Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழர் வெறுப்புணர்வில் கட்டமைக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதம்

இஸ்லாமிய பயங்கரவாதமானது, ஏன் தமிழ் கத்தோலிக்கரை இலக்கு வைத்தது? மனிதாபிமான அணுகுமுறை மூலம் போலி இடதுசாரியமும், வலதுசாரிய ஜனநாயக "முற்போக்குவாதமும்", ஏன் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பாதுகாக்க முனைகின்றனர்? இவை வரலாற்று ரீதியான அரசியலாலானது.

1980களில் தோன்றிய இயக்கங்களினதும்;, புலிகளினதும் ஜனநாயக விரோத ஏகாதிபத்திய கைக்கூலி அரசியலென்பது, அதிகாரத்துக்கான மக்கள்விரோத வன்முறையாக மாறியது. தமிழ்மொழி பேசும் மக்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான வன்முறைகளில் ஈடுபட்டது.

குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மை இனத்தை, தனக்கு அடிபணியுமாறு கோரியது. இதற்காக தங்கள் இயக்கங்களில் இருந்த முஸ்லிம் இளைஞர்களைக் கொன்றது. முஸ்லிம் சமூகம் மீதான படுகொலைகளை நடத்தியது. பள்ளிவாசல்களின் புகுந்து கொலைவெறித் தாக்குதலை நடத்;தியது. அந்த மக்களை வாழ்விடங்களில் இருந்து பிடுங்கி எறிந்ததுடன், கொள்ளையிட்டது. இப்படி சமூகம் மீதான புலிப் பாசிசமானது, அதை தமிழ் பாசிசமாக மாற்றி தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. இதன் மூலம் மொழி சார்ந்த தேசம், தேசியத்தை ஓடுக்கி, இனவாதமான புளுக்கத் தொடங்கியது.

மொழி சார்ந்த தேசம், தேசியம் மீதான பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக, தமிழ் மொழித் தேசம், தேசியம் (சில இயக்கங்கள் மலையகம் உள்ளடங்கிய மொழி தேசம், தேசியத்தை முன்வைத்தது) கொண்ட ஜனநாயகக் கூறுகளைக் கொண்டு இருந்தது. இந்த ஜனநாயகக் கூறுகளை அழித்ததுடன், சொந்த இன மக்களையே அடக்கியொடுக்கியதுடன், ஆயிரக்கணக்கில் கொன்றும் குவித்தனர்.

ஆயுதமேந்திய இந்த இயக்கங்கள் அன்னிய நாட்டு கூலிப்படையாக இருந்தது. அவர்கள் வழிகாட்டலே, மக்கள்விரோத அரசியலாகவும், தமிழ் மொழித் தேசம், தேசியத்தையும் அழித்தது. அதற்கு பதில் தமிழ் இனவாதமாகவும், பிற இன மக்கள் மீதான வன்முறையாகவும் மாறியது.

தமிழ் மொழித் தேசம், தேசியத்தைக் கைவிட்டு, அதற்குள் தேசிய இனமாக இருந்த முஸ்லிம் மக்களை ஒடுக்கியதன் மூலம், தமிழ்மொழி பேசும் தேச மக்களாக இருந்தவர்களை தனிமைப்படுத்தியதன் மூலம், பேரினவாத நிழலில் தஞ்சமடைய வைத்தனர். தமிழ் தேச மக்கள் எதிரியாக்கப்பட்டனர்.

இப்படி எதிரியாக்கப்பட்ட மக்களை, பேரினவாதம் முஸ்லிம் தேர்தல் கட்சிகளின் துணையுடன் தமிழின வெறுப்புணர்வு கொண்டவர்களாக மாற்றியது. முஸ்லிம் தேர்தல் கட்சிகளை தமிழ் இன விரோத இஸ்லாமிய தலைமைகளாக உருக்குலையும் வண்ணம், ஒடுக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் இன மக்கள் அடையாளத்தை பிரித்தாண்டது. இந்த பின்னணியில் தமிழ் மக்களை எதிர்க்கின்ற ஆயுதமேந்திய கூலிப்படையை, இஸ்லாமிய அடிப்படைவாத உள்ளடக்கத்தில் உருவாக்கியது. இதற்கு மத்திய கிழக்கில் உருவாகி வந்த இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளின் உதவி கிடைக்குமாறு செய்தது. இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கும், பயங்கரவாதத்துக்கும் நிதி வழங்கி சவூதி போன்ற நாடுகளின் ஆதரவை பெற்றுக் கொண்டு, இஸ்லாமிய அடிப்படை மயமாக்கத்தை ஊக்குவித்தது.

இதன் மூலம் தமிழ் இனவாத ஒடுக்குமுறையால், முஸ்லிம் தேசிய இனம், தேசிய இனமாக வளர்கின்ற சூழலைத் தடுத்;து, இஸ்லாமிய மத அடிப்படைவாதமாக மாற்றி, இலங்கை அரசின் கூலிப்படையாக மாற்றியது.

தமிழ் மக்கள் மேல் வெறுப்புடன் கூடிய இஸ்லாமிய அடிப்படைவாதமாக, புலிக்கு நிகராகவே மக்களை படுகொலை செய்யும் பயங்கரவாதத்திலும் ஈடுபட்டது. ஓப்பீட்டளவில் அரசுக்கு வெளியில், மக்கள் விரோத பயங்கரவாதத்தில் புலிப் பயங்கரவாதம் தான் மனிதகுலத்தை நாசமாக்கி கொண்டு இருந்தது. அது தமிழ் மொழி தேசம், தேசியம் என்ற ஜனநாயகக் கூறுகள் எதையும் விட்டுவைக்கவில்லை. அதேநேரம் அன்றைய இஸ்லாமிய பயங்கரவாதமானது, அரசின் கூலிப்படையாக அரசின் அங்கமாகவே இருந்தது.

முஸ்லிம் மக்கள் மீதான புலிப் பயங்கரவாதத்துக்கு எதிரான எமது ஜனநாயகக் குரலகள்;, முஸ்லிம் மக்களுக்கு சார்பானதாக இருந்தது. இடதுசாரிய கண்ணோட்டத்தில் தலைமை தாங்கியவர்களாய் அன்றும் எதிராய் நின்றவர்கள் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி மட்டும் தான். அதேநேரம் முஸ்லிம் சமூகத்தில் இருந்து பதில் வன்முறையில் ஈடுபட்ட தரப்பை, அரசின் கூலிப்படையாக இனம் காட்டி அம்பலப்படுத்தினோம்;. அதை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துடன் பொருத்தவில்லை.

அதேநேரம் இடதுசாரிய கண்ணோட்டத்திற்கு முரணான தமிழ் வலதுசாரிய பிரிவு முன்வைத்த ஜனநாயகமானது, இலங்கை அரசை ஆதரிக்கின்ற புலியெதிர்ப்பாக பரிணாமம் பெற்றது. இது தமிழின வெறுப்புக் கொண்டதாக, முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கும் கூட ஆதரவு கொடுக்கும் கூறாக வளர்ந்தது.

முஸ்லிம் தேசிய இனமாக, ஒடுக்கப்பட்ட தமிழ் தேசிய கூறுகளுடன் இணைந்து பயணிக்க வேண்டிய இடதுசாரிய அரசியலோ, சிந்தனையோ முஸ்லிம் மக்கள் மத்தியில் தோன்றவில்லை. மாறாக தமிழ் வெறுப்பு கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதக் கூறாகவே, முஸ்லிம் தேர்தல் அரசியலும், இஸ்லாமிய (தமிழ் இலக்கியமல்ல) இலக்கியமும் உருவானது. இந்த கூறுகளும், அரசு ஆதரவு கொண்ட புலியெதிர்ப்பு வலதுசாரியக் கூறும் ஒன்றிணைந்ததன் மூலம், இஸ்லாமிய அடிப்படைவாதமாக, தமிழ் விரோதக் கூறாகவே புளுத்தது. அதற்கே பேரினவாத ஆதரவும் இருந்தது.

இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் கேள்விக்கு அப்பாற்பட்ட, மதச் சுதந்திரமாக மாறியது. தன்னை மூடிய சமூகமாக மாற்றி, தன்னை மதவாதத்தால் போர்த்திக் கொண்டது. ஒரு சில குரல்கள் கூட, நசுக்கப்பட்டன. இஸ்லாமிய "முற்போக்கு" இலக்கியவாதிகள் என்று அறியப்பட்டவர்கள் இந்த அடிப்படைவாத கூறுகளை ஆதரித்தனரே ஒழிய, எதிர்த்து நிற்கவில்லை.

இஸ்லாமிய அடிப்படைவாதம் தமிழ் விரோத வலதுசாரிய உணர்வூடாக கட்டப்பட்டது. அதற்குள் வன்முறை என்பது, தமிழ் விரோத உணர்வு கொண்ட, மத உணர்வாகவே வித்திடப்பட்டது.

2009 புலிகளின் பின்னான 10 வருடத்தில் இஸ்லாமிய தேர்தல் கட்சிகள் கிழக்கு மற்றும் வவுனியா, மன்னாரில், தமிழரை ஒடுக்கும் இஸ்லாமிய அதிகாரத்தை பெற்று இருந்தனர். பேரினவாத ஒடுக்குமுறையை தலைமையேற்ற இஸ்லாமிய தேர்தல் கட்சிகள், ஒடுக்கப்பட்ட தமிழ்தேசியத்தை தம் பங்குக்கு ஒடுக்கும் அதிகாரமாகவும், இஸ்லாமிய அடிப்படைவாதமும் இதே உணர்வு கொண்டதாகவே கட்டியெழுப்பப்பட்டது.

இதன் மூலம் இஸ்லாமிய அடிப்படைவாதம் தமிழ் விரோத மனநிலை கொண்ட பின்னணியில், இஸ்லாமிய பயங்கரவாதம் இயல்பில் தமிழ் விரோதத்துடன் தனது பயங்கரவாத இலக்கை தேர்ந்தெடுத்தது.

அதாவது இஸ்லாமிய பயங்கரவாதம் மத்திய கிழக்கில் மேற்கு ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்டு, அதன் தேவை முடிந்தவுடன் அழிக்கப்பட்ட சூழலில், மேற்குக்கு எதிரான இஸ்லாமிய பயங்கரவாதமாக மாறியது. அது இலங்கையில் அதே கூறுகளுடன் பரிணமித்ததுடன், கூடவே தமிழின வெறுப்பு கொண்டதாகவும் இருந்தது. இந்த அடிப்படையில் இருந்து தான் கத்தோலிக்க வெறுப்பும் கொண்ட, தமிழ் இலக்கை தேர்ந்தெடுத்தது. இதன் மூலம் மேற்குலக மற்றும் தமிழரை குறிவைத்தது.

இலங்கை தமிழ் கத்தோலிக்க மக்கள், தம்மை மதத்தைக் கொண்டு அடையாளப்படுத்துவதில்லை. மாறாக தமிழராக அடையாளப்படுத்தும் முன்னேறிய சமூகம்;. அந்த வகையில் தேசம், தேசியம் என்ற ஜனநாயகக் கூறை பலப்படுத்தும், தமிழராக இருக்கின்றனர். பிற கிறிஸ்துவ பிரிவுகள் பின்தங்கிய மத அடையாளத்தை முன்னிலைப்படுத்துமாற் போல், தங்கள் தேச, தேசிய அடையாளங்களை தமிழ் கத்தோலிக்க மக்கள் சிறுமைப்படுத்துவதில்லை.

கிழக்கில் கத்தோலிக்கம் அல்லாத பிறிதொரு மதப்பிரிவு மீதான தாக்குதல் தற்செயலானதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. கிழக்கில் கத்தோலிக்கப் பிரிவே தாக்குதலுக்குள்ளாக இருந்ததென்றும், பயங்கரவாதி தாக்குதல் நடத்த கத்தோலிக்க ஆலயத்தை நோக்கிச் சென்ற போது பூசை முடிந்து மக்கள் வெளியேறி விட்டதால், கத்தோலிக்கமல்லாத பிறிதொரு கிறிஸ்துவ இலக்கை தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

தமிழ் தேசம், தேசியம் மீதான தாக்குதல் மூலம், தங்கள் மத அடையாளத்தை முன்னிறுத்தி சிதைந்து செல்லக் கோருவதே இஸ்லாமிய பயங்கரவாதத்தின் உள்நாட்டு இலக்கு. யாழ் மையவாத சிந்தனையோ, கொல்லப்பட்ட தேச, தேசிய இன மக்களையிட்டு அக்கறையற்ற தன்மையோடு இருப்பதால், மதரீதியாக கத்தோலிக்க மக்கள் அவர்களால் தனித்துவிடப்பட்டதால் மத அடையாளத்தின் வழி தனித்து சிந்திக்க கோருவதைக் காண்கின்றோம்.

இன்று மத அடிப்படைவாதங்களும், பயங்கரவாதமும் தேசம், தேசியத்தை சிதைக்கும் எண்ணக் கருத்துகளை சமூகத்தில் புகுத்தி வருகின்றது. அதேநேரம் இடதுசாரியமோ ஒடுக்கப்பட்ட தேசம், தேசியத்தை தீண்டதகாத ஒன்றாகவே பார்க்கின்றது. தமிழ் வலதுசாரி "முற்போக்கு" ஜனநாயகம் பேசும் பிரமுகர்கள், தேசம் தேசியத்தை தீண்டத்தகாததாகவே வரையறுக்கின்றது.

இவர்கள் அனைவரும் தற்கொலை தாக்குதலைப் பயங்கரவாதம் என்று கொள்கையளவில் ஏற்றுக் கொண்டாலும், அதை எந்தப் பயங்கரவாதம் என்று சொல்லாத சந்தர்ப்பவாத அரசியலையும், கருத்துகளையும் முன்வைக்கின்றனர். இதன் மூலம் சமூகத்தை மத அடிப்படை வாதத்துக்குள்ளும், அரச பயங்கரவாதத்துக்குள்ளும் தீர்வை காணுமாறு வழிகாட்டுகின்றனர். இதுதான் இன்று நடந்து கொண்டு இருக்கின்றது. இதற்கு எதிராக, நாம் இன்றே செயலாற்றியாக வேண்டும்.