Fri09302022

Last updateSun, 19 Apr 2020 8am

புலிப்பாசிசத்தினுள் மகிந்தபாசிசத்தினை மறைத்துவிட முடியாது…!

போர்குற்றங்களுக்கு நடவடிக்கை எடுத்தால் வீட்டோ அதிகாரமுள்ள நாடுகளோடு சேர்ந்து எதிர் நடவடிக்கை எடுப்போம் என்கிறது இலங்கை அரசு. தாங்கள் செய்தது போர்க்குற்றம் தான் ஆனால் அதற்கு எதிராக யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்கிறது மகிந்த பாசிசக் கும்பல்கள். தாங்கள் குற்றச் செயல்களை மறைப்பதற்கு இன்று ரசியாவின் கால்களில் அடைக்கலமாகியுள்ளது இந்த பாசிச கும்பல்கள்.

 

வீட்டோ அதிகாரத்தினால் பான் கீ மூன் மீது எதிர்நடவடிக்கை எடுப்போம் என்று ஐக்கியநாடுகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. 30 ஆண்டுகால யுத்தத்தினை ஆராயாமல் போரின் இறுதி மூன்று நாட்களை மட்டும் பார்க்கிறார்கள் என்ற இலங்கை அரசின் அறிக்கை, அந்த மூன்ற நாட்களும் நாங்கள் செய்தது போர்க்குற்றம் தான், ஆனால் 30வருடம் புலிகள் செய்த குற்றங்களைப் பார்த்தால் அது ஒன்றுமே இல்லை என்கிறார் இலங்கை அரசின் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல. ஒரு பாசிசத்திற்குள் இன்னொரு பாசிசத்தினை மறைத்துவிடப் பார்க்கிறார் இந்த ரம்பத்வெல.

 

 

இறுதி யுத்த நாட்களிலே மக்களின் அழிவுகளையும் அவலங்களையும் மறைத்து வன்னி அப்பாவிமக்களின் கண்ணீரையும் கதறலையும், இது பயங்கரவாத புலிகளின் கதறல் என்று உலகநாடுகளுக்கு பறைசாற்றியவன் தான் இந்த கெஹெலிய ரம்புத்வெல. இன்று புலிகளின் குற்றச் செயல்களை வெளி உலகிற்கு காட்டி, தாங்கள் பயங்கரவாத்திற்கு எதிராக போராடியவார்கள்.., புலிப்பயங்கரவாதிகளிடம் இருந்து தமிழ்மக்களையும் நாட்டையும் மீட்டவர்கள் என்று சொல்லி தங்கள் குற்றச் செயல்களை மறைத்து விட முயல்கிறார்கள்.

30 வருடங்கள் என்ன நடந்தது..?

தமிழ்மக்களுக்கு எந்தவொரு நிரந்தர அரசியற் தீர்வையும் வைக்காத சிங்களப் பேரினவாத அரசின் இனவாத அரசியல் தமிழ் இளைஞர்களை ஆயுதம் எந்த வைத்தது. எத்தனை இளைஞர்கள் தங்கள் பெற்றோர்களை, சகோதரர்களை, தொழிலினை கல்வியினை…, என்று தங்கள் தேவைகளை சுகங்களை எல்லாம் இழந்து துப்பாக்கி ஏந்திய அனாதைகள் ஆனார்கள். பெற்றோர்களைப் பிரிந்து தனிமையான இளையவர்கள் எத்தனை, பிள்ளைகளைப் பிரிந்து தனிமையான பெற்றோர்கள் எத்தனை…?

பாரம்பரிய சொத்துக்களையும் சொந்த வீட்டையும் மண்ணையும், உறவுகளையும் விட்டு இன்னொரு அன்னியநாட்டில் அனாதைகளாக அகதிகளாக அலைந்த திரிந்த அந்த கொடிய நாட்கள் எத்தனை. அலரிமாளிகையில் பட்டு கம்பளத்தின் மேல் சுகத்தை அனுபவிக்கும் பேரினவாதிகளுக்கு,  இந்த தமிழ் நெஞ்சங்களின் அந்த வேதனையும் வலியும் எப்படிப் புரியும். புலம்பெயர் மக்கள் என்று வாய்க்குவாய் முணுமுணுக்கும் இலங்கை அரசம், இலங்கை இராணுவமும் அந்த புலம் பெயர்மக்களின் மனதின் புலம்பல்களை அறிந்திருப்பார்களா..?

பேரினவாதத்தின் அரசியல் நடவடிக்கைகள் தான் புலிப்பாசிசத்திற்குள் தமிழ் மக்களை சிறையிட்டது. தமிழ்மக்களின் இருப்பும் சந்தோசமும் துப்பாக்கி கலாச்சாரத்தினுள் மூழ்கடிக்கப்பட்டது இந்த சிங்கள பேரிவாதத்தினால் தான். பேரினவாதத்தினாலும் புலிப்பாசிசத்தினாலும் இலங்கை மக்களின் வாய்கள் இறுகப்பூட்டப்பட்டது. மக்கள் தங்கள் அலங்களை சொல்லி வாய்விட்டு அழக்கூட முடியாது தவித்தார்கள். மக்களின் 30வருட அவலத்திற்கு தனித்து புலிகள் மீது மட்டும் பழியைப் போட்டுவிட்டு யாரும் தப்பித்து விட முடியாது. புலிகள், மாற்று இயக்கங்கள், இலங்கை அரசு, இந்திய ஆக்கிரமிப்பாளர்கள்.., என்று கூட்டு மொத்த கும்பல்களினாலும் துன்புறுத்தல்களை அனுபவித்தது மக்கள் தான். அந்த வடுக்களும் வேதனைகளும் மாறாமல் வலியோடு தான் ஆயிரக் கணக்கான மக்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த 30 ஆண்டுகளில் இலங்கை அரசின் குண்டு தாக்குதாலால் உயிரிழந்தவர்கள், ஊனமாகக்கப்பட்டவர்கள் எத்தனை ஆயிரம்…? அதன் உச்சக் கட்டம் தான் 2009 இல் இலங்கை அரசு நடாத்திய இனஅழிப்பு யுத்தம். புலிகளின் பாசிச பிடியிலே சிக்கி தவித்த பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்களை புலிகள் என்று அடையாளம் குத்தி கொன்று குவித்தது இந்த மகிந்த பேரினவாத அரசுதான். தங்கள் கடந்தகால ஊழல்களும் குற்றசெயல்களும் வெளிவராது மறைப்பதற்காக இந்திய ஆக்கிரமிப்பாளஅரசும், சிங்களப் பேரினவாத அரசும் செய்த கொலைகள் தான் சரணடைந்த புலிப் பொறுப்பாளர்களினது கொலைகளும், புலித்தலைமை மீதான கொலைகளும். உங்களிடம் நேர்மை இருந்திருந்தால் அவர்களை குற்றக் கூண்டில் நிறுத்தி விசாரணை நடாத்தியிருக்க வேண்டும்.

புலம்பெயர்ந்த மக்கள் ஒன்றும் சுகபோகங்களில் புரண்டு உருள்பவர்களில்லை. தன் உறவுகளை பந்தங்களையும், பிறந்து வளர்ந்த அந்த மண்ணின் வாசனையையும் இழந்து வெறுமையிலே தவிப்பவர்கள் தான் இந்த மக்கள். இவர்களில் எத்தனை பேர் தங்களது உறவுகளை வன்னி மண்ணில் பறிகொடுத்தவர்கள். அவர்களின் கதறல் தான் இந்த போர்க்குற்றத்திற்கு எதிரான குரல்கள். அவர்களின் உணர்வுகளை தங்கள் சுயஅரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தும் புலம்பெயர் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாட்டாலோ அல்லது இலங்கை அரசின் குற்றச் செயல்களை மறைக்க இலங்கை அரசோடு திரைமறைவில் செயற்படும் நபர்களாலே நடந்து முடிந்தது நியங்கள் இல்லை என்று ஆகிவிடாது. இந்த குற்றங்களை மறைத்து இலங்கை அரசிற்கு குடைபிடிக்கும் கும்பல்கள் அனைத்துமே மக்கள் விரோதிகளே.


தேவன்.

22/04/2011