Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஒடுக்கும் தமிழனுக்கு எதிரான ஒடுக்கப்பட்டவர்களின் வெற்றியும் - அதன் படிப்பினைகளும்

வெள்ளாளிய சிந்தனையிலான தங்கள் சாதிய மயானத்தைப் பாதுகாக்கவே, தமிழ் தேசியத் தலைவர்கள் முதல் தமிழ்தேசியவாதிகள் வரை தலைகீழாக நின்றனர், நிற்கின்றனர்.. தங்களது வெள்ளாளிய சிந்தனையில் நின்று, மயானத்தை அகற்றும் போராட்டத்தின் மீது காறி உமிழ்ந்தனர். தமிழ் தேசியம் மூலம் தாங்கள் பெற்ற அதிகாரத்தைக் கொண்டு, தீர்வுகளைத் தரமறுத்தனர், மறுக்கின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் தங்கள் சாதிய-வர்க்க மனப்பாங்கில் நின்று போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியதுடன், திட்டமிட்டே போராட்டத்தை புறக்கணித்தனர். இதன் மூலம் சாதிய ஒடுக்குமுறையைக் கையாண்டனர். இப்படிப்பட்ட இந்த தமிழ் தேசிய சாதிய அரசியலை எதிர்த்துப் போராடியதன் மூலமே, ஒடுக்கப்பட்ட மக்களின் முதல் வெற்றி பெறப்பட்டு இருக்கின்றது.

உழைக்கும் வர்க்கக் கட்சியின் தலைமையில் மக்கள் அணிதிரண்டு போராடுவதன் மூலமே பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் காணமுடியும் என்பதற்கு, இப்போராட்டம் சரியான எடுத்துக்காட்டாகும். நிலவும் சாதிய - சுரண்டல் சமூக அமைப்பு முறை மூலம், ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியாது என்பதை, இந்தப் போராட்டம் தெள்ளத் தெளிவாக அம்பலப்படுத்தி இருக்கின்றது.

 

ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையில் அணிதிரண்ட கலைமதிக் கிராம மக்களின் போராட்டமானது, தமிழ் மக்கள் எந்த அரசியல் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகி இருக்கின்றது. இதற்கு மாறாக ஒடுக்கும் வர்க்க - சாதிய தலைமையில் அணிதிரண்டு போராடிய தமிழ் தேசியப் போராட்டங்கள், தொடர்சியாகத் தோற்றுப் போகின்ற ஒரு வரலாற்றுக் கட்டத்திலேயே, இந்தப் போராட்டம் வெற்றி பெற்று இருக்கின்றது.

போலியான சாதி எதிர்ப்பு - சாதி ஒழிப்பு குறித்து

எங்கும் எதிலும் போலிகளும், போலித்தனங்களும் மலிந்து கிடக்கின்றது. சாதி எதிர்ப்பு – சாதி ஒழிப்பில் கூட போலித்தனமானது, சாதியைப் பாதுகாக்கின்றது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான நடைமுறையில் முன்னெடுத்த போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருந்ததன் மூலம், தங்கள் சாதி வேசத்தைக் கட்டிக் காக்க முனைந்தனர். போராட்டத்தை வழிநடத்திய கட்சியை காரணமாகக் காட்டியும், வேறு காரணங்களைக் காட்டியும் போராட்டத்தை தனிமைப்படுத்த முனைந்த அரசியல் - இலக்கிய பின்னணியில் இருந்த அனைவரும், தங்கள் சாதிய முகத்தை மூடிக்கொள்வதற்கு "முரண்களை" பயன்படுத்தி இருக்கின்றனர்.

இந்த அரசியல் பின்னணியில் இருப்பவர்களுக்குள், கடந்தகாலத்தில் புலியெதிர்ப்பு மூலம் முற்போக்கு வேசம் போட்ட வேசதாரிகளும், ஜனநாயகம் பேசி இடதுசாரியாகிய எல்லா அரசியல் - இலக்கிய பன்னாடைகளும் அடங்கும். எழுத்துத்திறன் மூலம் சமூக முன்னோடியாக தம்மை முன்னிறுத்தி அல்லது முன்னிறுத்தப்பட்டவர்கள் தொடங்கி, புத்தகம் போட்டு முற்போக்கானவர்கள் வரை, ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்திய இந்தப் போராட்டத்தில் இருந்து, தங்கள் சாதிய சிந்தனையைக் காப்பாற்றிக் கொள்வற்காகக் காணாமல் போனார்கள். கண்ட இடத்தில் காலைத் தூக்கி மூத்திரம் பெய்யும்; நாய் போல், கண்டதுக்கு எல்லாம் கொடி தூக்கி போராட்;டம் நடத்துகின்ற இந்திய அனுசரணையாளர்கள் தொடங்கி ஏகாதிபத்திய நிதியில் போலிப் புரட்சி – கலை - இலக்கியம் செய்யும் தன்னார்வாளர்கள் வரை, ஒடுக்கப்பட்ட இந்த மக்களின் போராட்டத்தைக் கண்டு கொள்ளவேயில்லை. நுணுகிப் பார்த்தால், வெள்ளாளிய மயானத்தை அகற்றும் போராட்டத்துக்கு எதிராக, திட்டமிட்டு இயங்கி இருக்கின்றனர்.

எல்லாப் புகழும் இலக்கியத்துக்கே என்று நடிக்கின்ற யாழ் வெள்ளாளிய நடுநிலைவாத அறிவியலையும், ஒடுக்கும் சிந்தனையையும் இந்தப் போராட்டம் கேள்வி கேட்டு இருக்கின்றது. புத்தகம் எழுதியும், இலக்கியம் படைத்தும், கவிதை பாடியும், புலியை விமர்ச்சித்து, ஜனநாயகம் பேசியும்;, பெண்ணியம் கதைத்தும், சாதிக்கு எதிராக பட்டம் விட்டும் … எழுதிய எழுத்துகள், பேச்சுகள், சிந்தனைகள் எவையும், ஒடுக்கப்பட்ட இந்த மக்களின் போராட்டத்தை ஆதரிக்க முன்வரவில்லை. இவர்கள் தங்கள் அறிவு மூலம் சமூக முன்னோடியாக தங்களை முன்னிறுத்த முன்வைக்கும் "சாதி ஒழிப்பு", "சாதிக் கொடுமை பற்றிய" எல்லாப் பினாத்தல்களும், வெள்ளாளியச் சிந்தனையிலானது என்பதே உண்மையாகும்.

இதில் சிலர் வெளிப்படையாகவே தங்கள் வெள்ளாளிய சிந்தனையில் இருந்து இதற்கு எதிராக புனை பெயர்களில் எழுதினார்கள். பெரும்பான்மையானவர்கள் நடந்த போராட்டத்தை கண்டு கொள்ளவேயில்லை, அதே நேரம் சமூகப் பிரச்சனையில் இருந்தும் காணாமல் போனார்கள். இப்படி சமூகத்தின் முன் ஒழித்துக் கொண்ட இவர்கள் எல்லாம், வெள்ளாளிய சிந்தனையிலான அறிவுத்துறையினரே என்பதை இந்தப் போராட்டம் அம்பலமாக்கி இருக்கின்றது. இந்த வகையில் வெளிப்படையாக வெள்ளாளிய மயானத்தை பாதுகாக்க எழுதியவர்களை விட, அதைப் பற்றி மௌனம் சாதித்துக் கொண்டு ஆதரிப்பவர்களே மிக மிகவும் ஆபத்தானவர்கள்.

சமூகம் குறித்துப் பேசுகின்றவர்களும், ஜனநாயகம் குறித்து அக்கறைப்படுகின்றவர்களும்.. வெள்ளாளிய மயானத்தை அகற்றும் போராட்டத்தில் பங்குகொள்ளாது நடைமுறைரீதியாக புறக்கணித்ததன் மூலம், சாதி ஒடுக்குமுறைக்கு உதவினர். இந்த வகையில் போலி மார்க்சியவாதிகளும், இடதுசாரிகளும், முற்போக்குவாதிகளும், இலக்கியவாதிகளும்.. அடங்கும்.

இது போன்றே "தமிழ் தேசியம்" பேசுகின்ற, "தேசியம்" பேசுகின்ற, "சுயநிர்ணயம்" என்று கூச்சல் போடுகின்ற, எல்லா வெள்ளாளிய சிந்தனைவாதிகளும், ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை தங்கள் மௌனங்கள் மூலம் எதிர்த்து, சாதிய ஒடுக்குமுறைக்கு உதவினர்.

நாங்கள் தமிழர்கள், எங்களுக்குள் சாதியொடுக்குமுறை கிடையாது எமக்கு இனவொடுக்குமுறை மட்டுமே உண்டு, என தமிழர்களின் “ஒற்றுமை” யை முன்வைக்கின்ற வெள்ளாளிய தமிழ் தேசியமானது, இந்தப் போராட்டத்தை எதிர்த்து நின்றது. இதன் மூலம் தமிழனைத் தமிழன் ஒடுக்கும், தங்கள் இனவாத சாதியத் தமிழ்த் திமிரை கொண்டு, தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களை சாதி ரீதியாக ஒடுக்க உதவிய பின்னணியிலேயே, ஒடுக்கும் தமிழர்களுக்கு எதிரான போராட்டம் வெற்றிபெற்றது.

ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமும் - தலைமையும்

வெள்ளாளிய மயானங்களை அகற்றும் போராட்டத்துக்கு முன்பாக, நீண்டகாலமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டங்கள், அரச படைகள் தங்கள் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பதற்கு எதிரான போரட்டங்கள், கைதிகளின் விடுதலைக்கான போராட்டங்கள்.. நடந்து வருகின்றது.

இப் போராட்டங்கள் அணிதிரட்டப்படாதவையாகவும், தன்னெழுச்சியாகவுமே நடந்து வருகின்றது. அதேநேரம் இந்தப் போராட்டச் சூழலை தங்கள் தனிப்பட்ட நலனுக்கும், குறுகிய அரசியல் நோக்கத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளும் பலரும், நடக்கும் போராட்டங்கள் மேல் ஏறி சவாரி செய்கின்றவர்களாக இருக்கின்றனர். இதற்கு மாறாக இடதுசாரியக் கட்சிகள் இந்த போராட்டத்தை ஆதரித்து, அரசியல்ரீதியாக நெறிப்படுத்த முனையும் பொது எல்லைக்குள் தலையிடுகின்றனர்.

விடாப்பிடியானதும், தன்னெழுச்சியுமான போராட்டத்தினால் வெற்றி பெற முடியாதுள்ளது. இந்த போராட்டங்கள் சரியான இலக்கை நோக்கி செல்லும் கோசம், நாடு தளுவிய ஒருங்கிணைந்த பிரச்சாரத்தை முன்னெடுக்கப்பட முடியாத அளவுக்கு, இந்தப் போராட்டமானது தேக்கத்தைச் சந்திக்கின்றது. ஒடுக்கப்பட்ட இடதுசாரியத் தலைமைகளின் வழிகாட்டல்களின்றி, எடுப்பார் கைப்பிள்ளை போல் அங்குமிங்குமாக இழுபடுகின்றது. இதுதான் இந்தப் போராட்டங்களின்  தோல்விக்கான அரசியல் அடிப்படையாகும்.

இதற்கு மாறாக வெள்ளாளிய மயானங்களை அகற்றக் கோரும் போராட்டம், இதற்கு முரணாக ஒடுக்கப்பபட்ட தலைமையில் ஒருங்கிணைந்திருந்ததன் மூலம் வெற்றிபெற்றுள்ளது. நாட்டின் அனைத்து இடதுசாரிய சக்திகளுடன் இணைந்து கொண்டு போராடும் அளவுக்கு, தன்னை அரசியல் மயப்படுத்திக் கொண்டது. இனம் மதம் சாதி கடந்து தன்னை ஜனநாயகப்படுத்திக் கொண்டது. இதனாலேயே இந்தப் போராட்டம் வெற்றி பெற்றதுடன், இதை கற்றுக்கொள்ளவும் கோருகின்றது.

ஒடுக்கப்பட்ட தமிழ்மக்கள் மேலான ஒடுக்குமுறையை எதிர்த்து, ஒடுக்கும் தமிழ் தலைமையிலான 30 வருட கால போராட்டமானது, தமிழ் மக்களையே ஒடுக்கியது. இப்படி ஒடுக்கும் வர்க்கத்தின் தலைமையில் போராடுவதே, தமிழ் தேசியத்தின்  வரலாறாக இருக்கின்றது. அரசியல் தீர்வைக் கோருவது முதல் முகமாற்ற "நல்லாட்சி" மூலம் மாற்றத்தைக் கொண்டு வருவது வரை, ஒடுக்கும் தமிழ் தலைமையில் கோருகின்றனர். இதன் மூலம்  மக்கள் தொடர்ச்சியாக தோற்கடிக்கப்படுகின்ற வரலாறாகவே, ஒடுக்கும் தமிழனின் வரலாறு நீண்டு கிடக்கின்றது. இது தான் உலக வரலாறும் கூட.

தெற்கில் ஒடுக்கப்பட்டவர்களின் தலைமையில் நடக்கும் போராட்டங்கள், மக்களின் அடிப்படை பிரச்சனைகளுடன் ஒன்றி நிற்பதும், அதன் மூலம் வெற்றிகளைச் சந்திப்பதும் அன்றாடம் நடந்து வருகின்றது. இதே போன்று நீணடகாலத்தின் பின்பாக, வடக்கில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையிலான முன்னுதாரணமிக்க போராட்டமாக, வெள்ளாளிய மயானத்துக்கு எதிரான போராட்டம் நடந்திருக்கின்றது.

இதே போன்று தமிழ்மக்கள் ஒடுக்கும் வர்க்க – சாதியத் தலைமையில் போராட்டம் நடத்தி தோற்பதற்குப் பதில், ஒடுக்கப்பட்டவர்களின் தலைமையில் போராடுவதன் மூலம், தமிழ் மக்கள் மேலான ஒடுக்குமுறையை வெற்றிகொள்ள முடியும். இன்று இனரீதியாக தமிழ்மக்கள் ஒடுக்கப்படுகின்ற பின்னணியில், ஒடுக்கப்பட்ட அரசியல் தலைமையில் அணிதிரள்வதன் மூலமே, உண்மையான மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க முடியும்;. ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் என்ற வகையில், தனக்குள்ளான அக ஒடுக்குமுறையை கொண்டிருக்கும் வரை, அது ஒடுக்கப்பட்டவர்களின் தலைமையாக ஒரு நாளும் இருக்க முடியாது. மாறாக ஒடுக்கும் தலைமையாக தன்னை நிறுவிக் கொள்கின்றது. இதனால் அனைத்து மக்களையும் அணிதிரட்ட முடியாமல் போவதுடன், அக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்குவதுடன், போராடும் ஜனநாயகத்தையே ஒழித்துக் கட்டிவிடுகின்றது.

தமிழ் தேசியம் என்பது அகமுரண்பாடுகளை உள்ளடக்கிய ஒடுக்குமுறைகளைக் கொண்டதாக இருக்க வேண்டுமா அல்லது அகமுரண்பாடுகளை ஒழித்துக் கட்டும் சர்வதேசியமாக இருக்க வேண்டுமா என்பதை, இன்று நாம் தீர்மானித்தாக வேண்டும்.

மயானத்தை அகற்ற மறுப்பது - வெள்ளாளிய சிந்தனையிலான ஒடுக்குமுறையே

மயானத்தை அகற்றக் கோரிப் போராடியவர்கள் முன்வைத்த காரணங்களை மறுப்பதற்கு, யாரும் முன்வரவில்லை. அருகில் வேறு மயானங்களின்றியோ அல்லது சட்டரீதியான காரணங்களோ கூறி மயானத்தை அகற்றுவது மறுக்கப்பட்டவில்லை. மாறாக சாதியச் சிந்தனை தான் மயானத்தை அகற்ற மறுத்ததுடன், ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குகின்றதற்கான அடையாளமாகவே, மயானத்தை தக்கவைக்க முனைந்திருக்கின்றனர். சாதிய ஒடுக்குமுறையின் அடையாளமாகவே வெள்ளாளிய மயானங்கள் நீடிப்பதை, இந்த போராட்டத்திற்கு எதிரான எதிர்வினைகள் எடுத்துக்காட்டி இருக்கின்றது.

சுற்றுச்சூழல், மனித வாழ்விடம்.. என்ற மையமான பொதுக் கருதுகோள்களின் அடிப்படையிலேயே, மயானத்தை அகற்றக் கோரிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. வெள்ளாளிய சிந்தனைக்கு எதிராக அல்ல. மயானத்தை அகற்ற மறுத்து நின்றவர்கள், மிகத் தெளிவாக வெள்ளாளிய சிந்தனையிலான சாதிய அடிப்படையில் நின்றே மறுத்தனர். மயானத்தை அகற்றுவதற்கான எதிர்ப்பு, குறித்த பிரதேசத்தைக் கடந்து மேலெழுந்த போது, அதை வெள்ளாளிய சிந்தனையிலான சாதியமே ஒருங்கிணைத்தது. தமிழ் ஊடகங்கள் தொடங்கி தமிழ் தேசிய அரசியல்வாதிகள் வரை, சாதிய சிந்தனையே அவர்களை ஒருங்கிணைத்தது. இங்கு சாதிய சிந்தனை என்பது, ஒரு சாதிக்கு எதிரான இன்னொரு சாதியைக் குறிப்பதில்லை.

மாறாக வெள்ளாளிய சிந்தனையிலான சாதிய சமூக வாழ்க்கை முறையாகும். இது  வெள்ளாளிய மயானத்தை தக்கவைக்;க முனைந்தது. இது தான் இதன் பின்னுள்ள சாதிய அரசியல். இது தான் தமிழ் தேசிய அரசியலும் கூட. இதனால் தான் தமிழ் தேசியம் பேசுகின்ற எவரும் அல்லது எவளும், வெள்ளாளிய மயானத்தை அகற்றும் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. மாறாக அதை மறுதளிக்கும் வெள்ளாளிய சிந்தனைக்கு ஆதரவாக இருந்துள்ளனர், இருந்து வருகின்றனர்.

இங்கு சாதியமென்பது வெள்ளாளியச் சிந்தனையிலானது. எல்லாச் சாதிக்குள்ளும் வெள்ளாளிய சாதிய சிந்தனையே இயங்குகின்றது. சாதிக்கொரு சிந்தனை கிடையாது. வெள்ளாளியச் சிந்தனை என்பது, வெள்ளாளியச் சாதியின் சிந்தனையுமல்ல. அப்படி குறுக்கிப் பார்ப்பதும் கூட, வெள்ளாளிய சாதிய சிந்தனைதான். யாழ் மையவாத சாதியச் சமூக கட்டமைப்பினால் லாபம் அடைந்த சமூகத் பிரிவுகளின் சிந்தனைமுறையே, வெள்ளாளியச் சிந்தனைமுறையாகும். இது ஏற்றத்தாழ்வான சமூகப் பொருளாதார படிநிலை கொண்டதாக, சாதிய சமூகத்தின் எல்லா கட்டமைப்புக்குள்ளும் இயங்குகின்றது. இது பண்பாட்டு கலாச்சார  வேர்களைக் கொண்டதாக இருப்பதால், சாதிய சமூகமாக தன்னை தக்கவைக்க முடிகின்றது.

இங்கு மயானப் பிரச்சனை என்பது இரண்டு சாதிக்கு இடையிலானதல்ல. மாறாக வெள்ளாளிய சிந்தனையிலான மயானங்களுக்கு எதிரானது. வெள்ளாளிய சிந்தனையிலான சாதியவாதிகளும், வெள்ளாளிய தேசியவாதிகளும் மயானத்தை தங்கள் சாதிய ஒடுக்குமுறையின் அங்கமாக கருதி செயற்படும் அரசியல் பின்னணியில், வெள்ளாளிய மயானங்களுக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருங்கிணைந்த போராட்டமாக மாறியது. வெள்ளாளியச் சிந்தனைக்கு எதிரான போராட்டமே, சாதி ஒழிப்பிற்கான அரசியல் அடிப்படை என்பதை, இந்தப் போராட்டம் எமக்கு தௌ;ளத் தெளிவாக கற்றுத் தந்திருக்கின்றது.