Fri09222023

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கையின், ஒருவார கால ஜனநாயகம்….

 

ஒர் நடிகர் ஒருநாள் முதல்வராக நடித்த படம் ஒன்றும் வெளிவந்தது. அதைப்பற்றி கிண்டலாக விமர்சனம் எழுதிய சஞ்சிகை ஒன்று, தமிழ்நாட்டிற்கு இபபடியொரு முதல்வர் கிடைத்தால் தமிழகமே உருப்பட்டுவிடும், மக்கள் மட்டில்லா மகிழ்வில் வாழ்வர்..என!…. அதேபோன்றுதான் கொமன்வெல்த் புரடக்சனின் "ஒருவாரகால ஜனநாயகம்" எனும் படம் இப்போ இலங்கையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. கதாநாயகன் யாரென்னு சொல்லாமலே மக்கள் யாவருக்கும் புரியும்.

"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சனல்-4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களை தேநீர் அருந்த வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.!

சனல்-4 ஊடகவியலாளரான ஜொனதன் மில்லர் தன்னை அறிமுகப்படுத்தியபோது ஜனாதிபதி மில்லரை நோக்கிவந்து கைகளை குலுக்கி, நாம் மீண்டும் சந்திப்போம் எனக் கூறியுள்ளார். ஜனாதிபதியை நோக்கி உங்களை சந்திக்க முடியுமா என ஜொனதன் மில்லர் கேட்டபோது அவர் ஆம் என கூறியதுடன் அதற்கென்ன, நாம் தேநீர் விருந்தில் சந்திப்போம் எனக் கூறினார்"

இதுமட்டுமா? வடக்கில் பறிக்கப்பட்ட தம் காணிகளை தமக்குத் திருப்பித் தருமாறு தொடர் போராட்டம் நடாத்தும் எம்மக்களின் போராட்டங்களை வெளிநாட்டில் இருந்து வந்த ஊடகவியலாளர்கள் ஒலி-ஒளி வடிவில் பதிவு செய்வதையும், 2009-ல் முள்ளிவாய்க்காலில் இறந்த போராளிகள்-மக்களுக்கு மலர் வளையங்கள் வைத்து அஞசலி செய்வதையும் அனுமதித்துள்ள, எம்நாட்டின் சர்வ வல்லமை படைத்த மன்னாதி மன்னனின் ஜனநாயகப் பண்புகளுடன் கூடிய விழுமியங்களை காணும்போது அப்படியே புல்லரிக்கின்றது.

"சனல் 4 ஊடகவியலாளரான கல்லும் மக்ரே, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்றும் அவர்களின் பணத்துக்காக சிறிலங்கா மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றார்" என சிறிலங்கா ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல பத்திரிகையாளர் மாநாட்டில் கூக்குரல் இட்டபோதும், "இப்போ எனக்கு இதுபற்றிய கூக்குரல்களில் நம்பிக்கையே இல்லை… என் மகிந்தசிந்தனையில் எனக்கு எல்லோரும் சமன" என ஜனாதிபதி கூறிய கூற்றின் பண்பியல் பரிமாணம் எம் எல்லோரையும் "ஜனநாயக் தொட்டிலின்" உச்சிக்கே அழைத்துச் சென்று விட்டது அல்லவா?

சோழியன் குடும்பி சும்மா ஆடாது?....மகிந்தா தன் பிரதான எதிரிகளை நண்பன் என்பதும், மகிந்தாவின் கணக்கெடுப்பில் நாட்டிற்குள் வரக்கூடாதவர்கள் எல்லோரையும் வரவிட்டு, வரவேற்று, இவர்கள் எல்லோருக்கும் செம்கம்பள வரவேற்பு கொடுப்பதும் எவ்வகையின் பாற்பட்டது?.

மகிந்த அரசு இவ்வாண்டில் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை எதிர்பார்த்தது. இதை குவிமையமாக வைத்தே வரவுசெலவுத்திட்டம் உட்பட, தன் சர்வதேசியக் கூட்டாளிகளான பன்னாட்டு-நிறுவனங்கள் கம்பனிகளின் வருகை கொண்ட வினையாற்றல்களை கையாண்டது. ஆனால் இதில் இவ்வரசு எதிர்பார்த்த இலக்கை இன்றும் அடையவில்லை. இவ்விலக்கில் 537-மில்லியன் டாலர்களை மட்டுமே அடைந்துள்ளது. மிகுதியை அடைவதற்கே இவ்வளவு குத்துக்கரணங்களுடன் கூடிய முரண்நகை நடிப்பு நாடகத்திற்கு இம்மாநாடு கைகொடுத்து உதவப்போகின்றது.

எம்நாட்டை அந்நியப் பொருளியலின் தொடர் குப்பைத் தொட்டியாக்கவும், அதன் கலாச்சாரப் பண்பியலின் கழிவறையாக்கவுமே இம்மாநாடு வழி வகுக்கப்போகின்றது.

இவ்வகை நவ அரசியலை புரியாத, மரபான நம்மவர்களில் சிலர் "மாநாட்டில் இந்தியா கலந்து கொள்கிறது. ஆனால் பிரதமர் கலந்து கொள்ளவில்லை". எனச் செய்தி வந்தால், சந்தோச முதலீட்டால் முகநூலில் விழுந்து விழுந்து லைக் அடிக்கின்றார்கள். என்செய்வது இம் மரபான பாமரத்திற்கு எதிராக ஒரு பெரும் கலாச்சாரப்புரட்சியே தேவைப்படுகின்றது.