Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

உண்மைகளை ஒத்துக்கொள்ளாமல் எம்மால் உரிமைகளை வென்றெடுக்க முடியாது

இலங்கையில் பெரும்பான்மை இனத்தினராகிய சிங்கள மக்களுக்கும் சிறுபான்மை இனத்தினரான தமிழ் மக்களுக்கும் இடையில் பிரச்சனை என்று கூறிக் கொண்டு இலங்கையின் அரசியல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அரசியல் கட்சித் தலைமைகளும் அவர்களது பின்னணி சக்திகளும் தங்களின் ஒரே நோக்கமான பொருளாதாரச் சுரண்டல்களை (பணம் குவிப்பதை) ஒழுங்காக நடைமுறைப்படுத்தி வருகின்றனர். எதிர்காலத்திலும் அதனைத் தொடர்வதற்கான பாதையில்தான் இன்று நாட்டின் அரசியல் முன்னெடுப்புகள் காணப்படுகின்றன.

இந்த உண்மைகளைச் சிங்கள மக்கள் உணர்ந்து கொண்டு இலங்கையில் ஒரு நீதி நியாயமுள்ள - சகலருக்கும் சம வாய்ப்புக்கள் வழங்கும் ஒரு சமூக - அரசியல் ஒழுங்குக்கான போராட்ட நடவடிக்கைகளில் நாளும் பொழுதும் ஈடுபட்டுள்ளனர். இப் போராட்டங்களை இன-மத-பால்-பிராந்திய பாகுபாடுகளைக் கடந்து "எல்லோரும் இந்நாட்டு மக்களே" என்ற உணர்வுடனும் - உறுதிப்பாடுடனும் - நம்பிக்கையுடனும் நாடு பூராவும் முன்னெடுத்து வருகின்றனர்.

இன்றைய புதிய உலகப் பொருளாதார ஒழுங்கின் பிரகாரம் இலங்கை மக்கள் இனிமேல் அனுபவிக்கப் போகும் துன்பங்கள் துயரங்கள் பற்றிய விபரங்களை தற்போதைய வரவு-செலவுத் திட்டம் வெளிப்படுத்தி நிற்கிறது. இத் திட்டம் சிங்கள-தமிழ் மக்கள் என்றோ அல்லது வடக்குத் தெற்கு என்றோ பாகுபடுத்தாமல் கல்வியில் இருந்து தொடங்கி அனைத்துத் தொழில் துறைகளையும் இலங்கையின் சகல இயற்கை வளங்களையும் அந்நிய நாட்டவருக்குக் குத்தகைக்கு விட்டு நாட்டு மக்களை நவீன அடிமைகளாக ஆக்குவதற்காக தயாரிக்கப்பட்ட திட்டமாகும்.

இவற்றை முன்னிறுத்தி தென்னிலங்கையில் மக்கள் போராடுகிறார்கள். அதன் ஊடாக மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்ச்சியை - அரசியல் அக்;கறையை உருவாக்கி அதன் ஊடாக மக்களின் ஜனநாயக வலிமையை வளர்த்தெடுக்கப் பாடுபடுகிறார்கள்.

"நன்கு படித்தவர்களுக்கான பொருளாதாரம்" வட இலங்கை மக்களுக்கு உவப்பானதாக இருக்கும். ஏனெனில் கல்வியில் சிறந்தவர்கள் என்று பெருமைப்படுபவர்கள் நாம். ஆனால் இந்தக் கல்வி வட பகுதிக்கு அல்லது வடக்கில் வாழும் மக்களுக்கு இதுவரை என்ன முன்னேற்றத்தைப் பெற்றுக் கொள்ள பயன்பட்டுள்ளது? எவ்வளவோ பேர் படித்துப் பட்டங்கள் பல பெற்று பாரெல்லாம் பரந்திருந்தும் எம்மால் எதனைச் சாதிக்க முடிந்தது?

எமது படிப்பு நல்லவர்களைத் துரோகியாக்கியது. பொய்யை உண்மையாக்கியது. அநியாயங்களை நியாயப்படுத்தியது. மக்களை மௌனப்படுத்தியது. சிங்கள இனவாதம் அழித்த தமிழர்களைக் புள்ளி விபரக் கணக்கில் போட்ட படித்தவர்களாகிய நாம் தமிழ் இனவாதத்தால் அழிந்த தமிழ் மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை. பிணங்களைக் கணக்குப் பார்த்து பணத்தை வாரி வாரி வழங்கிய கல்விமான்கள் நாம். குடி நீரில் பாகுபாட்டைக் கண்டு பிடித்த விஞ்ஞானிகளின் பரம்பரையினர் நாங்கள். இன்று வட பகுதியில் மாசடைந்த குடிநீர் மக்களுக்குத் தரும் நோய்கள் பற்றிய அக்கறை கூட இல்லாத படித்த சமூகத்தினர் நாம்.

ஐ.நா.சபை முன்றலில் எமது கொடியும் பறக்க வேண்டும் எனக் கனவு கண்ட எமது புத்திசாலிகள் இன்று யாழ் மாநகர சபைக் குப்பை கூளங்களை அகற்றுவதற்குக் கூட வழி தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். எமது மக்கள் சுகாதாரச் சீர்கேட்டினால் செத்து மடிந்து கொண்டிருக்க எம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகர-மாகாண-நாடாளுமன்ற பிரதிநிதிகள் அரசாங்க சலுகைகளுடன் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடுகிறார்கள். அதற்கு நாமும் ஆமாம் போட்டபடியே போய்க் கொண்டிருக்கிறோம்.

இந்த "ஊர் பார்த்த உண்மைகளை" மறந்துவிட்டு அல்லது மறைத்துக் கொண்டு அல்லது மறுத்துக் கொண்டு நீதி நியாயமான போராட்டத்தில் வெற்றி காணமுடியாது. சக குடிமகனை-குடிமகளை வெறுத்தபடி - அவர்களை ஏறி மிதித்த படி நின்று கொண்டு மக்களுக்கான சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்க முடியாது. நாம் நமக்குள்ளே - நாம் வாழும் சுற்றாடலுக்குள்ளேயே சக மனிதனுக்கான சுதந்திரத்தை மறுத்துக் கொண்டு கோரும் "சமஷ்டி"யின் அர்த்தம் "நாமே நமது மக்களை அடக்கி ஆள்வதற்கான அரியாசனம் தா" என்பதாகும். அதன் கீழ் வாழும் மக்களுக்கு "சரியாசனம்" மட்டுமல்ல "சம உரிமையும்" கிடைக்காது என்பதற்கான உத்தரவாதம் ஆகும்.

இன்றுவரை இலங்கை அரசாங்கத்தில் தமிழ்-முஸ்லீம்-மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர்கள் பலர் பதவியில் இருந்துள்ளனர். இருக்கின்றனர். எதிர்க் கட்சித் தலைவர்களாகவும் இருந்துள்ளனர். இருக்கின்றனர். இவர்களில் ஒருவர் நாளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக வந்தாலும் கூட இலங்கையின் இனவாத அரசியல் மாறாது. இனவாத அத்திவாரத்தின் மேல் உருவாக்கப்பட்ட "அரசும்" (State) அந்த "அரசு" கடைப்பிடித்து வரும் கல்வித் திட்டத்தில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் எழுதி வைத்துள்ள "அரசியல் சட்டம்" (Constitution) இரண்டும் சேர்ந்து இனக்குரோத அரசியல் ஆட்சிமுறையையே உற்பத்தி செய்யும்.

பாலர் பாடசாலை முதல் பாடப் புத்தகத்தில் சின்ன வயதிலேயே "சிங்களவர்-தமிழர்-சோனகர்" என்பது படம் போட்டுக் காட்டப்பட்டு மக்களின் சிந்தனையில் வேறுபாடு விதைக்கப்படுகிறது. பின்னர் அது ஊட்டி வளர்க்கப்படுகிறது. அது ஆளும் மேலாதிக்க மேட்டுக் குடிகளால் அரசியல் மூலதனமாக்கப்படுகிறது. இந்தப் பின்னணியிலேயே இன்றைய "நல்லாட்சி அரசும்" தேசியவாதிகளின் "இணக்க அரசாங்கமும்" செயற்படுகிறது.

கடந்த காலங்களில் இனக் குரோதங்களை-வெறுப்பை-கோபத்தை-பழிக்குப் பழியை கொழுந்து விட்டு எரியச் செய்யக் கூடிய சம்பவங்கள் தென்னிலங்கையில் இடம் பெற்றிருந்த போதும் இது வரை சாதாரண மக்கள் எவராவது "வடக்கிலிருந்து வருவோர் இங்கு காணி வீடு வாங்குகிறார்கள்-கம்பெனி திறக்கிறார்கள்-கலாச்சாரத்தைப் பரப்புகிறார்கள்" எனப் புகார் கொடுத்ததாக வரலாறு இல்லை. ஆனால் வடக்கில் வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லாத காரணத்தினால் தெற்கிலிருந்து எவரையாவது வருவித்தால் "இவனை ஏன் இங்கை வேலைக்கு கொண்டு வந்தனீ" என்று முறைக்கும் தமிழ்ப் பண்பாடுதான் இன்னும் நிலவுகிறது.

"தேசியம் என்பது அடுத்தவரை வெறுப்பது - தேசப்பற்று என்பது நம்மவரை நேசிப்பது" இந்த இரண்டும் எம்மிடம் இல்லாதபடியால்தான் நாம் இன்று இந்த நிலைக்கு வந்து சேர்ந்துள்ளோம். இந்த உண்மையை தெற்கு மக்கள் அவர்கள் பெற்ற அழிவுகளுக்கூடாகப் புரிந்து கொண்டுள்ளனர். அந்தப் புரிதலை இலங்கைக் குடிமக்கள் அனைவருடனும் பரிமாறிப் பங்கேற்கும் நடவடிக்கைகளை நாடு பூரா செயற்படுத்தி வருகின்றனர்.

இந் நடவடிக்கைகளில் முக்கியமானது இலங்கையர்களின் சம உரிமைக்கான போராட்டமாகும். இன்றைய இலங்கையின் ஜனநாயக அரசியல் நடைமுறைகள் ஊடாக இந்நாட்டின் குடிமக்களான தமிழ்-முஸ்லீம்-மலையக மக்களுக்கு நீதி - நியாயம் - உரிமை என்பது கிடைப்பதற்கான வாய்ப்பு அறவே கிடையாது. இலங்கையின் இன்றைய எந்த ஆட்சியாளர்களோ அல்லது இனவாத அரசியல் கட்சிகளோ அதற்குத் தயாராகவும் இல்லை. தமிழ்-முஸ்லீம்-மலையக மக்களும் சிங்கள மக்களும் இடைத் தரகர்கள்-நடுநிலையாளர்கள்-குத்தகைக்காரர்கள்-தவிச்ச முயலடிப்பவர்கள் எவரையும் இடையில் நிறுத்தாமல் நேரடியாக சந்தித்து உரையாடுவதன் ஊடாகவே தங்கள் உரிமைகளை நிலைநிறுத்த முடியும்.

அதே வேளை தமிழர்களாகிய நாமோ அது பற்றிய பார்வையோ-கரிசனையோ-கருத்துப் பரிமாறல்களோ எதுவுமின்றி "நாடு எப்படிப் போனாலும் நமக்கென்ன கெட்டது" என இருந்து கொண்டு அதிகாரக் கதிரைகளுக்காக 68 வருடங்களாகக் தொடர்ந்து "சமஷ்டி"யைத் தூக்கிப் பிடித்தபடி ""காவடி" ஆடிக் கொண்டிருக்கிறோம். வருடா வருடம் நாம் நடாத்தும் "தேர்த் திருவிழா" போன்று காலத்திற்கு காலம் "தேர்தல் திருவிழா" வரும் போது புதுப் புது அலங்காரங்களுடனும் ஆடல் பாடல்களுடனும் ஊர்வலங்கள் போட்டு மக்களைச் சாகடித்துக் கொண்டிருக்கிறோம்.

2009லிருந்து இன்று வரை இடம் பெற்று வரும் சகல நடவடிக்கைளும் "இனச் சமன்பாடு" என்னும் வகுப்பாய்வின் அடிப்படையில் எமக்கு என்றைக்குமே சம உரிமை கிடைக்காது என்பதனை மிகத் தெளிவாகப் புலப்படுத்தி நிற்கின்றன. மாறாக இலங்கை மக்களின் "இணைவாக்கம்" ஒன்றுதான் இந்த நாட்டு மக்களுக்கு அவர்களுடைய சுயமான சுதந்திர வாழ்வுக்கு உத்தரவாதம் தரக்கூடிய (இலங்கையர்களுக்கான) ஒரு அரசியல் யாப்பை (Constitution) -அதன் அடிப்படையில் கட்டமைக்கப்பட் ஒரு அரசை (State) - அதன் வரையறைக்குள் இயங்கும் ஒரு அரசாங்கத்தை (Government) ஏற்படுத்தித் தரும் என்பதுதான் இன்றைய நிதர்சனமாகும்.

இந்த உண்மையைத் தெரிந்து கொண்டும் நாம் எமது சுயநலங்களுக்காக அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து கடந்த காலங்கள் போல் செயற்பட்டடோமானால் தொடர்ந்தும் இரண்டாந்தரப் பிரஜைகளாக இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உழன்று கொண்டேயிருப்போம் என்பது நிச்சயம்.