Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நிபுணர்குழு அறிக்கை மக்களுக்கு நீதியை பெற்றுத்தருமா?

அமெரிக்கா என்னடா..!   ஐ.நா. என்னடா..!
நான் நினைக்கிறதை செய்பவன். எனக்கு யார்
பற்றியும் கவலை இல்லை..,
என கோத்தபாயாவும்..,
மக்களையும் வெள்ளைக்  கொடியோடு
வந்தவர்களைக் கொன்றொழித்தது யார்?
பிரபாகரனை நாமா இல்லாதாக்கினோம்?
இதை நேர்கொண்டு கண்டது யார்?
நிபுணர் குழுவிற்கு மாலைக்கண்ணா?
அல்லது மஞ்சள் காமாளையா?
என மகிந்தாவும் குமுறுகின்றார்கள்.

பயங்கரவாதத்தை ஒழிக்கப் பன்நாட்டுப் படையா பயன்பட்டது?   இல்லை எம்படை தானே! எம்படைக்கு  இவர்கள் துவக்கு தூக்கிக் கொடுத்தார்களா?  பேரினவாத இனவெறிப் போதை ஊட்டினார்களா?  குண்டு மழை பொழிய  விமானம் ஓட்டினார்களா? மக்கள் கண்ட துண்ட முண்டமாய் இரத்த ஆற்றில் மிதக்க, பிணக்காடாக்கியதை என்ன பூதக்கண்ணாடி கொண்டா இவர்கள் பார்த்தார்கள்? மானங்கெட்டவர்கள். இவர்களுக்கொரு நிபுணர்குழு,  அதற்கொரு விசாரணை நடாத்தும் அதிகாரமாம்..,  யார் கொடுத்தார்கள்  இவ்வதிகாரம், யாரிடம்  கேட்கின்றார்கள் விசாரணை..?  இப்படி கட்டப்பொம்மன் பாணியில் வசனம் பேசுகின்றனர், அழுகி நாறியுள்ள பேரினவாதக் குட்டைக்குள் மூழ்கியுள்ள விமல்வீரவன்ச,  ஹெலஉறுமய போன்ற இனவெறியாளர்கள். இதற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் இறுதிக்கட்ட யுத்தத்தில் பொதுமக்கள் யாருமே சாகடிக்கப்படவில்லையென பிள்ளையான், கருணா, டக்ளஸ் என பேரினவாத அன்ட கோ.வினர் கண்கண்ட சாட்சியம் அளிக்கின்றனர்.  இதைவிட இந்தியா, ரஸ்யா, சீனாவிற்கும் சமகாலத்தின் பிரதான பிரச்சினையும் இதுவே. இதில் இந்த குழப்பம் நிறைந்தஅறிக்கைகள், உறுமல்கள், துள்ளல்கள், கொந்தளிப்புக்களுக்கான காரணம் தான் என்ன? ஐ.நா.சபை அப்படி என்னதான் செய்துவிட்டது?

2009-ம் ஆண்டு மே-17 ந் திகதி நந்திக்கடலில் விடுதலைப் புலிகள் சரணடைந்ததைத் தொடர்ந்து, இந்த கொடூமான போர் முடிவிற்கு வந்தது. இதன் பின்பான ஓராண்டு வரை, ஐ.நா. சபை எந்தவிதமானதொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களை மனிதாபிமான முகம் கொண்டு பார்க்காமலே இருக்க,  மகிந்த கோத்தபாயவின் குடும்ப அரசும், சரத்பொன்சேகாவின் மக்கள் நல இராணுவமும்    தொடர்ந்து         படுகொலைகளைச் செய்தது. அப்பாவி மக்கள் பயங்கரவாதப்போரென்ற    பெயரில் கொடூமாக கொலை செய்யப்பட்டபோதும், ஐ.நா.சபை வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருந்தது. இறுதிப்போர் அசிங்கமானதொரு முடிவினை எட்டிய போதுதான், பான்கீ மூன்  இலங்கைப் பயணத்தை மேற்கொண்டு, இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த முகாம்களை பார்வையிட்டார். அச்சமயம் அவரால் விடப்பட்ட அறிக்கைகள், பத்திரிகைகளுக்கு கொடுத்த பேட்டிகள் கொடூமாகப் போரைத் தொடுத்த மகிந்த பேரினவாத அரசின் செயற்பாடுகளுக்கு அங்கீகாரம் வழங்குவதாகவே இருந்தது.

செப்ரெம்பர் 2008-ல் வன்னியில்  செயற்பட்ட ஐ.நா. அமைப்புகள், மனிதஉரிமை அமைப்புகள் அனைத்தும் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென்ற இலங்கை அரசின் உத்தரவை ஐ.நா.சபை கைகட்டி, வாய்பொத்தி, எவ்வித எதிர்ப்புமின்றியே ஏற்றுக்கொண்டது. 2009-ம் ஆண்டு மே 17-ந் திகதிக்கு  முன்பாக தேசிய, சர்வதேசியத்தின் பிரதான கருத்துருவாக்கம் இலங்கையில் நடைபெற்றது. பயங்கரவாதப்போர் ஒழிப்பென்பது பேரினவாத குறுந்தேசிய இனவெறிப் போராட்டத்தின் கொடூம் நிறைந்த முடிவிது. சர்வதேச சட்டங்களை நினைவிற் கொண்டோ அல்லது வெளிப்படைத்தன்மையுடனோ இலங்கையின் அரசுத் தலைவர்கள் இப்போரை முன்னெடுக்கவில்லை. இதற்காக  இத்தலைவர்கள் போர்க்குற்றவாளிகள்தான் என்ற சொல் உச்சாடனத்தைக் கூட எந்தச் சர்வதேசப் பயங்கரவாத ஒழிப்பாளர்களும், ஐ.நா.சபையும் கூட சொல்லவில்லை.

இன்று பயங்கரவாதத்திற்கு சர்வதேசரீதியாக ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய எந்தவொரு வரைவிலக்கணமும், ஐக்கிய நாடுகள் சபையிடம் இல்லை. இதற்கு அர்த்த புஸ்டியுள்ள விரிவான சாசனம் ஒன்று வரையப்படுவதை, ஐ.நா.சபையின் கொள்கை வகுப்பாளரான அமெரிக்காவும், ஐரோப்பவும், இதன் ஏவல்களும் தடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. 2001-செப்டெம்பர் 11-ல் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப்பின், பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரைப்பிரகடனம் செய்த அன்றைய அமெரிக்க ஐனாதிபதி ஜோர்ச் புஷ் அமெரிக்காவின் பக்கம் நிற்காதவர்கள் பயங்கரவாதிகளின் பக்கமே நிற்கின்றார்கள் எனக்கூறி ஓர் கோமாளித்தனமான வரைவிலக்கணத்தை வகுத்தார். அமெரிக்க ஏகாதிபத்தியம் வகுத்த இவ்வரைவிலக்கணத்திற்கு ஊடாக, உலகின் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள், தேசபக்தர்கள், தேசிய விடுதலைப் போராட்டத் தலைவர்கள், புரட்சிகர வெகுஐனத் தலைவர்கள், போராளிகள் அனைவரும் பயங்கரவாதப் பட்டியலில் இடப்படுகின்றனர்.

ஒப்பீட்டுவகையில் இப்படியானதோர் பின்புலத்திலேயே மகிந்தப் பேரினவாதமும் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை பயங்கரவாத யுத்தமாக முன்னெடுத்தனர். யுத்த முடிவிற்குப்பின் தான்,   ஐ.நா.சபையின் செயலாளர் நிபுணர்குழு கொண்டு அதை அறிக்கையாக்கியுள்ளனர்.

3000சிவிலியன்களை கொன்றொழித்த ஒசாமா, பின்லேடனை கொலை செய்வதற்கான மரண தண்டனை தீர்மானத்தை அமெரிக்க ஜனாதிபதியினால் எடுக்க முடியுமானால் சுமார் ஒரு இலட்சம் சிவிலியன்கள் மற்றும் தலைவர்களை கொன்றொழித்த பிரபாகரன் தலைமையிலான புலிகள் அமைப்புக்கு எதிராக யுத்தம் செய்தது தவறாகுமா..? என  மகிந்த மந்திரி ஒருவர் கேட்கின்றார். இக்கேள்விகளுக்குள் உள்ள யதார்த்த உள்ளடக்கம் தான் என்ன?

பின்லேடனை, ஒபாமா பயங்கரவாதியாக்கி எப்படி தான் சாகடித்ததாக நாடகமாடுகின்றாரோ, இப்பாணியிலேயே மகிந்தா பிரபாகரனையும், புலிகளையும் சாகடித்ததாக சொல்கின்றார் இந்த மந்திரி. புலிகள் மக்கள்சார் விடுதலை இயக்கமல்ல, பயங்கரவாத இயக்கமென்பதிலும் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. ஆனால் புலிகளை உருவாக்கியது எது? சிங்களப் பேரினவாதத்தின் தொடர் இனவாத நடவடிக்கைகளும், அதன் செயற்பாடுகளும் தான், இது இல்லாமல் புலி உருவாகவில்லை. அரை நூற்றாண்டுகால தொடர் இனவாதமும், இன அடக்குமுறைகளும், அதற்கெதிரான நியாயமான போராட்டங்களை கறைபடிந்த கொடிய போர்க்கரம் கொண்டு அடக்கியதன் பரிணாம வளர்ச்சியே, இலங்கையின் இப்போர்க்குற்றச் செயற்பாடும்.

ஈழத்தமிழர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மனிதகுல வரலாற்றில் நடந்த இன்னுமொரு மிகக் கொûமான இனப்படுகொலை பற்றியும், மனித உரிமை மீறல்கள் அட்டூழியங்களையும் இந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது. போர்க்குற்றங்கள் பற்றிய அனைத்துலகச் சட்டங்களின் படி, இலங்கை அரசே விசாரணையை நடத்திக் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்றும், வடக்குகிழக்கு மாகாணங்களில்
வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கி, அதன் செயற்பாடுகளைக் கண்காணிக்க சுதந்திரமான பன்னாட்டுக் குழுவை ஐ.நா. பொதுச் செயலாளர் அமைக்க வேண்டும் என்றும் இந்த நிபுணர்குழு பரிந்துரைத்துள்ளது.

என்ன இது..! அதியுன்னத நிபுணத்துவம் கொண்டதானதோர் அறிக்கையை வடித்தெடுத்துள்ளது இந்நிபுணர்குழு. இலங்கையின் அரசியல்சாசன விதிகளின்படி ஐனாதிபதியே சகலதின் படைத்தல் – காத்தல் – அழித்தல் என்பதன் முழுமுதற்கடவுள். இவரன்றி இலங்கை அரசியலில் ஓர் அணுவும் அசையாது. இக்குற்றத்தில் ஈடுபட்டவர் இந்த ஐனாதிபதி. ஆக தன்னைத்தான்விசாரிப்பதா..! இப்பேர்ப்பட்டவரிடம் போய் விசாரணை நடாத்து.., குற்றவாளியைக் கண்டுபிடி.., தண்டனை கொடு என்கின்றார்கள் இந்த நிபுணர்கள்.

வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களை கொன்றொழி என உத்தரவிட்டவர் கோத்தபாயா, நான் இல்லை. இதை எங்கு வேண்டுமானாலும்    சொல்வேன். ஆனால் சொல்லமாட்டேன்..! என்கின்ற இவரின் சமகாலப் பேரினவாதப்பக்தி வேறு. இப்படி சொன்னவரை சிறையில் அடைத்து விட்டு, தன் தம்பியை குற்றமற்றவரென நீதிவழங்கியுள்ள கொலைஞரிடம் சர்வதேச நிபுணர்கள், தமிழ் மக்களுக்காக நீதிப்பிச்சை கேட்கின்றனர். அதற்கப்பால் மேலும் ஒருபடி சென்று தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கலாம், அதைக் கண்காணிக்க சுதந்திர சர்வதேசக் குழுவாம்.

இதை “மேதினியின் நீதி வழுவா மகிந்த மன்னன்” அனுமதிப்பாராம். குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது, தண்டனை வழங்குவது, மகிந்தா..! இவர்கள் சிபார்சில் அவர் வழங்குவதை? கண்காணிக்க சுதந்திர சர்வதேசக்குழு..! இதை இந்நூற்றாண்டின் இன்ரலியன் அரசியலாக கொள்ளலாம்தானே?

இதனால்தான் என்னவோ தெரியவில்லை, இந்நிபுணர்குழு அறிக்கையை நாடுகடந்த கடக்காத தமிழ்த்தேசியர்களின் பெரும்பகுதியினர் மகிழ்ச்சிப் பெருவாக்கத்துடன் வரவேற்கின்றனர். இவர்களுக்கு இலங்கை அரசிற்கெதிராக,  புலிகளுக்கு சாதகமாக யார் எதைச் சொன்னாலும் இடம் பொருள் ஏவல் என்பதைக்கூட கவனத்தில் கொள்ளாது வரவேற்பர். புளகாங்கிதம் அடைவர். தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சில மாங்காய் மடையர்களை சந்தோசப்படுத்த பத்திரிகையாளர் சந்திப்பின்போதான தனது பேட்டியில் “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சாவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனைவாங்கிக் கொடுப்பேன்” என்று சொன்னவுடனேயே பட்டாசு கொளுத்தாத குறையில் இருந்து, ஆர்ப்பரித்துக் சந்தோசம் கொண்டாடிய   தமிழ்த்தேசியர்களும்  உண்டு. தமிழ்த்தேசியத்தின் தற்போதைய “தேசியத்தலைவி” என விளித்து வாழ்த்தும் உடன் பிறப்புக்களையும், பேரவை சங்கங்களையும் காண்கின்றோம்.

தமிழ்த்தேசியத்தின் கடந்த அரை நூற்றாண்டிற்கு மேற்பட்ட விடுதலை அரசியல் என்பது அன்னிய அரவணைப்பின் பாற்பட்டதே. அதுவன்றிய மக்களைச் சார்ந்து, இதன்
சுயத்தின் பாற்பட்டதெதுவும் இல்லை. இதை வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை கண்டறியலாம். அத்தோடு  வெள்ளைக்கொடி ஏந்தியது ஈறாக, பிரபாகரன் சரணடைந்தால் எல்லாம் சரிவரும் என்று,  எல்லாவற்றையும் இல்லாதாக்கியதும், சுயத்தின் அரசியல் பாற்பட்டதல்ல. அந்நியத்தின் அரசியல் ஊட்டத்தின் பாற்பட்டதே.

இன்று எம்முன் உள்ள பிரதான கேள்வி? மகிந்தப் பேரினவாதம் பெரும் கோபக்கனல் கொண்டு கொக்கரிக்கும் அளவிற்கும்.., தமிழ்த்தேசியம் பேரானந்தம் அடைந்திருக்கும் அளவிற்கும்.., ஐ.நா தலைமையிலான நிபுணர்குழு தயாரித்த அறிக்கை, குற்றவாளிகளை கண்டு பிடித்து நீதி தருமத்தின் முன்னால் நிறுத்தி, அதற்கான தக்க தண்டனை பெற்றுத்தருமா? இல்லையென்பது இந்நிபுணர்களுக்கு மாத்திரமல்ல, தேசிய மற்றும் சர்வதேசத்தின் சாதாரண மக்களுக்கே தெரியும்.

பேரினவாத இனவெறிப் போராட்டத்தின் கொடூரம் நிறைந்த இனவழிப்பு நடவடிக்கையில், சர்வதேச சட்டங்களை நினைவிற் கொண்டோ அல்லது வெளிப்படைத் தன்மையுடனோ இலங்கையின் அரசுத்தலைவர்கள் இப்போரை முன்னெடுக்கவில்லை. இதற்காக இத்தலைவர்கள் போர்க் குற்றவாளிகள்தான் என்ற ஒன்றை மௌனமாக சொல்லியுள்ளார்கள். ஊர் உலகறிந்த ஒன்றை மணி கட்டின மாடு சொன்னால் எப்படியோ அப்பாங்கில் இருந்தே இதைக் கொள்ள வேண்டும். இலங்கை அரசியலில் எப்பிரச்சினைகள் வந்தாலும், அதற்கமைக்கப்படும் ஆணைக்குழுக்களுக்கும், ஏனைய குழுக்களுக்கும் பஞ்சமிருக்காது. ஆனால் இவைகள் தோல்வி கண்ட வரலாறுகள் தான்  உண்டு. மாண்புமிக்கோர்களால் அமைக்கப்படும் ஆணைக் குழுக்களின் வேண்டுகோள்கள் படிமுறையாக உதாசீனம் செய்யப்பட்டு, சில வழக்குகள் ஆக்கப்பட்டு விசாரணைகளுடன் கிடப்பிலேயே கிடக்கின்றன. 90-களின் நடுப்பகுதியில் குமாரதுங்காவின் ஆட்சிக்காலத்தில் பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. சுயாதீனமான அர்ப்பணிப்புடைய ஆணையாளர்களால், தற்போதைய நிபுணர் குழு போன்று பெறுமதியான அறிக்கைகள்
தயாரிக்கப்பட்டும் வெற்றிகரமான விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை. அந்நிலையே இந்த போர்குற்ற விசாரணைக்கும் வரும். ஆனால் “வராது” என்னும் நிலை இருந்தால் வரவேற்கத்தக்கதே.

இன்றைய தேச-கால-வர்த்தமான நிலையில் இலங்கை, அமெரிக்க-மேற்கத்தைய நாடுகளுக்கு எதிரானதாகவே உள்ளது. இதற்கு ரஸ்ய-சீன  அரவணைப்பே பிரதான காரணி. இது இந்தியாவிற்கும் பெரும் தலையிடி. கடந்தகால மேலாதிக்க இறுக்கப் பிடியிலிருந்த இலங்கையின் தளர்வில் இந்தியா தடுமாறுகிறது. தமது பக்கம் கொஞ்சமாவது இசையாவிட்டால் இறுதிக் கட்டப்போரில் மீறிய மனித உரிமைகளை, போர்க்குற்றங்களை ஆவணப்படுத்தி.., மகிந்த அரசை குற்றவாளியாக்கி.., தண்டனை வழங்குவோமென அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகள் உலகம் பான்கீன் மூலம் வெள்வெருட்டு விடுகின்றது. இம்முரண்பாடுகளின் சர்வவியாபகத் தன்மைகளுக்கு ஊடாகவே நிபுணர் குழு அறிக்கையை நாம் உற்று நோக்க வேண்டும். சமகால நிலையில் ஐ.நா.சபை, அமெரிக்கவும், மேற்கும், இந்தியாவும், ரசியாவும்,
சீனாவும்  சிங்களப் பேரினவாதம், குறுந்தமிழ்த் தேசியவாதம், தத்தம் வர்க்க நலன் சார்ந்த சுயநல அரசியலுக் கூடாகவே இதை அரசியலாக்கின்றனர். இதில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்த எதையும், இவைகளுக் கூடாக எதிர்பார்க்க முடியாது.

இந்நிலையில் தேசியசர்வதேச மக்களையும், மக்கள்சார் அமைப்புக்களையும் நியாயமான எம்மக்கள் சார்ந்த கோரிக்கைகளின் அடிப்படையில்ஒன்றிணைக்க வேண்டும். தமிழ்மக்கள் மீது நடாத்தப்பட்ட அனைத்து யுத்த மீறல்களையும் விசாரிக்க சுதந்திரமான – சுயாதீனமான சர்வதேச விசாரணை கோரி போராட வேண்டும். சர்வதேச நாடுகளிடமோ, பேரினவாதத்தின் சகதியில் மூழ்காதும் குறுந்தேசிய படுகுழியில் வீழ்ந்து விடாது தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்கெதிராகவும், அதற்கு நியாயம் கிடைக்கும் வண்ணம் வெகுஐன போராட்ட மார்க்கத்தைக் கொண்டு இதை அணுக வேண்டும். குறுந்தேசிய அரசியலை விடுத்து சிங்கள மக்களுடன் இணைந்து, பேரினவாதத்தை எதிர்த்துப்  போராட வேண்டும். 1971, 1989-1990இல் சிங்கள் மக்கள் மேலான இந்த இனவாத அரசின் படுகொலைக்கான நியாயத்தை நாம் கோருவதன் மூலமும், அதையொத்த தமிழ்மக்கள் படுகொலையை முன்னிறுத்தியும், இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம்தான் குற்றவாளிகளைத் தண்டிக்க முடியும். இதுவல்லாத எந்த வழிமுறையும், குற்றவாளிகளை பாதுகாக்கின்ற நடைமுறைக்கு  ஊடாக, தங்கள் குறுகிய நலன்களை அடையும் அரசியல் பித்தலாட்டங்கள்தான்.

   -அகிலன்.

முன்னணி இதழ் -2