Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இன்னுமாடா இந்த உலகம் ஐக்கிய நாடுகள் சபையை நம்புது!!!

முதலாம் உலகப் போருக்குப் பின் உலக நாடுகள் சங்கம் என்ற அமைப்பை இனி ஒரு போதும் போர் நடக்கக்கூடாது, உலகில் சமாதானம் நிலவவேண்டும் என்று அந்த நாளைய பெருந்தலைகளான பிரித்தானியாவும், பிரான்சும் முன்னுக்கு நின்று 10.01.1920 அன்று தொடங்கினார்கள். (League of Nations, Wikipedia). "ரம்பையின் காதல்" படத்தில் "சமரசம் உலாவும் இடமே, நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே" என்ற சீர்காழி கோவிந்தராஜன் பாடல் சுடுகாட்டில் ஒலிப்பது போல தங்களால் கொல்லப்பட்டவர்களின் மேல் ஏறி மிதித்துக் கொண்டு இந்த கொலனித்துவ கொலைகாரர்கள் "சமாதானம் உலவும் இடமே" என்று உலக நாடுகள் சங்கத்தில் நின்று பாடினார்கள்.

பழைய வல்லரசுகள் சண்டையிட்டுச் சாகட்டும் அதன் பிறகு நாம் தான் வருத்தப்படாத வல்லரசாக இருப்போம் என்பதற்காக ஒதுங்கியிருத்தல் (Isolationism) என்ற தந்திரத்தை கடைப்பிடித்த அமெரிக்கா உலகநாடுகள் சங்கத்தில் சேரவில்லை. ஜேர்மனி தான் முதலில் சண்டையைத் தொடங்கியது என்பதால் முதலாம் உலகப் போரிற்கான முழுப்பழியையும் ஜேர்மனியில் தலையில் போட்ட உலகின் பாதிநாடுகளை அடிமைகளாக வைத்திருந்த "ரொம்ப நல்லவர்களான" பிரித்தானியாவும், பிரான்சும் ஜேர்மனியை சங்கத்தில் சேர்க்கவில்லை.

பொதுவுடமைக் கட்சியின் ஆட்சி நடக்கிறது; ரஸ்ய அரசபரம்பரையினரான ரோமனோவ் குடும்பத்தினரை கொலை செய்து விட்டார்கள் என்ற காரணங்களிற்காக அகிம்சாவாதிகளான பிரித்தானியாவும், கருணைக்கடல்களான பிரான்சும் சோவியத் யூனியனை சங்கத்தில் சேர அனுமதிக்கவில்லை. தங்களது நாட்டில் கொடுங்கோல் ஆட்சி செய்த கொடியவர்களான ஜார் அரசகுடும்பத்திற்கு சோவியத் அரசு மரணதண்டனை விதித்தது அநியாயம் என்று கண்ணீர் விட்ட இவர்கள் தான் தங்களிற்கு துளியும் சம்பந்தம் இல்லாத நாடுகளை எல்லாம் அடிமைப்படுத்தி வைத்துக் கொண்டு இருந்தார்கள். இவர்களை எதிர்த்த பகவத் சிங் போன்ற தேசபக்தர்களை இலட்சக்கணக்கில் கொன்றார்கள். அடிமைப்படுத்திய நாடுகளில் இவர்கள் அடித்த கொள்ளைகளினால் பல லட்சம் மக்கள் பட்டினியால் இறந்தார்கள்.

ஆர்.ஆர் எஸ்காரர்களின் ஆதர்ச புருசனான கிட்லரும், நாசிகளும் இரண்டாம் உலகப்போரைத் தொடங்கியதால் சங்கம் கலகத்துப் போய் விட்டது. போரின் முடிவில் 20.04.1946 அன்று சங்கத்திற்கு முடிவு கட்டப்பட்டு விட்டது. அதே நேரத்தில் பிரித்தானியா, பிரான்சு போன்ற வல்லரசுகளும் தம் பலம் இழந்து வளர்ந்து வந்த அமெரிக்காவிற்கு வழி விட்டன. புது நாட்டாமைக்கு புதுப்பஞ்சாயத்து தேவைப்பட்டது. அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தினால் புதிய அமைப்பிற்கான திட்டங்கள் 1939 இலேயே தயாரிக்கப்பட்டன. பிராங்லின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சேர்ச்சிலினால் 1941 இல் வெள்ளைமாளிகையில் வைத்து "ஐக்கிய நாடுகளிற்கான பிரகடனம்" என்னும் முன்வரைவு வெளியிடப்பட்டது. "இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க முடியாது, ஏனெனில் இந்தியர்களிற்கு தம்மைத் தாமே ஆளத் தெரியாது" என்று திமிர்த்தனமாக சொன்ன வின்ஸ்டன் சேர்ச்சில் என்னும் இந்த கொழுத்த பன்றியும், அமெரிக்காவும் தான் ஐக்கிய நாடுகள் சபையை சேர்ந்து தொடங்க திட்டம் போட்டது என்றால் ஐக்கிய நாடுகள் சபை யாருக்காக தொடங்கப்பட்டது, யாருடைய நலன்களிற்காக தொடங்கப்பட்டது என்பதை இதற்கு மேல் விளக்கத் தேவையில்லை.

உலக சமாதானத்திற்காகவும், ஜனநாயகத்திற்காகவும் கண்ணீர் விடும் இவர்கள் தான் உலக நாடுகள் சங்கத்தின் பாதுகாப்புச்சபையில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், அந்நாளைய சோவியத் யூனியன் (ரஸ்சியா), சீனக்குடியரசு எனப்படும் தாய்வான் என்பவை தான் எனப்படும் தடுப்பு ஆணை அதிகாரம், நிரந்தர அங்கத்துவம் கொண்ட நாடுகள்.ஆம், மாவோ சேதுங் தலைமையிலான பெரும்பகுதி சீனாவையும், பெரும்பகுதி சீனமக்களையும் கொண்ட மக்கள் சீனக்குடியரசிற்கு 1971 வரை நிரந்தர அங்கத்துவம் கொடுக்காமல் அமெரிக்காவின் கைப்பொம்மையான தாய்வானிற்கு நிரந்தர அங்கத்துவம் கொடுத்ததுதான் இவர்களின் ஜனநாயகம். உலக நாடுகளிம் பாதுகாப்பை இந்த ஐந்து நாடுகளும் மட்டுமே முடிவு செய்வார்களாம், அதிலும் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், தாய்வான் போன்ற அமெரிக்காவும் மூன்று கள்ளர்களும் பெரும்பான்மையாக இருந்து கொண்டார்கள்.

கொரியா, வியட்நாம், லாவோஸ், கம்போடியா, கொங்கோ, தென் அமெரிக்க நாடுகள் தொடங்கி இன்று அப்கானிஸ்தான், ஈராக், சிரியா வரை அமெரிக்காவும் அடிப்பொடிகளும் செய்து வரும் அத்தனை அநியாயங்களிற்கும் ஐக்கிய நாடுகள் சபை ஒத்து ஊதும். அமெரிக்காவிற்கு ரஸ்சியா, சீனா போன்ற நாடுகள் எதிர்ப்புக் காட்டும் போது அது ஐக்கிய நாடுகள் சபையை கால்தூசியை தட்டுவது போல தட்டிவிட்டு போர் தொடங்கும். இராக்கின் எண்ணெய் வயல்களை கொள்ளையடிப்பதற்காக, ஈராக் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறது என்று பொய் சொல்லி ஈராக்கை ஆக்கிரமிக்க வெளிக்கிட்டபோது, உள்ளூர் கொலைகாரன் சதாம் குசைனின் வியாபார பங்காளிகளான ரஸ்சியாவின் பூட்டினும், சீனாவும் எதிர்த்த போது ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதல் என்னும் சிறுசடங்கை கூட ஒதுக்கி தள்ளிவிட்டு ஜோர்ஜ் புஸ்சும் அவனின் வளர்ப்புப்பிராணியான ரொனியும் இராக்கை மரணபூமியாக்கியது சமீபத்திய உதாரணம்.

இலங்கையில் தமிழ்மக்கள் இலங்கை அரசுகளால் படுகொலை செய்யப்பட்டபோது தமிழ்மக்களின் பேரழிவைத் தடுத்து நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை என்ன செய்தது?. வன்னிப்போர் நடந்து கொண்டிருந்த போது சபை அனுப்பிய பிரதிநிதி விஜய் நம்பியாருக்கும், மகிந்த ராஜபக்சவின் கொலைகார அரசுடன் கூட நின்று தமிழ்மக்களைக் கொன்ற இந்திய அரசிற்கும் இருந்த தொடர்புகள் வெளிப்படையானவை. தமிழ்மக்களின் இனப்படுகொலையின் பின் இலங்கை வந்த பான் கி-மோன் முகாம்களில் கொலைகாரன் ராஜபக்சவினால் சிறைப்பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த எம்மக்களிற்கு என்ன ஆறுதலைக் கொடுத்தார்?. ஆயிரக்கணக்கான அப்பாவிமக்களைக் கொன்ற கொலைகாரர்களுடன் கைகுலுக்கி விட்டுச் சென்றதைத் தவிர வேறென்ன புடுங்க முடிந்தது?.

இலங்கையில் நடைபெற்ற போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தும் வெளிநாட்டு நீதிபதிகளை பயன்படுத்துமாறு எந்த சந்தர்ப்பத்திலும் அழுத்தம் கொடுக்கப்படாது என ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளாராம். கொழும்பில் வைத்து ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொட ராஜபக்ச கொலைகாரர்களினால் கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டார். சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இவர்களால் கொலைசெய்யப்பட்டார். ஊடகவியலாளர்களான சிங்கள மொழி பேசுபவர்களின் கடத்தல்களிற்கும், மரணங்களிற்குமே நீதி கிடைக்காத போது ஒடுக்கப்படும் தமிழ்மக்களின் இனப்படுகொலைகளிற்கு இலங்கையின் ஆட்சியாளர்கள் விசாரித்து நீதி வழங்குவார்களாம் ஆணையாளர் சொல்கிறார். இதைச் சொல்லத்தான் இவர் இலங்கை வந்தாரா?

இலங்கையில் புதிய பொருளாதாரக் கொள்ளையின் அடுத்த கட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதற்காகவே சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏகாதிபத்தியங்களால் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழ்மக்களின் அழிவுகளின் மேல் தமது ஆயுதவிற்பனை இலாபவேட்டையை நடத்தி முடித்த வல்லரசுகள் தற்போது அடிக்கவிருக்கும் கொள்ளைக்கு அமைதியான சூழல் வேண்டும். தமது வாழ்வை இழந்து நிற்கும் தமிழ்மக்களை அரசிற்கு எதிர்ப்பு காட்ட வேண்டாம் இலங்கை அரசு விசாரணை செய்து நீதி வழங்கும் என்று அமைதிப்படுத்துவதற்கே ஐக்கிய நாடுகள் சபை இந்த நாடகம் போடுகிறது.

ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராட் அல் ஹூசைன் இன் வருகையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரிதாகக் காட்டுகிறது. அவரிடம் பேசுவதன் மூலம் நீதி கிடைக்கும் என்று கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் தெரிவிக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரை, ஐக்கிய நாடுகள் சபையை நம்பச் சொல்கிறது. ஹூசைன் இலங்கை அரசு விசாரணை நடத்தி நீதி வழங்கும் என்று நம்புகிறார். அதாகப்பட்டது மக்களைக் கொல்லும் இலங்கையின் அரசுகள் நீதி வழங்கும் என்று இலங்கை அரசு, ஐக்கிய நாடுகள் சபை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என எல்லோரும் சேர்ந்து ஒத்த குரலில் சொல்கிறார்கள்.

எரிநெருப்பில் விழுந்து கிடக்கும் எம் மக்களின் மேல் ஏறி மிதித்து இவர்கள் சொல்லும் பொய்களை ஒரு நாள் எம்மக்கள் எதிர்த்து நின்று போர் புரிவர். அன்று காலத்தச்சன் வெட்டி முறிக்கும் மரம் போல இவர்களின் பொய்களும் சரிந்து விழும்.