Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

முன்னாள் தமிழ் அரசியல் கைதியின் வேண்டுகோள்

சம உரிமை இயக்கம்

அரசியல் கைதிகள் விடுதலைக்கான கருத்தரங்கு ஏற்பாட்டாளர்கள்

யாழ்ப்பாணம்

2015 நவம்பர் 01

அன்பார்ந்த சகோதரர்களே,

நான் ஒரு இலங்கையின் முன்னாள் சிறைக் கைதி. முதல் தடவை 1977ல் அநுராதபுரச் சிறையில் 10 நாட்கள் தடுப்புக் காவலில் இருந்துள்ளேன். பிணையில் வெளிவந்த என் மீது அப்போது நாட்டில் அமுலில் இருந்த சட்டங்களின் கீழ் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் பின் வழக்கு தள்ளுபடியானது.

இரண்டாவது தடவை 1982ல் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குருநகர் இராணுவ முகாம், ஆனையிறவு இராணுவ முகாம், பனாகொட இராணுவ முகாம், வெலிக்கடைச் சிறை, மட்டக்களப்புச் சிறை யாவற்றையும் தரிசித்துள்ளேன்.

மேற் குறிப்பிட்ட இரு தடவைகளும் நான் எதுவித சட்டவிரோத செயல்களிலும் சம்பந்தப் பட்டிருக்கவில்லை.

இதுவரை நான் இது பற்றி எவருக்கும் எழுதியதில்லை. இன்று உங்களது கருத்தரங்கின் முக்கியத்துவம் கருதி உங்கள் முயற்சிக்கு எனது பரிபூரண ஆதரவையும் பங்களிப்பையும் இம்மடல் மூலம் வழங்குவதனைக் காட்டுமுகமாகவே இதனை எழுதுகிறேன்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒருவரின் உடல், மன, வாழ்வு நிலை அனுபவங்கள் யாவையும் நேரில் அனுபவித்தவன் நான். இந்தச் சட்டத்தினால் ஆயிரக்கணக்கில் நிரபராதிகள் சிறைப் பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவற்றை மீறித் தப்பித்து இன்னமும் சிறையில் வாடுபவர்கள் அரசியல் வியாபாரத்தில் பண்டமாற்றுப் பொருட்களாகப் பாவிக்கப்படுகின்றனர்.

இன்றைய அரசியல் கைதிகள் ஏதோவொரு வகையில் மக்களுக்கான பொது நலன் கருதி நடாத்தப்பட்ட அரசியல் நடவடிக்கைள் காரணமாகவே சிறைப்பிடிக்கப்பட்டனர். எனவே இலங்கை மக்கள் அவர்களைப் பற்றிக் கரிசனை கொண்டு கருமம் ஆற்றாத வரைக்கும் அவர்களது விடுதலை சாத்தியமில்லை.

வாக்கு வேட்டையும் அதன் மூலம் கைக்கு வரும் ஆளும் அதிகார நலன்களுமே இவர்களின் விடுதலைக்குத் தடையாக உள்ளன. அதற்காகவே 67 வருடங்களாக இனங்களைப் பிரித்து வைத்து சதுரங்கம் ஆடி வருகின்றனர். வெலிக்கடைப் படுகொலையைக் கண்டுகொள்ளாத தமிழ் அரசியல்வாதிகளுக்கு இன்றைய சிறைக் கைதிகளைப் பற்றிக் கரிசனை கொள்ள வேண்டிய தேவை எதுவும் இல்லை.

இவர்களின் உடனடி விடுதலைக்கு 3 முக்கிய வழிகள் உள்ளன.

1. தமிழ் மக்கள் ஒரு நாடளாவிய அழுத்தத்தை .தே.கூட்டமைப்பினருக்கு கொடுக்க வேண்டும். அதனடிப்படையைக் கொண்டு கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது.

2. சிங்கள-தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு மனுக் கொடுப்பது.

3. மூவினங்களைச் சார்ந்த மக்கள் நலன் நாடும் சட்டமேதைகள் குழுவொன்றை உருவாக்கி சட்டரீதியாகப் போராடுவது.

இவ்வண்ணம்

வெலிக்கடைப் படுகொலைக்குத் தப்பி

மட்டக்களப்புச் சிறையுடைப்பில் விடுதலையான

முன்னாள் கைதி