Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அயோக்கியத்தனமான தீர்ப்பு: ‘பினாயக் சென் ஒரு தேசத் துரோகி’


பினாயக் சென்என்ற மருத்துவர் சமீப காலத்தில் இந்திய அரசியலில், நீதித்துறையினரால், பத்திரிகைகளால், அறிவாளிகளால்  பெரிதும் பேசப்பட்டு வருகிறார். அவர் ஒரு ஊழலில் திளைத்த அரசியல்வாதியோ அல்லது கிரிமினல் பணிகள் செய்து மாட்டிக்கொண்ட போலிஸ்காரரோ அல்ல, வெறும் குழந்தை நல மருத்துவர் மட்டுமே. மருத்துவர்கள் எல்லாம் நகரங்களையும், பணத்தையும் தேடி ஓடும இந்தக் காலத்தில் இவர் பணமில்லாத வறுமையில் வாடும் பழங்குடிகள் நிறைந்து வாழும் சத்திஸ்கர் மாநிலத்தில் சென்று இலவச சேவை செய்து வருபவர். வேலூர் கிறித்தவக் கல்லூரியில் படிப்பில் தங்கப்பதக்கம் வென்ற, எம்.டி படித்த ஒரு மருத்துவர் மற்றும் பேராசிரியர் இவர். அநேகமாக அவரைப்போன்றோர் இருக்கும்  இடம் அமெரிக்காவோ அல்லது குறைந்த பட்சம் நமது சென்னை போன்ற  நகரத்தின் ஐந்து நட்சத்திர மருத்துவமனைகள் தான். ஆனாலும் பினாயக் வங்காளத்தின் கர்மயோகிகள் வழியில் வந்த ஒரு மனித நேயம் மிக்க மருத்துவர்.

 

வசதியான குடும்பத்தில் பிறந்த பினாயக் சென்னும் ஒரு கர்ம யோகியைப் போன்றே வாழ வேண்டும் என்று உறுதியுடன் இருந்து வந்தவர். சிறு வயதிலேயே தான் பிற்காலத்தில் எளிமையான வாழ்வு வாழ வேண்டும் என்ற நோக்கில் தரையில் படுத்து உறங்கி, எளிய உணவு உண்டு அவரின் குடும்பத்தில் தனி முத்திரையுடன் வளர்ந்தவர். வேலூர் கிறித்தவக் கல்லூரியில் மருத்துவம் படித்த மாணவர்களில் பலர் நல்ல வருமானம் தேடியோ அல்லது சிறப்பான மரியாதையுடன் கூடிய பணிகளில் சேர்வது வழக்கம். ஆனால், பினாயக் சமுக அவலங்களை துடைக்க தன் கல்வி ஒரு வாய்ப்பைத் தந்ததாக எண்ணி தான் மருத்துவப் பணியை செய்யத் தொடங்கினார். மருத்துவத்திலேயே, வருமானம் இல்லாத மதிப்புக் குறைவு உள்ள துறை சமுக மருத்துவம், என்றாலும் ஏழைகளுக்கு உதவும் பணி என்பதால் அதையே தேர்வுசெய்து தன் பணிகளை தொடர்ந்தார்.

சங்கர் குகா நியோகி என்ற புரட்சியாளர் தலைமையில் இயங்கி வந்த சத்திஸ்கர் முக்தி மோர்ச்சா  தொழிற்சங்த்தினர் ஒரு மருத்துவ மனையைத் தொடங்கி தொழிலாளிகளுக்கு சிறப்பான மருத்துவம் வழங்க வேண்டி நடத்தி வந்தனர். பினாயக் அவருடன் இணைந்து செயல்பட்டு அந்த மருத்துவமனையைச் சிறப்பாக நடத்தி வந்தார். சங்கர் குகா நியோகி 1991 ம் ஆண்டு பி ஜே பி கட்சியினை சேர்ந்ததாகச் சொல்லப்படும் தொழில் முதலாளிகளால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் தன் பணிகளை விரிவு செய்த பினாயக் புதிய சில ஆய்வுகளையும் மருத்துவப் பணிகளையும் மேற்கொண்டு வந்தார். அவர் தன் மனைவி, குழந்தைகளுடன் மலேரியா போன்ற கொடிய நோய்கள் பரவிக்கிடக்கும் காட்டுப் பகுதிகளில், அடிப்படை வசதிகள் இல்லாத மத்திய இந்தியாவின் அடர்ந்த காடுகளில் வறுமையில் வாடும் ஏழைகளுக்காக முப்பது ஆண்டுகளாக தொண்டு ஊழியம் செய்து வந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இன்றைக்கு இந்தியாவின் மிகப் பெரிய, பிரபலமான மிகவும் வெற்றிகரமான மருத்துவத் திட்டமான ‘ஆஷா’–என்ற  கிராமப்புற மருத்துவத் தாதியர் திட்டம உட்பட பல திட்டங்களை உருவாக்கவும் செயல்படுத்தவும் அவருடைய ஆய்வின் மூலம் பாடுபட்டு வந்தார். அவருடைய பல கட்டுரைகளும் பணிகளும் உலகின் மிகப் புகழ் பெற்ற லேன்சட் (Lancet) உள்ளிட்ட பிரபல மருத்துவ ஏடுகளில் வெளியாகி உள்ளது.

அவரிடம் வரும் நோயாளிகளின் நோய் மட்டுமின்றி அவர்கள் வறுமையின் காரணங்கள் குறித்தும் அவர் பேசி வருவது வழக்கம். கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியா ஆண்டுக்கு பத்து சதவித வளர்ச்சி கண்ட வேளையில், பழங்குடி மக்கள் முன்பை விட மேலும் அதிகமான வறுமைக்குள் தள்ளப்பட்டு வருவதை கண்டு மனம் நொந்தவர். ஏறக்குறைய பழங்குடி இனக் குழந்தைகள் முழுமையும் சவலைகளாகவும் சத்தின்றியும், நோயிலும் தள்ளப்பட்டு ‘இனப்படுகொலை’ நடந்து வருவதைத்  தன்னுடைய பனியின் போதும் ஆய்விலும் கண்டு வந்தார். ஐக்கிய நாடுகளின் சட்டப்படி ‘இனப்படுகொலை’ என்பது ஒரு இன மக்கள் தொடர் பட்டினிக்குள்ளாக்கப்படுவதையும் உள்ளடக்கியது. இது சர்வதேச சட்டங்களின் படி தண்டனைக்குரிய குற்றம். அதனால் பினாயக் இது குறித்து கவலையுடன் வெளிப்படையாகவும் பேசியும் எழுதியும் வந்தார்.

நிலத்திற்கான போர்


மறைந்த காந்தியவாதியான ஜெயப்பிரகாஷ் நாராயண் அவசர நிலைக் காலத்தில் மக்கள் உரிமைகளை காக்க வேண்டி தொடங்கிய  மக்கள் உரிமைச் சங்கத்தின் (PUCL) மாநிலத் தலைவராகவும் அகில இந்திய துணைத் தலைவராகவும் இருந்து வந்தார்.  அவரை மிகவும் பாதித்தது சமீப காலத்தில் பழங்குடியினரின் நிலங்கள் சுரங்கம் தோண்டுவதற்காக ஈவு இரக்கமின்றி பிடுங்கப்படுவதுதான். இது குறித்து அவர் பழங்குடியின மக்களின் சார்பாக பேசி வந்தது பல பண முதலைகளின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொடுத்தது.

தண்டகாரண்யா காடுகள்தான் இன்றைய சத்திஸ்கர் மாநிலத்தின் தந்தேவடா, பஸ்தார், மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி. அந்தப் பகுதியில் பழங்குடியினரின் போராட்டங்கள் மிகவும் கூர்மையடைந்து ஏறக்குறைய ஒரு ராணுவ மோதல் அளவுக்கு வளர்ந்துவிட்டிருப்பது அனைவரும் அறிந்ததே. பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் என்று அழைக்கப்படும் புரட்சியாளர்களின் தலைமையில் ஆயுதம் ஏந்தி போரிட்டு வருகின்றனர். இந்தப் பழங்குடி மக்கள் நடத்தும் போரை இந்தியாவின் இதயத்தின் மீதான தாக்குதல் என்று பத்திரிகைகள் எழுதி வருகின்றன. நாளும் செய்திகளில் வரும் ‘மாவொயிஸ்ட் தாக்குதல்’, ‘நக்சல் தாக்குதல்’ என்பதெல்லாம் அந்த மோதல்களின் வெளிப்பாடு தான்.

மாநில அரசாங்கம் ‘சல்வா ஜ்டும்’ என அழைக்கப்படும் ‘உள்ளூர் கூலிப் படைகளை’ அமைத்து சுரங்கக் கம்பெனிகளுக்காக ஊர்களைக் காலிசெய்து வருவதை எதிர்த்து பினாயக் பேசியது அரசாங்கத்தின் கடும் கோபத்திற்கும் உள்ளாக்கியது. போலிசும் கூலிப் படைகளும் நடத்திய படுகொலைகளை அவர் வெளி உலகத்திற்கு PUCL மூலம் கொண்டு வந்து கொண்டிருந்தார். ஏறக்குறைய ஒரு லட்சத்திற்கும் மேலான இந்திய ராணுவம், இது தவிர்த்த உள்ளூர் போலீஸ் படைகள், கூலிப் படைகள், தனியார் நிறுவனப் படைகள் என பல படைகளைக் கொண்டு அரசாங்கம் பல விதமான வழியில் ஏழைகளான பழங்குடியின மக்களின் இருக்கக் கூடிய நிலங்களையும் பறித்து அவர்களை நிர்க்கதியாக்கி வெளியேற்றி வருவதாக அவர் ஆதாரங்களை வெளியிட்டு வந்தார்.

அவருடன் நட்பாக இருந்த பேராசிரியர்கள், காந்தியவாதிகள், பத்திரிகையாளர்கள் இது குறித்து இந்திய உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து உள்ளனர். இதில் குறிப்பாக, டாட்டா, ஜிண்டால், எஸ்சார் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுக்காக இந்திய அரசு முறை தவறி செயல் படுவதாக அவரும் அவர் நண்பர்களும் தெரிவித்து வந்தது அரசுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தி விட்டதாக கருதப்படுகிறது. இந்த மூன்று மாவட்டங்களில் மட்டும் சுமார் மூன்றரை லட்சம் பழங்குடி மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு விரட்டப்பட்டு உள்ளதாகவும், அவர்களின் இருப்பிடம் குறித்து எந்தவிதமான தகவலும் இல்லை என்றும், நோற்றுக் கணக்கில் கொல்லப்பட்டு வருவதாகவும், ஆயிரக்ககணக்கான பேரை காணவில்லை என்றும் அந்த வழக்கில் கூறப்பட்டு உள்ளது, நந்தினி சுந்தரம் என்ற டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த இன்னொரு வழக்கும் இவர் மீதான கோபத்தை இன்னும் அதிகமாக்கியது. பினாயக் சென் மீது தேசத் துரோகம் செய்ததாக வழக்கு ஒன்றை தாக்கல் செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக துயரப் படுத்தி வந்தது.

இதற்கு முன்பு, அவர் மீது எந்தவொரு வழக்கும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக சர்வ தேச அளவில் மிகவும் மதிப்புடையதாக கருதப்படும் சர்வதேச மருத்துவ கவுன்சில் வழங்கும் ‘ஜோசப் மான் விருது’, இந்திய அரசின் தேசிய அளவிலான உயர் மட்ட சமுக அறிவியல் ஆய்வு அறிஞர் மையம் வழங்கும் ‘மிக உயர்ந்த ஆராய்ச்சியாளர் விருது’, மருத்துவத்தில் வாழ்நாள் சேவைக்கான பால் ஹாரிசன் விருதும், இன்ன பிற மருத்துவ அறிஞர்களுக்கான விருதுகளும் பெற்று இருக்கிறார். இந்தியாவில் ஜோசப் மான் விருது பெற்ற ஒரே மருத்துவரும் இவரே.

தேசத் துரோக வழக்கு


கடந்த 2007 ம் ஆண்டு மே மாதம் மாநிலப் போலீசார் அவருக்கு ஒரு சம்மன் அனுப்பினர். சட்டவிரோத தடுப்புச் சட்டம் 1967,  சதிஸ்கர் சிறப்புப் பாதுகாப்புச் சட்டம் 2005, இந்திய தண்டனை சட்டம் 1860 ன் 124 a பிரிவின் கீழ் இந்த சம்மன் அனுப்பப்பட்டது. இந்தச் சட்டங்கள் அனைத்தும் ஏறக்குறைய தடாச் சட்டத்திற்கு ஒப்பானவை. 124A என்பது தேசத்துரோகம் செய்வோரை தண்டிக்கும் சட்டம். பிற அனைத்தும் பிணை வழங்க முடியாத தடுப்புக்காவல் சட்டங்கள். அவர் கல்கத்தா நகரில் இருந்து திரும்பும்போது பிலாஸ்பூர் நகரில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் கைதானபின் அவர் வீடு சோதனையிடப்பட்டது. அவர் மனைவி போலிசார் சாட்சிகளையும் ஆவணங்களையும் போலியாகத் தயார் செய்து வீட்டில் வைத்து விடுவார்கள் என்று அஞ்சுவதாக கேட்டுக் கொண்டபடியால் உயர் நீதிமன்றம் சோதனையை வீடியோவில் பதிவு செய்யும்படி உத்திரவிட்டது. சோதனையில் அபாயகரமான ஆவணங்கள் கிடைத்ததாக போலீஸ் அறிவித்தது.

இதற்கிடையே, ராய்பூர் நகரத்தின் ஒரு தாங்கும் விடுதியில் இருந்து பியுஷ் குகா என்ற ஒரு பீடி வியாபாரி கைது செய்யப்பட்டார். அவரை மே மாதம் 1ம் தேதி கைது செய்திருக்கின்றனர், ஆனாலும் அவர் 7ம் தேதி அன்று கைது செய்யப்பட்டதாக போலீஸ் தெரிவித்தது. அவரை ஒரு தீவிரமான மாவோயிஸ்ட் செயல் வீரர் என்று போலீஸ் கூறியது.

இதற்கிடையே, நாராயண் சன்யால் என்ற பெயருடைய முதியவரான ஒருவர் ஒரு நபர் ராய்பூர் சிறையில் இருக்கிறார். மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவர் என்று போலீஸ் கூறும் அவர் மீது எந்த குற்ற வழக்கும் அது தேதி வரையில் பதிவில் இல்லை. இதே நபரை, ஆந்திர போலிசார் சில காலம் முன்பு கைது செய்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தால் அவரை ஆந்திரா நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது. அவர், சிகிச்சை வேண்டி ராய்பூர் வந்ததாக ஒரு செய்தி தெரிவிக்கிறது. எது எப்படியாயினும், பினாயக் சென் மீதான வழக்கில் இவர் ஒரு முக்கியமான எதிரி.

பினாயக் சென் இவரை PUCL நிறுவனத் தலைவர் என்ற வகையில் சுமார் 33 தடவைகள் சிறையில் சந்தித்து இருக்கிறார். கைதி எவ்வாறாயினும், எல்லா சந்திப்புகளும் அனுமதி பெற்ற பின்பே நடக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பினாயக் இந்தச் சந்திப்பின் மூலம் நாராயணுடன் பேசிய அனைத்தும் சிறை கண்காணிப்பாளர் முன்னிலையிலே நடைபெற்றது, எல்லா சந்திப்புகளும் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டும் உள்ளது.

வழக்கு என்ன?


பினாயக் சென் மாவோயிஸ்ட் என்று கருதப்படும் நாராயண் சன்யால் என்பவரை ஒன்றரை வருட காலம் சுமார் முப்பதுமுன்று முறை சிறையில் சந்தித்தார். அந்த சந்திப்பின் போது நாராயண் சன்யாலும், பினாயக் சென்னும் சதி செய்து மாவோயிஸ்டுகளுக்காக நகர்ப்புறத்தில் கட்சிப் பணியாற்ற திட்டங்களைத் தயார் செய்தார்கள். அந்த சதியில் பியுஷ் குகா துனையக்ச செயல்பட்டார். சிறைக்குள் இருக்கும் நாராயண் சன்யால் எழுதிய கடிதங்களை பினாயக் சென் வெளியே கொண்டு வர பியுஷ் குகா அதனை  மாவோயிஸ்டுகளுக்கு கொண்டு சேர்ப்பித்தார்.

இதற்கு சாட்சியாக, மூன்று கடிதங்களை போலீஸ் நீதிமன்றத்தில் காட்டியது. இதுதான் வழக்கு.

இது இப்படியிருக்க, நீதிமன்றங்கள் என்ன செய்தன. அதுதான் மிகவும் கேவலமானவை, கவலை தரக் கூடியவை. பினாயக் சென் வழக்கு முடியும் வரையில், பிணை கேட்டு மனுத் தாக்கல் செய்தார். கீழ் நீதிமன்றம் வழக்கை விசாரிக்கவே வழியில்லாததால், பிணை இல்லை என்றது.

சரி, மாநில உயர் நீதிமன்றம், வழக்கை விசாரிக்கவே மறுத்து, மிகுந்த தாமதத்திற்குப் பிறகு எந்தக் காரணமும் சொல்லாமல் பிணை இல்லை என்று மறுத்துவிட்டது. இதற்குள், ஒரு ஆண்டு முடிந்து விட்டது.

இதற்கிடையே, பிணை கோரி உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தது. முதல் முறை வந்த போது எந்தக் காரணமும் இன்றி பிணை வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது. அதில் வேடிக்கை என்னவென்றால், அன்று மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10. சாதாரணமான ஒரு கிரிமினல் வழக்குக்குக் கூட விரிவான காரணம் சொல்லும் நீதிமன்றம், உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த வழக்கில்  எந்தக் கரணமும் வழக்கைத் தள்ளுபடி செய்து பிணை இல்லை என்று அறிவித்தது.

இருபத்தி இரண்டு நோபெல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞ்ர்கள், பல உலகப் புகழ பெற்ற மருத்துவர்கள் இந்திய அரசை காறித்துப்பி, போலியான நீதித்துறையையும் போலீசையும் கண்டனம் செய்து கடிதம் அனுப்பினர். நியூ யார்க், போஸ்டன், வாஷிங்டன், லண்டன, பர்மின்காம், ஜெர்மனி உட்பட உலகின் பல நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பிரபலமான பேராசிரியர்கள், திரளான மாணவர்கள், தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்று இந்திய அநீதியை  கண்டித்தன. எதற்கும் அசராத இந்திய அரசும், அதன் அதிகாரிகளும், இதெல்லாம் இந்திய சட்டப்படி நடைபெறுகிறது என்று சொல்லி வந்தனர். உலகின் உயர்ந்த மருத்துவ ஏடாகக் கருதப்படும் லான்செட் (Lancet) பத்திரிகை இந்தியாவில் மிக உயர்ந்த மருத்துவ அறிஞர்களுக்குக் கூட அடிப்படை உரிமை உள்ளதா என்ற வகையில் ஒரு தலையங்கமே எழுதியது.

உலகம் அறிந்த இந்த மருத்துவர் இந்த வகையில் ஒரு பொய்யான தேசத் துரோகக் குற்றத்தில் கைது செய்யப்பட்டு சிறை வாசம் அனுபவிப்பதை கண்டு நாடு முழுவதும் கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதற்கெல்லாம் அசையாத, இந்திய அரசும் அதை வழி நடத்தும் அதிகாரிகளும் வெட்கப்படும் படியில் சர்வதேச அமைப்புகள் வன்மையாகக் கண்டித்து இந்திய அநீதியைக் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டன.

இதற்கிடையே, இந்த வழக்கு அறிவுஜீவிகள் ஒன்றும் மிக வித்தியாசமானவர்கள் இல்லை என்று நிறுவவதற்காக தனிக் கவனத்துடன் நடத்தப்படுவதாக சத்திஸ்கர் போலீஸ் தலைவர் வெளிப்படையாக அறிவித்தார். இதில் ஒருவர், இந்திய அரசின் உளவுத்துறை மற்றும் உள்நாட்டு அமைச்சில் மிகவும் உயர்ந்த பணியாற்றினவர்.

இரண்டவது முறையாக இதே உச்ச நீதிமன்றத்தில், 2009 ம் ஆண்டு மே மாதம், மீண்டும் பிணை கேட்டு வந்த போது எந்தக் காரணமும் கூறாமல் பிணை வழங்கியது. பல இந்திய அரசியல் தலைவர்கள், நீதிபதிகள் தாங்கள் அமெரிக்க, இங்கிலாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் பெருமையாக இந்தியாவின் நாட்டு நிலைமையைப் பேச வரும் போதெல்லாம் அவமானப் பட்ட பிறகு வேண்டா வெறுப்பாக, இரண்டு ஆண்டு காலத்திற்கு மேல சிறையிருந்தபின் அவர் ஜாமீனில் வெளி விடப்பட்டார். மானக் கேடு என்று கல்விமான்கள், பிரபல வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தின் அநாகரிகமான சட்டவிரோதமான போக்கை வெளிப்படையாகவெ விமர்சனம் செய்தனர். ஆனால், உண்மையில் உச்ச நீதிமன்றம் இவரை வெளியில் விட்டது கூட கடும் சர்வதேச நிர்ப்பந்தத்தின் காரணமாகத்தான் என்று பல பிரபல வழக்கறிஞர்கள் கருதுகின்றனர். இந்த வேளையில், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்பட அனைத்து சர்வ தேச மனித உரிமை அமைப்புகளும்  இந்திய நீதிமன்றங்களை வெளிப்படையாகவே குற்றம் சுமத்ததொடங்கியிருந்தன. சர்வதேச மன்னிப்புச் சபை பினாயக் சிறையில் இருப்பதை குறித்து ‘பினாயக் ஒரு மன சாட்சியின் கைதி என்று’ சாடியிருந்தது.

வழக்கு விசாரணை என்ற நாடகம்


சத்திஸ்கர் பத்திரிகைகள் பினாயக் சென் மாவோயிஸ்டுகளுக்காக பணியாற்றியதாகவும் ஆவணங்கள் கிடைத்ததிருப்பதாகவும் செய்திகள் வெளியிட்டன. ஆனால், அப்படி எதுவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பபடவே இல்லை. முன்றே கடிதங்கள் மட்டும் தாக்கல் செய்யப் பட்டன. அதில் ஒன்று செல்லாது என்று நீதிமன்றம் கணக்கில் கொள்ளவே இல்லை. பிற இரண்டும் கைதிகள் சட்ட உதவி கேட்டு PUCL தலைவர் என்ற வகையில் அனுப்பிய கடிதங்கள். இவையும் சிறை அதிகாரிகளின் சான்றுபெற்று முதியவரான கைதி நாராயணன் எழுதியவை. அவருடன் நடந்த 33  சந்திப்புகளும் சிறை அதிகாரிகள் முன்பாகவே நடைபெற்றவை. சந்திப்பில் எந்த சதியும் நடக்கவில்லை என்று சாட்சியளித்த இரண்டு சிறை அதிகாரிகளை போலீஸ் பிறழ் சாட்சிகளாக அறிவித்து விட்டது.

ஆக மொத்தத்தில், சர்வதேச அறிவாளிகள் உன்னிப்பாக நோக்கி வரும் இந்த வழக்கில், எல்லாமே போலீஸ் காரர்கள் தான் சாட்சிகள். வழக்கு விசாரிக்கவே படாமல் மூன்று ஆண்டுகள் கடந்தது. இதற்கிடையே, பிற கைதிகளான பீடி வியாபாரி பியுஷ் குகாவுக்கும் முதியவர் நாராயண் சன்யாலுக்கும் பிணை இல்லை. வழக்கை விரைந்து முடிக்க வேண்டி பியுஷ் குகா உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்ததன் பேரில் உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் ‘விரைந்து முடிக்கும்படி’ உத்தரவிட்டிருந்தது.

ஒரு வழியாக, 2010ம் ஆண்டு , டிசம்பர் 24 தேதியன்று ராய்பூர் மாவட்ட நீதிமன்றம் வழக்கை முடித்து தீர்ப்பு அளித்தது. அதன்படி, பினாயக் சென் தேசத் துரோக குற்றம் செய்தார், சதி செய்து தடை செய்யப்பட்ட நிறுவனமான மாவோயிஸ்டு கட்சிக்கு துணையாக இருந்தார் என்று கூறியது. இந்த வழக்கில் எல்லா சாட்சிகளும் போலீஸ்காரர்கள். இரண்டு சாட்சிகள் தனி நபர்கள். அவர்களும் தங்கள் எதிரிகளான பினாயக் சென்னும் அவர் கூட்டாளிகளும் போலீசிடம் வாக்குமூலம் கொடுத்ததைத் ‘தாங்கள் பக்கத்தில் நின்று கேட்டதாகச்’ சொன்னார்கள். எந்த போலீஸ்காரரும் இந்தக் குற்றவாளிகளை சாட்சியளிக்க வரும் முன் பார்த்ததேயில்லை என்றும் சொல்லி விட்டார்கள். அப்படியிருக்க, பினாயக் மாவோயிஸ்டுகளுடன் சிறையில் சதி செய்ததாகவும் அவர்களுக்கு செய்தி தொடர்பாளராக பணி ஆற்றியதாகவும் முடிவுக்கு வந்திருக்கிறது நீதிமன்றம்.

இதே வழக்கு, வழக்கமான சட்ட நடைமுறைகளில் நடத்தப்பட்டிருந்தால், அனைவரும் விடுதலையாகி இருப்பார்கள். ஒரு வேளை நீதிபதி யோக்கியனாக இருந்திருந்தால் போலீஸ்காரர்களுக்கு ஒரு கண்டிப்பாய் தான் தீர்ப்பில் தெரிவித்து இருப்பார். ஆனாலும், ராய்பூர் மாவட்ட நீதிமன்றம் பினாயக் சென் செய்து வந்த சேவையையோ, அவருடைய படிப்பு, சர்வதேச மரியாதை, பின்புலம் பற்றி கிஞ்சிற்றும் கவலையின்றி அவர் தேசத் துரோகி என்று தீர்ப்பளித்தது. ஆனாலும், நகைப்புக்கு இடமான வகையில், ‘குற்றத்தின் தீவிரத்தை கணகில் கொண்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி’ தீர்ப்பளித்துள்ளதாக தெரிவித்து உள்ளது. என்ன ஒரு கேவலம் பாருங்கள்!.

இதுதான் இந்திய இன்றைய நீதி.

இதற்கு முன் இதே சட்டத்தில் தண்டிக்கப்பட்டவர்கள் மிகவும் குறைவு.   பினாயக் சென் மீதும் இந்த வழக்கை தொடர்ந்து அவருக்கு தண்டனை வழங்கி உள்ளது. வெள்ளையர் இல்லாதுபோனாலும், இன்றைய இந்திய அரசாங்கம் அதே அடிமைச் சட்டங்களை அதே வழியில் செயல்படுத்தி அதே போன்ற தண்டனைகளை வழங்கி உள்ளது.

சமீபகாலத்தில், சிலர் இந்த சட்டத்தில் கைதாகி இருந்தாலும், இந்த சட்டத்தில் தண்டனை பெற்றவர்கள் மிக அரிது. அப்படித் தண்டனை பெற்றவர்கள் குறைந்தபட்சத் தண்டனைகளைத் தான் பெற்று உள்ளனர். சுதந்திர(?) இந்தியாவில், தேசத் துரோகத்திற்காக தண்டனை வழங்கிய ராய்பூர் நீதிமன்றத்தின் நீதிபதி இன்னும் பதவி நிரந்தரம் செய்யப்படாத ஒரு கீழ் மட்ட நீதிபதி. ஆனாலும் அவர் அதிகாரத்தைப் பாருங்கள். மகாத்மா காந்தி, 1922 ம் ஆண்டு, இதே சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற பின்பு சொன்னார் ‘இந்த சட்டம் அடக்குமுறை சட்டங்களின் இளவரசன்’. காந்தி காலத்து இளவரசன் வளர்ந்து மகாராஜாவாக மாறிவிட்டிருக்கிறான். இது இந்தியாவின் அசுர வளர்ச்சி.

அநீதிக்கு கண்டனம்


ஏறக்குறைய, எல்லா இந்தியப் பத்திரிகைகளும் இந்த அநீதியை கண்டித்து தலையங்கங்கள் வெளியிட்டு வருகின்றன. பல பிரபலமான எழுத்தாளர்கள் இந்தத் தீர்ப்பை கேலி செய்தும், கண்டித்தும், அவமானப் படுத்தியும் எழுதி வருகின்றன. இருந்தாலும் என்ன, மத்தியில் ஆளும் காங்கிரெஸ் அரசும், மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா அரசும் இது வரை வாயைத் திறக்க வில்லை. எந்த முக்கியமான அரசியல் கட்சிகளும் இந்த (அ)நீதியை கண்டிக்கவேயில்லை.

நீதித்துறையை விமர்சனம் செய்வது கூடாது என்று புனிதப் போர்வையில் அரசியல் கட்சிகள் மௌனம காத்துவருகின்றன. அவர்களுக்கு தெரியாத நீதியா ? தெரியாமலா சொன்னார்கள் இனம் இனத்தோடே சேரும் !!!.

ஆனலும் என்ன, வருவது வரட்டும் என்று இந்தியாவின் உயர்ந்த கல்விமான்கள், மருத்துவர்கள், மாணவர்கள், அறிவாளிகள் காரித்துப்பி இந்திய நீதியை கண்டித்துவருகிறார்கள். டெல்லி பல்கலைகழக பேராசிரியர் விஸ்வனாதன் இந்தியாவின் பிரபல பத்திரிகையான ‘அவுட்லுக்’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் ‘4,000 சீக்கியர்கள் கொல்லப்பட்ட போதும் வாயை திறக்காத பேசாமடந்தையான மன்மோகன் சிங்கே இப்போதாவது வாயைத் திற’ என்று பிரதமரை பேசச் சொல்லி நக்கலும் நையாண்டி செய்தும்  வெளிப்படையாகவே கேட்டு உள்ளார்.

இந்திய தத்துவாசிரியரும் நோபெல் பரிசு பெற்ற அறிஞருமான அமர்த்ய சென் மன வேதனைக்குப் பின், ‘ இது ஒரு அப்பட்டமான அநீதி என்றும், ஒரு வேளை குஜராத் மாநிலத்தைப் போலவே, சத்திஸ்கர் மாநிலத்தில் உரிய நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லயென்றால், உச்ச நீதிமன்றம் உடனே தலையிட்டு ‘உரிய நீதியினை வழங்க வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார். இதற்கிடையே, உலகம் முழுவதும் கல்விமான்கள், நீதிபதிகள், இந்த (அ)நீதியை கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். இந்திய (அ)நீதியைக் கண்டித்து டெல்லி, மும்பை, நியூயார்க், லண்டன் உள்ளிட்ட நகரங்களில் மருத்துவர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர்.

கொஞ்ச நஞ்சம் மிச்சம் இருக்கும் ஜனநாயக வேசமும், ‘சுதந்திரமான இந்திய நீதித் துறை’ என்ற மாயையும்  வேகமாகக் கலைந்து கொண்டிருக்கிறது.

இந்த செய்தியை கேட்ட மறுகணமே, நோயுற்று படுக்கையில் கிடக்கும் தள்ளாத மூதாட்டியான வங்காள கவிஞரும் இலக்கிய பேராசிரியருமான மஹாஸ்வேதா தேவி படுக்கையில் படுத்தபடியே இந்த அயோக்கிய நீதியை கண்டித்து போராட வருமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.