Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இதோ வருகிறது ஜனநாயகப் புரட்சி !! அரேபியா எங்கும் கலகம் !! தப்பி ஓடும் சர்வாதிகாரிகள் !! அஞ்சி நடுங்கும் ஆளும் வர்க்கங்கள்!! தொடை நடுங்கும் ஏகாதிபத்தியங்கள் !!

இந்தக் கட்டுரையின்நோக்கம் டுனிசியா, ஏமன், எகிப்து போன்ற அரபு நாடுகளில் நடக்கும் ஜனநாயகப் போராட்டங்களைப் பற்றிய செய்திகளைத் தருவது மட்டும் அல்ல. மாறாக, அரபு மக்களைப் பற்றிய பொய்ப் பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொண்டு வரும் மேற்கு உலக நாடுகளின் செயல்களை மீறி அரபு மக்களின் போராட்டம் முன்னேறியிருப்பதையும் அது சீனா, இலங்கை, பர்மா, போன்ற சர்வாதிகார நாடுகளில் வாழும் மக்களுக்கு விடுக்கும் செய்தியை வாசகர்களுக்கு உணர்த்துவதே நமது நோக்கம்.

 

அரேபியர்கள் என்றால் இஸ்லாமிய மதவெறியர்கள், அறிவிலிகள்; பெண்களுக்குச் சுதந்திரம் இல்லை; அரேபியர்களுக்கும் ஜனநாயகத்திற்கும் தொடர்பில்லை; ஜனநாயகத்தின் மகிமையை அறிந்து கொள்ள அரேபியர்களுக்குத் தெரியாது. இதுதான் மேற்குலக நாடுகள் தொடர்ந்து அரபுக்களைப் பற்றியும் அதிலும் குறிப்பாக முஸ்லிம்களைப் பற்றியும் பரப்பி வரும் பொய்கள். அரபு மக்கள் பரந்து வாழும் அரேபியத் தீபகற்பத்திலும் வடக்கு ஆப்ரிக்காவிலும் எழுந்து வரும் புரட்சி அலை இந்தப் பொய்ப் பிரச்சாரங்களைப் பொசுக்கி வருகிறது.

எல்லா அரபுக்களும் முஸ்லிம்கள் அல்ல !! முஸ்லிம்கள் எல்லோரும் ஜனநாயகத்தை அறியாதவர்கள் அல்ல !!

அரபுக்களில் கிறித்தவர்கள், யூதர்கள் உள்ளிட்ட பல மதத்தவர்கள், இனக் குழுக்கள் உண்டு. ஆனாலும், தொடரும் பொய்ப் பிரச்சாரத்தில் ஒன்று – ‘அரபுகள் எல்லாம் முஸ்லிம்கள்’. அரேபியர்களின் நாகரிகத்தில் கல்விக்கும் அறிவாளிகளுக்கும் ஜனநாயக வாழ்வுக்கும் மிகப் பெரும் இடம் உண்டு. கல்விக்கு அரேபியர்கள் அளித்த முக்கியத்துவம் மிகப் பெரியது. அறியாமையை அவர்கள் ஒருபோதும் வலிந்து ஏற்றுக் கொண்டதே இல்லை. கல்விக்கும் கேள்விக்கும் அவர்கள் அளித்த முக்கியத்தை அறிய வேண்டுமானால் அரேபியர்கள் இந்தியா, சீனா, ரோம், கிரேக்கம் உள்ளிட்ட பண்டைய நாகரிகங்களுடன் கொண்டிருந்த தொடர்புகளை அறிந்து கொள்ள வேண்டும்.

ஏராளமான நூல்கள், நூலகங்களை ஏற்படுத்தி நாடெங்கும், ஏன் உலகெங்கும் கல்வியைப் பரப்பியவர்கள் அரேபியர்கள். தமிழகம் உட்பட உலகின் பல பகுதிகளில் அரேபிய ஞானிகளின் கல்லறைகளை இன்றும் காணலாம். நபிகள் நாயகம் ஒருமுறை கல்வியின் முக்கியம் பற்றித் தம் சீடர்களுக்கு இவ்வாறு குறிப்பிட்டார்: ‘கற்பதாக இருந்தால் சீனாவுக்குச் சென்று கூட கற்றுக் கொண்டு வாருங்கள்’. அவர் வாழ்ந்த ஏழாம் நூற்றாண்டில் கல்வி கற்க பல ஆயிரம் மைல்கள் கடந்து சென்று கற்று வரும்படி கூறியது அரேபியச் சமுகத்தில் கல்விக்கு அவர்கள் அளித்து வரும் முக்கியத்துவத்தை உணர்த்துவதே. கடந்த நூற்றாண்டு வரை உலகின் மிகப் பெரும் நூல் நிலையங்கள் அரேபியாவில்தான் இருந்தன. இன்றும் இருக்கின்றன. ஆனாலும், மேற்கு உலகம் குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ் அமெரிக்கா போன்ற நாடுகள் அரேபியர்களைப் பற்றி தொடர்ந்து பொய்களைப் பரப்பி வருகிறார்கள்.

இன்றைய ஐரோப்பாவின் பெரும்பகுதி கடந்த நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை அரேபியர்களின் ஆளுகையில் தான் இருந்தது. ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி போன்ற தெற்கு ஐரோப்பிய நாடுகளின் பிரபலமான நகரங்கள், இன்றும் செயல்பட்டு வரும் நீர்ப்பாசனக் கட்டுமானங்கள், விளைநிலங்கள், தோட்டங்கள் அனைத்தும் அரேபியர்கள் நிர்மானித்தவையே. இதைத்தான் ஐரோப்பியர்கள் இன்றும் பெரும் மாற்றம் எதுவும் இன்றி அனுபவித்து வருகின்றனர். வானியல், கணிதம், வேதியியல், மருத்துவம், கப்பலோட்டும் கருவிகள் எனப் பல அறிவியல் கண்டுபிடிப்புகள் அரபுக்கள் உலகத்திற்கு வழங்கிய அருங்கொடைகளில் சில. நாளும் அனைவரும் பயன்படுத்தும் பல மருத்துவப் பொருட்கள், நாட்காட்டிகள், மனிதர்கள் அணியும் தைக்கப்பட்ட மேல்சட்டை, கால்சட்டை அனைத்தும் அரபு உலகத்தில் இருந்துதான் வந்தது. அனைவரும் அருந்தும் பானங்களான காப்பி, விரும்பி உண்ணும் பிரியாணி உட்பட அன்றாடம் பயன்படும் பல பொருட்களை உலக மக்கள் அனைவருக்கும் ஆற்முகம் செய்தது அரபிய நாகரிகம் தான். ஆனாலும் அரேபியர்களை ஏதோ கட்டு மிராண்டிகளாகக் காட்ட மேற்கு உலகம் தவறுவதே இல்லை.

முறையாகக் கல்லாத மேற்கு உலக மதவெறியர்கள் இஸ்லாம் கல்விக்கு எதிரான ஒரு மதம் என்றும் கூட ஒரு ஏகாதிபத்தியக் கருத்தைப் பரப்பி வருகின்றனர். அதிலும்  சிறிதும் உண்மையில்லை. உலகின் மிகப் பெரும் பல்கலைக் கழகங்களாக இன்று கருதப்படும் ஆக்ஸ்போர்ட் போன்ற பல்கலைக் கழகங்கள் அரேபியப் பலகலைக் கழகங்களான அல்-ஹசார் போன்றவற்றின் மாதிரியில், அதன் வழியில் அரபியக் கல்வி அறிஞர்களின் வழிகாட்டலின்படி அமைக்கப்பட்டவையே. எகிப்தில் உள்ள அல்-ஹசார் பல்கலை கழகம் தான் உலகின் பழமையான இன்றளவும் செயல்பட்டு வரும் வாழும் பல்கலைக் கழகங்களில் காலத்தால் மூத்தது, முதன்மையானது.

கிறித்தவப் பாதிரிகளை தயார் செய்வதற்காக பிரிட்டனில் தொடங்கப்பட்ட ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் தெற்கு ஐரோப்பாவில் ஆண்டு வந்த அரேபிய கல்வியாளர்கள் அளித்த புத்தகங்களைக் கொடையாகக் கொண்டுதான் தொடங்கப்பட்டது எனக் கருதப்படுகிறது. கல்வியும் கேள்வியும் அரபுக்களின் வாழ்வில் இன்றியமையாத ஒரு பங்கு. ஆனாலும், மேற்கு உலகம் அரேபியர்கள் அறிவிலிகள், கல்விக்கு எதிரானவர்கள் என்று பொய்களைத் தொடர்ந்து பரப்பி வருகின்றன.

அரேபியர்களுக்கு ஜனநாயக அருமை தெரியாது !!

அரபு உலகம் மிகப் பெரும் காலனிய எதிர்ப்புப் போரை கடந்த நூற்றாண்டில் நடத்தியது. லட்சக்கணக்கான மக்கள் தமது உயிரைப் பலியிட்டு ஜனநாயக உரிமைகளுக்காக போரிட்டார்கள். சோவியத் புரட்சியின் தாக்கம் முதலில் எதிரொலித்தது அரபு உலகில் தான் என்றால் அது மிகையாகாது. மிகப் பின் தங்கிய அரபுப் பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைக்கப்பட்டு பெரும் செல்வாக்குடன் வளர்ந்து வந்தன. கம்யுனிச ஆதரவுப் புரட்சி இயக்கங்கள், ஜனநாயக இயக்கங்கள் தொடங்கப் படாத அரபு நாடுகளே இல்லை எனலாம். மார்க்சிய லெனினிய இயக்கங்கள் பெருவாரியாக மக்களைத் திரட்டி புதிய ஜனநாயகப் புரட்சிக்குத் தயார் செய்த பல நாடுகளில் குறிப்பாக வடக்கு ஆப்ரிக்காவின் அங்கோலா, அரேபியத் தீபகற்பத்தின் ஏமன் போன்ற நாடுகளில் மேற்கு உலகம் நேரடியாகத் தலையிட்டு ஏகாதிபத்தியப் படைகளை அனுப்பி– மக்களால் விரட்டி அடிக்கப்பட்டு ஓடிப்போன கொடுங்கோலர்களை, மன்னர்களை அழைத்து வந்து ஆட்சியில் அமர்த்தி தமது பிடியில் இருத்தி வைத்தன. இந்த வரிசையில் அங்கோலா, எகிப்து, லெபனான், பாலஸ்தீனம், ஏமன், இராக், சூடான், மொசாம்பிக் போன்ற நாடுகளில் புரட்சி இயக்கங்கள் மட்டுமின்றி ஜனநாயக இயக்கங்கள் பலவும் மிகக் கொடுமையான வழிகளில் அழிக்கப்பட்டன. குறைந்த பட்ச ஜனநாயக உரிமையான பேச்சு உரிமையைக் கூட அனுபவிக்க அரபுப் பொதுமக்கள் அனுமதிக்கப் படவே இல்லை.

அரபுக் கொடுங்கோலர்கள் மேற்கு உலக ஆதரவுடன் அதிலும் குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்காவின் ஆதரவுடன் உள்நாட்டில் யார் ஜனநாயகக் குரல் கொடுத்தாலும் அவர்களைச் சிறையிலிட்டு சித்திரவதை செய்து கொலை செய்வதை வாடிக்கையாகச் செய்து வந்தார்கள் இன்னமும் செய்து வருகிறார்கள். ஆனாலும், மேற்கு நாடுகளின் பிரச்சாரம் அப்பாவிகளான அரேபியப் பொது மக்களை அவமானப்படுத்தத் தவறுவதே இல்லை. உலகின் பெரிய ஜனநாயக நாடுகளாகத் தம்மை அறிமுகம் செய்துகொள்ளும் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்க, ஜெர்மனி போன்றவை அரபுக்களின் எல்லாவிதமான புரட்சி இயக்கங்களையும் மிகக் கடுமையான முறையில் அடக்கி வருவதுடன் அவர்களை பற்றிய பொய்ப் பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இருபத்தி ஓராம் நூற்றாண்டில் அரேபியர்களின் எழுச்சி !!

மக்கள் ஒரு போதும் அடிமைத்தனத்தை விரும்பி ஏற்றுக் கொண்டதாக வரலாறே இல்லை. அதை உணர்த்தும் வகையில், கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு அஞ்சாமல் அரேபியப் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி ஒரு புது உலகைப் படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இது வரை காலம் அரபு உலகம் கண்டிராத வகையில் நடைபெறும் எழுச்சி மிகு போரட்டங்களாகும். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் அளித்த கொலைகார ஆயுதங்கள், கொடுங்கோலர்களின் போலீஸ் படைகள் அரபு மக்களின் போராட்டத்திற்கு முன் எடுபடவில்லை. மீண்டும் ஒருமுறை, அரேபிய சமுகம் பயத்தைத் துரத்திவிட்டு கொடுங்கோல் ஆட்சியாளர்களை எதிர்கொண்டு முன்னேறி வருகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கொடுங்கோல் மன்னர்கள், சர்வாதிகாரிகள், ஏகாதிபத்திய எடுபிடிகள் கிலி பிடித்து தமது நாட்களை எண்ணி வருகின்றனர். அவர்களின் ஏகாதிபத்திய எஜமானர்கள் இது எப்படி சாத்தியமாயிற்று என்று தங்களையே கேட்டுக் கொள்கிறார்கள். இதுதான் புரட்சி போலும்!!

டுனிசியாவில் புரட்சி ! ஆப்ரிக்காவின் வடக்குப் பகுதியில் படிப்பாளிகள், இளைஞர்கள் நிறைந்த அரபுக்களின் நாடு. அந்த நாட்டை ஆண்டு வந்த சர்வாதிகாரி பென் அலி மக்கள் போராட்டங்களைச் சந்திக்க முடியாமல் தனி விமானத்தில் குடும்பத்தாருடன் பெரும் பணம், தங்கம், வைரங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு அமெரிக்கப் படைகளின் தயவில் நாட்டை ஆண்டு வரும் சவூதி அரேபியாவிற்குத் தப்பியோடினார். டுனிசியர்கள் அவரை தேடிக் கொண்டு வந்து மக்கள் முன் நிறுத்தப் போரிட்டு வருகிறார்கள். டுனிசியாவில் இப்படி ஒரு மாற்றம் வரும் என்பதை மேற்கு உலகம் கனவு கூடக் காணவில்லை. அதிர்ச்சியில் உறைந்து தொடை நடுக்கத்தில் ஏகாதிபத்தியங்கள் இருந்தவேளையில் டுனிசியாவில் பற்றிய தீ எகிப்தில் பற்றிக் கொண்டது.

டுனிசியாவின் எதிரொலி எகிப்தில் !! சின்னஞ்சிறு நாடான டுனிசியாவின் மக்கள் தமது சர்வாதிகார ஆட்சியாளரைத் துரத்தியதைக் கண்ட எகிப்தின் மக்கள் ஊக்கத்துடன் வரலாறு கண்டிராத போராட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். முப்பது ஆண்டுகளாக கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் முபாரக்கை எதிர்த்து பல லட்சம் பேர்கள் – இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், ஆண்கள் பெண்கள்,  இளைஞர்கள் யுவதிகள், குழந்தைகள் முதியோர் என எல்லாவித வேறுபாடுகளையும் கடந்து மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அமெரிக்காவின் செல்லப் பிள்ளையான முபாரக் உடனடியாக பதவி விலகும்படி தலைநகர் கெய்ரோ உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் அனைவரும் சொல்வது: எங்கள் பயம் பறந்து போனது. போலிசும் ராணுவமும் எங்களை ஒன்றும் செய்து விடமுடியாது. சர்வாதிகாரி முபாரக் நாட்டை விட்டு வெளியேறு.

சர்வாதிகாரி முபாரக் இன்றோ நாளையோ நாட்டை விட்டுத் தப்பி ஓடி அமெரிக்காவுக்கோ அல்லது அமெரிக்க எடுபிடியான இஸ்ரவேல் நாட்டுக்கோ சென்று சேரலாம் என்று அனைவரும் எதிர்பார்த்துக்  காத்திருக்கிறார்கள். முபாரக்கின் மகன் ஏற்கனேவே, பத்திரமாகத் தப்பி லண்டன் வந்து சேர்ந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை, முபாரக் ஒரு உள்நாட்டுப் போருக்குத் தயாராகி போராடும் மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும் வியப்பில்லை. இந்தப் போராட்டம் வென்றாலும் தோற்றாலும் அரபு மக்களின் உணர்வில் அவர்களின் வரலாற்றில் மிகப் பெரும் எழுச்சி வந்திருப்பதைத்தான் காட்டுகிறது. எது எப்படியாயினும், பல அரபு நாட்டுச் சர்வாதிகாரிகளின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்று தான் சொல்ல வேண்டும். அரபு மக்கள் உலக மக்களுக்கு விடுக்கும் செய்தி இதுதான் : அடக்குமுறைகள் நீடிப்பதில்லை.

இந்தக் கட்டுரை வெளிவரும் நேரம் வரை, எகிப்தின் சர்வாதிகாரி முபாரக் அனுப்பிய ராணுவ டாங்கிகள் செயலற்று நிற்கின்றன. போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த சின்னஞ்சிறு குழந்தைகள், டாங்கிகள் மீது கேலிப்படம் வரைந்து முபாரக்கையும் அவன் கூட்டாளிகளான அமெரிக்கர்களை நக்கல் செய்து கொண்டிருக்கிறார்கள். எகிப்தியப் போலிஸ்காரர்கள் பலர் மக்கள் திரளைக் கண்டு பயந்து ஓடிப்போன படியால், நகரின் பாதுகாப்பை போக்குவரத்தை இளைஞர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். போலீசார் ஓடிப்போனது மட்டும் இல்லாமல் திருடர்களை திறந்து விட்டு நகரைக் கொள்ளையடிக்கும்படியும் முபாரக் உத்தரவிட்டுள்ளனாம். இதை அறிந்த போராடும் மக்கள் திருடர்களையும் எதிர்கொண்டு நகரைத் தமது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார்கள். அப்படியாவது மக்கள் பயந்துபோய் மீண்டும் தன்னை ஆட்சியில் இருக்கக் கேட்பார்கள் என்பது அவன் எண்ணம் போலும்.

இது போன்ற புரட்சிகர நடவடிக்கைகளால் திகைத்துப் போன மேற்கு உலகப் பத்திரிகைகள், தொலைக் காட்சிகள், இணையச் செய்தி நிறுவனங்கள் எப்படியாவது எகிப்தின் புரட்சி பிசுபிசுத்து விடாதா எனக் கனவு கண்டு கொண்டிருக்கின்றன.  எல்லாவிதமான பொய்ப் பிரச்சாரங்களையும் செய்து வரும் அவர்கள் முயற்சி இந்த முறை வெற்றி பெறுவது கடினம் தான். ஒரு மாதம் முன்பு வரை அரபு உலகில் இப்படி ஒரு புரட்சி அலை வீசும் என்று எவரும் சொல்லவில்லை. அமெரிக்கா உட்பட மேற்கு உலகத்தின் எந்த ஒற்றர்களும் உளவு நிறுவனங்களும் இப்படி ஒரு செயல் நடக்கும் என்ற சேதியைச் சொல்லவில்லை. அமெரிக்காவின் எடுபிடியான இஸ்ரவேல் நடுங்கிப் போய் எப்படியும் முபாரக்கை காப்பாற்ற வேண்டும் என்று அமெரிக்காவிடமும ஐரோப்பிய அரசுகளிடமும் கெஞ்சுகிறது.

நீறுபூத்த நெருப்பாக இருந்த மக்களின் உணர்வு புரட்சி அலையாக வீசி எகிப்திய சர்வாதிகாரியைத் துரத்தி வருகிறது.

தொடரும் அரபு உலகப் போராட்டங்கள்

கடந்த ஒரு மதத்திற்குள் அரபு உலகமே தலை கீழாகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆண்களும் பெண்களும், வீதிகளையும் சிறைகளையும் நிரப்பி வருகின்றனர். அரபு சர்வாதிகாரிகள் தூக்கம் இன்றித் தவிக்கின்றனர். ஏகாதிபத்தியவாதிகள் நடு நடுங்கி என்ன மாயை இது என்று அலறுகின்றனர். இதோ சில செய்திகள்:

ஜோர்டான் மன்னர் தமது மந்திரி சபையைக் கலைத்தார் !!

லெபனானில் அமெரிக்க ஆதரவுக் கட்சிகள் விரட்டப்பட்டார்கள். ஆட்சி மாற்றம்!!.

ஏமன் சர்வாதிகாரியை எதிர்த்து பெரும் கலகம். மக்கள் போராட்டம்!!.

சிரியாவின் அரசருக்கு புரட்சி வந்துவிடுமோ என்ற பயத்தில் பல நாட்களாகத் தூக்கமில்லை!!

எகிப்து பற்றிய செய்திகள் சீனாவில் தடை செய்யப் பட்டு விட்டன.

அரபியர்களின் ஜனநாயகப் புரட்சி அரபு எல்லைகளைத் தாண்டி சீனாவை ஆளும் சர்வாதிகாரிகளையும் கதி கலங்கடித்திருக்கிறது. வீரம் செறிந்த அரபு மக்களுக்கு நமது வாழ்த்துக்கள்.