Wed06072023

Last updateSun, 19 Apr 2020 8am

சமூக அசைவியக்கம் எதுகொண்டு நிகழ்கின்றது

பன்நெடுங்காலத்திற்கு முந்தைய மக்கள் உலகத்தின் தோற்றுவாய்கள், அதன் கட்டமைப்பு, அந்த உலகத்தில் மனிதன் வகித்த இடம் ஆகியவற்றைப்பற்றிச் சிந்தித்தபொழுது, அதன் சிந்தனைப் பரிணாமமாக தத்துவஞானம் தோன்றியது.

தத்துவஞானத்தின் அடிப்படையான கேள்வி இரண்டு அம்சங்களில் இருந்து ஆராயப்பட்டது. உலகில் முதலில் தோன்றியது பருப்பொருளா, உணர்வா என்ற கேள்வி இதில் ஓர் அடிப்படை அம்சமாகும். உலகம் அறியப்படக் கூடியதா? மனிதன் இயற்கையின் ரகசியங்களுக்குள் ஊடுருவிச்சென்று அதன் விதிகளைக் கண்டுபிடிக்க முடியுமா என்ற கேள்விக்கு,… "உலகம் அறியப்படக் கூடியதே" என தத்துவஞானிகள் வலியுறுத்தினார்கள். ஆனால் இவ்வுலகு அறியப்படக்கூடிய ஒன்றல்ல என வாதிட்டவர்களும் இருந்தனர். இவர்களை இருவகை கொண்டு அன்றைய மக்களின் தத்துவஞானம் அதை உலகிற்கு சாட்சியமாக்கிற்று.

உலகம் அறியப்படக் கூடியதே என்பவர்களை பொருள்முதல்வாதிகளாகவும், அறியப்படக்கூடியதல்ல என்பவர்களை கருத்துமுதல்வாதிகளாகவும் அன்றைய தத்துவஞானம் தரம் பிரித்தது காட்டிற்று.

இயற்கை தோன்றுவதற்கு முன்பே மெய்ப்பொருள் (பகுத்தறிவு, ஆன்மா, இதரவை) இருக்கின்றது. உண்மையில் அதைப் படைத்ததும் அதுவே என கருத்துமுதல்வாதிகள் கருதினர். உலகம் தனிநபருடைய உணர்வுக்கு அப்பால் எங்கோ இருக்கின்ற ஏதோ ஒருவிதமான சர்வப்பொது அறிவின் விளைவு எனவும் கருதினர்.

மாறாக பொருள்முதல்வாதம் வாழ்வு நிலைக்கும், சிந்தனைக்கும், இடையேயுள்ள உறவு, மற்றும் உலகை அறிதல் பற்றிய கேள்வியை தன் அடிப்படைக் கேளவியாக்கியது. அத்துடன் சுற்றியுள்ள உலகின் வளர்ச்சி, விதிகளின் தன்மை அதை அறிகின்ற வழிகள், அனைத்தையும் அது தன்னகத்தே கொண்டிருந்தது.

சமூக விஞ்ஞானத்தின் நடைமுறை சார்ந்து, கருத்துமுதல்வாதம் நோக்கி பல கேள்விகள் கேட்டால் அதற்கு பதில் நழுவியோட்டமாகவே இருந்தது, இருக்கின்றது. உணர்வு, மெய்ப்பொருள், அல்லது அதை வலியுறுத்தும் கருத்து முதன்மையானது என்றால், நிலவுகின்ற சமூக அமைப்பு மாற்றப்பட முடியாத மாறா நிலை கொண்டதா? மனிதகுல வரலாற்றில் சமூக அசைவியக்கம் நடைபெறவில்லையா?

நடைபெற்றுத்தான் இருக்கின்றது. இவ் அசைவியக்க மாற்றங்கள் எதுகொண்டு எப்படி நிகழ்ந்தன?

மனிதகுல வரலாறு வர்க்கப்போரின் வரலாறு!

மனித சமூகம் எப்போ வர்க்கங்களாகப் பிளவு பட்டதோ, அப்பவே அது வர்க்கப்போராட்டத்திற்கு ஊடாக தன் அசைவியக்கததை ஆரமப்பித்துள்ளது. "சமுதாய மாற்றங்கள் பிரதானமாக சமுதாயத்தில் காணும் அகமுரண்பாடுகளின் வளர்ச்சியால் அதாவது, உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடு, வர்க்கங்களுக்கு இடையிலான முரண்பாடு, பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான முரணபாடு, ஆகியவற்றின் வளர்ச்சியால் ஏற்படுகின்றன.

இந்த முரண்பாடுகளின் வளர்ச்சிதான் சமுதாயத்தை முன்னேறச் செய்கின்றன. பழைய சமுதாயத்தின் இடத்தில் புதிய சமுதாயத்தை தோற்றுவிக்கும் உந்துசக்தியாக விளங்குகின்றது" என்கின்றார் மாவோ.

இந்நிலை கொண்ட இச் சமூக விஞ்ஞான விதியை, தமிழ்த்தேசியத்தின் பெரும்பகுதி அரைகுறை கொண்டே உள்வாங்குகின்றது. சிலருக்கு இது சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்த நிலை. இதில் இன்னும் சிலருக்கு வர்க்கப் போராட்டம் என்றால், இஞ்சி தின்ற குரங்கின் நிலை.

"தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை, தேசிய விடுதலை இயக்கம் என்பன தொடர்பாக மார்க்ஸையும், லெனினையும், ஸ்டாலினையும் மேற்கோள் காட்டுவோர்கள், இவ்வாறான செயல்களை அந்தரங்க சுத்தியுடன் செய்கின்றார்களா? மார்க்கிஸப் பார்வையும், ஆய்வுமுறையையும் வரலாற்றுச் சூழ்நிலைகளையும் ஒதுக்கிவிட்டே மேற்கோள்களைத் தருகின்றார்கள்."

ஏதோ ஏகாதிபத்தியம், காலனித்துவம், தேசியம், தேசிய இனப்பிரச்சினை, சுயநிர்ணய உரிமை, போன்றவைகளை, தமிழ்த்தேசியம்தான் கண்டுபிடித்து, அதற்கு வரைவிலக்கணம் கொடுத்ததுபோல் கதைகள் சொல்கின்றார்கள். இந்த லட்சணத்தில் இவர்களுக்கு வர்க்கப் போராட்டம் என்றால் வயிற்றைப் பிரட்டுகிறது.

இன்றைய உலகு வர்க்கங்களால் பிளவுற்ற சமூக அமைப்பையே கொண்டுள்ளது. இந்த அடிப்படையை சமூக-விஞ்ஞானத் தத்துவம் சரவர நிருபித்துள்து. அடக்கலும், அடக்கியொடுக்கலுமே, இவ்வுலக மக்களின் பிரதான முரண்பாடாகும். இவ்வடக்கல் அடக்கி-ஒடுக்கப்பட்ட(வர்க்க) மக்களின் புரட்சிகர ஆயதப் போராட்டங்களின் மூலமே முடிவடையும். இது எம் நாட்டிற்கும் விதிவிலக்கல்ல. இவ்விதியை எம்நாட்டின் ஸ்தூல நிலைமைகளுக்கு ஏற்ப பிரயோகத்தால் எம்பிரச்சினைகளுக்கும் தீர்வு வரும்.

"பண்பால் வேறுபட்ட முரண்பாடுகளை பண்பால் வேறுபட்ட முறைகளாலேயே தீர்க்கவேண்டும். சமுதாயத்திற்கும் இயற்கைக்கும் இடையில் உள்ள முரண்பாடு உற்பத்திச் சக்திகளை வளர்ச்சியுறச் செய்யும் முறையால் தீர்க்கப்படவேண்டும். பரந்துபட்ட மக்களுக்கும் நிலவுடமை அமைப்புக்கும் இடையில் உள்ள முரண்பாடு ஜனநாயகப் புரட்சி முறையால் தீர்க்கப்படவேண்டும்.

"காலனி-நவகாலனி நாடுகளுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் உள்ள முரண்பாடு தேசிய புரட்சி யுத்தமுறையால் தீர்க்கப்படவேண்டும. இறுதியில் ஆராய்ந்து பார்த்தால் தேசியப் போராட்டங்கள் என்பது அடிப்படையில் வர்க்கப் போராட்டம் தழுவியதோர் விடயம்"….….மாவோ

-23/08/2012