வகைகள் விற்கப்படுகின்றன.

மெடபோம் மாத்திரை 90 சதத்திலிருந்து 23 ரூபா வரை பல்வேறு விலைகளில் விற்கப்படுகின்றது. கம்பனிகள் நோயாளர்களை எப்படி சுரண்டுகிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றது. இந்த பிரச்சினையை தவிர்ப்பதற்காக 1970களில் பேராசிரியர் சேனக பிபிலே மருந்து கொள்கையொன்றை அறிமுகப்படுத்தினார்.

அதில் மருந்துகளுக்கான விலைக்கட்டுப்பாடு, ஒரே மருந்து பல வியாபாரப் பெயர்களில் விற்கப்படுவதை கட்டுப்படுத்தல், அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலொன்றை தயாரித்தல், மருந்துகளை பரிந்துரை செய்யும்போது வியாபாரப் பெயர்களில் அல்லாது மருந்தின் பெயரையே குறிப்பிடுதல் போன்ற முற்போக்கான விடயங்கள் அதில் அடங்கியுள்ளன.

ஆனால் ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை சட்டமூலத்தில் அந்த ஒதுக்கீடுகள் உள்ளடக்கப்படவில்லை. மருந்துகளின் தரத்தை மதிப்பிட்டு அவற்றை பதிவு செய்யும் அதிகாரம் மட்டுமே அதிகாரசபைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

என்றாலும், இந்த வரம்புகள் அடங்கிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகாரசபையின் நிபுணர்கள் அத்தியாவசியமற்ற மருந்துகள் பதியப்படுவதை தடுக்கவும், விலை கூடிய வியாபாரப் பெயர்களை பதிவுசெய்வதை தடுக்கவும் முயன்றார்கள். இதனால்தான் அரசியல்வாதிகளுடன் மோத வேண்டிய நிலை ஏற்பட்டது.

சில உதாரணங்களை பார்ப்போம்.

கருத்து முரண்பாடு ஏற்பட்டதற்கு பிரதான காரணி புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும் நிமோடுசுமப் (Nimotuzumab) என்ற மருந்து சம்பந்தமானதாகும். இந்த ஊசி மருந்து ஒரு குப்பியின் விலை 65,000 ரூபா. ஒரு முறை பயன்படுத்த 4 குப்பிகள் தேவைப்படுகின்றன. ஆறு முறை அந்த தடுப்பூசியை போட வேண்டும். அதற்கு 12 லட்சம் ரூபா செலவாகின்றது. அவ்வளவு பணம் அறவிட்டாலும் இந்த மருந்து இன்றும் பரீட்சார்த்த மட்டத்திலேயே (Clinical Trial)) உள்ளதுதான் கவனிக்க வேண்டிய விடயம். இது மிருகங்களை கொண்டே பரீட்சிக்கப்பட்டது. மனிதர்களிடம் பரீட்சித்துப் பார்க்கப்படவில்லை.

பொதுவாக க்ளினிகல் பரீட்சார்த்தத்தில் பல மட்டங்கள உள்ளன. முதலில் மிருகங்களுக்கு செலுத்தி பரீட்சிக்கப்படும். பின்பு சுகதேகியான ஒருவருக்கும் பின்னர் சுகதேசியான பலருக்கும் செலுத்தப்பட்டு பரீட்சிக்கப்படும். அதன் பின்பு நோயாளர்களுக்கு பரீட்சித்துப் பார்க்கும் போது குறித்த மருந்து கம்பனி அந்த நோயாளிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதோடு மட்டுமல்ல ஒரு தொகை பணமும் கொடுக்க வேண்டும்.

இந்த மருந்து உலகின் எந்தவொரு நாட்டிலும் அங்கீகரிக்கப்படவில்லை. ஏனைய நாடுகளில் நோயாளர்களுக்கு அந்த மருந்தை செலுத்தி பரீட்சித்துப் பார்ப்பதற்கு மருந்துக் கம்பனி பணம் கொடுக்கின்றது. இலங்கையை பொறுத்தவரை நோயாளர்கள் மருந்து வியாபாரிகளின் ஆய்வுகூட எலிகளாக இருப்பதுடன், 15 லட்சம் பணமும் செலுத்துகின்றார்கள். ஆகவேதான், அதிகார சபையின் நிபுணர்கள் ‘நிமொடுசுமப்’ மருந்து பதிவு செய்வதை நிராகரித்தார்கள்.

இன்னொரு உதாரணம் புற்றுநோய்க்காக பயன்படுத்தும் சிமாவக்ஸ் (Simavax) இந்த மருந்தும் ஒரு குப்பியின் விலை 65,000 ரூபா. ஒரு நோயாளிக்கு 15 குப்பிகள் தேவைப்படுகின்றன. சுமார் 10 லட்சம் ரூபா செலவிட்ட பின்னர் நோயாளியின் ஆயுள் ஒரு மாதத்தினால் மாத்திரமே நீடிக்கும். சீமாவக்ஸ் பதிவுசெய்வதையும் அதிகாரசபை நிராகரித்தது. மேலும் பிரச்சினைகள் உருவாகின. நாட்டில் மலேரியா ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை நாம் அறிவோம். ஆனால் ஒரு வழங்குநர் மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ‘ப்ரிமாக்வீன்’ (Primaquine) மருந்தில் 60,000 இறக்குமதி செய்ய அனுமதி கோரி கடிதமெழுதியிருந்தார். அந்த மருந்து இலங்கைக்கு அவசியமற்றது என்பதனாலும், தற்செயலாக ஒரு மலேரியா நோயாளி இனங்காணப்படும் பட்சத்தில் குறிப்பிட்டளவு ஒரு தொகை மருந்து அரச ஆஸ்பத்திரிகளில் இருப்பதனாலும் அதிகாரசபையின் முக்கியஸ்தர்கள் அனுமதி கடிதம் கொடுக்க மறுத்துவிட்டனர். இன்னொரு விடயத்தையும் இங்கு கவனிக்க வேண்டும். ‘லொரசிபம்’ (Lorazepam) என்ற மருந்தை கொண்டுவர பதிவுசெய்யப்படாத ஒரு வழங்குநர் சுகாதார அமைச்சிடம் டென்டர் சமர்ப்பித்திருந்தார். டென்டரின் மதிப்பு 33 மில்லியன் (330 இலட்சம்) அந்த டென்டரை பெற்றுக் கொள்வதற்காக மருந்துகள் இறக்குமதிக்கு அங்கீகார கடிதமொன்றை அதிகாரசபையிடம் கேட்டிருந்தார். அதிகாரசபை அங்கீகார கடிதம் வழங்காததினால் பதிவுசெய்யப்பட்ட இன்னொரு வழங்குநருக்கு டென்டர் வழங்க வேண்டிய நிலை சுகாதார அமைச்சிற்கு ஏற்பட்டது.

அதற்காக செலவளிக்கப்பட்ட தொகை 0.25 மில்லியன், அதாவது 2,50,000 ரூபா. நடக்கவிருந்த மோசடி நினைத்துக் கூட பார்க்க முடியாததாகும். அந்த மருந்துக்கு நிர்ணயித்த விலையை விட 132 மடங்கு அதிக பணம் மக்கள் பணத்திலிருந்து செலுத்த நேர்ந்திருக்கும்.

பேராசிரியர் லால் ஜயகொடி, விரிவுரையாளர் கிரிசாந்த வீரசூரிய உள்ளிட்ட நிபுணர்கள் இந்த மோசடியை தடுத்ததன் பின்பு அவர்களை பாராட்டுவதற்குப் பதிலாக அவர்களை கேட்டு விலகும்படி அச்சுறுத்திய பின்புதான் உண்மையான பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தது. இந்தப் பிரச்சினையில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நோயாளர்களின் பக்கத்தை எடுப்பாரா, அல்லது மருந்து வியாபாரிகளின் பக்கத்தை எடுப்பாரா? குறிப்பாக ஊழல் மோசடி குறித்து சத்தம் போட்டு அதிகாரத்திற்கு வந்து, நல்லாட்சியை பற்றி அடிக்கடி கூறும் இந்த அரசாங்கம் இந்த மோசடி சம்பந்தமாக எதுவும் கூறாதது ஏன்?

திருட்டை தடுக்கும் நிபுணர்களாக தம்மை அறிமுகப்படுத்தும் மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் வாய் திறக்காமலிருப்பது ஏன்?

இந்த விடுகதைக்கு விடை தேடும் பொறுப்பை வாசகர்களாகிய உங்களிடம் ஒப்படைக்கின்றோம். அதோடு மனிதர்களை கொல்லும் ஆயுத வியாபாரம் மற்றும் மனிதர்களை வாழ வைக்கும் மருந்து வியாபாரம் ஆகியன உலகில் அதிக இலாபம் பெறும் வியாபாரங்கள் என்பதை நினைவுபடுத்துகின்றோம்.

இலாபத்தை மாத்திரமே நோக்காகக் கொண்ட கம்பனிகள் மருந்துகளை பயன்படுத்துவது மனிதர்களை வாழ வைப்பதற்கல்ல. இந்த முறையின் கீழ் மருந்து கம்பனிகள் நோயாளர்களை கொல்வதுடன், அவர்களது குடும்ப உறவுகளையும் கொல்லாமல் கொல்கின்றார்கள்.