Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அடிப்படைவாதத்தையும், ஆணாதிக்கத்தையும் தக்கவைக்கவே புர்கா தடை

இலங்கையில் அரசு பாதுகாப்பு காரணமாக, முகத்தை மூடும் உடைகளுக்கு தடை விதித்திருப்பதாக அறிவித்து இருக்கின்றது. இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. அரசு அனைத்து ஆணாதிக்க அடையாளங்களையும், மத அடிப்படைவாத அடையாளங்களையும் தடைசெய்யவில்லை.

மேற்கில் புர்கா தடை செய்யப்பட்ட போது, அது பெண் மீதான ஒடுக்குமுறையாக முன்னிறுத்தியே அதைத் தடை செய்தது. மேற்கில் தடைக்கு உள்நோக்கம் இருந்தாலும், பெண் விடுதலைக்கான சமூகக் கூறாக இருந்தது. பெண் விடுதலை நோக்கில் அதை ஆதரிக்க வேண்டியும் இருந்தது. பெண் சுதந்திரத்தில் முன்னேறிய மேற்கு சமூகத்தில், புர்கா உடை என்பது மனித சமத்துவத்தில் முன்னேறிய சமூகத்தை கீழ் இழுத்து வீழ்த்தும் அசிங்கமாக இருந்தது.

பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான சட்டங்களை, ஆணாதிக்க அரசமைப்பிடம் கோருவது என்பது பெண்ணியத்தின் கூறாகவும், அதுவே சமூகத்தன்மை கொண்டதாகவும் இருந்தது. புர்கா தடை பெண்ணிய நோக்கில் கோரப்பட்டது. ஆனால் இந்த அடிப்படையில் இலங்கை அரசு தடை செய்யவில்லை. இருந்த போதும் பெண்ணியல் கூறாக, அதை வளர்த்தெடுக்கும் கடமை, தொடாந்து சமூகத்திடமே இருக்கின்றது.

இலங்கையில் இந்தத் தடை பெண் ஒடுக்குமுறைக்கு எதிராகவோ, அடிப்படைவாத இஸ்லாமிய உள்ளடக்கத்துக்கு எதிராகவோவல்ல. அதாவது ஆணாதிக்கத்துக்கோ, மத அடிப்படைவாதத்துக்கு எதிராகவோ அல்ல, இந்தத் தடை. இதை விளங்கிக் கொள்வது அவசியம்.

இதன் பொருள் அரசு மத அடிப்படைவாதத்தையும், ஆணாதிக்கத்தையும் பாதுகாக்கின்ற அரசாக இருந்தபடி, பயங்கரவாத நபர்களை இனம் காணவே இந்தத் தடை என்கின்றது. இதன் மூலம் அரசு இஸ்லாம் அல்லாத பிற மத அடிப்படைவாதங்களையும், ஆணாதிக்க சக்திகளின் ஆதரவை மறைமுகமாக தன் பின் திரட்டிக் கொள்கின்றது. அதேநேரம் இஸ்லாமிய அடிப்படைவாத - ஆணாதிக்க ஆதரவையும் தன் பக்கத்தில் தக்கவைத்திருக்கின்றது.

முகத்தை மூடி இருண்ட சாக்கடைக்குள் மூடிய ஒரு சமூகமாக தன்னை குறுக்கிக் கொண்ட சமூகம், மீள விழிப்படைந்த சுதந்திரமான சமூகமாக மாறக் கூடாது. மாறாக நாட்டின் பாதுகாப்புக்;காக முகத்தைக் காட்டுங்கள், மற்றப்படி நீங்கள் ஆணாதிக்க மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத அடிமையாக வாழ்வதை ஏற்றுக்கொள்ளுங்கள். இது அரசின் விளக்கம்.

அரசு இதைக் கூற முன்பே, பயங்கரவாத வன்முறையைத் தொடர்ந்து, முகத்தை மறைப்பதை தவிருங்கள் என்ற உபதேசம் இஸ்லாமிய ஆணாதிக்க சமூகத்தில் இருந்து வெளிவந்தது. இதேபோல் ஆணாதிக்க இஸ்லாமிய இலக்கியவாதிகளும் இந்த வில்லுப்பாட்டையே, தமிழ் இலக்கியவாதிகளுடன் கூடி, கும்மி அடித்துக் கொண்டதை காண முடியும்.

ஒரு பெண் எதை, எப்படி, ஏன் அணிய வேண்டும் என்பன அனைத்தையும் ஆணாதிக்க, மத மற்றும் அதிகார அமைப்புமுறை தீர்மானிக்கின்றது. இதைத்தான் அரசு சட்டபூர்வமாக்கி, அறிவித்திருக்கின்றது.

ஆண் தான் தீர்மானிக்க முடியும், பெண் அல்ல. இதைத்தான் பல முகங்களில் பலவிதமாக கூறுகின்றனர். பெண் என்பவள் ஆணின் உடமை. அவன் விரும்பியவாறு எதையும் செய்யலாம். இதை மீறக் கூடாது. பயங்கரவாதத்தின் பின் ஆணாதிக்கத்தின் அதிகாரத்தைப் பாதுகாக்க எது தேவையோ, அதை முன்வைக்கின்றனர்.

இங்கு ஆணோ, ஆணாதிக்கமோ இதைத் தீர்மானிக்க முடியாது, பெண் தீர்மானிக்கும் உரிமை என்பது, தனிப்பட்ட ஆணிடம் இருந்தும், நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க அமைப்பின் பொது நெருக்கடியில் இருந்துமான சுதந்திரத்தை முன்வைக்கின்றது. இது சுதந்திரமான ஆணாதிக்க நுகர்வு சந்தைக் கலாச்சாரத்தில் இருந்து, பெண்ணை விடுவிப்பதில்லை.

அதாவது ஆணாதிக்க அமைப்பில் பெண் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை மட்டும் வழங்குகின்றது என்பதை விளங்கிக் கொண்டுதான், ஆணாதிக்க நுகர்வாக்கத்திற்கு எதிராக பெண் போராட வேண்டியளாக இருக்கின்றாள்.

அதாவது அடிப்படைவாத ஆணாதிக்க மதம் மற்றும் நிலப்பிரபுத்துவ உடைக்கு எதிராக, ஆணாதிக்க நுகர்வாக்கத்துக்கு அமைவான நவதாராளவாத உடைக்கு எதிராக, பெண் போராட வேண்டியவளாக இருக்கின்றாள்.

பல்வேறு சமூகத்துடன் கூடிவாமும் மனித கலாச்சாரத்தையும், இயற்கையின் சூழலுக்கு அமைவானதும், தன் உழைப்புக்கேற்ற இலகுவான உடைகளையும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் தான், பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் பொருந்தும்;.