Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - நேசன் (பகுதி 2)

இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் : ஆயுதப் போராட்டத்தை நோக்கி

70 களில் தமிழரசுக் கட்சியினதும் அதன் தொடர்ச்சியாக தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் "உணர்ச்சி பொங்கும்" மேடைப் பேச்சுக்களிலும் "தமிழீழம்" என்ற கனவிலும் மூழ்கியிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களில் நானுமொருவன் என்ற போதிலும், பின்னாட்களில் - 80 களில்- பாஸ்கரன், திலக் ஆகியோருடைய தொடர்புகளுக்கூடாக GUES (ஈழ மாணவர் பொது மன்றம்) இல் இணைந்து செயற்பட்டு வந்தேன்.

சந்திப்புகள், அரசியல் கருத்தரங்குகள், கண்டனக் கூட்டங்கள் என்பனவற்றோடு மாணவர் போராட்டங்களிலும் சாதீயத்திற்கெதிரான போராட்டங்களிலும் வெகுஜனமட்டத்தில் அவர்கள் செயற்பட்டுக் கொணடிருந்தனர். மாணவர்களை அணிதிரட்டுதல், மக்களை அணிதிரட்டுதல், அதனூடாக பரந்துபட்ட மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தல் என்பதாகவே GUES (ஈழ மாணவர் பொது மன்றம்) இன் கொள்கை இருந்தது. இவர்கள் இடதுசாரிக் கொள்கைகளால் கவரப்பட்டவர்களாக, மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்டவர்களாக காணப்பட்டனர். இடதுசாரித் தத்துவத்தின் மீதான அறிமுகம், அதன் மீதான ஆர்வம் எல்லாமே நான் GUES (ஈழ மாணவர் பொது மன்றம்) இல் இணைந்திருந்த போது ஏற்பட்டவையே. இச் சூழல் 1981, 82 ம் ஆண்டுகளில் 1983 இனக்கலவரம் ஏற்படுத்திய உந்திய கொதிநிலைக்கு முற்பட்ட காலமாகும்.

                                                               திரு. அமிர்தலிங்கம்

 

                                            எஸ்.ஜே.வி செல்வநாயகம்

                                        திரு. அமிர்தலிங்கம் மங்கையற்கரசி தம்பதியர்

ஆனால் அன்றைய யதார்த்த நிலையோ GUES (ஈழ மாணவர் பொது மன்றம்) இனுடைய கொள்கைக்கு முரணானதாக காணப்பட்டது. கூர்மையடைந்து விட்டிருந்த இன முரண்பாடு, அதனுடன் கூடவே ஆயுதப்படைகளின் கொடூர அடக்குமுறை என்பன ஒருபுறமும், ஆயுதப் படைகளுக்கெதிரான தாக்குதல்கள் (சிறிய அளவிலேனும்) அங்கும் இங்கும் மறுபுறமாக காணப்பட்டது. ஆயுதப் படைகளுக்கெதிரான தாக்குதல் சம்பவங்கள் அன்று மக்கள் மத்தியில் - குறிப்பாக என் போன்ற இளைஞர் மத்தியில் - "கவர்ச்சியூட்டுவதாக" இருந்ததோடு மட்டுமல்லாமல், முன்னரங்கிலும் இருந்தது என்பது தான் உண்மை. இந்தக் காலப் பகுதியில் எனது சகோதரன் காந்தீயம், புளொட் போன்ற அமைப்புகளில் செயற்பட்டுக் கொண்டிருந்தார். புளொட் உறுப்பினர்கள் எமது வீட்டை பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். இதனால் புளொட் உறுப்பினர்கள் பலர் ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர்களாக இருந்தனர். புளொட்டினுடைய தொடர்பு, அமைப்பு வடிவத்தில் இல்லையென்றபோதிலும் தனிநபர்கள் என்றளவில் இருந்து வந்தது. "புதியபாதை" பத்திரிகை "மக்கள் பாதை" சஞ்சிகை போன்றன வெளிவந்திருந்த போதும் கூட, புளொட் உறுப்பினர்கள் தம்மையொரு தலைமறைவு அமைப்பாகக் கருதி குறுகிய வட்டத்துக்குள்  செயற்பட்டதாகவே என்னால் அன்று உணர முடிந்தது.

(சுந்தரம் என்ற சிவசண்முகமூர்த்தி புலிகளால் சித்திரா அச்சகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட "புதிய பாதை" யின் ஆசிரியர்)

 

1983 யூலையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் திருநெல்வேலியில் இராணுவத்தின் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இத்தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு, குருதியை உறையவைக்கும் வெலிக்கடைச் சிறைக் கைதிகள் படுகொலை, அரச படைகள் நகரங்களில் மேற்கொண்ட  படு கொலைகள், தென்னிலங்கையிலிருந்து கப்பல்களில் அகதிகளின் வருகை அனைத்துமே அரசுக்கெதிராக ஆயுதமேந்திப் போராட வேண்டுமென்ற உத்வேகத்தை எனக்குக் கொடுத்தது. ஆனால் நான் அன்று தொடர்புகளைப் பேணிவந்த GUES (ஈழ மாணவர் பொது மன்றம்) அமைப்போ முற்போக்கான கருத்துக்களைக் கொண்டிருந்த போதும், வெகுஜன மட்டத்தில் முற்போக்கான போராட்டத்தை முன்னெடுத்த போதும், இராணுவ ரீதியான செயற்பாடுகளில் பெருமளவுக்கு ஈடுபாடு இல்லாதவர்களாகவே காணப்பட்டனர். புளொட் அமைப்பை பொறுத்தவரை முற்போக்கான கருத்தை கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல், இராணுவ ரீதியான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஏற்கனவே எனக்கு அறிமுகமாகியிருந்த புளொட் உறுப்பினர் சத்தியமூர்த்தியின் தொடர்புக் கூடாக முழு நேரமாக புளொட்டில் செயற்பட ஆரம்பித்தேன். புளொட்டில் இணணயும் போது அதன் கொள்கை, கோட்பாடு என்ன என்பதை விட உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உத்வேகமே முன்னிலையில் இருந்தது. புளொட்டில் இணைந்ததிலிருந்து GUES (ஈழ மாணவர் பொது மன்றம்) உடனான தொடர்புகள் அனைத்தும் முடிவுக்கு வந்தது.

83 ஜீலை கலவரம்

 

 

 

 

 

Dr. ராஜசுந்தரம்: காந்தீயம்- வவுனியா, குட்டிமணி, தங்கத்துரை

 

 

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்பட்டவர்களில் இவர்களும் அடங்குவர்

 

1983 யூலை இன அழிப்பு நடவடிக்கையால் மக்கள் மத்தியில் அரசுக்கெதிரான வெறுப்புணர்வு அதன் உச்சநிலையை அடைந்திருந்தது. குறிப்பாக இளைஞர்கள் (யுவதிகளும் கூட) ஏதாவது ஒருவழியில் அரசுக்கெதிராகப் போராடவேண்டும் என்ற மனநிலை உடையவராகக் காணப்பட்டனர்.

 

தம்மை விடுதலை இயக்கங்களாகக் காட்டிக் கொண்ட எந்த இயக்கமும் (புளொட் உட்பட) இத்தகையதொரு சூழ்நிலையை தமக்கு சாதகமாகப் பாவிக்க முடியாத அளவுக்கு அரசியல் ரீதியிலும் (அமைப்பு வடிவத்திலும் கூட), இராணுவ ரீதியிலும் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தனர் என்றே சொல்ல வேண்டும். இத்தகையதொரு சூழ்நிலையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்த இந்திய அரசு மட்டுமே தயார் நிலையில் இருந்தது.

 

 

 

 

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா

 

இலங்கை அரசின் (ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான அரசின்) முழுமையான மேற்கத்தைய சார்பு நிலையை நீண்ட நாட்களாக உன்னிப்பாக அவதானித்து வந்திருந்த இந்திய அரசு, இத்தகையதோர் "கனிந்த" சூழலை இலங்கை அரசுக்கெதிராகப் பயன்படுத்த முடிவெடுத்தது.

 

 

 

 

இந்திரா காந்தி

 

இந்திய அரசின் புலனாய்வுத் துறை அதிகாரிகள் இயக்கத் தலைமைகளை அணுகி தாம் இராணுவப் பயிற்சியளித்து தருவதற்கு தயாராக இருப்பதாகவும் இளைஞர்களை இந்தியா அழைத்து வருமாறும் கேட்டுக் கொண்டனர். நான் அறிந்தவரை பெரும்பாலும் அனைத்து இயக்கங்களுமே – என்.எல்.எவ்.ரி(NLFT), தமிழ்மக்கள் பாதுகாப்புப் பேரவை தவிர- ஆட்சேர்ப்பில் இறங்கின. நாமும் எமது பங்குக்கு ஆட்சேர்ப்பில் இறங்கினோம்.

 

கடந்த காலங்களில் புளொட், காந்தீயம் போன்ற அமைப்புக்களில் செயற்பட்டவர்கள் உட்பட, புளொட்டுடன் எந்தவித தொடர்புகளுமே அற்றவர்கள் வரை (பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள்) அனைத்து மாவட்டங்களில் இருந்தும் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டனர். புளொட்டின் பெரும்பாலான வேலைகள், செயற்பாடுகள், அனைத்துமே யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு நகர்த்தப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் அரசபடைகளின் கெடுபிடிகள், வன்னிப் பகுதியில் காந்தீயம் மீதான குறிவைப்பு என்பனவும் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி செயற்பாடுகள் நகர்த்தப்பட்டமைக்கு ஒரு காரணமாகும்.

 

கேதீஸ்வரன்

 

 

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான சத்தியமூர்த்தி, கேதீஸ்வரன் போன்றோர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மட்டத்திலும் அதற்கு வெளியிலும் ஆற்றிய கடின உழைப்பு, புதிய அங்கத்தவர்களை இனங்கண்டு புளொட்டுக்குள் உள்வாங்கியமை போன்ற நடவடிக்கைகள் போன்றவை, யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு செயற்பாடுகள் நகர்த்தப்பட்டமைக்கு மற்றொரு காரணமாகும்.

 

ஆனால் இத்தகையதொரு எதிர்பார்த்திராத வளர்ச்சியை – ஒரு வீக்கத்தை என்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்- கையாளும் நிலையில் புளொட்டின் முன்னணி அங்கத்தவர்களில் பெரும்பான்மையானோர் அரசியல் வளர்ச்சி பெற்றவர்களாகவோ அல்லது அநுபவ தேர்ச்சி பெற்றவர்களாகவோ இருக்கவில்லை என்பது மட்டுமல்ல சரியான, முறையான அமைப்பு வடிவங்களும் கூட இருக்கவில்லை. இத்தகையதொரு நிலையை கையாள தயார் நிலையில் புளொட் இல்லாமல் இருந்ததால் பல்வேறு நெருக்கடிகளையும் முகம் கொடுக்க நேர்ந்தது. 1983 இல் ஏவிவிடப்பட்ட இனக் கலவரத்துக்கு பின்னான காலகட்டம் இதுவாகும்.

 

இதே காலப் பகுதியில் மட்டக்களப்பு சிறையுடைப்பில் இருந்து தப்பி வந்த போராளிகளும், இந்தச் சிறையுடைப்பு நடவடிக்கையுடன் தொடர்புபட்டு தேடப்பட்ட நபர்களும் என ( மட்டக்களப்பு வாசுதேவா, மாசிலாமணி உட்பட)

 

 

 

 

(மட்டக்களப்பு வாசுதேவா)

 

அவர்கள் குடும்பங்களுடன் யாழ்ப்பாணம் வந்தனர். ஏனைய மாவட்டங்களில் இருந்து வருபவர்களைத் தங்க வைத்தல், அவர்களுக்கான உணவு, இந்தியாவுக்கு கடல் மார்க்கமாக அனுப்பி வைத்தல் என்பன ஒருபுறமும், அரசியல் வகுப்புக்களை நடத்துவது, கிராமங்கள் தோறும் கூட்டங்களை ஒழுங்கு செய்வது, மக்களை அமைப்பாக்குவது என்பன மறுபுறமுமாக எம் மேல் அளவுக்கு மீறிய சுமைகள் ஏற்றப்பட்டதால், அனைவருமே கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அமைப்புக்கு வருபவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதென்பது ஆரம்ப காலங்களில் பெரும் பிரச்சனைக்குரியதொன்றாக இருந்தது.

 

பெரும் எண்ணிக்கையானவர்கள் ஏனைய மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணம் வந்ததால், அவர்களை தங்க வைப்பதில் பல பிரச்சனைகளை முகம் கொடுக்க வேண்டியிருந்தது. புளொட்டிடம் ஒரு தூர விசைப் படகு மட்டுமே அன்று இருந்தது. சுழிபுரம் பகுதியில் இருந்தே இந்தப் படகு இந்தியா சென்று வருவது வழக்கம். இதற்குப் பொறுப்பாக வதிரி சதீஸ் இருந்தார். (சதீஸ் புளொட்டினால் பின்னர் படுகொலை செய்யப்பட்டார்). இந்தப் படகு கூட பல்வேறு காரணங்களால் ஒழுங்காக இந்தியா சென்று வருவதில்லை.

 

ஏனைய மாவட்டங்களில் இருந்து பயிற்சிக்கு செல்லத் தயாரானவர்களையும், இந்த ஒரு தூர விசைப் படகையும் வைத்துக் கொண்டு இந்தியா அனுப்புவதென்பது நடைமுறைச் சாத்தியமற்றதொன்றாக இருந்தது. இதனால் ஆரம்ப காலங்களில் தனி நபர்களின் படகுகளை வாடகைக்கு அமர்த்துதல், மீன் பிடிக்கும் றோலர்களை வாடகைக்கு அமர்த்துதல் மூலமாகவே பெருமளவானவர்கள் இந்தியாவுக்கு பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இத்தகைய செயற்பாடுகள் சுழிபுரம், மாதகல், இளவாலை, நெடுந்தீவு, மண்டைதீவு போன்ற பிரதேசங்களில் இருந்து இடம் பெற்றன. சுழிபுரம், மாதகல், இளவாலை, பிரதேசங்களில் இத்தகைய செயற்பாடுகளை குமரன் (பொன்னுத்துரை), இளவாலை போத்தார், மாதகல் ரவி ஆகியோர் கவனித்து வந்தனர். நெடுந்தீவு, மண்டைதீவு போன்ற இடங்களில் படகுப் போக்குவரத்து நடவடிக்கைளில் ஜீவன் தொடர்புகளை ஏற்படுத்தி தந்தார். பிற்பட்ட காலங்களில் மேலதிக படகுகளை புளொட் சொந்தமாக வாங்கிக் கொண்டது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான புளொட்டின் ஆரம்ப கால கடல் போக்குவரத்தென்பது மிகவும் சிக்கலானதொன்றாகவும், பல கஸ்டங்களையும் நெருக்கடிகளையும் கடந்தாக வேண்டியதொன்றாகவும் இருந்ததென்பதே உண்மை.

29/04/2011

(தொடரும்)

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1