Fri09302022

Last updateSun, 19 Apr 2020 8am

சாதியமும் -- தமிழ்த்தேசியமும்….. பகுதி-9

தமிழரசுக்கட்சியின் நடவடிக்கைகளும்--மகாசபையில் பிளவும்

1956-ம் ஆண்டுக் காலகட்டம,; தமிழரசுக்கட்சி; தன் அரசியலை முழுத்தீவிரத்துடன் முன்நகர்த்திய காலப்பகுதியாகும். காங்கிரஸில் இருந்து பிரிந்த அக்கட்சியை, பண்டாரநாயக்கா அரசின் தனிச்சிங்களச் சட்ட நடவடிக்கையானது, தமிழ்மக்கள் மத்தியில் மேலும் காலூன்ற வைத்தது. ஸ்ரீ-எதிர்ப்புப் போராட்டம், பாதயாத்திரையுடன் கூடிய திருமலை மாநாடு போன்றவைகள் அக்கட்சியின் வளர்ச்சியை துரிதப்படுத்திற்று.

பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம் (கிழித்தெறியப்பட்டாலும் கூட) தமிழ்மக்கள் மத்தியில் மிதவாத அரசியலை முன்னெடுக்கவும், வாக்குவங்கியை தக்கவைக்கவும் உதவியாயிற்று.!   அத்துடன் பொன்னம்பலத்தின் காங்கிரஸின் போக்கில்லாது, வட-கிழக்கு-மலையகம் என தன் தமிழ்த்தேசிய-அரசியலை வியாபித்தெடுத்தது.

தமிழரசுக்கட்சி இந்து-கிறிஸ்தவ, உயர் வேளாளப் பின்னணியில், மத்திய-உயர்-மத்திய வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசியக் கட்சியாகும். இருந்தும் அது தன் மிதவாத அரசியலுக்கு ஊடாக தமிழ்-முஸ்லிம்-மலையக மக்கள் மத்தியில் மேலெழுந்தவாரியானதொரு இன-ஐக்கியம் கொண்ட தேசிய-அரசியலை முன்னெடுத்தது. இது ஓடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் சாத்தியமாயிற்று. மேலும் இம்மக்கள் மத்தியில் தன் வாக்குவங்கியை கூட்டவும், தக்கவைக்கவும் தன் நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதற்காக மகாசபையின் சில தீர்மானங்களையும் கூட தன் கையில் எடுத்துக்கொண்டது.

சாதி-தீண்டாமைக்கு எதிரான சட்டம்!

தமிழரசுக்கட்சி 13-4-1957-ல் இச்சட்டத்தை தனியார் சட்டப் பிரேரணையாக பாராளுமன்றத்தில் கொண்டுவந்தது. அன்றைய திருமலைப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இராஜவரோதயம் முன்மொழிய, கோப்பாய் பாராளுமன்ற பிரதிநிதியான வன்னியசிங்கம் வழிமொழிந்தார். இருந்தும் இச்சட்டம் சாதி-தீண்டாமைக்கு எதிராக எதையும் செய்துவிடவுமில்லை. பொது இடங்களில் ஒருவர் சாதிப்பாகுபாடு பார்த்து, அது நிருபிக்கப்பட்டால், அவருக்கு ஆறுமாதத்திற்கு மேற்படாத சிறைத்தண்டனையும், நூறு ருபா அபராதமும் விதிக்கப்படும். இச்சட்டம் 1972-ல் திருத்தப்பட்ட புதிய சாசனப்படி, இத்தண்டனை மூன்றுவருட சிறைத்தண்டனையாகவும், மூவாயிரம் ருபா அபராதமுமாக உயர்த்தப்பட்டது.

தவிரவும் தமிழரசுக்கட்சியால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட இச்சட்டமானது, சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் நீண்டநாள் கோரிக்கையாகும், 56-ல் எம்.சி.சுப்பிரமணியம் அவர்கள் மகாசiபியின் தலைவர், இவரை செனட்சபை உறுப்பினராக்க அரசாங்கம் தீர்மானித்த வேளையில், அவரை தமிழரசுக்கட்சி செனட்டர் ஆக்க விடாமல் தோற்கடித்துவிடடு, அவர் தலைமை தாங்கிய மகாசபையின் நீண்டநாள் கோரிக்ககையை, சட்டமாக்கிற்று.

1-10-1957-ல் செனட்சபைக்கு பாராளுமன்றத்தில் தெரிவு நடைபெற்றது. மகாசபையின் சார்பில், அரசாங்கம் எம்.சி. சுப்பிரமணியம் அவர்களின் பெயரை சிபார்சு செய்து, தெரிவுக்காக நிறுத்தியது. மறுபுறத்தில் ஜி. நல்லiயா அவர்களை தமிழரசுக்கட்சி நிறுத்தியது. அரசும்-கம்யூனிஸட் கட்சியும் எம்.சி.யை ஆதரித்தன. தமழரசுக்கட்சி, சமசமாஜக்கட்சியின் ஆதரவைப் பெற்று நல்லையாவை வெல்லவைத்தது. அக்காலத்தில் இடதுசாரிக் கட்சிகளான சமசமாஜ-கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையிலிருந்த கொள்கை நிலைப்பாட்டு வாதப்பிரதிவாதங்களாலேயே, இவ்விரு கட்சிகளும் இரண்டாகப் பிரிந்து வாக்களித்தன. இதனாலேயே தமிழரசுக்கடசியின் சார்பாக நிறுத்தப்பட்ட நல்லையாவால் வெற்றியடைய முடிந்தது. இவ்வெற்றியை தமிழரசுக்கட்சி தன் அடுத்தடுத்த தேர்தலகால வெற்றிகளுக்கு (ஒடுக்கப்பட்ட மக்ககள் மத்தியில்) பெரும் கேடயமாக்கியது. இதனடிப்படையிலேயே ராஜலிங்கத்தைக்கூட பாராளுமன்ற உறுப்பினராக்கிற்று.

மேலும் இத்தோடில்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் தங்களுக்கு சாதகமானவர்களுக்கு உத்தியோகம், உத்தியோக மாற்றங்கள், பதவி-பட்டங்களையும் பெற்றுக்கொடுக்க முன்வந்தது. உள்ளுராட்சிச் சபைகளில் அங்கத்துவ-வாய்ப்புக்களையும், யாழ்-மாநகரசபையில் உதவமேயர் பதவிபெறும் வகையிலும், வகை செய்து கொடுத்தது. இது பொன்னம்பலத்தின் காங்கிரஸை விட-வித்தியாசமான நடவடிக்கையாக கொள்ளமுடியும். ஓடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலான, தமிழரசுக்கட்சியின் இச்சலுகை நடவடிக்கைகளால் மகாசபை பிளவுபடும் நிலைக்கும் தள்ளப்பட்டது.

9-6-57-ல் மகாசபை தனது 14-வது மாநாட்டை நடாத்தத் தீர்மானித்தது. அம்மாநாட்டிற்கு அன்றைய பண்டாரநாயக்க அரசின் உதவித் தொழில் மந்திரியாயிருந்த எம்.பி.டி. சொய்சாவை பிரதம அதிதியாக அழைத்தது. உதவித் தொழில் மந்திரி யாழ்ப்பாணம் வந்தபோது, தமிழரசுக் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டி, பறைமேளம் அடித்து, மந்திரியை மாநாட்டில் கலந்துகொள்ள விடாது தடுத்தனர். தமிழரசுக்கட்சியின் இந்நடவடிக்கையானது, மகாசபைக்குள் பெரும் வாதிப்பிரதிவாதங்களை தோற்றுவித்திற்று. இவ்விளைவின் அடுத்தகட்டம், மகாசபையில் பிளவாக மாறிற்று.

பிளவால் மகாசபையில் இருந்து பிரிந்து சென்றோர்,  "மக்கள் முன்னேற்ற மன்றம்" எனும் அமைப்பை உருவாக்கினர். இவ்வமைப்பு ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் முற்றுமுழுதாக தமிழரசுக்கட்சியின் ஓர் கிளையாகவே செயற்பட்டது. இச்செயற்பாடானது, இம்மக்கள் மத்தியில் விரல் விட்டு எண்ணக்கூடிய வசதி படைத்தவர்கiயும்  தோற்றுவித்தது. இந்நிலையில் இப்பகுதியினர் தமிழரசுக் கட்சியின் பின்னால் நிற்க, இடதுசாரிக் கருத்துடையோரும், சமூக-முற்போக்கு-நல்லெண்ணம் கொண்டவர்களும் மகாசபையோடு தொடர்ந்து இயங்கினர். ஆனால் தமிழரசுக் கட்சியின் தேர்தல்-நோக்கிலான வாக்கு வங்கியைக் கொண்ட சலுகை அரசியல் நீண்டு நிலைக்கவில்லை. சலுகைகளுக்கு அப்பால், சாதி-தீண்டாமைக்கு எதிராக போராட முடியாத—பிற்போக்கான—சந்தர்ப்பவாத அரசியலையே முன்னெடுத்தனர். இவை எவையென-எப்டியென இனிவரும் தொடர்களில் பார்ப்போம்.

(தொடரும்)