Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ராக்கிங் என்ற ரவுடித்தனம்: மாணவர்களா? மனோவியாதி பிடித்தவர்களா?

யாழ் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெற்று புதிய மாணவர்களாகச் செல்லுகின்றவர்கள், பழைய மாணவர்கள் சிலரின் அத்துமீறிய வகையிலான ரவுடித்தன ராக்கிங்கால் அச்சமடைய வைக்கப்படுகிறார்கள். குறிப்பாக புதிய மாணவிகள் மேலான ராக்கிங் என்ற இந்த மனோவியாதி கொண்ட பழைய மாணவர்களது படுமோசமான நடவடிக்கை அருவருப்பைத் தருகிறது.

புதிய மாணவிகளது ரெலிபோன் நம்பர்களை ஏதோ ஒரு வகையில் பெற்றுக்கொண்டு மாணவிகளுக்கு ரெலிபோன் ஊடாக மிரட்டி தாங்கள் வைக்கும் நிபந்தனைகளை நிறைவேற்றும்படி அச்சுறுத்தும் பாணியிலும் அடிக்கடி தொடர்புகொண்டு அம் மாணவிகளை தொந்தரவு செய்கிறார்கள்.

மாணவிகளது புகைப்படங்களையும், குடும்பப் பின்னணிகளையும், நட்பு வட்டத்தினையும் முகப்புத்தகங்களில் தேடியெடுத்து அவற்றை பாவிப்பதுடன் தங்களது நிபந்தனைகளை நிறைவேற்றாது விடின் முகப்புத்தகத்தினை முற்றாக அழித்து விடுவோம் என்பது போன்ற அச்சுறுத்தும் இழிவான வார்த்தைககளை புதிய மாணவிகள் எதிர்கொள்கிறார்கள்.

சமூக நோக்கோ, சக மாணவர்கள் என்று கரிசனையோ இன்றி ரவுடித்தனமான முறையில் நடந்து கொள்ளும் இவர்கள் குழுக்களாக இருப்பதால் அவர்களது நிபந்தனைக்கு உடன்படாவிட்டால் ஏதும் தீங்கு நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் புதிய மாணவிகள் அச்சத்தில் உறைந்துள்ளார்கள். அவர்கள் வைக்கின்ற நிபந்தனை நிறைவேற்றப்படக் கூடியதா? முடியாததா? என்பது ஒருபுறம் இருக்க மாணவிகள் மேல் அழுத்தம் செலுத்தும் இந்தப் போக்கு அவர்கள் குறிப்பாக பெண்கள் என்பதாலேயே ஆணாதிக்க மனோபாவத்துடன் நிகழ்த்தப்படுகின்றது. "எடியேய் நீ என்னை அல்லது எங்களை வந்து சந்திக்க வேண்டும்", "ஒரு பார்ட்டி வைக்க உனக்கு என்ன தான் கஷ்டம்" என்ற வார்த்தைகளுக்கூடாக மாணவிகளின் சுயகவுரவத்தை தமக்கு அடமானம் வைக்கும்படி இந்த ரவுடிகள் தங்களது தொலைபேசியூடாக முகம் தெரியாத முறையில் மிரட்டுகிறார்கள். மற்றவர்கள் துன்பத்திலும், அச்சத்திலும் இன்பம் கொள்பவர்கள் மாணவர்களா? ரவுடிகளா?

இலங்கையில் தென்.பல்கலைக் கழகங்களில் இவ்வாறான "ராகிங்" என்ற போர்வையில் நடத்தப்பட்ட வன்முறை ஒழிக்கப்பட்டுள்ளது. அங்கு தம் உரிமைக்காகப் போராடும் மாணவர் சமூகம் உள்ளது. அவ்வாறான ஒரு மாணவர் சமூகம் வடக்குக் கிழக்கில் உருவாகி விடக் கூடாதென்பதில், இனவாத அரசுக்கும், அதற்குத் துணை போகும் தமிழ் கோடாலிக் காம்புகளுக்கும் உள்ள கரிசனை இரகசியமான ஒன்றல்ல. அதனாலேயே, ஒடுக்கும் இனவாத அரசுடன் சேர்ந்து, யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூர அனுமதிமறுக்கும் யாழ்-பல்கலைக்கழகத் தலைமை, இந்த கட்டாக்காலிகளுக்கு மட்டும் மாணவிகள் மீது வன்முறை செலுத்த அனுமதிக்கிறது. இவ்வாறான நயவஞ்சக சக்திகளின் திட்டத்தைக் கருத்திற் கொண்டு சமூக சிந்தனை கொண்ட மாணவர்கள் "ராகிங்" போன்ற பிற்போக்குத்தனமாக செயல்களிலிருந்து மீட்க -மாணவர் சமூகத்தை பிரக்ஞை உள்ளவர்களாக மாற்ற முயல வேண்டும்.