Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தேர்தல் "ஜனநாயகம்" தனக்கான சவக்குழியை தானே வெட்டுகின்றது

கட்சிகள் முதல் தனிநபர்கள் வரை விலை பேசப்;படுதல் என்பது, இலங்கைக்கு மட்டுமான விதியல்ல. "ஜனநாயகம்" என்பது "பெரும்பான்மை"யை நிறுவுவதே என்ற பொருளாகிவிட்ட பின், அதை எப்படியும் பெற்றாலும் சரி என்பதே "ஜனநாயகமாகி" விட்டது. இங்கு கொள்கை, கோட்பாடு, அறம்… எதுவும், பெரும்பான்மை ஜனநாயகத்திற்கு அவசியமற்றது. தனிநபரின் நடத்தைக்கு என்று எந்த விலக்கும் கிடையாது.

தேசிய முதலாளித்துவத்தை முன்னிறுத்தி உருவான பாராளுமன்றம் சாக்கடையாக, கள்ளர் குகையாக, பன்றித் தொழுவமாக, பிரபுக்களின் அடிமைமடமாக இருந்த நிலைமையானது, நவதாராளவாத முதலாளித்துவத்தில் பாசிசத் தன்மை கொண்டதாக - தனக்குதானே புதைகுழியை தோண்டுகின்ற அளவுக்கு முதிர்ந்து வருகின்றது. ஜனநாயகம் என்பது, தனக்கான சொந்த சவக்குழியாக மாறி இருக்கின்றது. ஆக

1. இன்று ஆட்சி பிடிக்க மக்கள் கொள்கை அவசியமில்லை. அதிகாரத்தை பெறுவதற்கான பெரும்பான்மை உறுப்பினர்கள் தான் தேவை. மக்களை தமக்கு வாக்களிக்க வைக்க இனவாதம், மதவாதம், சாதிவாதம், நிறவாதம்.., போதும். இதுவே இன்று கட்சிகளின் கொள்கையாகிவிட்டது. இனம், மதம், சாதி, நிறத்தைச் சொல்லி வென்றாலும், அதன் மூலம் மக்களுக்கு எதையும் கொடுக்க முடியாது. மாறாக இனம், மதம், சாதி, நிறத்தைக் கொண்டு ஓடுக்குவதை பார்த்து மகிழ்ச்சி அடையக் கோருவதுடன், தங்கள் அதிகாரப் பலம் மூலம் தாம் அல்லாத மக்களை ஒடுக்கி சூறையாடக் கோருவதை மட்டுமே தான் முன்வைக்க முடிகின்றது. இதுதான் இன்றைய தேர்தல் முறையாகிவிட்டது.

 

2.அதிகாரத்தைப் பெறுவதும், அதன் மூலம் பிழைத்துக் கொள்வதே கட்சிகளினதும் -தனிநபர்களினதும் கொள்கை. தேர்தலில் வென்றவர்களை வாங்குவதன் மூலம் பெரும்பான்மை என்பதே, நவதாராளவாத ஆட்சி முறையாகிவிடுகின்றது. அதாவது தனித் திறமையை விலைக்கு வாங்கும் மூலதனம் போல், வென்றவரை விலைக்கு வாங்கி பெரும்பான்மை ஆட்சி என்பதே அரசியலாகின்றது.

3.பணத்துக்கும், இனவாதத்துக்கும், சாதியவாதத்துக்கும், நிறவாதத்துக்கும், மதவாதத்துக்கும் பின், வாக்களித்த மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய அவசியம் வென்றவருக்கு கிடையாது. வென்றவர்கள் தங்கள் பிழைப்புக்கு அரசியலை செய்கின்ற மானிட விரோத பொறுக்கியாக இருக்கவே, அரசியலைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதற்கு தான் வாக்களிக்க  கோருகின்றனர்.

இன்றைய தேர்தல் ஜனநாயகம் மூலம் யார் வென்றாலும், நவதாராளவாத முறைமையில் சீர்திருத்தத்தைக் கூட கொண்டு வரமுடியாது. உலக மூலதனத்தின் பொது நலனுக்கு முரணாக அரசியல் அதிகாரத்தை முன்நகர்த்த முடியாது. மக்கள் நலன் கொள்கைகளைக் கொண்டு - தேர்தல் மூலம் மாற்றம் என்பது, இன்றைய நவதாராளவாத உலக ஒழுங்கில் சாத்தியமில்லை.

 

வர்க்க அதிகாரத்தில் சீர்த்திருத்தத்துக்கு கூட இடமில்லை. இது முதலாளித்துவ பாராளுமன்ற தேர்தல் ஜனநாயகத்தின் உள்ளார்ந்த கூறாகவும் – விதியாகவும் இருக்கின்றது. கிட்லர் ஆட்சிக்கு வந்ததும் இந்த பாராளுமன்ற தேர்தல் முறை மூலம் தான். அமெரிக்கா, பிரேசில், பிலிப்பைன்ஸ், இந்தியா எங்கும், மக்கள் விரோத வலதுசாரிகள் ஆட்சிக்கு வந்ததும், வருவதும் இந்த தேர்தல் முறை மூலம் தான். முதலாளித்துவத்தில் மாற்றமின்மையே விதியாக, பாசிசம் மட்டும் சாத்தியம் என்பது பொது விதியாகின்றது.

ஓவ்வொரு நாட்டிலும் இருக்கும் வலதுக்கு எதிரான தரப்பு ("இடதுகள்") தேர்தலில் வெற்றி பெற்றால் கூட, நவதாராளவதத்தை தீவிரமாக முன்னெடுப்பது மட்டும் தான் அவர்கள் முன் இருக்கும் தெரிவாக இருக்கின்றது. தேர்தல் மூலம் போலி "இடதுசாரியம்" மக்கள் முன் அம்பலமாவதும், பாசிசமாகும் வலதுசாரியம் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாகவும் மாறுகின்றது. வலதுசாரியம் மட்டும் தான், பாசிசம் மூலம் பிற மக்களுக்கு எதிரான மாற்றத்தை முன்வைக்க முடிகின்றது.

இது இன - மத – நிற – சாதி – பால் வாதங்களை முன்வைத்து, ஒரு பகுதி மக்களை ஓடுக்குவதன் மூலம், அதில் கிடைக்கும் லாபங்களை பகிர்ந்து கொள்ளக் கோருவதும், தன் சொந்த நாட்டு முதலாளிகளை உலகத்தை கொள்கையடிக்க உதவுவதன் மூலம் தனது நாட்டுக்கு வேலைவாய்ப்பு என்பதே வலதுசாரிய பாசிசக் கொள்கைகளாக இருக்கின்றது.  தேர்தல் ஜனநாயக அமைப்பு முறையே, மக்களின் ஜனநாயகத்துக்கு முரணாக நவதாராளவாத அமைப்பில் பாசிசமாக மாறி இருக்கின்றது. உலகமயமாதல் - நவதாராளவாதம் தனக்கு தானே புதைகுழியை தோண்டுகின்ற என்பதே இதன் உள்ளார்ந்த விதி.