Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

அனைத்து நெருக்கடிகளுக்கும் அரசியல் முறைமை மாற்றமே ஒரே தீர்வு!

அண்மையில் நடந்தேறிய வடமத்திய மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் பலத்த அடிவாங்கிய ஐ.தே. கட்சி அடங்கலான எதிரணிக் கட்சிகள், மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கான மாகாணசபை தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தம்மை சுதாகரித்துக் கொண்டு, இவ்விரு மாகாணசபை தேர்தல்களை ஆட்சிமாற்றத்திற்கான ஆரம்பப் படியாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வதை காணக்கூடியதாக உள்ளது.

விலைவாசி ஏற்றம், ஜனநாயக உரிமை மறுப்பு, குடும்ப ஆட்சி, கட்டுமீறிய ஊழல், வீண்விரயம், அதிகரித்த போதைவஸ்து பரிகரணம், கட்டு மீறிச்செல்லும் வெளிநாட்டுக்கடன், என மஹிந்தர் அரசுக்கெதிரான எதிரணிகளின் குற்றப்பத்திரம் நீண்டு கொண்டே போகிறது. இந்த நிலைமைக்கு முடிவுகட்டி, நாட்டுக்கும் நாட்டு மக்களினதும் சுபீட்சமான எதிர்காலத்திற்காக தற்போதைய மகிந்தர் அரசை தோற்கடித்து அதற்க்கு மாற்றீடாக ஐ.தே.கட்சி அடங்கலான எதிரணி கட்சிகளின் கூட்டமைப்பை ஆட்சி அதிகாரக்கட்டில் அமர்த்த வேண்டும் என்பதே ஐ.தே.கட்சியினதும் அதன் நேசஅணிகளினதும் கோரிக்கையாக இருக்கிறது. அதாவது தலையிடிக்கு தலையணையை மாற்றுவதுபோல் இன்றைய அனைத்து நெருக்கடிகளுக்கும் ஒரே தீர்வு ஆட்சிமாற்றம்தான் என்னும் கருத்தியல் மிகசாமர்த்தியமாக மக்கள் மத்தியில் திணிக்கப்படுகிறது.

உண்மைக்குப்புறம்பான இக்கருத்தியலை வலுப்படுத்தும் வகையில் சந்தை ஊடகங்களும் பாரிய பங்களிப்பை வழங்கி வருவதையும் காணக் கூடியதாக உள்ளது.

இங்கு மிகப்பெரிய வேடிக்கை என்னவெனில் இடதுசாரிகளாக தம்மை இனங்காட்டிக்கொள்ளும் போலி சோஸலிஸ்டுகளும், இன்று நாடும் நாட்டு மக்களும் முகம் கொடுக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆட்சி மாற்றம்தான் ஒரே தீர்வு எனற வகையில் தமது மாகாண சபை தேர்தல் பரப்புரைகளை முன்னெடுத்துச் செல்லும் கையறுநிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளமையாகும்.

யதார்த்தம் என்ன? இன்று எதிரணி கட்சிகளால் மஹிந்தர் அரசுக்கெதிராக முன்வைக்கப்படும் அனைத்துக்குற்றச்சாட்டுகளும், 1948 பெப்ரவரி 4ஆம் நாள் பிரித்தானிய காலனித்துவ எஐமான்களிடம் இருந்து கறுப்பு துரைமாருக்கு சுதந்திரம் என்ற பெயரில் இலங்கையின் ஆட்சி அதிகாரம் கைமாற்றப்பட்டதில் இருந்து ஆரம்பமானது என்பதை சுதந்திரத்திற்கு பிற்ப்பட்டகால வரலாற்றை நோக்கினால் விளங்கிக்கொள்ள முடியும்.

இந்த நிலமை 1977இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான ஐ.தே.கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையுடனான ஆட்சியில் அறிமுகப்படுத்திய நவலிபரல்வாதத்துடனும் அதனோடிணைந்த தாராளமய பொருளாதார கொள்கையுடனும் தீவிரம் பெற்றது. இதையடுத்து 1994இல் ஆட்சி அதிகாரக் கட்டில் அமர்ந்த சந்திரிகா அம்மையார் ஆட்சியிலும், அதை தெடர்ந்து 2005இல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய மஹிந்தர் ஆட்சியிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சுருங்கக் கூறின் 1977இல் அறிமுகமான நவலிபரல்வாதமும் அதனோடிணைந்த தாராளமய பொருளாதாரக் கொள்கையின் பரிணாமவளர்ச்சியே இன்றைய மஹிந்தர் ஆட்சியில் பிரதிபலிக்கிறது. 17வருடகாலமாக ஐ.தே.கட்சி முன்னெடுத்த நவலிபரல்வாதத்துடன் இணைந்த தாராளமய பொருளாதாரக் கொள்கையின் கொடூரத்தில் இருந்து விடுபடுவதற்கு வழிதெரியாமல் தவித்த மக்கள், 1994இல் சந்திரிகா அம்மையார் தலைமையிலான கூட்டணியின் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்து ஆட்சிமாற்றத்தை ஏற்ப்படுத்தினர்.

ஆனால் மக்கள் எதிர்பார்த்த சுபீட்சம் சந்திரிகா அம்மையாரின் 10வருட காலத்தில் கிடைக்கவில்லை. மாறாக நாளுக்குநாள் நெருக்கடிகள் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் 2005இல் ஐ.ம.சு.கூட்டமைப்பில நம்பிக்கை வைத்து மஹிந்தரை ஆட்சி அதிகாரக்கட்டில் அமர்த்தினர். 2009இல் 30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் நாடும் நாட்டு மக்களும் எதிர்கொண்ட ஒருபக்க நெருக்கடிக்கு தீர்வை ஏற்படுத்தியதன் மூலம் மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்தார்.

யுத்தத்துக்கு தீர்வை ஏற்ப்படுத்தியதுபோல் ஏனைய பிரச்சினைகளுக்கும் மஹிந்தர் தீர்வு காண்பார் என்ற அதீதநம்பிக்கையில் 2010இல் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை மக்கள் மஹிந்தரிடம் ஒப்படைத்தனர். நவலிபரல்வாதமும் அதனோடிணைந்த தாராளமயக் கொள்கையையும் கடுகளவும் பிசகாமல் பின்பற்றும் மஹிந்தர் அரசு, 30வருடகால யுத்தத்துக்கு காரணமான தேசியப்பிரச்சினைக்கு தீர்வுகண்டு நாட்டின் நிரந்தர சமாதானத்துக்கு ஏற்புடையதான தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதில் தோல்வி கண்டுள்ளது.

மறுபுறமாக முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டதன் மூலம் முஸ்லிம்களுக்கும் அரசுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலைமையானது தேசிய இனங்களுக்கிடையில் அமைதியின்மையை அதிகரிக்க செய்யவே உதவும்.

இவற்றுக்கு அப்பால் நாட்டில் யுத்த நெருக்கடிக்கடியை விஞ்சியதான பொருளாதார, சமூக, கலாச்சார, பண்பாட்டுரீதியாக பாரிய நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. மறுபுறத்தில் நாட்டின் பெறுமதிமிக்க நிலபுலன்களை பன்நாட்டு நிறுவனங்ளுக்கு தாரைவார்த்து வருகிறது.

யுத்தபாதிப்புக்குள்ளான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்த பெருமளவான நிலங்கள் பன்நாட்டு நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் தாரைவார்க்கப்பட்டுள்ளது. இப்பிரதேசங்களில் வாழந்த மக்கள் தமது வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் பறிகொடுத்து நிர்கதிகுள்ளாகியுள்ளனர். ஆக நவலிபரல்வாதமும் அதனோடிணைந்த தாராளமய கொள்கையையும் பின்பற்றும் ஆட்சிமாற்றங்கள் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்க்குப் பதிலாக மேலும் மேலும் நெருக்கடிகளை உக்கிரமடையச் செய்து வருகிறது என்பதே உண்மை. சுதந்திரத்துக்கு பின்பதான 65வருடகால அனுபவம் கற்பித்திருக்கும் பாடம் இதுதான்.

மாற்று என்ன?

நவலிபரல்வாதமும் அதனோடிணைந்த தாராளமயக் கொள்கையும் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்க்குப் பதிலாக இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பாற்பட்டதும், அனைத்து மக்களும் சமஉரிமையுடன் வாழக்கூடியதும், தேசிய உற்பத்திக்கு முன்னுரிமை வழங்கும், அனைத்து இனங்களும் தத்தமது மொழி, கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை பேணி பாதுகாக்க ஏற்புடையதுமான புதிய அரசியல் அமைப்பு முறைமை மாற்றத்துக்காக அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்க வேண்டியது கட்டாயமாகும்.

தற்போது நடைமுறையிலுள்ள லிபரல்வாதமும் அதனோடிணைந்த தாராளமய ஆட்சிமுறைமையானது பொருளாதாரரீதியில் மட்டுமன்றி கலை, கலாச்சார, அரசியல், பண்பாட்டு ரீதியாகவும் பாரிய சீரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலமை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் போக்கையே காணக்கூடியதாக உள்ளது.

இந்த முறைமையானது நீடித்துச் செல்லுமாயின், மனிதகுலத்துக்குரிய குணாம்சங்கள் அருகி மிலேச்சத்தனங்கள் தலைதூக்குவதை தடுக்க முடியாததாகிவிடும். தற்போது அன்றாடம் தினசரிகளை நிரப்பும் செய்திகளாக காணப்படுபவை கொலை, கொள்ளை, மனிதத்துவத்தை மலினப்படுத்தும் மிகமோசமான பாலியல் வல்லுறவு சம்பவங்கள் தொடர்பான செய்திகளேயாகும்.

இவ்வாறான செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதையே அவதானிக்ககூடியதாக உள்ளது. ஆட்சி மாற்றத்தால் இந்த நிலைமைக்கு முடிவுகட்ட முடியாதென்பது வெள்ளிட மலையான உண்மை. எனவே புதிய அரசியல் முறைமை மாற்றத்துக்காக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.