Fri09222023

Last updateSun, 19 Apr 2020 8am

வடக்கின் மாகாணசபை தமிழ்ஈழ அரச-சபையாம்? கனவுலகில் இனவாத மூடர்கள்!

நடந்து முடிந்த தேர்தலுக்கு ஊடாக இயங்கப்போகும் வடக்கின் மாகாணசபை ஏதோ "தமிழ்-ஈழ அரச சபையாம்". இது தமிழ் ஈழத்திற்கு முதல்படியாம் என சிங்கள-தமிழ் இனவாதிகள் அரசியல் பகுப்பறிவற்று மூடப்போர் நிகழ்த்துகின்றனர்.

தமிழ்-சிங்களத் தரப்பின் மக்களுக்கு எதிரான இம் மூடங்கள், தாங்கள் எப்பொழுதும் இனவாத தொற்று நோய் பரப்பிகள்தான் என்பதை நிலை நிறுத்துகின்றனர்.

"பாலசிங்கத்தின் வடிவில் விக்னேஸ்வரன் வந்துள்ளார். அவர் வடமாகாண சபைக்கூடாக அரசைக் கவிழத்து, தமிழ் ஈழத்தை உருவாக்கி விடுவாராம்." இப்படி பொதுபலசேன, விமல்வீரவன்ச போன்ற பேரினவாதத்தின் எடுபிடிகள்.

"விக்னேஸ்வரன் பௌத்த-சிங்களத்தின் கைக்கூலி. நேற்று கொழும்பில் முளைத்து, இன்று யாழப்பாணத்தில் தளை விட்டவர். அவர் சிங்களவருடன் கணவன்-மனைவி போன்ற ஐக்கியத்துடன் தமிழர் பிரச்சினையைத் தீர்க்கப் போகின்றாராம். அப்படியாகின் இவர் பிரசாரக் கூட்டங்களில் பேசிய "தமிழ்ஈழச்சபை" என்னாச்சு என நாடுகடந்த காசி அண்ணாச்சி வகையறாக்கள்.

இவ்வினவாத வகையறாக்கள் பேசும் அரசியலுக்குள் ஏதுதான் உள்ளது? இறுகிக்-குறுகிய இனவாத-அரசியல் வெடில்தான் துர்நாற்றமாக வீசுகின்றது. காசி ஆனந்தன் போன்ற இனவாத வெடிலாளர்கள் பேசாத பேச்சையா விக்கினேஸ்வரன் பேசிவிட்டார்.

70_ம் ஆண்டுத் தேர்தல் காலங்களில் "தமிழ்த் துரோகிகளுக்கு இயற்கை மரணம் இல்லையென" இளைஞர்களுக்கு பாலபாடம் கற்பித்தவர்தான் காசியண்ணா. இவர் கற்பித்த பாலபாடக் கற்கைதான், 30-ஆண்டுகளுக்கு மேலாக "தமிழ்ஈழப் பல்கலைக்கழகப் போராளிகளுக்கும் துரோகிகளை அழிக்கும் விரிவுரைகள் ஆக்கப்பட்டன". இதுவே வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்கால் வரை பெற்ற தமிழ்ஈழப் பெறுபேறுகளாகும்.

கால் நூற்றாண்டிற்கு மேல் நாட்டைவிட்டு வெளியேறிய காசி-ஆனந்தன், உருத்திரகுமாரன் போன்றோர்கள் வெளியில் எப்பிரச்சினைகளும் அற்று வாழ்ந்துகொண்டு, தமிழ்மக்களின் உணர்வலைகளையும், அபிலாசைகளையும், கணக்கில் கொண்டுதான் அரசியல் செய்கின்றார்களா?

நடைபெற்றது ஓர் மாகாணசபைத் தேர்தல், இதற்கூடாக பெறப்பட்ட சபையின் எதிர்கால நடவடிக்கைகள் அரசுடன் பேசி செய்ய வேண்டிய கருமங்களுக்கு ஊடாகவே ஊட்டம்பெறும். இவ்வூட்டத்திற்கான நாட்டங்களை அரச-தரப்பு செய்யுமா?

பயங்கரவாதம் ஒழிந்து விட்டது. இனி அரசியல் தீர்வுதானெ, 2009-ல் 13-வது பற்றி உரக்கச் சொன்னவர் மகிந்தாதான். கடந்த நான்காண்டுகளில், கழுதை தேய்ந்து கட்டெறும்பான வரலாறே 13-ற்கான நடைமுறையாயிற்று.

மீண்டும் இப்போ 13-வதின் ஏற்ற-இறக்கம், கூட்டல்-கழித்தல்-பெருக்கல் பற்றி எல்லாம் பேசப்படுகின்றது. இக்கணித பாடம்தான் இனவாதிகளுக்கு தமிழ் ஈழமாகியுள்ளது. போற போக்கைப் பார்த்தால் 13-வது மைனசில் 9-ற்குப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்நிலையில், கூட்டமைப்பின் முன்னால் உள்ள பிரதான வேலை மாகாணசபை-கிராமசபை மட்டத்திற்கு செல்லாமல் இருபதற்கு, தன் மிதவாதம் கொண்டு ஏதாகிலும் செய்ய வேண்டும். இதற்குப் போய் அவர்களிடம் தமிழ்ஈழ மல்லுக் கட்டுவது, அரசியல் பகுப்பாய்வற்ற இனவாத மூடம்தானே?

நாட்டில் இனவாதம் செல்நெறி அற்றதாக்கப்படும்பொழுது, இவர்களுக்கான இடம் மனநோய் மருத்துவ மனையாகிவிடும்.