Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"UN LOCK" குறும்படம் மீதான விமர்சனம்

அண்மையில் பாரிசில் "UN LOCK" குறும் படம் காட்சிப்படுத்தப்பட்டது. 13 நிமிடங்கள் கொண்டது இந்தக் குறும் படம். இலங்கை இனவாத யுத்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களைக் கொண்டு, தனக்கான அரசியலையும் - வியாபாரத்தையும் செய்திருக்கின்றது.

சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுவனின் தந்தையை அடிப்படையாகக் கொண்ட கதை. அன்றாட யுத்தச் செய்தியை சைக்கிள் டைனமோ மூலம் கேட்கும் மாணவன், பாடசாலை செல்லும் காட்சியுடன் படம் தொடங்குகின்றது. தந்தைக்கு விடைகொடுத்து பாடசாலை செல்லும் மாணவன், தனது நண்பன் கொல்லப்பட்ட இடத்தில் பழைய நினைவுகளுடன் தன்னை மறந்து புலம்பும் காட்சியும், தந்தையால் மீட்கப்பட்டு அழைத்துச் செல்லும் காட்சியுடன் கதை முடிகின்றது.

பழைய நினைவு தான் கதைப்புலம்;. வழமைபோல் பாடசாலை செல்லும் காட்சி. அவனின் நண்பன் தலைகீழாக இருந்த ஐ.நா (UN) வாகனம் ஒன்றின்  மேல் அமர்ந்திருந்த சூழலில் மையக் கதை தொடங்குகின்றது. ஐ.நா என்றால் என்ன என்று (படத்தின் பெயரில் உள்ள முதல் சொல்) அதற்கு விடையை கண்டுபிடிக்க முடியாத சிறுவன், தானே அதைக் கண்டுபிடிப்பதாக கூறி, இறுதியில் தந்தை அழைத்துச் செல்லும் போது ஐ.நா வாகனத்தை திரும்பிப் பார்த்த காட்சியுடன் கதை முடிகின்றது.

இதற்கு இடையில் 5 சிறுவர்கள் தங்கள் விளையாட்டுக்கு பாவிக்கும் ஆயுதப் பொருட்கள், ஆயுதங்கள் போன்று உருவமைக்கப்பட்ட பொருட்கள், வெவ்வேறு நண்பர் குழுக்களுக்கு இடையில் பண்டமாற்றாக இருக்கும் ஆயுதப்பொருட்கள், அதை பெற்றுக் கொள்ளும் போது இராணுவரீதியான செயல்கள் - அணுகுமுறைகள், விளையாடிக் கொண்டிருக்கும் போது நடந்த யுத்த வன்முறையில் தன் நண்பன் கொல்லப்பட்ட நினைவுக் காட்சி. இப்படி 13 நிமிடங்கள் கொண்ட குறும்படம்.

படத்தின் பெயரான "UN LOCK" மூலம் சொல்லும் அரசியல், (UN-United Nation) ஐ.நா குறிக்க, அது தமிழ் மக்களை கண்டு கொள்ளாததைக் குறிக்க (Lock) என உள்ளடக்கி, ஐ.நாவின் கண்களை திறக்க வைப்பதற்கான முயற்சி. காட்சிகள் இதைத்தான் மையப்படுத்தின. இது தான் படத்தை இயக்கியவர் முன்வைத்த கருத்தும் கூட. இன்னுமொரு பக்கத்தில் ஐ.நா பெயரை விடுத்து நேரடி ஆங்கிலச் சொல்லின் அர்த்தத்தில் பார்த்தால், மூடப்பட்டு இருக்கும் விடையம். இணைந்த சொல்லின் பொருளில் இதை தகர் என்று கூறக்கூடிய பொருளில் விளங்கிக் கொள்ளும் வண்ணம் அமைந்திருக்கின்றது. இந்தப் பெயர் எதைக் குறிக்கின்றது  என்ற கேள்வியின் போது, இதை இயக்கியவர் ஐ.நாவைக் கடந்து இந்தப் பிரச்சனையை தீர்க்க முடியுமா? என்று எதிர்க் கேள்வியைக் கேட்டதன் மூலம் தனது நிலையை தெளிவுபடுத்தி இருந்தார். 

 

இந்த படம் குறித்து கருத்துகள்

1.இந்தக் குறும்படம் புலிக்கு எதிரானது என்கின்றனர். யுத்தம் தான் இந்தக் குழந்தைகளின் நிலைக்கு காரணம் என்பதால், யுத்தத்தை நடத்திய புலிகள் மீதான விமர்சனம் என்கின்றனர். புலிகள் குழந்தைப் போராளிகளை கொண்டிருந்ததற்கு எதிரான படம் என்கின்றனர். இது போல் "புலி எதிர்ப்பாளாராக" புலிகளால் அடையாளப்படுத்தப்பட்ட சோபாசக்தி தந்தையாக இந்த படத்தில் நடித்ததால், இது புலியெதிர்ப்பு படம் என்கின்றனர்.

2.சிறுவர்களின் உளவியலை யுத்தங்கள் எப்படி பாதிக்கின்றது என்பதை காட்டும் படம் என்கின்றனர்.

3.படத்தின் வந்த சிறுவர்கள், அவர்களின் மொழி, காட்சிப் பின்னணி யுத்த சூழலை பிரதிபலிக்கவில்லை. எதார்த்தத்துக்கு புறம்பானது என்கின்றனர்.

4.பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி காலை வாரிவிட்ட படம். படத்தின் பின் சுயபுராணங்களையும், தம்பட்டங்களையம் அரங்கேற்றி அசிங்கப்படுத்தியதாக கூறுகின்றனர்.

இப்படி தங்கள் அரசியல் சிந்தனைக்கு ஏற்பவும், யுத்தம் குறித்த தங்கள் சிந்தனைக்கு ஏற்ப விளக்கங்கள் கொடுக்கின்ற பின்னணியில், 1000 க்கு மேற்பட்டவர்கள் பார்க்க சினிமா தியேட்டரை ஏற்பாடு செய்து, பெருமளவில் மக்கள் திரட்டப்பட்டு இருந்தனர். அதாவது புலிகள் சார்ந்த பல்வேறு அமைப்புகளின் துணையுடன் அரங்கு நிறைந்திருந்தது. இந்த பின்னணியில் புலிகள் சார்ந்த கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

படம் மீதான விமர்சனம்  

1

இந்தக் குறும்படம் கலைப் படைப்புக்குரிய கலையின் முக்கியத்துவம் மறுதளிக்கப்பட்ட பிரச்சாரத்துக்கு முன்னுரிமை கொடுத்ததன் மூலம், கலைத்தன்மையை இழந்து இருக்கின்றது. 2009 முன் புலிகள் இயக்கிய பல படங்களை பிரச்சார நோக்கில் தயாரித்த போது, கலையின் கலைக்குரிய முக்கியத்துவத்துடன் தான் கலையைப் பயன்படுத்தியிருந்தனர். புலிகள் கலைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை கூட, இந்தக் குறும்படம் மறுதளிக்கின்றது.

இதற்குக் காரணம் புலிகள் தயாரித்த படங்களில், மக்களை தங்கள் பின் அணிதிரட்டும் பொது நோக்கமே முதன்மை பெற்றிருந்தது. இன்றைய புலிப் பிரச்சார படங்களின் நோக்கு அதுவல்ல. புலிகளின் பொது நோக்குக்கு மாறாக தங்களை முதன்மைப்படுத்தும் தனிமனித சுயநல நோக்கும், புலிகளைப் பயன்படுத்தி செய்யும் வியாபாரமுமே இதற்கு காரணமாகும்.

இதனால் படத்தின் உள்ளடக்கம் ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்ததாக அல்லாது, எது வியாபாரத்துக்கு உதவுமோ அதற்கு ஏற்ப அதை முதன்மைப்படுத்தி இருக்கின்றது.

2

இந்த வகையில் ஐ.நா மூலம் தீர்வு காண முடியும் என்று கூறுகின்ற அரசியலை மையப்படுத்தி இருக்கின்றது. ஆனால் இலங்கையில் தன்னெழுச்சியாக போராடும் உறவுகள், அரசுக்கு எதிராக போராடி வருவதே எதார்த்தமாக இருக்கின்றது. இந்த போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஒடுக்கும் தரப்புகளைச் சார்ந்திருக்காது, ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்தால், அரசுக்கு எதிரான போராட்டம் மூலமே தீர்வைக் காணமுடியும் என்பதே எதார்த்தம்.

2009 வரை யுத்தத்தை வெல்லவும், புலிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஐ.நாவின் தலையீட்டைக் கொண்டு வரும் கொள்கையையுமே, தங்கள் யுத்த-அரசியல் தந்திரமாக்கினர். பிணத்தைக் காட்டி தங்கள் கொள்கையை நடைமுறைப்படுத்த, பலியெடுத்த அரசுக்கு  தமிழர்களை பலிகொடுத்தனர். கொல்லப்பட்ட குழந்தையைக் காட்டி தமிழர்களை அணிதிரட்டினர்.  மேற்குநாடுகள் முதல் ஐ.நா வரை ஊர்வலம் போனார்கள். இந்தப் புலிகளின் அரசியல் தொடர்ச்சி தான் இந்தக் குறும் படம். சிறுவர்களின் உளவியலைக் கொண்டு, தமிழ் மக்களையும் - ஐ.நாவையும் தம் பின் அணிதிரட்டிவிடும் கனவுகளையே, படம் தனது அரசியலாக்கி இருக்கின்றது.

இலங்கையின் ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி காண வேண்டிய தீர்வுகளை நிராகரிக்கின்ற, தமிழ் மக்களை பல்வேறு வழிகளில் ஒடுக்கும் தமிழ் தரப்புகளின் அரசியல் தான் இது.

ஐ.நா என்பது மேற்குநாடுகளின் சமூக – பொருளாரதர அரசியலை பாதுகாத்து முன்னெடுக்கும், மனித விரோத அமைப்பு. இலங்கையில் மக்களுக்கு எதிரான யுத்தத்தை நடத்திய புலிகள் மற்றும் அரசுக்கு பின்னணியில் இருந்து வழிநடத்திய, பல்வேறு அரசுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பு. இவர்கள் மூலம் தீர்வு என்பது "முயலுக்கு மூன்று கால் தான் உண்டு" என கூறுகின்ற, தமிழ் நவதாராளவாத பன்னாடைகளின் அரசியல்.

இன்று அரசுக்கு எதிராக மனித உணர்வுடன் கூடிய உளவியலுடன் தன்னெழுச்சியாக போராடும் எதார்த்தத்தில் இருந்து இந்தப் படத்தை அணுகினால், இந்தப் படத்தை பார்த்தவர்களிடம் எந்த மனித உணர்வையும் தரமுடியாத வரட்டுத்தனத்தையே காட்சியாக்கி இருக்கின்றது.

இதற்கு மாறாக யுத்தம் தந்த உளவியல் உணர்வுகளும், வாழ்வியல் எதார்த்தமும் புலி கற்பனைக்கு அப்பாற்பட்டது. அவர்களின் நடைமுறையில் இனையாத மேட்டுக்குடி கலைக் கற்பனைகள் மூலம், உண்மையை கலை மூலம் கொண்டு வரமுடியாது.

3.

சிறுவர்களின் "உளவியலை" இந்தப் படம் தனது சுயநலனுக்கும், வியாபாரத்துக்கும், பிரச்சாரத்துக்கும் பயன்படுத்தி இருக்கின்றது. குழந்தைகள், சிறுவர்கள் சார்ந்த யுத்த உளவியலுக்கான தீர்வாக இருக்கக்கூடிய கூட்டுச் சமூக வாழ்வியலையும், சமூக வழிகாட்டுதலையும் இந்தப் படம் முன்வைக்கவில்லை. ஐ.நாவை முன்னிறுத்துகின்றது. ஐ.நாவை குற்றவாளியாக்கி, தலையீட்டைக் கோருகின்றது. உளவியல் பிரச்சனைக்கு இது தீர்வா?

உதாரணத்துக்கு துணையை இழந்த பெண்களின் பாலியல் சார்ந்த உளவியல் பிரச்சனைக்கு தீர்வை ஐ.நா தரமுடியாது. ஆணாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ் இனவாத சமூகத்தால் இதற்கு தீhவு தரமுடியாது. இது போல் குழந்தைகளின் யுத்த உளவியல் சிக்கல்களுக்கும்,  தீர்வு தர முடியாது.

குழந்தை யுத்தத்தில் சிக்காத தனியுலகில் வாழ்வதில்லை. ஒடுக்குமுறைகள், சமூக  நெருக்கடிகள், யுத்தம் என்று எதை எடுத்தாலும், சமூகம் முழுமையாக சந்திக்கின்றது. இதில் சிறுவர் போராளிகள் என்ற பதம், யுத்தத்தின் ஒரு தரப்பிற்கு எதிரான பிரச்சாரமாகும்;. சமூகம் கொண்டிருக்கக் கூடிய அரசியல் உள்ளடக்கத்தையே, குழந்தைகளும் பிரதிபலிக்கின்றனர். சமூகத்தின் ஏற்றத்தாழ்வான ஒடுக்குமுறைகளுக்கு ஏற்ப, அதை மாற்றாது ஒடுக்கப்பட்ட தரப்புகளை உரிமைகளற்ற யுத்தக் கருவிகளாக யுத்த முனையில் பயன்படுத்துகின்றனர். மக்களை ஒடுக்கும் சுரண்டும் வர்க்கத்திற்கு இடையிலான ஆணாதிக்க யுத்தமாக இருக்கும் போது, ஒடுக்கப்பட்ட பெண்களும், குழந்தைகளும் இராணுவ கட்டமைப்பில் இலகுவாக கையாளப்படுகின்ற யுத்த எடுபிடிகளாக, பலியாட்களாக இருக்கின்றனர்.

மூலதனத்தைக் குவிக்கின்ற சுரண்டும் வர்க்கமே, அனைத்துவிதமான யுத்தங்களுக்கும் காரணமாக இருக்கின்றது. சுரண்டும் வர்க்கம் யுத்தத்தையும் - அரசியலையும்  முன்னோக்காகக் கொண்ட கலை என்பதும், குழந்தை குறித்த பார்வை என்பது மனிதத் தன்மை கொண்டதல்ல, வரட்டுத்தனமானதே. ஒடுக்கும் தங்கள் அரசியலுக்கும் தங்கள் வியாபாரத்துக்குமானது.

4

யுத்தம் தான் குழந்தையின் அவலத்துக்கு காரணம் என்பதால் இது புலியெதிர்ப்பு படம் என்பது தவறானது. புலி ஊர்வலங்களில் புலிக் கொடியைப் பிடிக்கக் கூடாது என்று புலிகளின் ஒரு தரப்பு கூறுவதால், அவர்கள் புலிக்கு எதிரானவர்கள் என மறுதரப்பு கூறுவது போன்றது.

தமிழ் மக்களை ஒடுக்கும் புலி அரசியலை ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து விமர்சிக்காத வரை, புலிக்குள்ளான மாறுபட்ட கருத்தை புலிக்கு எதிரானதாக கூறுவது தவறானது. புலியின் ஒரு தரப்பு, மறு தரப்புப் புலிக்கு எதிரானதாக கூறுகின்ற புலி அரசியலை கொண்டு அளக்கின்ற அளவீடு. இந்த அளவீடு புலியைச் சொல்லி வியாபாரம் செய்யும் வெவ்வேறு தரப்புகளின் இருப்பு சார்ந்தே ஒழிய, ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்தல்ல.

இரண்டாவது "புலி எதிர்பாளனாகவும் - துரோகியாகவும்'  புலிகளால் அடையாளப்படுத்தப்பட்ட சோபாசக்தி நடித்தால் புலியெதிர்ப்பு படம் என்பது, புலியின் ஒரு தரப்புக்கு எதிரான மறுதரப்பு புலிகளின் விமர்சனமே ஒழிய, ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்தல்ல. குறிப்பாக மக்களுக்கு எதிரான நவதாராளவாத முதலாளித்துவத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் நோக்கில் இருந்து, இவை முன்வைக்கப்பட்டவையல்ல.

5.

எதிர்பார்ப்பை காலை வாரியது என்பது உண்மை. பொருள் பற்றி மிகையான விளம்பரங்கள் மூலம் விற்கும் நவதாராளவாதத்தை ஆதரிக்கும் புலி வியாபாரிகளின் புலி வியாபாரம் மூலம், பெருந்தொகை மக்களை கொண்டு வந்திருந்தனர். சோபாசக்தியை இந்தப் படத்தில் நடிக்க கொண்டு வந்ததும், இந்த வியாபார உத்திதான். இந்தப் படத்தின் மூலம் ஏமாற்றப்பட்ட மக்கள், இன்னுமொரு கலை முயற்சிக்கு ஆதரிக்க முடியாதளவுக்கு வெறுமையை, இந்த படம் மூலம் உருவாக்கி இருக்கின்றனர்.

முடிவாக

ஒடுக்கப்பட்ட மக்களை சாராது ஒடுக்கும் தரப்பு சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட கலையென்பது, மக்களின் எதார்த்த உண்மைகளுடன் சங்கமிப்பதில்லை என்பதே உண்மை. அதையே இந்தப் படம் நிறுவி இருக்கின்றது.