Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

தலைவரும், மூன்றெழுத்து நடிகையும்

மருதனார்மடத்து வயல்வெளிகள், தோட்டங்கள் ஊடாக சைக்கிள் மிதிக்கும் போது சில்லென்ற குளிர்காற்று எந்த நேரமும் வீசும். பின்னேரங்களில் ராமநாதன் கல்லூரியின் பெட்டைகள் பாவாடை தாவணியில் உலா வரும்போது இணுவில் தவில், நாதஸ்வர வித்துவான்கள் சாதகம் பண்ணுவது பின்னணி இசையாக காற்றிலே கசிந்து வழியும். சிங்காரவேலனே தேவாவை இசைக்கும் போது எதிரில் வரும் பெட்டைகளைப் பார்த்து "ஏன் நிறுத்தி விட்டாய் சாந்தா" என்று இளிப்பானுகள். அவளுகள் கோபத்தில் முகத்தை திருப்பினாலோ, முறைத்து பார்த்தாலோ ஜென்மசாபல்யம் அடைந்தது போல சந்தோசப்படுவானுகள். ஆனால் இதையெல்லாம் இப்ப செய்ய முடியாது. நாதன் இப்ப ஒரு இயக்கத்திலே சேர்ந்து விட்டான். குரங்குச்சேட்டைகளை எல்லாம் மூட்டை கட்டி வைச்சு விட வேணும் என்று சந்திரன் அண்ணன் கண்டிப்பாக சொல்லியிருந்தார்.

மணியண்ணனின் கடைப்பந்தலில் சைக்கிளை சாத்தி விட்டு உள்ளே நுழைந்தான். மணியண்ணனின் கடை தான் சந்திப்புமையமாக இருந்தது. தமிழரசுக்கட்சியின் தூண்கள், கூட்டணியின் உத்தரங்கள், வாயாலேயே ஈழத்திற்கு எல்லை போட்டவர்கள் எல்லாம் பிரச்சனைகள் பெரிதாக வெடித்த போது காணாமல் போனார்கள். வீட்டுக்கதவுகள் இறுக மூடிக்கொண்டன. மணியண்ணன் மாதிரி ஏழை, எளிய மனிதர்கள் தான் தோள் கொடுத்தார்கள். அவர்களிற்கே போதாத உணவை அன்புடன் பகிர்ந்து கொண்டார்கள். இராணுவத்திடம் பிடிபட்டு காணாமல் போனார்கள். வயல்வெளிகளில், கடற்கரையோரங்களில், பனங்கூடல்களில் குருதி வடிந்தபடி இறந்து கிடந்தார்கள்.

உள்ளே ஆனந்தன் காத்திருந்தான். ஒரு பூ ஒன்று இயக்கத்திலே உடனே சேர வேணுமாம் என்றான். அவர்களுடைய இயக்க ரகசிய பரிபாசைப்படி பூக்கள் என்றால் பெட்டைகள். நாதனிற்கு இதைக் கேட்டதும் சிரிப்பு வரும். எம்.ஜி.ஆர் மாறுவேசத்தில் போகும் போது கன்னத்தில் ஒரு கறுப்பு பொட்டு மட்டும் ஒட்டிக் கொண்டு எதிரிகளை ஏமாற்றி அவர்களின் இடத்திற்குள்ளே நுழைவதை விட இது கோமாளித்தனமாக இருக்குது என்று சிரித்துக் கொள்ளுவான். என்னடா அவ்வளவு அவசரம் காதலில் தோல்வியா என்றான் நாதன். ஒரு பவர்லூம் முதலாளி அவவிலே விருப்பப்பட்டு தாய், தகப்பனிட்டை கலியாணம் கட்ட கேட்டிருக்கிறான். அவ நாட்டிற்காக போராட போறேன் எனக்கு கலியாணம் தேவையில்லை என்று சொல்லி விட்டா. அதாலே வீட்டிலே பிரச்சனை. அது தான் அவ உடனே இயக்கத்திலே சேர வேணும் எண்டு அவசரப்படுகிறா என்றான் ஆனந்தன்.

மாலை மயங்கிய ஒரு மழைக்கால இரவொன்றில் கந்தசாமி கோவிலின் வடக்கு வீதிக்கு வானதி வந்தாள். நாதன் அப்பிடியே பிரமிச்சுப் போய் பார்த்துக் கொண்டே நின்றான். பொன்னியின் செல்வனிற்கு மணியம் வரைந்த வானதியைப் போலவே வடிவு. கண்களை நேராக பார்த்தபடி தயக்கமின்றி கதைக்க தொடங்கினாள். எங்கடை நாடு அடிமைப்பட்டு கிடக்குது. எங்கடை சனத்தை கொன்று குவிக்கிறாங்கள். எங்களை சிறைக்கைதிகளை போல நடத்துறாங்கள். இதையெல்லாமல் எதிர்த்து போராடாமல் கலியாணம், குடும்பம் என்று வாழ என்னாலே முடியாது. நான் உங்கடை இயக்கத்திலே சேருவது என்று முடிவு உறுதியான முடிவு என்றாள். எடுத்தவுடனே ஒருத்தரை இயக்கத்திலே சேர்க்க முடியாது நான் கதைத்து விட்டு உங்களை மறுபடி சந்திக்கிறேன் என்று விட்டு வந்தான் நாதன். வேலையை, படிப்பை, குடும்பத்தை, வாழ்வை உதறித் தள்ளி விட்டு இப்படி எத்தனை பேர் மக்களிற்காக போராடுகிறார்கள் என்பதையே வீடு வரும் வரை நினைத்துக் கொண்டு வந்தான்.

வீட்டடியில் சந்திரன் அண்ணன் காத்துக் கொண்டு நின்றார். இலேசில் உணர்ச்சி வசப்படாதவர் முகத்தில் படபடப்பு தெரிந்தது. இயக்கத்திலே பிரச்சனை, தலைவரை ஆதவன் சுட வெளிக்கிட்டிருக்கிறான். அதுவும் அந்த இயக்கத்திலே இருந்து ஆயுதம் வாங்கியிருக்கிறான். அவனையும்,அவன்ரை ஆட்கள் கொஞ்ச பேரையும் தலைவர் கைது செய்திருக்கிறார். "தலைவர் சர்வாதிகாரமாக நடக்கிறார். இயக்கத்திற்கு ஒரு மத்தியகுழு வேண்டும் என்பதை தட்டிக் கழிக்கிறார். அது தான் அவரை கைது செய்து விட்டு இயக்கத்தை ஜனநாயகப்பாதைக்கு கொண்டு வருவதற்காக இப்படி செய்தேன்" என்று ஆதவன் சொல்லியிருக்கிறான். தொகுதி பொறுப்பாளர்கள் இந்தியா போய் என்ன நடந்தது என்று விசாரிக்க போகிறோம் வீட்டை சொல்லி விட்டு வா என்றார். நாதனிற்கு தலை சுற்றியது. ஆதவன் தலைவரிற்கு அடுத்த இடத்திலே இருந்தவன், இயக்கம் தான் உயிர்மூச்சு. ஏன் இப்பிடி செய்தான். அதுவும் அந்த இயக்கத்திலே ஆயுதம் வாங்கியிருக்கிறான். அவங்கள் ஏற்கனவே மற்ற இயக்கங்களை எல்லாம் அழிச்சு விட்டு தாங்கள் மட்டும் இருக்க வேணும் எண்டு கொலைவெறியோடை அலையிறாங்கள். அவங்கடை திட்டத்திற்கு இவன் பலியாகி விட்டானா என்று பலதையும் யோசித்தான்.

இலை கூட அசையாமல் காற்று இறுகிப் போயிருந்த ஒரு மத்தியான வேளையில் தலைவரை சந்தித்தார்கள். தலைவரிற்கு புத்தகங்கள் படிப்பதென்றால் சரியான விருப்பம். ராகுல்ஜியின் வால்காவில் இருந்து கங்கை வரை, ஜூலியஸ் பூசிக்கின் தூக்குமேடைக்குறிப்புகள் எல்லாம் அவரிற்கு விருப்பமான புத்தகங்கள். அவர் மற்ற சில இயக்க தலைவர்களைப் போல வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளி அல்ல என்று சந்திரன் அண்ணன், சின்ன வசந்தன் பெருமையாக சொல்லியிருந்தார்கள். தலைவர் நல்ல உயரமாகவும், இறுகிய உடற்கட்டுடனும் இருந்தார். ஒரு சின்ன புன்னகை உதட்டிலே எப்பவும் ஒட்டியிருந்தது. நேரடியாக விசயத்திற்கு வந்தார். இயக்கத்தையும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் அழிப்பதற்கு பல சதிகள் நடக்கின்றன. அதற்கு ஆதவன் உடந்தையாகி விட்டான். அவர்களை கைது செய்தது எனக்கும் மனவருத்தம் தான் என்றார். அப்பவும் அவரின் முகத்தில் சிரிப்பு மின்னிக் கொண்டு தான் இருந்தது.

நீங்கள் மத்தியகுழு வருவதை விரும்பவில்லையாம், அதனால் தான் ஆதவன் அப்படி செய்தானாம் என்று கோபு கேட்டான். தலைவர் வாய் திறக்க முதலே தலைவரின் வலதுகை என்று சொல்லப்படும் பரமசிவன் சொன்னார். நீங்கள் வேறு ஒரு இயக்க தலைவரிட்டை இப்பிடி கேள்வி கேட்க முடியுமா? எங்கள் தலைவர் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர் என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி வேண்டும் என்றார். அப்ப போராளிகளிளேயும் உயர்வு, தாழ்வு உண்டோ, தலைவர்கள் போராட்டத்தை தலைமை தாங்குபவர்கள் என்பதைத் தவிர வேறு எந்த விதத்திலும் ஒரு முதலாளித்துவ ராணுவ தலைவர்கள் போன்றவர்கள் அல்ல என்பது பொய்யா என்று நாதன் யோசித்துக் கொண்டு இருக்கும் போது தலைவர் மறுபடி வாய் திறந்தார். எனக்கு மத்தியகுழு வருவது பிரச்சனையில்லை, ஆனால் உங்களிற்கு தெரியும் நாங்கள் இந்திய அரசின் உதவியின்றி எங்களினுடைய போராட்டத்தை வெல்ல முடியாது. அவர்களிற்கு விரைவாக முடிவெடுக்க தெரிந்த ஒரு தலைவன் தான் வேண்டும். அவர்கள் தான் மத்தியகுழுவை விரும்பவில்லை. நாங்கள் இந்தியாவில் தங்கியிருக்கிறோம், பயிற்சி பெறுகிறோம். அதனால் அவர்களின் விருப்பத்தை மீறுவது நல்லதல்ல. நான் இன்றைக்கு அவர்களை சந்திக்கவிருக்கிறேன். உங்களின் மத்தியகுழு பற்றிய கேள்விகளை அவர்களிடம் கதைக்கிறேன். இரண்டு நாட்களில் மறுபடி சந்திப்போம் என்று விடைபெற்றார்.

சென்னையின் தெருக்களை சுற்றி விட்டு ஆழ்வார்திருநகர் வீட்டிற்கு போனபோது கண்ணனும், மூர்த்தியும் அங்கிருந்தார்கள். இரண்டு பேருமே நாதன் அனுப்பிய பெடியங்கள் தான். கண்ணன் தான் தலைவரிற்கு கார் ஓடிக்கொண்டிருந்தான். எல்லோரும் படுத்த பிறகும் நாதனும், கண்ணனும் பேசிக்கொண்டிருந்தனர். ஆதவனின் பிரச்சனை, தலைவர் டெல்லியில் இருந்து இரண்டு நாளில் மத்தியகுழு சம்பந்தமாக ஒரு முடிவுடன் வருவது என்பது பற்றி பேச்சு வந்த போது கண்னன் விழுந்து விழுந்து சிரித்தான். பிறகு குரலை தாழ்த்திக் கொண்டு கண்ணை சிமிட்டிக் கொண்டு சொன்னான், தலைவர் டெல்லிக்கு போகவில்லை, அந்த மூன்றெழுத்து நடிகையோடை ஊட்டிக்கு போயிருக்கிறார். நான் தான் அவவின்ரை வீட்டிலே கொண்டு போய்விட்டேன் என்றான்.

அதிர்ச்சியை சமாளித்துக் கொண்டு காதலிப்பதற்கு எங்கடை இயக்கத்திலே தடை இல்லை தானே என்றான் நாதன். மறுபடியும் சிரித்தபடி அண்ணை அவ எம்.ஜி.ஆருக்கு பிறகு குங்கும நிறம், ஊதாப்பூ நிறத்திலே உடுப்பு போடுற நடிகரை கலியாணம் கட்டப்போறா என்றான் கண்ணன். நாதனிற்கு தலை சுற்றியது கலியாணம் வேண்டாம், குடும்பம் வேண்டாம், போராட்டம் தான் என்ரை வாழ்க்கை என்ற வானதியின் நினைப்பு வந்தது. ஊருக்கு போய் என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டு நின்றான்.