Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

வாதத்தை வளர்த்தெடுக்கும் தேசியங்கள் - தேசத்தை அழிய வைக்கும் வாதங்கள்

இயற்கை வளங்கள் அதிகம் நிறைந்தது நமது நாடு. மூளை வளமும் நமது நாட்டில் தாராளமாகவே உண்டு. காலனித்துவ ஆட்சியின் போதும் சரி அவர்கள் நாட்டை விட்டுப் போன பின்னரும் சரி நமது நாட்டின் வளங்களையும் குடிமக்களின் மூளை வளங்களையும் வைத்து இன்று வரையும் பிழைப்பு நடத்துபவர்கள் காலனித்துவ எசமானர்களே.

நாட்டை விட்டுப் போனாலும் காலனித்துவ ஏகாதிபத்தியம் நாட்டின் வளங்களை சுரண்டும் அரசியலை இங்கே விதைத்து வளர்த்து விட்டே சென்றது. அதாவது இன-மத-சாதி-பால்-பிராந்திய-வர்க்க மோதல்களை வளர்க்கும் அரசியல்வாதிகளை உருவாக்கி வைத்து விட்டே சென்றது. அதே காலனித்துவ எசமானர்கள்தான் இன்று வரை எமது மூளை வளங்களை உறிஞ்சி எடுத்தபடியும் இலங்கை இனவாத அரசுக்கு கடன், நன்கொடை கொடுத்தபடியும் அதன் அடக்குமுறை ஆட்சிக்கு ஆயுத உதவி வழங்கியபடியும் சர்வதேச சமூகம் என்ற பெயரில் வந்து நின்று சமாதானம் நல்லிணக்கம் பற்றி போதிக்கின்றனர்

'வாதம்' என்ற உடல் நோய் மனிதனை வாழ விடாது. அதே போன்றே சமூக சிந்தனை மட்டத்திலும் இந்த வாதம்(மனநோய்) நம்மை பீடித்திருப்பதாலேயே குடிமக்களாகிய நாம் அழிவை மட்டும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்-தமிழர்-தமிழ்த் தேசம்-பாரம்பரியம் என்றெல்லாம் கதையாடல்கள் செய்கிறோம். உலகின் முதல் தோன்றிய மொழி தமிழ் என்கிறோம். “கடுகைத் துளைத்து கடலைப் புகுத்திய” குறள் என்கிறோம். முதல் கப்பல் ஓட்டிய தமிழன் என்கிறோம். தமிழ் சாம்ராச்சியங்கள் இருந்ததாக வரலாறுகளை காட்டுகிறோம். “பசுவைக் கொன்றதற்காக மகனையே தண்டித்த மனு நீதிச் சோழன்” பரம்பரை நமது என மார் தட்டுகிறோம். “முல்லைக்குத் தேர் ஈந்த பாரி”யை காட்டி பெருமிதம் கொள்கிறோம். இன்னும் இன்னும் எத்தனையோ பெருமைகளை நாம் கூறிக் கொண்டே போகலாம்.

 

இப்படி வாழ்ந்து காட்டிய ஒரு இனம் இன்று ஏன் அனாதைகளாக-அகதிகளாக-ஒடுக்கப்பட்டவர்களாக-வருவோர் போவோரிடம் பிச்சை கேட்பவர்களாக-தங்களை தாங்களே அழிப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதை-அதற்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்து கண்டறிந்து அதனை சீர்படுத்தாத வரை எமக்கு விடிவு கிடைக்கப் போதில்லை.

எப்போது “சாதியத்தை கற்பூரத் தட்டில் ஏந்தியபடி சமயம்” மக்கள் மத்தியில் புகுந்ததோ அன்றே தமிழர் சாம்ராச்சியங்களின் சரிவும், அழிவும் ஆரம்பமாகியது என்பதுதான் நிதர்சனமான - யதார்த்தமான வரலாறாகும்.

வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களால் போதைவஸ்துக்கு ஒப்பான சமயத்தினூடாக மனித மூளைக்குள் விதைக்கப்பட்ட “சாதிவாதம்” தான் ஏனைய பல வாதங்களை எம் மத்தியிலே உருவாக்கி விட்டுள்ளது. காலங்காலமாக இலங்கைக் குடிமக்களை துன்புறுத்தி, வதைத்து, அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதும் இந்த “சாதியம்” என்ற மூல நோயிலிருந்து தோன்றிய பிற வாதங்கள்தான். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மிருகங்களைப் பலி கொடுத்து ‘யாகம்’ நடாத்தி வளர்த்தெடுக்கப்பட்டு வந்த இந்த ‘சமய’ வேடமணிந்த சாதியம் இன்று தன்னை நிலைநிறுத்தி தக்கவைக்க மனிதக் கொலைகளை நியாயப்படுத்தியபடி குடிமக்களைக் கூறு போட்டுப் பிரித்துப், பிளவுபடுத்தி, மோதவிட்டு வேடிக்கை பார்த்தபடி உள்ளது.

மதவாதம்-சாதிவாதம்-பால்வாதம்-குறிச்சிவாதம்-ஊர்வாதம்-பிராந்தியவாதம்-இனவாதம்-நிறவாதம். இந்த வாதங்களைப் பின்னிப் பிணைத்தே ஏகாதிபத்தியவாதம் தனது புதிய உலகப் புதிய தாராளவாதத்தை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

“ஒற்றுமையே பலம்” என வாழ்ந்த ஒரு மக்கள் கூட்டத்தை இந்த ‘சமய முலாம் பூசிய சாதியம்’ இன்று “ஒத்துழையாமையே பணம்” என்ற மனோவியல் சிந்தனைக்கு கொண்டுவந்து விட்டுள்ளது. நாட்டில் இன்று இன-மத-பால்-பிராந்திய வாதங்களை முன்னிறுத்தி செயற்படுபவர்கள்-நீதியை இரண்டாக எடை போடுபவர்கள்-துரோகம் என்று உச்சரிப்பவர்கள் அனைவருமே இந்த சாதிய சிந்தனைக்கு ஆட்பட்டவர்களே. இதன் மூலம் அதிகாரங்களைக் கைப்பற்றி பணம் சம்பாதிப்பதே அவர்களது தலையாய நோக்கம். மத(மது)போதையில் மயங்கிய குடிமக்கள் நாமும் ‘பணம்’ என்ற இலக்குடன் அடுத்தவர்களை வீழ்த்தி மிதித்தபடி(சமயத் திரை எமது கண்ணை மறைக்க) சாதியக் குதிரைகளின் பின்னால் அணிவகுத்து ஓடிக் கொண்டிருக்கிறோம்.

இன்று நமது நாட்டில் நிலவும் அரசியலைப் சற்று பரிசீலித்துப் பார்ப்போம். நல்லாட்சி வந்து மூன்று ஆண்டுகள் கழிந்து விட்டன. நாட்டுக்குள் பணம் ஆற்று வெள்ளம் போல் பாய்கிறது. கோயில் கோபுரங்கள், பல மாடி கட்டிடங்கள், உல்லாச விடுதிகள், உணவகங்கள், கல்யாண மண்டபங்கள் கட்டி எழுப்பப்படுகின்றன. சொகுசு வாகனங்கள் இறக்குமதியாகின்றன. நாளாந்தம் நாட்டில் நவீன தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

ஆனால் நாட்டின் குடிமக்கள் தாங்கள் உயிர் வாழ்வதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தேசியம் பேசுபவர்கள் மக்களுக்கு மத்தியில் சகல வாதங்களையும் ஊருக்கொரு விதமாக (சாதிகளின் விகிதாசாரம் பார்த்து)முடுக்கி விட்டபடி அடுத்த அதற்கு அடுத்த தேர்தல்களுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றனர். பணம் ஒன்றே சனநாயகத் தேர்தலில் எதனையும் தீர்மானிக்கும் சக்தியாக இன்று விளங்குகிறது. "பணம் இன்றேல் பட்டினி" என்ற கையறு நிலையில் குடிமக்களும் தங்கள் புள்ளடி அடையாளங்களை விற்க வேண்டிய கட்டாயத்தை இன்றைய அரசியலும், அதன் ஆட்சிமுறையும் நாட்டில் இன்று ஏற்படுத்தி விட்டுள்ளது.

இலங்கையில் தேசியவாதம் முன்னிறுத்தும் சுயாட்சியும் - சுதந்திரமும் சாதியத்தைக் காப்பாற்றக் கண்டுபிடித்த சுயலாப அரசியல் கோட்பாடுகளே. மதவழிபாடுகளில் - காணிச் சச்சரவுகளில் - பாலியல் தகராறுகளில் - பிராந்திய முரண்பாடுகளில் - வர்க்கப் பிரச்சனைகளில ஒவ்வொன்றிலும் கொலை செய்யும் பைத்திய மனோநிலை வரைக்கும் குடிமக்களை உந்தித்தள்ளுவதும், தூண்டிவிடுவதும் இந்த சாதிவாதமே.

எமது சமூகத்தில் இன்றைய வன்முறை மனோவியல்பு அதிகரித்துச் செல்வதற்கு அடிப்படைக் காரணமே இந்த மதவாத முகம் கொண்ட சாதிவாத மனப்பான்மையே. வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் ஒரு தனி மனிதன் தன்னைச் சூழ வாழ்ந்த மக்களை தனக்குச் சாதகமான வகையில் பயன்படுத்த கட்டியாள - கட்டுப்படுத்த - அடக்க - அடிமைப்படுத்த, அதாவது தனது சுயநலம் கருதி அதே மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொறிமுறைக்குப் பெயர் தான் ‘சமயம்’. இந்த சமயம் உருவாக்கி, ஊக்குவித்து, உறுதிப்படுத்தியதே சாதிவாதம்.

மதச்சார்பற்ற அரசியலமைப்புக் கொண்ட நாடுகளில் கூட சமயத்தின் அழுத்தங்களுக்கும் - தாக்கங்களுக்கும் எதிரான கண்காணிப்பும், விழிப்புணர்வு நடவடிக்கைகளும், போராட்டங்களும்  தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. எமது நாட்டு அரசியலில் மதம் பிரதான முக்கிய விசேட இடத்தை வகிப்பதன் மூலம் சாதிவாத அணுகுமுறைகள் சட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எமது நாட்டின் அரசியல் யாப்பில் சமயம் உட்கார்ந்திருக்கும் வரையில் குடிமக்கள் நாம்  பலவிதமான வாதங்களின் அடக்குமுறைகளிலிருந்து தப்பி மீளவே முடியாது.

இன்று நாடு பூராவும் சகல தேசியவாதிகளும் சமயத்தைத் தலையில் தூக்கி வைத்துக் காவடி ஆட்டம் ஆடத் தொடங்கியுள்ளனர். அதை மாகாண சபைத் தேர்தலுக்கான மூலதனமாக வைத்து அதற்கான  வியாபார உத்திகளையும் ஆரம்பித்துள்ளனர். தேசியவாத ஆதரவு ஊடகங்கள் அதற்கேற்றவாறு விளம்பரங்களை பிரசுரிக்கின்றன. இவற்றின் விளைவுகளை அண்மையில் நாட்டில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

இவற்றைக் குடிமக்கள் நாம் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்க்கும் பார்வையாளராக இருந்தபடி இந்த வாத அரசியலைத் தொடர அனுமதித்தால் மீண்டும் ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு நாமே வழிவகுத்தவர்கள் ஆவோம். அதனை நோக்கிய அரசியல் வியூகங்கள், அதற்கு வசதியான சந்திப்புக்கள், உரையாடல்கள், அடிமட்ட வேலைகள் யாவும் உள் நாட்டிலும், நாட்டுக்கு வெளியேயும் தற்போது இடம் பெற்று வருகின்றன. புதிய தாராளவாத பொருளாதார திட்டங்களை நடைமுறைப்படுத்தும் ஒரு அரசாங்கத்தை அமைக்கக் கூடிய சர்வாதிகாரிகளை ஆட்சியில் அமர்த்துவதற்கு சர்வதேச சமூகம் ஒருநாளும் தயங்காது என்பது உலக வரலாறு காட்டும் உண்மை.

வாத நோய் இருக்கும் வரை வரை உடம்பு முடமாகவே இருக்கும். அதே போல் மக்களின் சிந்தனை வாதங்கள் மாற்றப்படாத வரை சுதந்திரமும் சமூகநீதியும் சமாதான சக வாழ்வும் குடிமக்களுக்கு எட்டாக் கனியாகவே அமையும்.

‘சமயம் ஒரு அபின்’ 

              -பொதுவுடைமைத் தந்தை கார்ல் மாக்ஸ்