Fri12092022

Last updateSun, 19 Apr 2020 8am

சாதி குடியிருக்கும் வரை நீதிக்கு இடம் கிடைக்காது

இலங்கையில் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் வெளியேற்றம் அதன் குடிமக்களுக்கு சுதந்திரத்தை வழங்காது என்பதனையும் மக்களை இன-மத-சாதி-பால்-பிராந்திய-வர்க்க ரீதியாகப் பிரித்து வைத்து மோத விட்டு அதன் ஊடாக தொடர்ந்தும் அந்நியர்கள் தங்கள் நலன்களைப் பாதுகாக்கும் அரசியல்(கட்டமைப்பு) வழிமுறையையே சுதந்திரம் என்கிற பெயரில் வழங்கப் போகிறார்கள் என்பதனையும் நன்குணர்ந்த திரு ஹன்டி பேரின்பநாயகம் "பாகுபாடுகள்-பேதங்கள்-ஒடுக்குதல்கள்-உயர்வுதாழ்வுகள்"அற்ற 'இலங்கைக் குடிமக்களுக்கான" சுதந்திரத்தை உருவாக்குவதற்கான அடித்தளக் கட்டுமானப் பணிகளுக்காக "யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்" என்ற சமூக இயக்கத்தை முன்னெடுத்தார். அதனை ஆரம்பத்திலேயே எமது ஆண்ட பரம்பரையினரின் அரசியல் வியூகங்கள் முகவரி இல்லாமல் செய்து விட்டிருந்தன.

கடந்த கால எமது போராட்டம் அநியாயங்களுக்கும்-அடக்குமுறைகளுக்கும்-அட்டூழியங்களுக்கும் எதிரான - நீதிக்கான அறம் சார்ந்தாக அமைந்திருந்ததா என்ற கேள்விக்குப் பதில் "இல்லை" என்பதனையே நடந்து முடிந்த வரலாறு காட்டி நிற்கிறது. ஆண்ட பரம்பரை என்பது சாதிக் கட்டுமானத்தின் ஒரு ஆழமான குறியீடு. இந்த ஆண்ட பரம்பரைத் தமிழர்கள் யாரை ஆண்டார்கள்? தங்களால் அடக்கியொடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சாதித் தமிழ் மக்களைத்தான் ஆண்டார்கள்-ஆளுகிறார்கள். அதற்கான அரசியலையும் கையாளுகிறார்கள்.

சாதி அடக்குமுறையான தேச வழமை கலாச்சாரத்தால் எரியூட்டப்பட்ட பாடசாலைகள், தூண்டிவிடப்பட்ட வன்முறைகள்,  நடாத்தப்பட்ட கொலைகள், புறக்கணிக்கப்பட்ட கிராமங்கள், மறுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள்,  விரட்டியடிக்கப்பட்ட மக்கள்,  பாதிக்கப்பட்ட பெண்கள், நிர்மூலமாக்கப்பட்ட குடும்பங்கள் இவைகள் யாவும் ஆண்ட பரம்பரையின் ஆட்சி முறையின் விளைவுகளே. 

தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகள் என்ற பதாகைகளைத் தூக்கியவர்கள் யாவருமே தங்கள் தங்கள் சாதி அடையாளங்களை மிகவும் கண்ணும் கருத்துமாக பாதுகாத்துக் கொள்ளும் வகையிலேயே இலங்கை அரசாங்கங்களுடன் ஊடலும் கூடலுமாக தங்களது அரசியலை முன்னெடுத்து வந்துள்ளனர். 

தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைக்கான போராட்டம் ஆயுதம் தாங்கிய போது அது அரசியல் முதிர்ச்சியற்ற வெறும் ஆயுத வளர்ச்சி கொண்டதாக அமையும்படி  இந்த சாதிப் பரிமாண அரசியல் கண்காணித்துக் கொண்டது. அந்த வழிமுறையின் போது இடம் பெற்ற அநீதிகளுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டது. ஆண்ட பரம்பரையினர் வசதி வளங்களைத் தேடினர். ஆளப்பட்ட சாதியினர் அவலங்களை அடைந்தனர். இன்று போர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு பரிதவிப்போர் யார் என்று கணக்கெடுத்தால் அதில் பெரும்பான்மையோர் ஆளப்படும் சாதி மக்களே.  

பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி குரல் கொடுத்து வாக்குறுதி வழங்கி பதவிக்கு வந்தவர்கள் யாவருமே ஆண்ட பரம்பரையினரே. இவர்கள் அந்த மக்களை அனாதரவாக விட்டு விட்டு தன்னாட்சிக் கதிரைகளுக்காக அரசியல் வரைவுத் திட்டம் வரைந்து கொண்டிருக்கிறார்கள். அதே வேளை இன்றைய இலங்கை அரசாங்கத்தின் இனவாத சமன்பாட்டு ஆட்சி முறைக்கு வசதியாக தங்கள் அரசியல் நாடகத்தை தொடருகிறார்கள்.

கடந்த 68 வருட கால தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளுக்கான அரசியல் நடைமுறைகள் ஆண்ட-ஆளும் சாதிப் பரம்பரையினரின் அதிகாரத்திற்கான போராட்டமாகவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இன்றும் கூட கட்சிகளின் அணிவகுப்புக்கள்-மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிகார சபைகள்-அரச நிர்வாகங்கள்-வாழ்வாதாரப் பணிகள்-பொருளாதார மீள் நிர்மாணக் கட்டமைப்புக்கள்-சமய நடைமுறைகள் அனைத்திலுமே சாதி வாய்ப்பாடுகள் மிகவும் சாதுரியமான முறையில் கடைப்பிடிக்கப்படுகின்றன. இங்கே "அநீதி" என்பது சமூக நியாயமாக-கலாச்சாரமாக-பாரம்பரிய பண்பாடாக-வாழ்க்கை நெறியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நீதியை மறுதலித்து சாதியை நிலைநிறுத்தும் தமிழர் அரசியலைத் தமிழ்ப் பேசும் மக்கள் தாங்கிப் பிடிக்கும் வரை அவர்களுக்கு நீதி கிடைக்காது. அடிமைத்தனம்-அடக்குமுறை-அராஜகம்-பொருளாதாரச் சுரண்டல் நிரம்பிய அதிகாரம் (அதாவது ஆதிக்க சக்திகள) தோற்றுவித்த ஒரு சமூகக் கட்டமைப்பே சாதியாகும். இந்த ஆதிக்க அதிகார சக்திகள் சமயங்கள்-தத்துவங்கள்-காவியங்கள்-போதனைகள் என்பவற்றினூடாக மக்களுக்கு அநீதிகளை நியாயப்படுத்தியே கற்பித்து வந்துள்ளன. தொடர்ந்தும் அதனையே வலியுறுத்திச் செயற்படுகின்றன. 

இதனை நன்குணர்ந்தே அன்று இலங்கை வாழ் மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தின் அடிப்படையாக "இன-மத-சாதி-பால்-பிராந்திய-வர்க்க" பாகுபாடுகளைத் தகர்த்தெறிந்து இலங்கைக் குடிமக்களுக்கான ஒரு அரசியல் சாசனம் எழுதப்படல் வேண்டும் என "யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்"(1920 - 1941) உழைத்தது. இன்று 75 ஆண்டுகள் கடந்தும் இலங்கைக் குடிமக்களின் அமைதியான சுதந்திர வாழ்வுக்கு அவர்களின் தீர்க்கதரிசன கோரிக்கைகளே அத்தியாவசியத் தேவைகளாக உள்ளன. 

"சாதி நீங்காதவரை நீதி நம்மை நெருங்காது."

"எமது இனத்தின் வாழ்க்கைப் பண்புகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் நாம் நாமாக வாழ்வதற்கும் ஆசைப்படுவது எத்தனை நியாயமானதோ அதுபோலவே இன்னொரு மக்கள் கூட்டத்தின் உரிமைகளையும் உணர்வுகளையும் புரிந்து கொள்வதும் மதித்து நடத்துவதும் மிக முக்கியமானது. இலங்கைத் தீவின் அரசியல் வரலாற்றைத் தீர்மானித்த மூத்த தலைமைகளின் குறுகிய மன வக்கிரங்களால் ஒரு சந்ததியின் வாழ்வு பாழடிக்கப்பட்டுவிட்டதாகவே நான் எண்ணுகிறேன்."

(தமிழினியின் "ஒரு கூர்வாளின் நிழலில்" பக்கம்-132 பந்தி-2)