Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

நுகர்வதா மனித சாரம்? -மாக்சியம் 10

மனித வாழ்வின் தேவைகளே, உழைப்புக்கான அடிப்படை. மனித தேவைகள் மறுக்கப்படும் போது, உழைப்பு வாங்கப்படுகின்றது. மனித உழைப்பிலான பொருள், மனிதனுக்கு அன்னியமாகிவிடுகின்றது. இதனால் பொருள் முதன்மையாகி விட, பொருளுக்கு கீழ்ப்பட்டவனாக மனிதன் மாற்றப்பட்டு அடிமையாக்கப்படுகின்றான். இப்படி மனித உழைப்பும், உழைப்பின் நோக்கமும் தனிவுடமைச் சமூக அமைப்பில் திரிந்து காணப்படுகின்றது.

பொருளை உற்பத்தி செய்வதற்காக உருவானதல்ல மனித உழைப்பு. மனித தேவைகளே, உழைப்பின் வடிவம். இப்படியிருக்க பொருளை உற்பத்தி செய்யவே மனிதனும், மனித உழைப்புமாக மனிதசாரம் இன்று குறுக்கப்பட்டுக் கிடக்கின்றது. மனிதன் பொருளை உற்பத்தி செய்யவே, இயற்கை மனிதனை தோன்றுவித்ததாக தனிவுடமை உலகம் கருதுகின்றது. பொருளை நுகர்வதே வாழ்வின் நோக்கமாகக் கொண்டு மனிதன் வாழ்வதான எண்ணப்பாட்டையே சந்தைக் கலாச்சாரம் உருவாக்கி இருக்கின்றது. பொருளை பயன்படுத்துபவனின் பொருள் சார்ந்த அறிவே, மனித அறிவாக விளம்பர உலகம் மனிதனை தனது சட்டத்;துக்குள் மாட்டி தொங்க விட்டிருக்கின்றது.

இவை அனைத்தும் மனித உழைப்பிலான பொருள் தனிவுடமையாகியதன் விளைவாகும். உழைப்பு மூலம் உருவான பொருள், தனிவுடமை அமைப்பில் உழைப்பவனுக்கு சொந்தமில்லை. இங்கு பொருள் உற்பத்தி என்பது, மனிதனின் தேவை சார்ந்தல்ல, மாறாக சந்தை சார்ந்ததாகிவிட்டது. உற்பத்தியான பொருளை உழைப்பு மூலம் நுகர முடியாது. மாறாக சந்தையில் வாங்குவதன் மூலமே நுகர முடியும். பொருளைச் சந்தையில் வாங்க, உழைப்பை மூலதனத்துக்கு மலிவாக விற்றேயாக வேண்டும்.

பொருள் மனிதனின் தேவைகளில் இருந்து அன்னியமாகி, சந்தைப் பொருளாகி இறுதியில் நுகர முடியாத எல்லையில் ஆடம்பரப் பொருளாகிவிடுகின்றது. சந்தைக்குரிய ஆடம்பர பொருட்களை உற்பத்தி செய்யவே மனித உழைப்பு உருவானதான தோற்றப்பாடே, இன்று மனித சாரமாக அறிவாகவும் மாறி இருக்கின்றது.

தனிவுடமையை மையப்படுத்தி இயங்கும் பொருள் உற்பத்தி முறைமை, உழைப்பிலான உற்பத்தியில் இருந்தும், அதன் கூட்டு வாழ்வில் இருந்தும் மனிதனை அன்னியமாக்குகின்றது. பொருள் உழைப்பவனிடம் இருந்து அன்னியமாகின்ற போது, பொருளே முதன்மையாகி விடுகின்றது. இந்தப் பொருளுக்கு மனிதன் அடிமையாகி விடுகின்றான். மனித உழைப்பு மூலமான உருவான பொருளுக்கே, மனிதன் அடிமையாகி நிற்கின்றான். தன்னால் நுகரமுடியாது அன்னியமான பொருளை அடைவதே, மனிதச் செயற்பாடாகவும் வாழ்வாகவும் குறுகி விடுகின்றது.

மனிதன் தான் உற்பத்தி செய்த பொருளை நுகர முடியாது அன்னியமாக்கியதன் மூலம், பொருளுக்கு மனிதன் அடிமையாக்கப்பட்டு விடுகின்றான். பொருளை முதன்மையாக்கி, பொருளை நுகர்வதே மனித முதன்மையான செயலாக சந்தைக் கலாச்சாரமும் பண்பாடும் இயங்குகின்றது. பொருளை முதன்மைப்படுத்தும் சந்தை விளம்பரங்கள் மூலம், நுகர்வுவெறி ஊட்டப்படுகின்றது. மனிதனின் சிந்தனை, செயல் அனைத்தும் பொருளை அடைவதும், நுகர்வதுமே மனிதசாரமாக எண்ணுமளவுக்கு மனிதனின் உழைப்பு சூறையாடலுக்கு உள்ளாக்கப்படுகின்றது. பொருளை அடைவது பற்றியதாகவே சிந்தனை, செயல் என, மனித செயற்பாடு குறுகி இருக்கின்றது. இந்த எல்லைக்குள் வாழ்தல் மனித அறமாக அறிவாக புரியப்படுகின்றது.

இப்படி பொருளை நுகருவதை மையப்படுத்திய மனித வாழ்வு, சுயநலத்தையும், காரியவாதத்தையும் மனிதசாரமாக்கி விடுகின்றது. பிற மனிதனுடனான மனித உறவு, சமூக உறவாக இருப்பதில்லை. பொருளை அடைவது, நுகர்வது முதன்மைச் செயலாக, அதை அடைவதற்குரிய வடிவங்கள் மனித அறமாக குறுகி விடுகின்றது. பொருளை அடைதலுக்குரிய செயற்பாடே சமூக உறவாகி சுயநலமும் காரியவாதமும் வக்கரிக்கின்றது.

சந்தை விதிக்கும் மனித அறம் என்பது, அனைத்தையும் விலைக்கு வாங்கும் உறவாகவும், நுகர்வு சார்ந்த வக்கிரமாகவும் ஆகி விடுகின்றது. இன்றைய தனிவுடமை அமைப்பில் புரையோடி வெளிப்படுவது இது தான். மனித உறவுகளையும், உணர்ச்சிகளையும் வெறும் பொருள் சார்ந்த சடங்காக்கி இருக்கின்றது. பொருள் சார்ந்த மனித உணர்வுக்குள் அடிமைப் புத்தியை, நுகர்வுச் சீரழிவு சார்ந்த பண்பாட்டு உணர்வாக மாற்றுகின்றது. முடிவற்ற நுகர்வு சார்ந்த முரண்பாடான மனித உறவுகளையும், அடிமைப் புத்தி கொண்ட அடிமை மனப்பாங்கு கொண்ட முரண்பாடாக மாற்றுகின்றது. தனிநபர்வாதம் முதன்மை பெற்று, சமூகத்தை தனது நுகர்வுக்கு கீழ்பட்ட ஒன்றாக காணுகின்றது.

இதனால் மனித முரண்பாடுகள் கூட கட்டுக்கடங்காத நுகர்வு சார்ந்த எல்லைக்குள் தொடர்ந்து பரிணமிக்கின்றது. அனைத்தையும் நுகர்ந்துவிடும் வெறியும் வக்கிரமும், அனைத்துவிதமான சமூக அறநெறிகளையும் மறுத்துவிடும் தவறான தனிமனித போக்காக மாறிவிடுகின்றது. தனிமனித எல்லைக்குள் குறுகி, பல்வேறு முரண்பாடுகளைத் தோன்றுவிக்கின்றது. தனிமனிதனாகவே கூனிக்குறுகி விடும் போது, வேறு போக்கிடமின்றி உளவியல் ரீதியான சிக்கலுக்குள் புதைந்து போகின்றான்.

உண்மையில் நுகர்வு வெறியிலான தனிநபர் இன்பவாதமும், அது சார்ந்த கோபமும், நுகர்வுச் சந்தையை உப்ப வைக்கின்றது. இந்தக் கோபம் தன்னைத் தானே சமூக உறவிலிருந்து துண்டித்துக் கொள்கின்றது. தனிநபர்வாதம் பொருட்களை நுகரும் நுகர்வுக் கலாச்சாரத்தில் இருந்தே, அதையே தன் ஆளுமையாய் வளர்த்துக் கொள்கின்றது. வாழ்க்கைப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது, நலமடிக்கப்பட்ட தனிநபராகவே அந்தரிக்க வைத்து சீரழிக்கின்றது. நுகர்வை மையமாக்கி, அதையே தனிநபர் ஆளுமையாக்கி விடுகின்றது. இதனால் சமூக ஒழுக்கமும், சமூகக் கட்டுப்பாடு, சமூக நேர்மையும் இல்லாமல் போய்விடுகின்றது. தனிவுடமை அமைப்பில் சமூகம் சார்ந்த உறவுகள், உணர்ச்சிகள் நலமடிக்கப்பட்டு விடுகின்றது. பொருள் சார்ந்த உறவாக, மனித உறவுகள் குறுகி விடுகின்றது.

மனிதர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் விடையங்கள் முதல் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் அனைத்தும் பொருள் சார்ந்ததாக, நுகர்வு சார்ந்ததாக குறுகி விடுகின்றது. சக மனிதனுடனான மனித உறவுகள் பொருள் மூலமாகவும், அதன் அளவு பெறுமதி சார்ந்த ஒன்றாகவும் மாறி விடுகின்றது. அதிக பெறுமதி கொண்ட பொருளே மனித உறவினை அளவிடும் கருவியாகி விடுகின்றது. சந்தைப் பெறுமதியைக் கொண்டே, மனித உணர்வும் உணர்ச்சியும் அளவிடப்படுகின்றது. இப்படி மனித உணர்வுகள் உணர்ச்சிகள் நுகர்வு சார்ந்ததாகி நிற்கின்றது. மனிதனின் கூட்டுவாழ்வுக்கு இடையில் இருக்கக்கூடிய மனிதத் தன்மை உணர்வற்றதாக கருதுமளவுக்கு மனிதனின் வாழ்க்கை சந்தைக் கலாச்சாரமாகி நிற்கின்றது. பொருள் சார்ந்தும், இதன் பெறுமதி மூலமுமே மனித உணர்வை வெளிப்படுத்த முடியும் என்ற அளவுக்கு, நுகர்வுவெறி சமூகமாக உலகமயமாதல் மனிதனை மாற்றி இருக்கின்றது. மனித அறிவு என்பது நுகர்வு பற்றியதாக, நுகர்பொருள் பற்றியதாக குறுகி இருக்கின்றது.

நுகர்வுப் பண்பாடும் கலாச்சாரமும் வீங்கி வெம்பி உள்ள தனிவுடமை சமுதாய உள்ளடக்கத்தில், தனிமனிதன் சார்ந்த குறுகிய நலன்களே முதன்மைப்படுத்தப்படுகின்றது. இதன் சாரமாக கவர்ச்சியும் ஆபாசமும் நிறைந்த, நுகர்வு வக்கிரமாக மனிதப் பண்பாடு கொப்பளிக்கின்றது. இதுவே மனித கலாச்சாரமாக பண்பாடாக மாறுகின்றது. ஒரு விளம்பரம் எந்த நோக்கில் எப்படி உருவாக்கப்படுகின்றதோ, அதேவகையில் மனிதப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் சந்தை உற்பத்தி செய்கின்றது. உலகமயமாதல் அமைப்பில் இதுவே உலகம் தளுவிய சந்தைக் கலாச்சாரமாகின்றது. .

மனித அறிவு கூட சந்தைப் பொருளாகி, மனிதனில் இருந்து பிரிந்து நிற்கின்றது. மனித வாழ்வு சார்ந்த அறிவு, மனிதனுக்கு உரிமையற்றதாகி விடுகின்றது. பரம்பரை பரம்பரையாக கைமாறிய அறிவு, இன்று மனிதனில் இருந்து அன்னியமாகி விட்டது. அறிவு கூட சந்தைக்குரிய பண்டமாகி விட்டது. மனிதர்களின் அறிவு என்பது, தனிமனித நுகர்வு சார்ந்ததாக அதை அடையும் வெறியாக்கியுள்ளது. பொருளைப் பற்றிய அறிவை, பொருள் நுகர்வு பற்றிய அறிவாக குறுக்கி இருக்கின்றது. பொருளை உருவாக்கும் மனிதனை அந்த பொருளுக்கு அடிமையாக்கியது போல், பொருளைப் படைக்கும் அறிவுக்கு பதில் பொருளை நுகர்வது பற்றிய அறிவாகி இருக்கின்றது.

சந்தையும் அதன் விளம்பரமும் எங்கும் எல்லாமாகிவிட்ட நிலையில், மனித நடத்தைகள் செயல்கள் அனைத்தும் இதற்குள் குறுகிவிடுகின்றது. நுகர்வது பற்றியும், பொருள் சார்ந்த நுட்பங்கள் பற்றியும் பேசுவதே அறிவு என்னுமளவுக்கு, சிந்தனை, செயல் அனைத்தும் சந்தைக் கண்ணோட்டமாகி இருக்கின்றது.

இந்தக் குறுகிய எல்லைக்குள்ளேயே மனிதர்கள் வெளிப்படுத்தும் அன்பு, காதல், பாசம், இரக்கம்... என மனிதன் கொண்டிருக்கக் கூடியது எதுவாக இருந்தாலும், அவை நுகர்பொருள் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது. எளிமை இருப்பதில்லை. ஆடம்பரமும், எல்லையற்ற நுகரும் வெறியும், திருப்தியற்றதும் மகிழ்ச்சியற்றதுமான வாழ்க்கை மனித வாழ்வாகின்றது.

மனித வாழ்வு சார்ந்த நுகர்வுகளில் ஏற்படும் அன்றாட மகிழ்ச்சி கூட இருப்பதில்லை. எளிமையைக் கடந்து நுகர்வாகவும் விளம்பரமாகவும் மாறிவிடும் போது, மகிழ்ச்சி இயல்பாகவே இழக்கப்படுகின்றது. நுகர்வும், விளம்பரமும், ஆடம்பரமும் சந்தையுடன் இணைவதால், இதில் திருப்தியை வந்தடைவதற்கு இடமிருப்பதில்லை. அதாவது எளிமையான மகிழ்ச்சிக்கு இடமிருப்பதில்லை.

நுகர்வையும், விளம்பரத்தையும் கொண்ட மனிதப் பண்பாடு மட்டுமே மகிழ்ச்சியைத் தீர்மானிக்கிற விடையமாகும் போது, உண்மையில் வாழ்க்கையே விளம்பரமாகி போலியாகி விடுகின்றது. அனைத்தும் பொருளை முதன்மையாக்கி, சுய நடிப்பாகி விடுகின்றது. போலியாக வாழ்தல் மனித சாரமாகி விடுகின்றது. விளம்பரத்திலும், சினிமாவிலும் நடிக்கும் அதே கற்பனைக் காட்சிகளை வாழ்க்கையாக்கி, வாழ்க்கையே நடிப்பாகி போலியானதாகி விடுகின்றது. தற்பெருமையே மகிழ்ச்சியாக கருதும் அளவுக்கு, மகிழ்ச்சி நடிப்பாகி விடுகின்றது.

தங்கள் ஆடம்பரத்தையும் பெருமையையும் வெளிப்படுத்தவே பொருள் என்னுமளவுக்கு, மனித சிந்தனைகள் செயற்பாடுகள் குறுகி விடுகின்றது. மனிததேவைக்கே பொருட்கள் என்ற உண்மை மறுதளிக்கப்பட்டு, நுகர்வுக்காக பொருள் என்ற திரிபை தனிவுடமையும் அதன் சந்தையும் உருவாக்கி இருக்கின்றது. ஆடம்பரமாக வாழ்தலும், நுகர்வதை பெருமைப்படுத்தி பேசுவதுமே, மனிதனின் உலகக் கண்ணோட்டமாக மாறி இருக்கின்றது. அதாவது சந்தை மற்றும் விளம்பர கண்ணோட்டமே மனிதக் கண்ணோட்டமாகி இருக்கின்றது. யார் அதிகமாக விதவிதமாக நுகர்கின்றனரோ, அதை அடைவதையே மனிதர்களின் பொது இலட்சியமாக கொண்டு செயற்படுவது அறிவாக்கப்படுகின்றது. நுகர்பொருளுக்கு வெளியில் உலகில்லை என்ற கண்ணோட்டம், மனிதனுக்குரிய உலகையே மறுதளித்து சந்தைக்குரிய உலகை வழிபடக் கோருகின்றது.

உழைப்பு மூலமான மனிதக்கூட்டு உணர்வுகள் மூலம் வெளிப்பட்ட மனித உணர்வுகள், பொருளின் தனிவுடமை சார்ந்து தனிமனித உணர்வாக குறுகியிருக்கின்றது. அதாவது தனிமனித உணர்வு கூட்டு உணர்வில் இருந்து வேறுபடுகின்ற போது, அது பொருள் சார்ந்த ஒன்றாக மாறி இருக்கின்றது. தனிவுடமை அமைப்பில் தனிமனித உணர்வு வெளிப்பாடு, பொருளை பரிமாறிக் கொள்ளும் எல்லைக்குள் குறுகி இருக்கின்றது.

காதலை வெளிப்படுத்தப் பொருள், குழந்தைக்கு பாசத்தை வெளிப்படுத்த பொருள்... இப்படி பொருள் பரிமாற்றமே மனித உணர்வாகி உணர்ச்சியாகி வருகின்றது. பொருளைக் கொண்டு அளவிடுமளவுக்கு மனித உணர்ச்சி குறுகி இருக்கின்றது. காதலையும், பாசத்தையும், அன்பையும், துயரத்தையும், பரிவையும், மனிதாபிமானத்தையும் மனிதனின் கூட்டு உணர்வு மூலம் வெளிப்படுத்த முடியாது என்பதே மனித நடத்தையாகவும், பொது அறிவாகவும் வெளிப்படுத்தப்படுகின்றது. தனிவுடமை அமைப்பில் தனிமனிதனை மையப்படுத்தி நிற்பது பொருள் உடமை மட்டுமல்ல, அதன் மீதான நுகர்வுமே. சிந்தனை செயல் அறிவு அனைத்தும், பொருளை மையப்படுத்தி இயங்குகின்றது. ஆக சந்தைக் கலாச்சாரம், மனித கலாச்சாரமாகி இருக்கின்றது. விளம்பர வக்கிரம், நுகர்வு வெறியாகி இருக்கின்றது.

முன்னைய பதிவுகள்

மாற்றத்துக்கு வழி திறக்கிறது - மாக்சியம் 01

இயற்கை பற்றிய மனித அறிவு, சமூகம் பற்றிய அறிவாகியது எப்படி? - மாக்சியம் 02

வாழ்வதற்க்காக உண்மையைத் தேடும் மனிதன்- மாக்சியம் 03

மார்க்சியம் சமூக விஞ்ஞானமானது எதனால்? - மார்க்சியம் - 04

விஞ்ஞானம் என்றால் என்ன?, எங்கிருந்து தோன்றுகிறது?: மார்க்சிய கல்வி -05

அறிவு என்பது என்ன? -மார்க்சிய கல்வி -06

மனித உழைப்புத்தான் அறிவின் சாரம்: மார்க்சிய கல்வி -07

மனித உழைப்புக்கு என்ன நடக்கின்றது என்ற அறிவே மார்க்சியத்தின் சாரம் (மார்க்சியம் 08)

பிறருக்காக உழைத்தலா மனிதசாரம்? (மார்க்சியம் 09)