Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஒடுக்கப்படுபவர்கள் ஒடுக்குமுறையில் இருந்து விடுபடுவது எப்படி?

தேசிய இனங்களும், தேசங்களும் ஒடுக்கப்படுவதையே, தேர்தல் முடிவுகள் மீளவொருமுறை பறைசாற்றி நிற்கின்றது. ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் தங்கள் மொழி மற்றும் தாங்கள் பின்பற்றக்கூடிய மதம் சார்ந்து, புதிய ஆட்சியை ஒடுக்கும் இனத்தினது மொழி மற்றும் மதத்தின் அதிகாரமாக - வன்முறையாக காண்கின்றனர். ஆளும் ஆட்சியதிகாரத்தைப் பெற்றவர்கள், கடந்தகால யுத்தத்தின் விளைவாகவே தமிழ்மொழி பேசும் மக்கள், தமக்கு எதிராக வாக்களித்தனர் என்று காரணத்தைக் கற்பிக்க முனைவதன் மூலம், இன-மத ஒடுக்குமுறையை மூடிமறைக்க முனைகின்றனர். நேரடியாக யுத்தத்தைச் சந்தித்த தமிழ் இனம் மட்டும் எதிர்த்து வாக்களிக்கவில்லை, மாறாக முஸ்லிம் - மலையக மக்களும் கூட எதிர்த்து வாக்களித்து இருக்கின்றனர்.

யுத்தத்துக்குப் பின்னர் நடந்தேறிய இன-மத வன்முறைகள், இனமத பிரச்சாரங்களின் பின்னணியில், மகிந்த தலைமையிலான இன்றைய ஆட்சியாளர்கள் இருந்தனர் என்பது உலகறிந்த உண்மை. ஆட்சியைக் கைப்பற்ற இந்த இன-மத ஒடுக்குமுறை பெருமைகளை முன்னிறுத்தியும், அதைத் தொடர்வதற்கான அதிகாரத்தையும் கோரிப் பெற்றனர் என்பதே உண்மை. இதை ஒடுக்கப்பட்ட இனங்கள் பிரதிபலித்தன.

இதில் இருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் விடுபடுவது எப்படி?

1.இன-மத ஒடுக்குமுறையைக் கண்டுகொள்ளாது இணங்கி, கூடிக் குலாவினால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுகின்ற பிழைப்புவாதமே தீர்வாக முன்வைக்கப்படுகின்றது. நக்கிப் பிழைக்கின்ற இந்த அரசியலை முன்தள்ளுகின்றனர். இது சமூகத்தில் ஜனநாயகம் நிலவுவதையே மறுக்கின்றது.

2.இனவொடுக்குமுறையை மூடிமறைக்கவும், அனுசரித்து பிழைக்கவும் இனத்திற்குள்ளான சாதி - பிரதேச - மத முரண்பாடுகளை கூர்மையாக்கக் கோருகின்றனர். அதாவது இனவொடுக்குமுறையுடன் பிரதேச – மத - சாதி முரண்பாடுகளை வெல்ல ஒன்றிணைந்து போராடுவதற்கு பதில், இனவொடுக்குமுறையைக் கண்டுகொள்ளாது இருக்கவும், இனவொடுமுறைக்கு எதிரான ஒழுங்கிணைந்த போராட்டத்தை நடத்தாத வண்ணம், அதை பிளந்து தனித்துப் போராடக் கோருகின்றனர்.

3.ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தைச் சேர்ந்த பாராளுமன்ற அரசியல்வாதிகள் முதல் இனவாதிகள் வரை, இனவொடுக்குமுறையில் இருந்து விடுபடுவதற்கு முன்வைக்கும் பாராளுமன்ற வழிமுறையோ, தொடர் ஒடுக்குமுறைக்கு காரணமாக மாறுகின்றது.

ஒடுக்குமுறையாளனுடன் பாராளுமன்றத்தில் பேசுவதன் மூலம், ஒடுக்குமுறையில் இருந்து விடுவிக்க முடியும் என்ற கூறுகின்ற அரசியலே, தேர்தல் வழிமுறையாக இருந்து வருகின்றது. இது தீர்வைத் தருவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்தவொன்று. தேர்தல் கட்சிக்கு வாக்கு கொடுக்கின்ற சாதாரண மனிதனுக்கு இது தெரிந்த போதும், வேறு அரசியல் தெரிவுகள் அவன் முன் இருப்பதில்லை என்பது தான் எதார்த்தம்.

மேற்கு முதல் இந்தியா வரை ஒடுக்குமுறைக்கு எதிராக தலையிட்டு, ஒடுக்குமுறைகளில் இருந்து விடுவிக்கும் என்று கூறுகின்ற பித்தலாட்ட அரசியல். இன்று இதை நம்புகின்ற மக்கள் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. மேற்கு முதல் இந்தியா வரை தங்கள் நாட்டில் வாழும் மக்களை ஒடுக்குபவராகவும், அதேநேரம் இலங்கையில் ஒடுக்குவோருடன் ஒருங்கிணைந்த சர்வதேச நிகழ்சிகளுடன் பயணிப்பவர்களே. இப்படி உலகறிந்த உண்மை இருக்க, அவர்கள் எப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்? தங்கள் சர்வதேச நலனுக்கு பாதகமான சூழல் இலங்கையில் நடந்தால் மட்டுமே, இந்த ஒடுக்குமுறையை பயன்படுத்திக் கொள்வார்களே ஒழிய, அப்போது கூட ஒடுக்கப்பட்ட மக்களுடன் கைகோர்த்துக் கொள்பவர்களல்ல.

இப்படி தேர்தல் வழிமுறை மற்றும் ஆளும் ஆட்சியாளர்களின் நிலை இருக்கின்ற பொதுப் பின்னணியில், ஒடுக்கப்பட்ட மக்கள் முன் உள்ள தெரிவாக இருக்கக் கூடியது

1.ஒடுக்கப்பட்ட இனமக்களுடன் கைகோர்க்கக் கூடிய, ஒடுக்கும் இனத்தில் இனவொடுக்குமுறைக்கு எதிரான மக்கள்திரள் போராட்டத்தை நடைமுறையில் முன்னெடுக்கும் இடதுசாரிகள், ஜனநாயகவாதிகளைச் சார்ந்து போராடுதல். ஆனால் நடைமுறையில் அப்படி இயக்கம் இன்று கிடையாது என்பதே உண்மை.

2.ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து மக்களை அணிதிரட்டி செயற்படும் இடதுசாரிகள், ஜனநாயகவாதிகளுடன் இணைந்து போராடுவது. எதார்த்தத்தில் அப்படி இயக்கம் இன்று கிடையாது.

3.கருத்தியல் தளத்தில் மக்கள்திரள் பாதையை முன்வைத்து, மக்கள் மத்தியில் கருத்தியலை உருவாக்கக் கூடிய சிந்தனைமுறையைச் சார்ந்து நிற்றல். அந்த வகையில் மக்கள்நலன் சார்ந்த சிந்தனைமுறையோ, நடைமுறையோ ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் கிடையாது.

இதுதான் இன்றைய எதார்த்தம். ஒடுக்கப்பட்ட மக்களோ அச்சத்துடன் வாக்களிக்கிற துயரம். ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதற்குப் பதில், ஒடுங்கிப்போகும் சூழல் பரிணமித்திருக்கின்றது. அந்தக் கருத்தியல் முன்தள்ளப்பட்டு, அது மேலோங்கி நிற்கின்றது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிற்போக்கான மத, சாதி, பிரதேசவாத, ஆணாதிக்க சிந்தனைகள் எப்படி இன்று மேலோங்கி வருகின்றதோ, அதே நேர்கோட்டில் ஒடுக்குமுறையாளனின் ஒடுக்குமுறைக்கு ஒடுங்கி பிழைக்கக் கோரும் சிந்தனைமுறையும் மேலோங்கி வருகின்றது.

இதில் இருந்து விடுபட, இதற்கு எதிராக மக்களை அறிவூட்டுவது அவசியமாகின்றது. ஒடுக்குமுறைக்கு எதிராக வாக்களிப்பதற்குப் பதில், போராடியாக வேண்டும் என்பதை உணரவைக்க வேண்டும். மக்கள்திரள் பாதைக்கான கருத்தியல் இன்றி, அதை மக்கள் முன்வைத்து அறிவூட்டாமல், மக்கள் வாக்களித்த முறையை குற்றஞ்சாட்ட முடியாது.

இன்றைய பொதுக் கருத்தியற் தளம் மக்களை முன்னிறுத்தவில்லை. சுயநலனை முன்னிறுத்துகின்றது. சமூகவலைத்தளத்தில் தம்மை பிரபலப்படுத்துவதற்கானதாக, குறுகிக் கிடக்கின்றது. இதற்காக மக்களின் நடத்தையை குற்றம் சாட்டுவது முதல் ஒரு சில அரசியல் சுலோகங்கள் முன்வைத்து, மக்களை மாற்ற முடியாத மந்தையாக காட்டுவது நடக்கின்றது. இதன் மூலம் தங்கள் சுய இருப்பை தக்க வைப்பதற்கான கருத்தியல் கட்டமைக்கப்படுகின்றது.

பரந்துபட்ட மக்கள் நம்பக்கூடிய, வழிமுறைகளுடன் உரையாடுவதில்லை. மக்களை அன்னியமாக்கி வைத்துக் கொண்டு, நடத்தும் கருத்தியல் தர்க்கங்கள் மட்டுமே நடந்தேறுகின்றது. புலத்தில் இருந்து இப்படி புலம்புகின்ற இருப்பியல்வாத கருத்தியலானது, நடைமுறை வாழ்வில் இருந்து சுயமாகக் சிந்திக்க முனையும் கருக்களையே அழிக்கின்றது.

நாம் இன்று செய்ய வேண்டியது, மக்கள்நலன் சார்ந்த மக்கள்திரள் கருத்தியலை முன்வைத்து, மக்களை அணுகுவது தான். இதைத் தவிர மக்கள் நலன் சார்ந்த, வேறு அரசியல் வழி எதுவும் கிடையாது.