Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ராஜீவ் செய்த கொலைகளிற்கு என்ன தண்டனை!!!

உன்னையும்

ஒரு சவப்பெட்டியுள் தான் ஒடுக்கினார்கள், மகனே!

நீட்டி நிமிர்ந்து நீ நெடுமாலாய்க் கிடக்கையிலே

நிழல் போலக்

கறுத்து

விறைத்த உன் முகம் மீது

வீழ்ந்து புலம்பல் அல்லால்

வேறென்ன முடியும் உறவுக்கு?

 

மாலை வரையும் உன்னை வைத்திருக்கத் தடை

மதியத்திற்கு முதல்

புதைப்போம் என்ற பொறுப்பு

வழக்கமான பாதைக்கு மறுப்பு

ஊர்வலம் ஆகாதென உறுமல்

 

புதைத்தார்களா?

வாய்க்கரிசி போட்டார்களா?

பொன் மணலைக் குவித்தார்களா?

பிரண்டங்கொடி நட்டார்களா?

கொழுத்தினார்களா மெழுகுவர்த்தி

கடற்காற்றின் கொசுகொசுப்பினிடையே?

எதைத்தான் பார்த்தேன்.

என் மகனை கொன்றது ஓர்

இந்தியத் துப்பாக்கி என

எண்ணுவதைத் தவிர?

"ஒரு போராளியின் புதையல்" என்று சண்முகம் சிவலிங்கம், ராஜீவ் காந்தியின் ஆக்கிரமிப்பு படையால் கொல்லப்பட்ட தனது மகனின் மரணத்தை கண்ணீரால் பதிவு செய்த கவிதை இது. தன் கண்ணின் மணியை ராஜீவ் காந்தியின் கொலைவெறிக்கு காவு கொடுத்த ஒரு கதியற்ற தந்தையின் கதறல் இது. இது போல ஆயிரம், ஆயிரம் தாய் தந்தையர்கள் தம் பிள்ளைகளை பறி கொடுத்தார்கள். இந்திய ராணுவத்தினால் தாய், தந்தையர் கொல்லப்பட சின்னஞ்சிறு குழந்தைகள் அழக்கூட முடியாமல் அஞ்சி நின்றார்கள். எத்தனையோ, எத்தனையோ பேர் இந்தக் கொலைகாரனால் ஒரு நொடியில் காணாமல் போனார்கள். அவர்களை இன்னமும் கண்ணீர் நிற்கா விழிகளுடன் நடை தளர்ந்த ஒரு கிழவனே, கிழவியோ தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ராஜிவின் கொலை ஏகாதிபத்தியங்களால் திட்டமிடப்பட்டது. மேற்கு நாடுகளின் தரகர்களான அரசியல்வாதிகளும், ஆசாமிகளும் அதற்கு உடந்தையாயிருந்தார்கள். புலிகள் தங்களது வஞ்சத்தை தீர்க்க வந்த சந்தர்ப்பம் என்று அவர்களின் கருவியானார்கள். ராஜீவ் இறந்தவுடன் வெளிப்படையான அரசியலில் இருந்து ஒதுங்கி நிழல் அரசியலில் பின் இருந்த நரசிம்மராவ், தீடீர்ப்பிரதமராகி பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைகளிற்கு இந்தியாவை தடையின்றி திறந்து விட்டது இதை அம்பலமாக்குகிறது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றவர்கள் ஏகாதிபத்தியங்களுடன் எந்தவிதமான முரண்பாடுகள் இல்லாத போதும், இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு என்ற கருத்தோட்டத்துடன் இருந்தவர்கள். அதற்காகவே இந்தக் கொலை நடந்தது. காங்கிரசிலோ, ஆந்திர மாநிலத்திலோ எந்தவிதமான செல்வாக்கும் இல்லாத நரசிம்மராவ், ஆன்மீக மாமா, நிழல் உலக தாதா சந்திராசாமியின் நெருங்கிய கூட்டாளி பதவிக்கு வந்தார். உலக வங்கியின் ஊழியன் மன்மோகன்சிங் காய்கறி விற்கவும் வெளிநாடு தான் தேவை என்று நரசிம்மராவ் முன்னே மூட்டிய திருப்பணியை தொடர்கிறார்.

காங்கிரசிலும், வெளியிலும் இருக்கும் சதிகாரர்கள் தங்களது பங்குகளை மறைப்பதற்காகவே கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று கூச்சல் போடுகிறார்கள். பெரும்பூதூரில் நின்ற சிவராசன், தனு, சுபாவை கொலை செய்த பின்பு கூட பேரறிவாளன், நளினி போன்றவர்களை மிரட்டியும், வாக்குமூலங்களை மாற்றியும் சிறை வைத்திருப்பது இது புலிகள் செய்த கொலை என்ற பிம்பத்தை தொடர்ந்து மக்களிற்கு காட்டிக் கொண்டு தாங்கள் தப்பித்துக் கொள்ளுவதற்காகத் தான். பேரறிவாளனது வாக்குமூலத்தை மாற்றியதும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணான நளினியை இந்த மிருகங்கள் எப்படி மிரட்டி சித்திரவதை செய்து வாக்குமூலம் எடுத்தார்கள் என்பதும் இந்த வழக்கு விசாரணைக் கொடுங்கோன்மைக்கு உதாரணம்.

"தியாகராஜன் என்னிடம் வாக்குமூலம் வாங்கிய தேதி 1991-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி. அன்று வெளியில் பலத்த காற்றும் மழையுமாக இருந்தது. அன்று முழுவதும் நான் சித்திரவதையின் வேதனை தாங்காமல் இரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் மூன்றுமாத கர்ப்பிணி. இரவு 8 மணிக்கு என்னை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அரை மணிநேரம் பரிசோதனை நடைபெற்றது. அரை மணிநேரம் கழித்து, என்னை ஒரு அறைக்கு அழைத்துப் போனார்கள். அங்கு சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் சில காகிதங்களுடன் அமர்ந்திருந்தார். அவற்றில் என்னைக் கையெழுத்துப் போடச் சொன்னார். நான் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்துப் போட மறுத்தேன். "இப்போது நீ கையெழுத்துப் போடவில்லை என்றால், நிர்வாணம் ஆக்கப்படுவாய். நீ எப்போது கையெழுத்து போட சம்மதிக்கிறாயோ அதுவரை நீ நிர்வாணமாகத்தான் இருப்பாய்" என்றார். இதையடுத்து வேறு வழியே இல்லாமல்தான், நான் கையெழுத்துப் போட்டேன். அதன் பிறகு அந்தக் காகிதத்தில் அவர்களாக நிரப்பிக் கொண்டதுதான் இன்று உலகத்தின் பார்வைக்கு என்னுடைய ஒப்புதல் வாக்குமூலமாகக் காட்டப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்துத்தான் எனக்குத் தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இப்படித்தான் தியாகராஜன் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கினார்".

நாட்டையும், மக்களையும் வெளிநாட்டு நிறுவனங்களிற்கு விற்கும் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி கயவர்கள் தான் தேசபக்தி கூச்சல் போடுகிறார்கள். ஒரு சதத்திற்கு கூட கூசாமல் கையை நீட்டி ஊழல் செய்யும் இந்த நாய்கள் தான் நீதி, நேர்மை என்று ஊளையிடுகிறார்கள். தனிமனிதரைக் கொலை செய்வதன் மூலம் மக்களின் பிரச்சனைகளிற்கு எதுவித தீர்வும் கிடைத்ததில்லை. கொலைகளைக் காரணம் காட்டி போராட்டத்தை பயங்கவாதமாக காட்ட ஆளும் வர்க்கங்களிற்கு சந்தர்ப்பங்களை கொடுத்து மக்கள் மீது அவர்கள் மேலும் மேலும் வன்முறையை கட்டவிழ்த்து விடவே கொலைகள் வழியமைத்துக் கொடுக்கின்றன. ராஜீவ் காந்தி, பிரேமதாசா, கதிர்காமர் கொல்லப்பட்டதால் அவர்கள் பயந்து விடவில்லை. மன்மோகன்சிங், மகிந்த ராஜபக்சா, கருணா என்று அவர்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். ஏனெனில் ஒடுக்கப்படும் ஏழைமக்கள் ஒரு வர்க்கம் என்றால் ஒடுக்கி ஆளுபவர்கள் ஒரு வர்க்கம். ஆளும் வர்க்கத்தை அழிக்கும் மட்டும் அடக்குமுறைகள் நிற்காது. போராட்டமும் ஓயாது.