Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழ் சமூகத்தில் இல்லாத சாதியத்தை தூக்கி பிடித்து தமிழரின் ஒற்றுமையை குலைக்காதீர்கள்

சாதியம் பற்றிக் கதைக்க வேண்டாமெனக் கம்புசுத்தும் கனவான்களே!

முகப்புத்தகத்தில் சமூவியல் ஆய்வாளரும், பெண்ணிய மற்றும் சமூகப் விடுதலைக்கான செயற்பாட்டாளருமான அகல்யா, வடக்கில் இன்று தலைவிரித்தாடும் சாதி ஒடுக்குமுறைகள் பற்றி பின்வரும் பதிவை வெளியிட்டார்

"கோவில்களில் சாதிய புறக்கணிப்பு இல்லை" என்று கூறியவருக்கு

"காரைநகரில் மருதப்புரம் என்னும் கிராமம் உள்ளது. நாயன்மார் என்னும் கோவில் உள்ளது வருடத்தில் ஒரு முறை பொங்கல் செய்வார்கள் ஒடுக்கப்பட்ட சாதியினர் கோயிலுக்கு பின் பக்கமும் மற்றும் உயர்சாதியினர் கோயிலுக்கு முன்னாலும் பொங்குகிறார்கள். கடவுளுக்கு படைக்கும் பொங்கல் உயர்சாதியினரின் மற்றவர்கள் பொங்கி விட்டு தாமே எடுத்து செல்ல வேண்டியது தான். அவர்களை அங்கு படைக்க விடமாட்டார்கள்.

காரைநகரிலுள்ள திக்கரை முருகன் கோவில் வாரிவளவு பிள்ளையார், முத்துமாரி அம்மன் கோவில், மணற்காட்டு அம்மன் கோவில், கருங்காலி மூர்த்தி கோவில்.... இவ்வாறு பல கோவில்களுக்கு இன்றும் நுழைய விடுவதில்லை, மடத்தில் இருந்து சாப்பிட கூட விடமாட்டார்கள். ஈழத்து சிதம்பரம் கோவில் அன்று போராட்டம் நடைபெற்றதால் தான் எல்லோரும் நுழைய கூடியதாக இருந்தது. இன்று சாதிப் பிரச்சனை இல்லை என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தால் அக் கோவிலும் நல்ல ஆதிக்கத்தின் கீழ் இருந்திருக்கும்.

காரைநகரில் ஊரி என்னும் பிரதேசம் உள்ளது. அங்கு இன்றும் பாடசாலைகளிலும் சாதிய ஒடுக்கு முறையுள்ளது. வெளிப்பார்வைக்கு அவ்வாறு தான் தெரியும் தம்பி. ஆனால் நிலமை அவ்வாறு இல்லை. அச்சுவேலியில் பத்தமேனியில் தம்மை வேளாளர் என்று கூறிக்கொள்பவர்கள் வசிக்கிறார்கள். ஒடுக்கப்படும் சாதியினர் ஒருவர் அப்பிரதேசத்தில் காணி ஒன்றினை வாங்கினார். அவ்விடத்தில் அவரை வாசிக்க விடாமல் பல பிரச்சனைகளை கொடுத்தார்கள். மின்சாரசபை அங்கு வந்து தூண் நிறுத்த விடாமல் பல பிரச்சனைகளை செய்தார்கள். சாதி பெயர் சொல்லி ஒவ்வொரு நாளும் சண்டைகள். தங்கள் பிரதேசத்தில் இருக்காமல் எழும்பி போக சொல்கிறார்கள். கல்வியங்காட்டில் செங்குந்தார் என்னும் சாதியில் உள்ளவர்கள் தமது ஊருக்குள் ஒடுக்கப்பட்ட சாதி வாகுப்பினத்தவர் அதிபராக வரவிடாமல் பல ஆர்பாட்டங்களை செய்து அவரை மாற்றம் செய்தார்கள்.

கிராம உத்தியோகத்தர்கள் சிலருக்கு இதே நிலையே .உயர்கல்வி மட்டங்களும் அவைக்கு துணை போகின்றன. இப்படியே பல பிரச்சனைகளை கூறிக் கொண்டு போகலாம். எண்ணிக்கையில் அடங்காத பிரச்சனைகள். எமது ஆணாதிக்க சமூகத்தை பீடித்துள்ளது. இவ்வாறான பிரச்சனைகளை கூறினால் சாதிய கட்டமைப்பை ஆதரித்து பேணி காக்க விரும்புபவர்கள் இவை பொய்யான கதைகள் இல்லாத பிரச்சனைகளை நாம் கதைப்பதாக கூறுவார்கள். முடியுமானால் நான் கூறும் இடங்களிற்கு சென்று ஆழமாக பாருங்கள்."

இப்பதிவு பரவலாக வாசிக்கப்பட்டு, பின்னூட்ங்கள் பதியப்பட்டது. அப் பின்னூட்டங்களின் பெரும்பான்மை உள்ளடக்கங்களை பின்வருமாறு தொகுக்கலாம்:

* "தமிழ் சமுகத்தில் இல்லாத சாதியைக் கதைக்காதே"

* "சாதிக்கு எதிராகக் கதைப்பது, சாதியத்தை நிலை நிறுத்த வைக்கும் முயற்சி"

* "சாதி ஒடுக்குமுறை, பெண்ணிய ஒடுக்குமுறை பற்றி விவாதிப்பது தமிழ் இனத்தை - தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை திட்டமிட்ட வகையில் சிதைப்பதாகும்".

* "சாதியம் பற்றி விவாதிப்பது, தமிழ் துரோகம்"

இப்பின்னூட்டங்களை எழுதுபவர்கள் பலர் புலம்பெயர்ந்தவர்களாக அல்லது கொழும்பின் தமிழ் மேல்தட்டுக்களாக இருப்பதுடன், தம்மை அதிதீவிர தமிழ் தேசியவாதிகளாகவும் முன்னிறுத்துகின்றனர். அதேவேளை, "அப்பன் குதிருக்குள் இல்லை" என்பதைப் போன்று தமது ஆதிக்கசாதி அபிமானத்தையும் நசிக்கிடாமல் பதிவு செய்கின்றனர். இவர்களுக்கு தமிழ் ஈழமும் வேண்டும், அதற்காக ஒடுக்கப்பட்ட சாதிகள் மற்றும் பெண்கள் போராடவும் வேண்டும். ஆனால் அந்த ஒடுக்கப்பட்ட மக்களும், பெண்களும் இவர்களில் சாதி மற்றும் பாலியல் ஒடுக்குமுறையை பொறுத்துக் கொள்ள, ஏற்றுக்கொள்ள வேண்டுமாம்!

இந்த "தமிழ் தேசிய - வெள்ளாளிய - ஆணாதிக்கவாதிகள்" சில விடயங்களை புரிந்து கொள்ளவேண்டும்:

1. 50-70களில் சாதியத்திற்கு எதிராக இடதுசாரிகள் குறிப்பாக தலைவர் சண்முகதாசனின் கட்சி மற்றும் ஆங்காங்கே கிராமங்களில் சுயமாக மக்கள் போராடினார்கள். அதனால் தான் சாதி ஒடுக்குமுறையின் உத்வேகம் குறைந்தது.

2. அக ஒடுக்குமுறை குறைத்ததனால் தான் தமிழ் தேசியம் இன ஒடுக்குமுறைக்கு எதிராக ஒருங்கிணைய முடிந்தது.

3. அதனால் தான் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பலியிடப்பட்டவர்கள் பெருமளவில் சாதி, பிரதேச, பாலியல் மற்றும் வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களாவர்.

4. சிங்களம் பேசும் சமூகம் சாதியை பொறுத்தளவில் - தமிழ் பேசுபவர்களை விட எந்த விதத்திலும் முற்போக்கானவர்கள் அல்ல. ஆனால் அங்கு ஒப்பீட்டளவில் சாதிய ஒடுக்குமுறை மிகவும் நலிவடைந்துள்ளது. அதனால் தான், இனவாதிகள் "சிங்கள - பௌவுத்த" தேசியத்தை முன்னிறுத்தி தம்பின்னால் அவர்களை ஒருங்கிணைத்து அரசியல் செய்ய முடிகிறது.

5. புலிகளின் காலத்தில் அல்லது போர் நடந்த காலத்தில் சிவில் சமூகம் இயல்பாக இயங்கா நிலையில் இருந்த போது சாதியம் ஒருவகை "உறங்கு நிலையில்" இருந்தது. இப்போது அது பல தளங்களில் தலைவிரிக்கத் தொடங்கியுள்ளது.

6. ஆகவே, தமிழ் தேசிய விடுதலை விரும்புவோர், அக முரண்பாடுகளையும் கையாளத் தெரிந்தவர்களாக, புரிந்தவர்களாக இருப்பதன் மூலமே தமிழ் பேசும் மக்களை அணிதிரட்ட முடியும்.

7. அக முரண்பாடுகளை கண்டும் காணாமல் விடவேண்டும் என்று கூத்தாடுவது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை அடுத்த நிலைக்கு கொண்டு போக விரும்பும் ஒருவரின் செயலாக இருக்க முடியாது .

நிறைவாக, பாலியல் மற்றும் இன, மத, பிரதேச, வர்க்க, சாதிய ஒடுக்குமுறை எல்லாம் ஒரு சமூகத்தினதோ, தனிநபரினதோ, வர்க்கத்தினதோ, பெண்களினதோ, இனத்தினதோ ஜனநாயக உரிமையை மறுப்பதாகும். நமக்குள்ளேயே - நமது சகோதர சகோதரிகளுக்கு ஜனநாயகத்தை மறுத்து விட்டு எப்படி எமது இனத்துக்கான ஜனநாயகத்தை - தேசத்துக்கான ஜனநாயகத்தைக் கோர முடியும்? என்பதை கொஞ்சம் சிந்தியுங்கள்... அடம்பன் கொடியும் திரண்டால் தான் மிடுக்கு!

தொடர்புடைய ஆக்கங்கள்

மதங்களும் மக்களுக்கு இடையிலான பிரிவினைகளும் !!!

பிள்ளையாரை முள்வேலிக்குள் சிறை வைத்த கரவெட்டி சாதிவெறியர்கள்!