Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அடைந்தால் தமிழீழத்தேவி இல்லையேல் மரணதேவி!

"தனிப்பெரும் தலைவரின்" பேரனுக்கு தமிழீழம் தவிர்ந்த வேறெதுவும் வேண்டாமாம். தற்போது இந்தியாவில் தங்கியுள்ள சம்பந்தன், இந்தியாவின் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு நிகரான தீர்வினையே தமிழ் மக்களும் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் "இவ்வாறான ஒரு தீர்வினையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான தீர்வாக கொண்டிருக்குமாக இருந்தால் அது தமிழ் தேசிய மக்களுக்கான ஒரு சாவுமணியாம். இந்தியாவில் இன அழிப்பை எதிர்கொள்ளக்கூடிய தேசங்கள் அங்கு இல்லை. அங்கிருக்கும் மாநிலங்களின் மக்களின் கோரிக்கைகள் முற்றிலும் வித்தியாசமானவை. தற்போது இந்தியாவிலுள்ள அரசியலமைப்பு மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் பிரிந்ததற்கு பிற்பாடு உருவாக்கப்பட்ட புதிய அரசியலமைப்பாகும். இது சமஸ்டியே இல்லையெனவும் அலம்புது."

தாத்தாவிற்கு பேரப்பிள்ளை தப்பாமல் அரசியல் வினையாற்றுது. ஜீ.ஜீ. எந்தக்காலத்தில் தமிழ்மக்கள் நலனில், அபிலாசைகளில் இருந்து அரசியல் எவ்வகை வினையாற்றியவர். "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" எனும் வெற்றுக்கோஷத்துடன் அரசியல் வியாபாரத்தை ஆரம்பித்து, 50-ற்கு50 எனும் சாத்தியப்பாடற்ற சவடால் அரசியலுடன் அஸ்தமனமானவர்.

ஓர் பல்கலைக்கழகத்தையே ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கானதாக கோரியபோது, இந்துப் பல்கலைக்கழகம் வேண்டுமென ஆண்ட பரம்பரைக் குணம் கொண்ட உயர்-இந்து மேட்டுக்குடிகளின் மேதவியாகவே மேம்பட்டவர். குறிப்பாக காங்கிரஸின் அரசியலை சிறுபான்மைத் தேசிய இனங்களான முஸ்லிம்-மலையக மக்களுக்கு எதிரான குறுகிய இனவாத வடிவமைப்பில் வடிவமைத்தே செயற்பட்டவர். இப்பேர்ப்பட்ட அரசியலின் வார்ப்பாகவே வாரிசு பொன்னம்பலமும் வினையாற்றுது. இதுவும் நாட்டு நடப்பு தெரிந்துதான் வினையாற்றுகின்றதா?

வடக்கு மாகாணசபையில் 13-வதின் ஆகக் குறைந்தபட்சப் பொறிமுறையைக்கூட நடைமுறைப்படுத்த முடியாத அரசியல் வங்குரோத்து நிலையில், குஞ்சுப் பொன்னம்பலமும் தமிழ்ஈழ பட்டுவேட்டிக் கனவில் மிதக்கின்றது. இதே கனவுகொண்டு வடமாகாணசபை நிறைவேற்றிய தீர்மானங்களிற்கு பொதுபலசேனா போன்ற இனவெறி வானரங்களின் கூத்தாண்டங்களை அறியாததா? இப்பொன்னமபலக் குஞ்சு.

'"கர்மவினை எவரையும் விட்டு வைக்காது. நாம் முன்னர் செய்த கருமங்களுக்கே இப்பொழுது பலனை அனுபவிக்கின்றோம். சர்வாதிகாரிகளாக இருந்த எகிப்தின் முபாரக், ஈராக்கின் சதாம் ஹசைன் பாகிஸ்தானின் முஷாரப் ஆகியோர் இருந்த நிலை என்ன என்பதையும் இறுதியில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்'" என முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மையில் நிகழ்த்திய உரை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாக தெரியவருகின்றது."

ஆகையால் சமகால எம்தேச இனவாதம் சிக்கி-முக்கி கல்போல் உள்ளது. ஒன்றோடு ஒன்று உராசும் போது இனவாதப்பொறிகளாகப் பறக்கின்றன. இதில் பொன்னம்பலங்களின் தமிழ்ஈழத் தீப்பந்தங்கள் தென்னிலங்கையில் இனவாதமாக எரிய முற்பட்டபால் பேரினவாதத் தீக்கு காடு கொள்ளது. இதை மக்களால் வெறுத்து ஓதுக்கப்படும் சகல இனவாத அக்கினிச் குஞ்சுகளும் கண்டு கொள்ளுமா?

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்

வெந்து தணிந்தது காடு - தழல்

வீரத்திற் குஞ்சென்று மூப்பனெ;று முண்டோ?