Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அவர்கள் தெரிந்தே கொன்றார்கள்.

வெள்ளிக்கிழமை பின்னேரங்களில் புனிதயாகப்பர் றோமன் கத்தோலிக்க ஆரம்ப பாடசாலையில் மாணவர் மன்றம் நடக்கும். எங்கள் ஊருக்கு பாட்டு பைத்தியம். மாணவர் மன்றத்திலும் தொடங்கி முடியும் வரை பாட்டுத்தான். ஒவ்வொரு முறையும் மணியக்கா ரீச்சர், கப்பலோட்டிய தமிழனில் வரும் "காற்று வெளியிடை கண்ணம்மா நின்றன் காதலை எண்ணிக் களிக்கிறேன்" பாரதி பாடலை பாடச்சொல்லி மோகனிட்டை சொல்லுவா. வாத்திமார்கள் எல்லோரும் ஊர்க்காரர்கள், சொந்தக்காரர்கள். அதாலே மணியக்கா ரீச்சர், செல்வம்மாமா வாத்தியார் என்று உறவு சொல்லித்தான் எல்லாரையும் கூப்பிடுவோம்.

பத்து வயது பெடியனான மோகன் "இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும் என்னை வேற்று நினைவின்றி தேற்றியே" என்று பாட ஒரு முன்னாள் கன்னியாஸ்திரியான மணியக்கா ரீச்சர் கண்கலங்க கேட்டுக் கொண்டிருப்பது சற்று வினோதமான மாயாயதார்த்த காட்சி போல தோன்றும். ரீச்சர், சைவக்காரர் ஒருவரை காதலித்ததையும், மதத்தால் காதல் மறுக்கப்பட்டதையும், மனமுடைந்த ரீச்சர் கன்னியர்மடத்தில் சிஸ்ரராக சேர்ந்தும் காதலை மறக்க முடியாமல் பாதியிலேயே திரும்பி வாழ்நாள் முழுக்க கன்னியாகவே வாழ்வதையும் தெரிந்தவர்களிற்கு அக்காட்சி வியப்பை கொடுக்காது.

இளைஞர்களிற்கான கிறிஸ்தவ அமைப்பினால் (Y.M.C.A) ஒவ்வொரு புதுவருட பிறப்பிற்கும் இராப்போசன விருந்து நடத்தப்படும். அமைப்புத்தான் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ அமைப்பு, இளைஞர்கள் எந்த சமயமாகவும் இருக்கலாம் என்று ஒரு தத்துவ விளக்கம் தந்து சைவக்கார, கத்தோலிக்க பெடியங்களையும் Y.M.C.A இல் சேர்த்திருந்தார்கள். உண்மைக்காரணம் என்னவென்றால் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள் எங்கள் ஊரில் குறைவு. அதாலே ஆள்பொலிவுக்கு எல்லாரையும் சேர்த்தார்கள். தமிழர் விடுதலை கூட்டணிக்கு முன்னமே கூட்டணி விளையாட்டு காட்டின ஆட்கள் எங்கடை ஊர் ஆட்கள்.

இராப்போசன விருந்திற்கு மண்டபத்தை சோடிக்கும் பொறுப்பை எங்களிடம் தருவார்கள். பலூன் வாங்க தந்த காசிற்கு சிகரட்டை வாங்கி கொண்டு வந்து விட்டான் மோகன். பலூனிற்கு என்ன செய்வது என்று யோசித்த போது நேசன் ஒரு யோசனை சொன்னான். "பலூன் காசு கூட ஆனா பிரீதி ஒரு ரூபாயிற்கு மூன்று. பிரீதியை ஊதிக்கட்டி விடலாம்". அவனுக்கு தான் இப்பிடியான குறுக்கு மூளை வேலை செய்யும். லோகன் அதைவிட அற்புதமான யோசனை சொன்னான். "ஏண்டா வாங்க வேணும், அவரவர் வீட்டிலே இருந்து சுட்டுக் கொண்டு வரலாம்" .

ஊதிக்கட்டிய போது ஒரு நடைமுறை பிரச்சனை வந்தது. அடியில் ஒரு பெரிய குமிழி. அதற்கு சோடனை கடுதாசியை வெட்டி குஞ்சம் போல ஒட்டி விட்டான் மோகன். "இந்தமுறை பலூன் மெல்லிசா இருக்கு, ஆனா பலூனிலே ஒரு பளபளப்பு இருக்குது" என்றார் அன்னப்பா போதகர். அந்தமுறை ஊரிலே பிள்ளைகள் கூடுதலாக பிறந்தது. "எல்லாம் இவங்களாலே தான்" என்று நேசனையும், லோகனையும் காட்டிச் சிரிப்பான் மோகன்.

மோகனிற்கு சந்திராவில் காதல் வந்தது. வீட்டிலே பிரச்சனை வந்தது. வீட்டை விட்டு ஓடிப்போய் கலியாணம் கட்டிக் கொண்டார்கள். தகப்பனின் கடையை கவனித்து வந்தவனை கடையை விட்டு வெளியேற்றி விட்டார்கள். மோகனும், சந்திராவுமாக விடிய முதல் சுன்னாகம் சந்தைக்கு போய் மரக்கறி வாங்கிக்கொண்டு வந்து ஊர்ச்சந்தையிலே விற்றார்கள். "கஸ்டமாக இல்லையாடா" என்றதற்கு "துயர் போயின, போயின துன்பங்கள் நினைப் பொன்னெனக் கொண்ட பொழுதிலே" என்று பாடினான்.

தமிழீழ தாகம் என்றவர்களும், ஈழவிடுதலையோடு வர்க்க விடுதலை என்றவர்களும் மோதிக்கொண்டார்கள். மோகனும், சந்திராவும் போய்க்கொண்டிருந்த வாகனம் மருதனார்மடத்திலே துப்பாக்கிச்சூடுகளிற்கு நடுவிலே சிக்கிக் கொண்டது. மோகன் சந்திராவை கீழே தள்ளி தான் துப்பாக்கிச்சூட்டை வாங்கிக் கொண்டான். தாகமெடுத்தவர்களின் சூட்டிலே கீழே விழுந்தானா, இல்லை எல்லாவற்றிலும் இருந்து விடுதலை என்றவர்களின் வேட்டுக்கு கீழே சரிந்தானா என்று தெரியவில்லை. "காற்றுவெளியிடை கண்ணம்மா உன் காதலை எண்ணிக் களிக்கிறேன்" என்று சந்திராவை பார்த்து பாட நினைத்தானா என்பதும் தெரியவில்லை. ஆனால் மோகன் இறந்து விட்டான் என்பது மட்டும் உறுதியாக தெரிந்தது.