Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

"தமிழனின்" வடகடலைச் சுரண்டும் - இந்திய "தமிழ் தேசிய" ரோலர்கள்

இந்திய ரோலர்கள் வட கடலைச் சூறையாடுவதும் - இலங்கை மீனவர்கள் அதை தடுக்கக் கோரி இலங்கை கடற்படை முகாமுக்கு முன் போராடுவதும் நடக்கின்றது. கடற்படை வட கடலை சூறையாடுவதை தடுப்பது - அரசின் "நல்லாட்சிக்கு" விரோதமானதாக கருதுகின்றது. இன்று அதிகாரத்துக்கு வந்த புதிய முகமாற்ற "நல்லாட்சி" - இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத்துக்கானதே. "நல்லாட்சி" என்பது மக்களின் நலன் சார்ந்ததல்ல என்பதையும் - இலங்கைக் கடலில் அத்துமீறும் நாசகார அழிவுகர ரோலர்களை தடுத்து நிறுத்துவதையும் மறுக்கின்றது.

தமிழ் தேசியத்தை நம்பி அதற்கு வாக்களித்த வடக்கு மீனவர்கள் - இன்று தனித்து தனிமைப்பட்டு போயுள்ள நிலையில், தமக்காக தாம் மட்டும் போராட வேண்டியுள்ளது. இனவாதத்தை முன்வைத்து தமிழ் அரசியல்வாதிகள் - இந்தியாவின் மேலாதிக்கத்துடன் சேர்ந்து - மீனவர்களின் அடிப்படை வாழ்க்கையை சூறையாட துணை நிற்கின்றனர்.

அரசின் "நல்லாட்சியும்" - கூட்டமைப்பின் "இணக்க அரசியலும்", மக்களை சூறையாடுவது தான். அரசு – எதிர்க்கட்சியும், மக்களின் வாழ்க்கையை அழிக்கும் இந்திய ரோலர்கள் தொடர்பாக ஒரேவிதமாக அணுகுவதும் - அதன் அடிப்படையில் மீனவர்களை கைவிட்டு வருவது இன்று நடந்து வருகின்றது.

இனரீதியாக மக்களை அணிதிரட்டிய மக்கள் பிரதிநிதிகள் - தன் இனத்தைச் சேர்ந்த வடக்கு மீனவர்களின் பிரச்சனைக்குத் தீர்வாக - இந்திய தமிழ் தேசியவாதிகளிடம் ரோலரை தடை செய்யக் கோரவில்லை. தமிழ்நாட்டு சட்டசபையில் தமிழர் சார்பானதாகக் கூறி தீர்மானம் நிறைவேற்றுகின்ற இன்றைய நிலையிலும் - இலங்கைத் தமிழரின் ஒரு பகுதியான மீனவர்களின் வாழ்வை அழிக்கும் இந்திய ரோலரை தடைசெய்யும் சட்டத்தைக் கொண்டு வருவதுமில்லை. வடக்கு மீனவர்களின் வாக்கைப் பெற்று வென்ற "தமிழ் தேசியவாதிகள்", தமிழக அரசிடமும் - தமிழக தமிழத் தேசியவாதிகளிடமும் ரோலரை தடைசெய்யக் கோருவதில்லை.

"தமிழ் தேசிய"த்தை முன்னிறுத்தி அதை முதன்மையாக்கி வடக்கு மீனவர்களை கைவிட்டுள்ள அதேநேரம் - தமிழ்த்தேசியம் பேசிக்கொண்ட இந்திய ரோலர் முதலாளிகள் வட கடலை சூறையாடுவதற்கு துணையாக நிற்கின்றனர்.

இது தான் எதார்த்தம் - இது தான் உண்மை. இதை மாற்றி அமைக்க

1. வடக்கு மீனவர்கள் தமிழன் என்ற குறுகிய அரசியலை தூக்கி எறிந்து, மீனவர்களாக - உழைக்கும் வர்க்கமாக தம்மை அடையாளப்படுத்தி தமக்காக தாம் ஒன்றுபட்டு அணிதிரண்டு போராடுவதும்

2. வடக்குக்கு வெளியே உள்ள மீனவர்களுடன் - மொழி கடந்து மீனவர்களாக ஒன்று இணைந்து போராடுவதும்

3. இந்திய மீனவர்களுடன் இணைந்து, இந்தியா ரோலர் முதலாளிகளுக்கு எதிராக போராடுவதும்

இந்த மூன்று அடிப்படைகளில் ஒருங்கிணைந்த போராட்டங்களை கட்டமைப்பதன் மூலமே - இந்திய இலங்கை அரசுக்கும் - இந்தியப் பெரும் முதலாளிகளின் ரோலருக்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் - மீனவர்களின் அடிப்படை உரிமையையும் - நலனையும் வென்றெடுக்க முடியும்.