Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான மக்கள் தொழிலாளர் சங்கத்தின் நகல் வேலைத்திட்டம்

கடந்த 06 யூலை 2014 அன்று ஹட்டனில் நடைபெற்ற மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான பொதுக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட அமைப்புகளிடையே காணப்பட்ட கொள்கை அளவிலான உடன்பாட்டின் அடிப்படையாக கொண்டு இரண்டாவது பொதுக் கலந்துரையாடல் எதிர்வரும் 16.08.2014 (சனிக்கிழமை)அன்று மு.ப. 10.30 – பி.ப. 01.30 பண்டாரவளையில் உள்ள லியோ மார்கா ஆஸ்ரமத்தில் (இல. 121ஃ1, சென் தோமஸ் வீதி, பண்டாரவளை) நடைபெறவுள்ளதாக கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ள மக்கள் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையாக தெரிவித்துள்ளார்.

அக்கலந்துரையாடலில் திட்டவட்டமான இணக்கப்பாட்டிற்கு வரும்வகையில் மலையக மக்களின் காணி, வீட்டு உரிமை தொடர்பில் முன்வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள், அவற்றை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகள், மற்றும் பொது இணக்கப்பாட்டுடன் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான, அனைத்து அமைப்புகளும் ஐக்கியப்பட்டு செயற்படக்கூடிய பொது அமைப்பு போன்றன தொடர்பாக அழைப்பாளர் என்ற வகையில் நகல் வரைவொன்று மக்கள் தொழிலாளர் சங்கம் தயாரித்து அதனை முதலாவது கலந்துரையாடலில் பங்குபற்றிய பங்குபெறமுடியாது போன தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், தனி நபர்களுக்கு அனுப்பி, அழைப்பு விடுத்துள்ளது.

இவ்வரைவு தொடர்பான கருத்துக்களை இவ்விடம் தொடர்பாக ஆர்வம் கொண்டவர்களின் கருத்துக்களை pறரளசடையமெய@பஅயடை.உழஅ என்ற மின்னஞ்சல் முகவரிக்கு முன்கூட்டியே அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. குறித்த நகல் ஆவணம் வருமாறு,

மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்காக முன்வைக்க வேண்டிய பொதுக் கோரிக்கைகள்.

1. குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

1.1 தோட்டக் குடியிருப்புகளில் இருந்து தொழிலாளர்கள், சேவையாளர்கள், அவர்களின் வழித்தோன்றல்கள் எந்த காரணத்திற்காகவும் எந்த வித அடிப்படையிலும் வெளியேற்றப்படுதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

2. தனி வீடுகளைக் கட்டிக் கொள்வதற்கான காணி வழங்கப்பட வேண்டும்

2.1. பெருந்தோட்டங்களில் உள்ள லயன் முறை ஒழிக்கப்பட்டு அவற்றில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வீடில்லா ஏனைய குடும்பங்களுக்கும் வீடுகளை கட்டுவதற்கு உகந்த பொருந்தோட்டக் காணிகளில் இருந்து ஒரு குடும்பம் ஒன்றுக்கு 20 பேர்ச்சஸ் காணியை வழங்க வேண்டும்.

2.2 வீடுகளை கட்டிக் கொள்வதற்கு தேவையான நிதி, கட்டுமான பொருட்களையும் வீடமைப்பு அதிகார சபை போன்ற அரசாங்க நிறுவனங்களினூடாக பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தேவையினை கருத்தில் கொண்டு வீடு கட்டுவதற்கென சாதாரண, இலகு கடன் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

2.3 வீடுகளை கட்டிக் கொள்வதற்கான மேற்படி காணிகள் குறித்த ஒரு தோட்டத்தினுள் அல்லது பல தோட்டங்களின் எல்லைகளில் ஓரிடத்தில் வழங்கப்படலாம்.

3. பொருந்தோட்டங்களில் உள்ள இரட்டை, தனி வீடுகளுக்கு உறுதிகள் வழங்கப்பட வேண்டும்.

3.1 பொருந்தோட்டங்களில் தற்போதிருக்கும் தனி வீடுகள், இரட்டை வீடுகளில் வசிப்போருக்கு அவர்களின் வீடுகள் அமைந்திருக்கும் காணியின் பரப்பளவு உள்ளடங்களாக ஒவ்வொரு வீட்டுக்கும் 20 பேர்ச்சஸ் காணி வழங்கப்பட்டு உறுதிகள் வழங்கப்பட வேண்டும்.

3.2 வீடமைப்பு அதிகார சபையின் பொறுப்பில் இருக்கும் காணிகளில் கட்டப்பட்டுள்ள தோட்ட வீடுகளுக்கு உறுதிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

4. உட்கட்டமைப்பு வசதிகள்

4.1 பந்திகள் 2.1, 2.3 மற்றும் 3.1 என்பற்றின் அடிப்படையில் தோட்டக் குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளூராட்சி சபைகளுக்கு கீழான அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்புகளாக்கப்பட்டு, வீதி, நீர், மின் சக்தி, வைத்தியசாலை, மைதானம், வாசிகசாலை, சனசமூக நிலையம், வழிபாட்டு இடங்கள் உட்பட வசிப்பதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

5. சுய தொழிலுக்கான காணி

5.1 வீடுகளைக் கட்டிக் கொள்வதறகான 20 பேர்ச்சஸ் காணியை விட பயிர் செய்கை, பண்ணை போன்றவற்றை செய்யவென ஒவ்வொரு குடும்பத்திற்கும் காணிகள் வழங்கப்பட வேண்டும்.

5.2 இக்காணிகள் தோட்டக் காணிகளில் இருந்து தரிசு நிலங்களில் இருந்தும் பெற்றுக் கொடுக்கப்பட்டு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும்.

காணி வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான பொது அமைப்பு

1.1 காணி, வீட்டு உரிமையில் பொது இணக்கப்பாட்டுடன் செயற்படும் போது பொதுவான நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைப்புகள், நபர்களை கொண்ட நடவடிக்கை குழுவொன்றை (யுஉவழைn ஊழஅஅவைவநந) அமைத்து செயற்படுவது பொருத்தமானதாக இருக்கும்.

1.2 அந்நடவடிக்கைக் குழு காணி, வீட்டு உரிமையை வென்றெடுப்பதற்கான பொதுவான கோரிக்கையை முன்வைத்து, பொதுவான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நடவடிக்கை அமைப்பாக இயங்கும். இக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட அமைப்புகளும் தனி நபர்களும் தனித் தனியாக சுதந்திரமாக அவரவரது நிலைப்பாட்டிலிருந்து கொண்டு காணி, வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் பொது இணக்கப்பாட்டுடன் ஐக்கியப்பட்ட நடவடிக்கைகளை இந்த நடவடிக்கை குழுவினூடாக அல்லது அல்லது செயலகத்திற்கூடாக முன்னெடுக்கலாம்.

1.3 ஒவ்வொரு அமைப்பிலிருந்து குறைந்தது ஒருவரும், தனிநபர்கள் ஒவ்வொருவரும் இந்நடவடிக்கைக்குழுவின் அங்கத்தவராகலாம்.

1.4. இந் நடவடிக்கைக் குழுவின் செயலக உறுப்பினர்கள் தலைமைக் குழுவாக இயங்கலாம். அச் செயலக குழுவின் அங்கம் வகிக்க வேண்டிய உறுப்பினர்களை 16.08.2014 அன்று இடம்பெறவுள்ள அமர்வில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

1.5 இந் நடவடிக்கை குழுவிற்கு இணைப்பாளர் ஒருவரை அல்லது இருவரை இணை இணைப்பாளர்களாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

1.6 இந் நடவடிக்கை குழுவின் செயலகம் இயங்க வேண்டிய இடத்தையும், தொலைபேசி, மின்னஞ்சல் போன்றவற்றையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

1.7 இந்நடவடிக்கை குழுவின் பணிகளுக்கான நிதியை பெற்றுக் கொள்வது பற்றி தீர்மானிக்க வேண்டும்.

(அ) அங்கத்துவ அமைப்புகளிடமிருந்து மற்றும் தனிநபர்களிடமிருந்தும் கிரமமாக நிதி உதவிகளை பெற்றுக் கொள்ளல் வேண்டும்.

(ஆ) பொது மக்களிடம் இருந்தும் நலன்விரும்பிகளிடமிந்தும் நிதி உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

1.8 நிதி விவகாரங்களை கையாள்வதற்கென ஆகக்குறைந்தது இருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

காணி வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான பொதுவான வேலைத்திட்டங்கள்

1.1 பொதுவாக இணக்கம் காணப்பட்ட கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு நடவடிக்கை குழுவினால் மாநாடொன்றை நடத்தி தீர்மானங்களாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

1.2. அதனடிப்படையில் ஊடக சந்திப்புக்களை ஏற்படுத்தல் வேண்டும்.

1.3 மக்களுக்கு விழிப்பூட்டும் மாவட்ட, பிரதேச மாநாடுகள் உட்பட கலந்துரையாடல்கள், சந்திப்புகள், கூட்டங்கள், போஸ்ட்டர், துண்டுப்பிரசுர இயக்கம், கலை நிகழ்ச்சிகள் போன்ற பரப்புரை நிகழ்ச்சிகளை முன்னெடுத்தல் வேண்டும்.

1.4 இந் நடவடிக்கை குழுவில் அங்கம் பெறாத அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளை சந்தித்து காணி, வீட்டு உரிமை கோரிக்கைகளுக்கான ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

1.5 ஜனாதிபதி, பாராளுமன்றம், அமைச்சரவை, சம்மந்தப்பட்ட அமைச்சுக்கள், நிறுவனங்களுக்கூடாக காணி, வீட்டு உரிமைகளை பெற்றுக் கொள்ள நடவடிக்கைகளை முன்னேடுக்க வேண்டும்.

1.6 இலங்கையின் ஏனைய மக்கள் பிரிவின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளல்.

1.7 சர்வதேச ரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.