Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இடதுசாரி முன்னணியும் - பொருளாதார- மற்றும் ஒடுக்கப்பட்ட இனங்களுக்கான உரிமைகளும்

இலங்கையின் தலைவிதியை 2015 இல் இருந்து தீர்மானிக்கப் போவது யார்? என்னும் அதிகாரத்துக்கான போட்டியே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளான, இனவாத- மேல்தட்டு வர்க்க பிரதிநிதிகள் மைத்ரி மற்றும் மகிந்தாவை முன்னிறுத்தி நாடாத்தப்படும் தற்போதைய தேர்தலாகும்.

இலங்கையின் தரகு முதாளித்துவ வர்க்கம் இரு பிரிவுகளாக நின்றாலும் ஒரே மாதிரியான அரசியலை முன்னெடுப்பதற்காகவே தமக்குள் போட்டி போடுகின்றன. இலங்கையில் பொருளாதாரம், தமிழ் தேசியப் பிரச்சனை, சமூக - மற்றும் இனம் சார் சிறுபான்மையினருக்கான உரிமைகள், இராணுவம், சர்வதேச உறவு போன்ற இலங்கையின் அதிமுக்கிய பிரச்னைகளுக்கு இந்த இரு பகுதியினரிடமும் ஒரே தீர்வே உள்ளது. அதாவது, இன்று மஹிந்த அரசு முன்னெடுக்கும் தரகு முதலாளியம், இனவாதம், வடக்குக் - கிழக்கில் இராணுவ ஆட்சி, பொருளாதாரத்தை வெளிநாடுகளிடம் அடகு வைப்பது போன்ற "தீர்வுகளே".

மக்களின் உண்மையான தேவைகள்

இப்படியான இரு ஒடுக்குமுறைச் சக்திகளுக்குச் சவால் விடும்- கட்டை விரலை வெட்ட மறுக்கும் நவீன ஏகலைவனாக - கோலியாத்தை எதிர்த்த தாவீதாக தற்போதைய தேர்தல் களத்தில் நிற்கிறது எமது இடதுசாரிய முன்னணி. இடதுசாரிய முன்னணியானது தேர்தல் களத்தில் நிற்பது "வோட்டுப் பொறுக்குவதற்காக" அல்ல. மாறாக மேற்படி மஹிந்தசார் கட்சிகளும், மைத்ரிசார் கட்சிகளும் பேச மறுக்கும் அரசியலைப் பேசுவதற்காகவே. அதாவது இன்று இலங்கையின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள், தேவைகள், அவர்களின் அதிகாரங்கள் பற்றிய தெளிவை - விளக்கத்தை - புரிந்துணர்வை ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காகவே. எமக்கு இந்த தேர்தலில் 1சதவீத வாக்குகள் கூடக் கிடைக்காமற் போகலாம் என்பதும் எமக்குத் தெரியும். அந்த வகையில் வாக்குப் பொறுக்கிப் - பதவிக்குக் கனாக்காணும் அரசியலல்ல எமது அரசியல்.

ஒடுக்குமுறையாளர்கள் இத்தேர்தலில் பேச மறுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிப் பேசுவதோடு - எமது அரசியல் உள்ளடக்கம் வெல்லும் தருணத்தில் எம்மால் நடைமுறைப்படுத்தக் கூடிய மக்களுக்காகன தீர்வுகளையும் முன்வைத்தே எமது பிரச்சாரங்களை முன்னெடுக்கிறோம். நாம் சோசலிச அரசைப் பற்றி - அதன் தேவை பற்றிக் கதைக்கிறோம். அதன் உள்ளடக்கத்தைப் பற்றிக் கதைக்கிறோம். மற்றவர்கள் கோருவது போல எங்களால் நடைமுறையில் செய்ய முடியாத - எந்த அரசியல் விடயங்களையும் பொய் வாக்குறுதிகளாக மக்களுக்கு வழங்க முடியாது. இன்றுள்ள இலங்கை அரச கட்டமைப்புக்குள் சீர்திருத்த வேலைகளை ஒட்டடை அடிக்கும் வேலைகளைப் போல - சவக்கிடங்கிற்கு வெள்ளை அடிக்கும் வேலை போல எம்மால் முன்னெடுக்க முடியாது. எமது ஒரே கவனம் இன்றுள்ள இலங்கை அரசக் கட்டுமானத்தைத் தகர்ப்பதும் - இன்றுள்ள "ஜனநாயகத்தை" விட மேம்பட்ட அரச அமைப்பை உருவாக்குவதுமே!

ஒடுக்கப்படும் மக்களுக்கான ஜனநாயகம்.

நாங்கள் கதைப்பது பாராளுமன்றத்திற்கு யாரை உறுப்பினராக அனுப்புவது சார்ந்த ஜனாயகம் அல்ல. அதே போன்று ஜனாதிபதியை - பிரதமரை தேர்தெடுக்கும் ஜனநாயகம் பற்றி அல்ல. நாம் கதைப்பது மக்களின் அடிப்படைத் தேவையான - எல்லா வகை ஜனநாயகத்தின் அடிபடையான பொருளாதார ஜனநாயகத்தைப் பற்றியே! பொருளாதர ஜனநாயகம் அல்லது சமத்துவம் இல்லாத நாட்டில் எவ்வாறு "பாராளுமன்ற" ஜனநாயகமும் - அதன் அடிபடையில் தெரிவு செய்யப்படும் அரசும் உண்மையான உள்ளடக்கத்தில் ஜனநாயகமாக இருக்க முடியும்? ஏழைகள் ஏழைகளாகவும், பணக்காரன் மென்மேலும் தமது செல்வதைக் குவிப்பவனாகவும் உள்ள சமூகத்தில் எவ்வாறு உண்மையான ஜனநாயகம் இருக்க முடியும்? சில ஆயிரம் கோடீஸ்வரர்களை- லட்சாதிபதிகளைப் பிரதி நிதித்துவப்படுத்தும் கட்சிகளின் உறுப்பினர்களை தேர்தல் மூலம் பாரளுமன்றதிற்கு அனுப்புவதாலோ அல்லது அவர்களில் ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வதாலோ இலங்கையில் உள்ள பல பத்து லட்சம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் கிடைத்து விடுமா? அல்லது அப்படித் தெரிவு செய்யப்படுவோர் ஒடுக்கும் மக்களின் நலனுக்காகவா அல்லது தமது அதிக்கார வர்கத்தின் நலனுக்கவா உழைப்பார்கள்?

தமிழ் பேசும் தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறையும் தேர்தலும்

மேற்கூறியது போல இத்தேர்தலில் போட்டியிடும் ஆதிக்க சக்திகள் கதைக்க மறுக்கும் முக்கிய விடயங்களில் ஒன்று தமிழ் தேசியப் பிரச்சனை. 2009-இற்குப் பின் இதைத் தீர்க்க வேண்டிய தேவை இல்லை. காரணம் அப்படி ஒரு பிரச்சனை இலங்கையில் இல்லை! என்ற கருத்தே ஆதிக்க வர்கத்தின் - இனவாதச் சிந்தனை கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சியின் கருத்துகளாகும். இன்று தமிழ் தேசிய விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தம்மை புலிகளின் முகவர் அமைப்புகளாகக் காட்டிக் கொள்ளும் நாடு கடந்த தமிழ் ஈழம் போன்ற வலதுசாரிகளும் புலம்பெயர் நாடுகளில் இணையங்களின் மூலம் தம்மை இடதுசாரிகளாகக் காட்டிக் கொள்ளும் கைவிட்டு எண்ணக் கூடத் தேவையில்லாத தொகையில் இருப்போரும்- எதிரியின் எதிரி நண்பன் என்ற "தத்துவத்தின்" அடிப்படையிலேயே "அரசியல்"செய்கின்றனர்.

அதாவது மஹிந்த என்ற காட்டேரியை ஓட்ட யராவது ஒரு மோடி மஸ்தானாலோ- அல்லது வேறு ஒரு சாத்தானாலேயோ முடியுமானால் அவர்களுக்குத் தமது ஆதரவை வழங்கும் நிலையிலேயே உள்ளனர்.

தமிழ் அரசியற் பரப்பில் உண்மையான இடதுசாரிய மக்கள் சக்தியாக இருப்போரும் கூட "பிரிந்து போகும்" சுயநிர்ணய உரிமை தொடக்கம் தமிழ் ஈழ அரசு அமைக்கப் போராட வேண்டும் எனக் கூக்குரலிட்டபடியும்- இன்றுள்ள அரசியல் அமைப்பு தமிழ் மக்களுக்கு "ஏதாவது" தீர்வை முன்வைக்க வேண்டுமென்று கூறியபடியும் எதிரிகளின் நலனுக்கா "போராடுகின்றனர்". உண்மையான எதிரிகளை மேம்போக்காக விமர்சிக்கும் இவர்களும் கூட எமது இடதுசாரிய முன்னணியை மூர்க்கமாகத் தாக்கும் அரசியலே செய்கின்றனர். காரணம் இடதுசாரிய முன்னணயின் அரசியல் ஒருவேளை வெற்றி கண்டால் தமது அரசியல் இருப்பு "பெறுமதி " அற்றதாகப் போவிடுமோ என்ற இவர்களின் பயமே. அதனால் தான் எம்மைத் தமது "மூலோபாய எதிரியாகக்" (Strategic Enemy) அல்லது முதலில் ஒழிக்கப் பட வேண்டிய எதிரியாகக் கணிக்கின்றனர்.

இடதுசாரிய முன்னணியில் தமிழ் தேசியப் பிரச்சனை பற்றி பலவகை கருத்துகளைக் கொண்ட கட்சிகள் பங்கு கொள்கின்றன. இன்றுள்ள முறைமைக்குள் "இடைக்கால" தீர்வைக் கோருவோர் தொடக்கம் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வை முன்வைப்போர், சுயநிர்ணயத்தின் உள்ளடகத்தை திட்டவட்டமாக தமது அரசியல் நடைமுறைத் திட்டத்தில் வலியுறுத்துவோர், ஏன் தமிழ் ஈழம் தான் இறுதித் தீர்வு என்று கூறுவோரும் கூட இடதுசாரிய முன்னணியில் அங்கம் வகிக்கின்றனர். ஆனாலும் இன்றுள்ள இலங்கையின் அரசியற் கட்டமைப்பைத் தகர்த்து - தேசிய இனங்களுக்கான, குறிப்பாக ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கான அதி உயர் ஜனநாயக முறையிலான தன்னாட்சி/சுயாட்சி அதிகாரத்தை வழங்கும் தீர்வு தான் சாரியானது என மேற்படி இடதுசாரிய சக்திகள் உடன்படுகின்றனர்.

ஆதலினால் இத்தீர்வை நடைமுறைப்படுத்தும் விதமாக - இன முரண்பாடுகளைக் களையும் விதமாக - இனவாதத்தைக் களையும் விதமாக இடதுசாரிய முன்னணியானது தேர்தலை உபயோகப்படுத்தி வருகிறது. குறிப்பாக தென்னிலங்கை ஒடுக்கப்பட்ட மக்களிடையே ஒடுக்கப்படும் தமிழ்பேசும் தேசிய இனங்களின் பிரச்சனைகளை இடதுசாரிய முன்னணி தனது பிரசாரங்கள் ஊடாக தெளிவுபடுத்துகின்றது. இடதுசாரிய முன்னணியானது ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கான விடுதலைப் போராட்டம் - இலங்கையின் பொருளாதார ஜனநாயகத்துக்கான போராட்டத்துடன் சமமாக முன்னெடுக்க வேண்டுமென்பதில் உறுதியாகவுள்ளது.

நிறைவாக

இடதுசாரிய முன்னணியின் தேர்தல் பங்கெடுப்பானது இன்றுள்ள அழுகிப்போன அரசியல் நடைமுறையை (Political System) - அரசக் கட்டுமானத்தை (State Structure) சீர்திருத்தவோ அல்லது போற்றிப் பாதுகாக்கவோ அல்ல. மாறாக இன்றுள்ள அரச முறைமையை இல்லாதொழிப்பதற்கே. இம்முறைமையை ஒழிப்பதன் மூலம் மட்டுமே பொருளாதார ஒடுக்குமுறையும் - இனவாத ஒடுக்கு முறையும் ஒழிக்கப்பட்டு உண்மையான ஜனநாயக அடிப்படையிலான தேசம் உருவாகும். அவ்வாறான ஜனநாயாகத் தேசத்தை உருவாக்கும் போராட்டத்தில் மக்களை இணைக்கும் வேலையாக- பிரச்சாரக் களமாக ஜனாதிபதித் தேர்தலை உபயோகப்படுத்தும் இடதுசாரிய முன்னணிக்கு இத்தேர்தலில் மக்கள் ஜனநாயாக சக்திகள் உண்மையான இடதுசாரிகள் தமது ஆதரவை வழங்க வேண்டும்.