Fri09302022

Last updateSun, 19 Apr 2020 8am

புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் ஈழத்து பயணமும், பார்வையும்…!

ஒரு மனிதன் தான் பிறந்து வளர்ந்த சூழல் - உறவுகள் - நண்பர்கள் - அயலவர்கள் இப்படி எத்தனையோவற்றினை இழந்துவிட்டு, இன்னொரு அன்னிய தேசத்தில் அகதிகளாக வாழும் வாழ்க்கை என்பது மிகவும் கொடுமையானது. சொந்த பந்தங்களின் இன்ப துன்பங்கள் எதிலுமே பங்கேற்க முடியாது, பெற்ற தாய் தகப்பனுக்கு கொள்ளி வைக்க கூட முடியாத வகையில் எமது நாட்டில் நிலவிய அந்த கொடிய போரானது எம்மை அகதிகளாக புலம் பெயர் மண்ணில் நிலை கொள்ள வைத்து விட்டது. இந்த கொடுமையினை ஏதோ ஒரு வகையில் நாம் எல்லோரும் அனுபவித்தவர்கள் ஆகத் தான் இருக்கின்றோம்.

இப்போது நிலமை மாறிவிட்டது. தேவையேற்பட்டால் உடனே இலங்கை போய் வரக் கூடியதாக உள்ளது. எமது வாழ்க்கையின் அரைவாசி காலத்தினை இன்னொரு மண்ணில் கழித்து விட்ட நம்மவர்கள் இன்று விடுமுறை வந்து விட்டால் போதும் பக்கத்து நகருக்கு போய்வருவது போன்று இலங்கை சென்று வருகிறார்கள். இளமைப் பருவத்தில் நாம் அனுபவித்த சந்தோஷங்கள், வாழ்ந்த சூழல், அன்றைய உறவுகள் - அன்றைய மனிதர்கள் என்ற நினைப்புக்களோடும் பல எதிர் பார்ப்புக்களோடும் தான் பிறந்த மண்ணைப் பார்க்க புலம் பெயர்ந்து வாழும் நாட்டில் இருந்து போய் வருபவர்களின் தொகை நாளாந்தம் பெருகிக் கொண்டு செல்கின்றது. அனேகமானவர்களுடன் பேசிப் பார்த்தால் இந்த சமருக்குத் தான் போய் வந்தனான் என்று சொல்கிறார்கள். ஆனால் நாட்டைப் பற்றி கேட்டால் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விதமான மாறுபட்ட கருத்துக்களை முன் வைக்கின்றார்கள்.

அன்று வாழ்ந்த சூழல் இன்று முற்று முழுதாக மாறுபட்டு விட்டது. அங்கு யாரையும் அடையாளம் காண முடியவில்லை. எல்லாமே புதிய சூழல், புதிய மனிதர்கள். அந்த சுகம்.., அன்றைய சந்தோஷம் எதுவுமே இப்போது அங்கு இல்லை என்பது அனேகமானவர்களின் கருத்தாகவுள்ளது.

பல ஆண்டுகள் போருக்குள் சிக்கிக் கொண்ட ஒரு சமூகத்தில் இடம் பெயர்வுக்கள், இடமாற்றங்கள் தவிர்க்க முடியாதது. இந்த நீண்ட இடைவெளிக்குள் ஏற்படும் சமூக பொருளாதார மாற்றங்கள் அந்த மக்கள் மத்தியில் பல மாறுதல்களை ஏற்படுத்துவது இயல்பானதே. அன்று நாம் வாழ்ந்த சூழலினை இருபத்தைந்து வருடங்களுக்கு பின்னரும் நாம் அப்படியே எதிர்பார்க்க முடியாது.

போர் முடிந்து நான்கு வருடங்களாகிறது. இராணுவம் இன்னும் தமிழ்பகுதிகளில் நிலை கொண்டுள்ளதே என்ற கேள்விக்கு, இராணுவத்தினால் அங்கு எந்த பிரச்சனையுமில்லை. அவர்கள் தங்கள்பாட்டில் சைக்கிளில் திரிகிறார்கள். எல்லாம் சின்னப் பொடியள், பார்க்கப் பாவமாக அப்பாவிகளாக தெரிகின்றார்கள் என்பதே அனேகருடைய பதிலாக உள்ளது.

வன்னிச்சமரிலே பல்லாயிரக் கணக்கான அப்பாவி தமிழ்மக்களை கொன்றொளித்து – சரணடைந்த போராளிகளை கொடூரமாக துன்புறுத்தி கொலை செய்து – பல அப்பாவி பெண்களையும், பெண் போராளிகளையும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கொன்று புதைத்த அதே இலங்கை இராணுவம் தான் இன்று அப்பாவி முகத்தோடு அதே தமிழ் சமூகத்தில் நடமாடுகிறார்கள். கொடூரமும் மிருகத்தனமும் மறைந்திருக்கும் அதிகார வர்க்கத்தின் எடுபிடிக் கூலிகள் தான் இவர்கள். இவர்கள் அப்பாவிகள் இல்லை, இவர்களின் துப்பாக்கிகள் எப்போதும் மக்களுக்கு எதிராக திரும்பக் கூடியது. இன்று இலங்கை சென்று வருபவர்களில் ஒருசாரார் வன்னியினை சென்று பார்வையிட்டு வருகின்றார்கள். பல்லாயிரக் கணக்காண அப்பாவி உயிர்கள் புதைக்கப்பட்ட மண் எப்படியிருக்கும்..? அந்த மக்கள் அத்தனை இழப்புக்களுக்கு பின்னரும் திரும்ப வந்து குடியமர்ந்துள்ள பகுதிகளில் எப்படி வாழ்கிறார்கள் என்பதை பார்த்து வர வேண்டும் என்ற ஆசையில் பலர் வன்னி சென்று வருகின்றார்கள். வந்தாரை வரவேற்கும் வன்னி இன்றும் அவர்களை வரவேற்கிறது. ஆனால், பச்சிளம் வயலுக்கு பதிலாக எரிக்கப்பட்ட வாகனங்களும், போர்க்கருவிகளும் - இடிந்து விழுந்த கட்டிடங்கள் - நொருக்கப்பட்ட தளபாடங்கள்…, இவற்றைத் தான் காணக் கூடியதாக உள்ளது. பல நாடுகளோடும், துரோகக் கும்பல்களோடும் சேர்ந்து அழித்தொழித்த சரணடைந்த போராளிகளதும், அப்பாவிகளினதும் உயிர்கள் புதைக்கப்பட்ட அந்த மண் மீது வெற்றி சிலை எழுப்பி இன்று காட்சிக்கு விட்டுள்ளது கொலைகார மகிந்த அரச கும்பலும் இந்த இராணுவமும். வெளியில் அந்த மக்களோடு ஏதாவது பேசினால் அடுத்த ஐந்து நிமிடங்களில் சைக்கிளிலே இராணுவம் வந்து விடுகின்றது. பாசிச மகிந்தாவிற்கும் அதன் எடுபிடி கும்பல்களுக்கும் பாதுகாப்பு இந்த கொலை வெறி இராணுவமும் உளவுப் பிரிவுகளும் தான். இன்று யாழ்பாணத்திற்கு யாரும் சென்று வரலாம். ஆனால் மகிந்த அரசுக்கோ, டக்கிளஸ்க்கோ எதிராக எதாவது கருத்து தெரிவித்தால் வெள்ளை வான் வந்து விடும்.

புதிதாக கடைகள் - வீடுகள் கட்டப்படுகின்றன தெருக்கள் புனரமைக்கப்படுகின்றன, புதிதாக தெருக்கள் அழகான வசதியான வகையில் போடப்படுகின்றன. வெளிநாட்டினைப் போல் காட்சியளிக்கிறது எமது யாழ் மண். இது பொதுவான பெரும்பாலாருடைய கருத்தாவுள்ளது. அதே நேரம் அங்கு புதிதாக அமைக்கப்படும் பெருந்தெருக்கள் மிகப் பலமான முறையில் இறுக்கமாக பல ஆயிரக் கணக்கான தொன் நிறையுள்ள பாரவுருதிகள் செல்ல வசதியாக அமைக்கப்படுகின்றன. இது எதிர்காலத்தில் பல பன்னாட்டு நிறுவனங்கள் தொழிற்சாலைகளை நிறுவி, அதன் உற்பத்திகளை கொண்டு செல்ல ஏற்ற வகையில் வசதியாக அமைக்கப்படுகின்றது என்பது முக்கியமான சில அவதானிகளுடைய பார்வையாக உள்ளது.

மக்களின் உழைப்பினை சுரண்டி உற்பத்திகளைப் பெருக்கி கொள்ளை இலாபம் பெறுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் எமது தமிழ் பகுதிகளில், குறிப்பாக வன்னி விவசாய மண்ணில் நிறுவப்படலாம் என்பது சிலருடைய கருத்து.

ஆனால் இங்கு எல்லோருடைய பொதுவான கருத்தும் எமது இளம் சமூகத்தினரைப் பற்றியதாகவே உள்ளது. இங்கு எல்லோரும் ஒரே கருத்தினையே முன்வைக்கின்றார்கள். இன்று கலாச்சார சீரளிவுக்கள் மிகவும் மோசமாக காணப்படுகின்றது. மது, புகைப்பிடித்தல் பழக்கத்திற்கு பெரும்பாலான இளைஞர்கள் பழக்கப்பட்டு வருகின்றார்கள். தமிழ்பகுதிகளில் எங்கு பார்த்தாலும் சந்திகளில் கூட்டம் கூட்டமாக நின்று மது அருந்துவதும், புகைப்பிடிப்பதும், பெண்பிள்ளைகளோடு சேட்டை விடுவது, குழு மோதல்கள்.., என்று காணலாம். ஆளுக்கு ஒரு மோட்டார் வண்டி வைத்திருப்பது சாதாரணமாகிவிட்டது. பல வீடுகளில் இரண்டுக்கு மேற்பட்ட மோட்டார் வண்டிகள் கூட நிற்கின்றது. இத்தனைக்கும் இவர்களில் பெரும்பாலானவர்கள் எந்த தொழிலுக்கும் செல்வதில்லை. கூலி வேலை செய்வதனை தரக் குறைவாக எண்ணுகிறார்கள். படிப்பினை பாதியிலே நிறுத்திவிட்டு உயர்கல்விக்கு செல்லு முன் பாருக்கு தண்ணி அடிக்க சென்றுவிடுகிறார்கள். வேலையில்லை, படிப்பில்லை இந்த ஆடம்பர செலவுக்கு ஏது பணம் என்று பார்த்தால் வெளிநாடுகளில் இருந்து அண்ணன், தப்பி, உறவுகளென்று பணம் அனுப்புகிறார்கள்.., எந்தவித தடையுமின்றி அவர்கள் செலவு செய்கிறார்கள்.

ஒருவர் தனக்கு தனது கிராமத்தில் நிகழ்ந்த சம்பவத்தினை சொன்னார். குடிபோதையில் நின்ற சில இளைஞர்களை தான் கேட்ட போது தனக்கு கிடைத்த பதில், உன்ரை காசிலையா குடிக்கிறன்.., பேசாமல் உன்ரை வேலையை பார்த்திட்டு போ என்று மரியாதை இல்லாமல் கூறிய பதிலே, என தனக்கு நடந்த அனுபவத்தினை கூறினார்.

கல்வியே குறிக்கோளாக வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தில் கல்வித் தரம் மிக மோசமாக பாதிப் படைந்துள்ளது. இன்று கல்வி நிலைமை தமிழ்ப் பகுதிகளில் விகிதாச்சார அடிப்படையில் வீழ்ச்சியடைந்துள்ளது. சிலர் அதியுயர் சித்தியினை பெற்றாலும் இடையில் சித்தியடைபவர்களின் விகிதம் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் எமது தமிழ்ச் சமுதாயம் எதிர் கொள்ளும் பாதிப்பான பிரச்சனையாகும்.

இன்னொருவர் கூறினார், இப்போது அனேகமானவர்கள் கூலி வேலைக்கு செல்வதற்கு தயாராக இல்லை. தொழிலுக்கு போதிய ஆட்கள் இல்லாததால், சிங்கள மக்கள் தான் கூலிகளாகவும், தாங்களே பொறுப்பேற்று கட்டிடத்தினை கட்டி முடித்து ஒப்படைப்பவர்களாகவும் இருக்கின்றார்கள். தளபாடங்கள், புடவை போன்ற வியாபாரத்திலும் சிங்கள மக்கள் கூடுதலாக காணப்படுகின்றார்கள். நான் செய்யாததை, நாங்கள் விரும்பாததை இன்னொருவன் செய்கிறான். இதை சிங்களவன் தமிழன் என்ற இனவாத நோக்கோடு பலர் பார்க்கிறார்கள். சிலர் இதனை இன முரண்பாடாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இது ஒரு தவறான கண்ணேட்டம் என்பது அவருடைய கருத்தாக இருந்தது.

இன்று எங்கள் இளம் சமூகத்தினரின் சீரளிவிற்கும், தொழில் செய்ய மறுக்கும் மன நிலைக்கும் வெளிநாட்டில் வாழும் அவர்களின் உறவுகள் தான் முக்கிய காரணமாகும். தேவைக்கு அதிகமாக அல்லது என்ன தேவைக்கு என்று தெரிந்து கொள்ளாமல் நீங்கள் அனுப்பும் பணம் அங்குள்ள மக்கள் மத்தியில் பல போட்டி மனப்பான்மையினையும், இளைஞர்களின் வாழ்க்கையில் பல விதமான சீரளிவுக்களையும், பலரை சுயமாக உழைத்து வாழ விரும்பாத சோம்பேறி மனிதர்களாகவும் மாற்றிவருகின்றது. நாங்கள் பணம் அனுப்பும் போது, அவர்களுடைய கல்வி, தொழில், வாழ்க்கை முறைகளையும் நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களது நியாயமற்ற ஆடம்பர வாழ்க்கைக்கும், சீரளிவிற்கும் நாங்கள் பணம் அனுப்ப மாட்டோம் என்பதனை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். எங்கள் இளம் சமூகத்தினை சரியான முறையில் வழிகாட்டி வளர்த்தெடுப்பதில் வெளிநாட்டில் வாழும் எங்களுக்கு பெரிய பங்குள்ளது. எங்கள் சமூகத்தினை சுய உழைப்பில் வாழும் சமூகமாக மாற்ற வேண்டிய கடமையும் எங்களோடு உள்ளது. ஒரு சமூகத்தின் ஆரோக்கியம் அந்த மக்களின் சுய உழைப்பிலேயே தங்கியுள்ளது என்பதை நாம் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்னொரு பெரிய பிரச்சனைக்கு அங்கு வாழும் சாதாரண மக்கள் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. கடையில் அல்லது சந்தையில் பொருள் வாங்க சாதாரண விலையினை விட அதிகமாக கொடுக்க வேண்டியுள்ளது. கடைகளில் பொருட்களை வாங்கும் போதுதோ அல்லது சந்தைகளில் காய்கறி மீன் இறைச்சி வாங்கும் போது வெளிநாட்டு உதவி கிடைப்பவர்கள் அல்லது வெளிநாட்டில் இருந்து செல்பவார்கள் அதிக தொகையான பணத்தினை கொடுத்து வாங்குவதால் அன்றாடம் அங்கே உழைத்து வாழ்பவர்கள் அந்தளவு தொகை பணத்தினை கொடுத்து வாங்க முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். இது பொருட்கள் வாங்குவதில் மட்டுமில்லாமல் காணி நிலம், வீடு வாங்கும் போதும் இதே பிரச்சனையினைத் தான் அங்கு வாழும் மக்கள் சந்திக்க வேண்டியுள்ளது. கண் மூடித்தனமாக பணத்தினை விரையம் செய்யும் தன்மை அந்த மக்களது நாளாந்த நடைமுறை வாழ்க்கையில் பெரியளவில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. ஏற்கனவே போதிய வருமானமின்மையாலும் பொருட்களின் விலையேற்றத்தாலும் தங்கள் வாழ்க்ககையினை நகர்த்த முடியாது சிரமப்படும் அந்த மக்களுக்கு வெளிநாட்டு வருமானம் மேலும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. பணமுள்ளவர்கள் தற்பெருமைக்காகவும், போட்டி மனப்பான்மையிலும் செய்யும் செயல்கள் அங்கு அப்பாவி ஏழை மக்களை பெரிய துன்பத்தினுள் தள்ளிவிடுகிறது.

கடந்த கோடைகால விடுமுறைக்கு நாட்டிற்கு சென்ற ஒருவரோடு இதைப் பற்றி பேசிய போது அவர் சொன்னார், தான் கொழும்பில் தலை மயிர் வெட்ட சென்ற போது தனக்கு முன்னர் தலைமயிர் வெட்டிய வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர், வெட்டி முடிய ஒரு பெரிய நோட்டினை கொடுத்து விட்டு மிகுதி வாங்க மறுத்துவிட்டு சென்றுள்ளார். தன்னோடு வந்த தனது உறவினர் அதை தன்னிடம் கூறி மிகவும் வேதனைப்பட்டார் சொன்னார்.

இந்த நிலமையினை வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் நாட்டில் செலவு செய்யும் போதோ அல்லது நமது உறவுகளுக்கு பணம் அனுப்பும் போதோ கூடிய கவனம் எடுத்து கொள்ள வேண்டும். நாட்டில் எமது மக்களின் சிரமங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.