Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

வெள்ளாளிய சிந்தனையிலான மத வன்முறையும் - வன்முறை குறித்த கண்ணோட்டங்களும்

யுத்தத்தின் பின் ஒடுக்கும் அடையாளங்களாக பௌத்தம் மட்டும் வடகிழக்கில் திடீர்திடீரென முளைக்கவில்லை.  மாறாக இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய மத அடையாளங்கள்  - அங்குமிங்குமாக திடீர் திடீரென தோன்றுவது நடந்தேறுகின்றது. யாழ் சமூக அமைப்பின்  சிந்தனைமுறையாக இருக்கும் வெள்ளாளியமானது, சாதிய அடையாளங்களையும்  சாதிப் பண்பாடுகளையும், இந்து - கிறிஸ்துவ மத அடையாளங்களையும் சமூகத்தில் திணித்து வருகின்றன.

கோயில்கள் பெருக்கெடுக்கின்றன. சாதிய ஆச்சாரங்கள் கோயில்களில் குடிகொள்கின்றன. பாடசாலைகள் கூட மத அடையாளங்களால் குறுகி வருகின்றது. மக்கள் வறுமையில் வாட, மதங்களோ கொழுத்துக் கொண்டு இருக்கின்றன. கோயிலைச் சுற்றிய பணம் அதிகாரமாக, வன்முறையாக மாறுகின்றது. மனிதனுக்கே உரிய உழைப்பு, உருவாக்கும் சமூக அறங்கள் அழிந்து வருகின்ற பொதுப் பின்னணியில், மதங்கள் தலைமை தாங்குகின்றன. தனிப்பட்ட கடவுள் நம்பிக்கைகள் மதமாகவும், மத வெறியாகவும், மத வன்முறையாகவும் மாற்றப்படுகின்றது.

மாட கோபுரங்களாக மாறும் கோயில்;களைக்; கும்பிட மக்களில்லை. கோயில்களின் பின்னால் கொழுத்த கும்பல்களின் தோற்றம், சமூகத்தின் மேலான சமூக அதிகாரமாக மாறியுள்ளது. யுத்தத்தின் பின் அதிகமான புலம்பெயர் நிதி, கோயில்களில் வெறும் கொங்கிரிட் கற்குவியலாக மாறியுள்ளது. இந்தப் பணமானது பாரிய ஊழலை செய்து வளர்ந்த கொழுத்த கும்பலே, மத வெறியையும் -  மத வன்முறையையும் செய்வதை கடவுள் நம்பிக்கையாக மாற்றியுள்ளது.  இந்து – கிறிஸ்துவ கோயில்கள் வெள்ளாளிய சிந்தனையிலான, சாதிய ஆகம கோயிலாக்கி வருகின்றது. கிறிஸ்துவ கோயில் கூட வெள்ளாளிய சிந்தனையிலான சாதி அடிப்படையிலான சமூக பிரிவுகளையும் -  பிளவுகளையும் கொண்டதாக மாறி வருகின்றது. 

யுத்தத்தின் பின் தீவிரமாக மதமும், மத அடிப்படைவாதங்களும் சமூகத்தில் புகுத்தப்படுவதன் விளைவே மன்னார் வன்முறை. மன்னார் மோதல் சம்பவம் இனரீதியாக ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை, மத ரீதியாக பிளந்து விடவும், வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைவதைத் தடுக்கவும் விரும்பும் தரப்புகளின், ஒடுக்கும் சிந்தனை முறையின் விளைவாகும். இந்துப் பூசாரிகளாலும் இந்து கோயில் நிர்வாகிகளாலும், பாதிரிகளினாலும் திணிக்கப்படும் மத அடிப்படைவாதத்தோடு, ஒடுக்கும் ஆளும் வர்க்கக் கோட்பாடுகளின் விளைவே மன்னார்ச் சம்பவம்.

இது மட்டுமின்றி இன்றைய உலகமயமாக்க நவதாராளவாதமானது சிலரை பணக்காரராக மாற்றும் இன்றைய சர்வதேசப் போக்கில், மக்களை திசைதிருப்ப மத அடிப்படை வாதத்தை மக்கள் மத்தியில் திணித்து வருகின்றனர். மக்கள் தங்கள் அடிப்படை வாழ்க்கையை இழக்கின்றதும், அதன்போது அதற்கு எதிராக போராடுவதைக் தடுக்கவே, ஏகாதிபத்தியங்கள் மத அடிப்படைவாதங்களை தோற்றுவித்து வருகின்றது. தலிபான், இஸ்லாமிய அரசு போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களை, உலகளாவில் ஏகாதிபத்தியங்கள் திட்டமிட்டு உருவாக்கியது. அது மட்டுமின்றி முழு முஸ்லிம் மக்கள் மத்தியில் இஸ்லாமிய மத அடிப்படைவாத சிந்தனைகளை, அதன் வாழ்க்கை முறைக்குள் தள்ளியுள்ளது. இந்த சர்வதேச நிகழ்ச்சிநிரலின் அங்கமாக, பிற மத அடிப்படைவாதங்களும் தோற்றுவிக்கப்பட்டு வருகின்றது.

இந்த சர்வதேச பின்னணிக்கு அமைவாக பூசாரிகளுக்கும், பாதிரிகளுக்கும் கிடைக்கும் சொகுசான வாழ்க்கை, மத அடிப்படைவாதத்தை தூண்டி விட காரணமாகின்றது. புலம்பெயர் நாடுகளில் இருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான பணம், அந்நிய நாடுகள் மதத்தின் பெயரில் கொடுக்கும் பணம் … மதத்தின் பெயரில் கிடைக்கும் ஆடம்பரமான வாழ்க்கையையும், மத ரீதியான சமூக மேலாண்மையையும் கொண்டு சமூகம் மீதான அதிகாரமாக மாறுகின்றது. இதை தக்க வைக்க, மதத்தின் பெயரில் சமூகத்தை பிளந்து விடுவதற்கு வன்முறை அவசியமாகின்றது.

இந்தியாவில் பார்ப்பனிய காவி கார்ப்பரேட் பாசிசம் இலங்கையில் சிவசேனாவை உருவாக்கியது. இல்லாத கடவுளையும், புதிய சாதிய மதக் கலாச்சாரங்களையும் ஏற்றுமதி செய்கின்ற பின்னணியில் - வடக்கில் இந்திய தூதரகத்தையே நிறுவியுள்ளது. வடகிழக்கு மக்களை காவி வெள்ளாளிய இந்துத்துவமாக சீரழித்து வருகின்றது. இது போன்று வடகிழக்கு கிறிஸ்துவமானது, மேற்கத்தைய ஜனநாயக மரபுகளையும் - சேவை மனப்பாங்கையும்  அடிப்படையாகக் கொண்டிருந்த தமது மத அடிப்படைகளைக் களைந்து, புலம்பெயர்ந்த தமிழனின் பாரிய நிதியாதாரங்களைச் பெற்றுக் கொண்டு - அதை வெள்ளாளிய அதிகார மதமாக மாற்றும் - மதவெறியை பிரச்சாரத்தை செய்கின்றது.

இந்து வெள்ளாளிய சிந்தனை போல், கிறிஸ்துவ வெள்ளாளியமாக மாறி நிற்கின்றது. மக்களை சாதி ரீதியாகவும், வர்க்க ரீதியாகயும் பிரித்து வைத்திருக்கும் மதங்கள், மத வெறியை ஊட்டி பிற மதங்களை ஒடுக்கும் மத வெறியாக சமூகத்தை மாற்றி இருக்கின்றது. மதங்கள் சமூக விரோத மதக் கூறுகளாக மாறி, சமூகத்தை ஒடுக்குகின்றது.

அங்குமிங்குமாக சிலைகளை வைப்பது, ஆக்கிரமிப்பதன்.. மூலம் மதத்தை முன்னிறுத்தி, அதையே பக்தியாக மாற்றுகின்றது. வடகிழக்கு எங்கும் வீட்டுக்கு வீடு நடக்கின்ற மத தர்க்கங்கள், சிறிய மோதல்கள், மன்னாரில் வெளிப்பiடான வன்முறையாக வெளிப்பட்டு நிற்கின்றது.

கடவுள் நம்பிக்கையையும், வழிபாடும் தனிமனிதனின் தேர்வுக்குரியது. பிற மனிதனை துன்புறுத்தவும், இழிவுபடுத்தவும், ஒடுக்கவுமே மதம் என்றால், அது  நம்பிக்கையல்ல. மாறாக அது மதத்தின் பெயரில் பிறரை ஒடுக்குகின்ற ஒடுக்கும் ஒடுக்குமுறை.

கடவுள் பற்றிய தனிமனித நம்பிக்கைக்கு முரணானதும், வழிபடுபவன் நம்பும் கடவுளின் இயல்புக்கு முரணானது. வன்முறை பிறரை ஒடுக்கி வாழ நினைப்பது, ஒரு நாளும் நீங்கள் நம்பும் கடவுளின் இயல்பாக இருக்க முடியாது. இதை மனித சமூகம் அங்கீகரிக்கவும் முடியாது. மதத்தைக் கொண்டு மக்களை பிளப்பவர்களும், இதை முன்னிறுத்தி எதிரும் புதிருமாக பிரச்சாரம் செய்பவர்களும், ஆதரிப்பவர்களும் சமூக விரோதிகள். மானிட விரோதிகளும் ஆவார்.