Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

விளங்கிக் கொள்ளாவிட்டால், விலகிக் கொள்ளட்டும்!!!

யாழ்ப்பாணத்தில் பிரசன்ன விதானகே இயக்கிய "பிறகு" (WITH YOU, WITHOUT YOU) சிங்களமொழி திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. இத்திரைப்படம் புலம்பெயர் நாடுகளிலும், தமிழ்நாட்டின் சென்னையிலும் திரையிடப்பட்ட போது நாம் தமிழர் அமைப்பு போன்ற தமிழின வெறியர்களும், சில புலம்பெயர் அறிஞர் பெருமக்களும்  இது தமிழ்மக்களிற்கு எதிரான படம் என்றும் இலங்கை அரசையும், இராணுவத்தையும் நியாயப்படுத்தும் படம் என்றும் கண்டு பிடித்திருந்தார்கள். இன்று போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் இத்திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. தமிழ் மக்களிற்கு எதிரான படம் என்று எவரும் யாழ்ப்பாணத்தில் சொல்லவில்லை. அறிஞர் பெருமக்களும், ஆசாமிகளும் எங்கே காணாமல் போய் விட்டார்கள்?. இவர்களின் பொய்களையும், திரிபுகளையும் எதிர்த்து அன்று வெளிவந்த கட்டுரை.

பெருமரம் சரிந்து விழும் போது வீராதிவீரன் வாத்தியார் வந்து முதுகைக் கொடுத்து மரத்தை தூக்கி நிறுத்தி மக்களைக் காப்பாற்றுவார். விசிலடித்து அவர் வீரம் விதந்து தமிழ்நாட்டினது முதலமைச்சர் பதவியையே தூக்கி அவரின் பாதத்திற்கு காணிக்கையாக்குவோம். கண் தெரியாத தங்கச்சி மேல் கார் மோதி இரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருப்பார். (தங்கச்சியின் பெயர் அனேகமான படங்களில் சாந்தி என்று இருக்கும்). அண்ணன் சிவாஜி ஓடி வந்து ஒரு வயதில் தங்கச்சிக்கு தாலாட்டு பாடினது, இரண்டு வயதில் கை பிடித்து நடை பழக்கியது, மூன்று வயதில் மூக்கு துடைத்து விட்டது என்று மூச்சு இரைக்க இரைக்க அரைமணி நேரத்திற்கு அழுது புலம்புவார். ஏற்கனேவே பாதி உயிர் போயிருக்கும் தங்கச்சி சிவாஜியின் முகத்தை குளோஸ் அப்பில் பார்த்த அதிர்ச்சியில் மீதி உயிரையும் விடுவார். "இவனல்லோ நடிகன்" என்று கண்ணைக் கசக்கியபடி தமிழின் தலை சிறந்த நடிகன் என்ற பட்டத்தைக் கொடுப்போம்.

தமிழ்ப்பெண் என்று காட்சிப்படுத்தப்படும் தமிழ்ப்படக்கதாநாயகி ஜப்பானிய சுமோ வீரன் எதிராளியோடு போய் மோதுவது போல, கதாநாயகனை பெருமார்பு கொண்டு மோதுவது தமிழ்ப்பெண்னின் காதலாக காட்டப்படும். எந்த நேரமும் மாமா என்றோ, மச்சான் என்றோ அசடு வழிந்து கொண்டு ஆணின் பின்னால் திரிந்து அவனிடம் காதல் பிச்சை கேட்பது தான் தமிழ்ச்சினிமாவில் காட்டப்படும், தமிழ்ப்பெண்ணின் வாழ்வின் இலட்சியம் என்று கொச்சைப்படுத்துவார்கள். அண்னன் அட்டைக்கத்தியால் போட்ட சண்டைக்கு முதலமைச்சர் ஆக்கியவர்கள், அண்ணி அண்ணனோடு போட்ட சுமோ சண்டைக்காக அண்ணியையும் முதலமைசர் ஆக்கி நன்றிக்கடன் தீர்த்தோம்.

உழைக்கும் மக்களின் பெயர்களான சங்கிலி, மாடசாமி போன்ற பெயர்கள் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு செய்யும் கொடூர வில்லன் நடிகர்களிற்கு வைக்கப்படும். சிவப்பான கதாநாயகர்களிடம் இந்த கறுப்புத்தமிழர்கள் அடிவாங்கி சாவார்கள். இப்படி தமிழரை தமிழ் வாழ்க்கையை கேவலப்படுத்தும், கொச்சைப்படுத்தும் தமிழ்சினிமாவை பார்க்கும் போது நமது "தமிழ் உணர்வாளர்களின்" மீசை துடிப்பதில்லை. இப்படி கேவலப்படுத்தும் நடிகர்களையோ இயக்குநர்களையோ உணர்வாளர்கள் கேள்வி கேட்பதில்லை. தமிழ்ப்படம் என்னும் கேலிக்கூத்தின் தரம் பற்றி இவர்களிற்கு கவலை பிறப்பதில்லை.

பிரசன்ன விதானகே என்னும் கலைஞன், இலங்கையின் முற்போக்கு சக்திகளின் ஆதரவாளன், இலங்கைத் தமிழ்மக்களின் துயரங்களை, சிங்கள மக்களின் வறுமையை, இலங்கை ஆளும் வர்க்கத்தினரின் அநியாயங்களை தன் படைப்பு மூலம் யதார்த்தமாக கலையழகுடன் பேசுவது இவர்களிற்கு பிரச்சனையாக இருக்கிறது. பிரசன்ன விதானகே வணிக சினிமா எடுத்து தன் வாழ்வை வளமாக்கியிருக்கலாம். இலங்கை அரசாங்கத்திற்கு பிரச்சனை ஏற்படுத்தாத படங்களை எடுத்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு உண்மையை பேசுகிற கலைஞன். அதனால் அவரின் படங்கள் அவருக்கும், அவரின் தயாரிப்பாளர்களிற்கும் நட்டத்தையும், நெருக்கடிகளையுமே கொடுத்திருக்கின்றன. அவரின் படங்கள் இலங்கையில் தடை செய்யப்பட்டன. பின்பு வழக்கு வைத்து தடையை விலக்கிக் கொண்டார்.

ஆனால் சில தொலைபேசி அழைப்புக்கள் மூலம் தமிழ்நாட்டிலேயே படம் ஓட முடியாமல் செய்ய முடியுமென்றால், இலங்கை அரசு போன்ற ஒரு பயங்கரவாத அமைப்பினால் என்ன தான் செய்ய முடியாது. "பிறகு" திரைப்படம் ஒரு சில முறைகள் மட்டுமே இலங்கையில் திரையிடப்பட்டது. அதன் பிறகு அத்திரைப்படத்தை திரையிடுவதற்கு எந்த திரையரங்க உரிமையாளர்களிற்கும் துணிச்சல் இருக்கவில்லை.

இப்படியான ஒரு கலைஞனையும் அவனது படத்தையும் தான் இலங்கை அரசிற்கு சார்பானது என்று அவதூறு சொல்கிறார்கள். இதிலே இந்தப் படம் உலகத்தரதிற்கு இல்லை என்று காமடி வேறு பண்ணுகிறார்கள். கமல் சார், ரஜினி சார், சங்கர் சார் என்று அப்பட்டமான வியாபாரிகளை தூக்கிப் பிடிப்பவர்கள் கலை என்பது கடுகளவு கூட இல்லாத படங்களை பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக பாராட்டி எழுதுபவர்கள், தரம் பற்றி பேசுகிறார்கள். புதிய தலைமுறை நிகழ்ச்சியில் பேசிய நாம் தமிழர் அமைப்பைச் சேர்ந்தவர் "பிறகு" திரைப்படத்தின் தரத்தைப் பற்றி பேசியது தான் இந்த வருடத்தின் கண்றாவி காமடியாக இருந்தது. முதலில் நாம் தமிழரின் தலைவர் சீமானை குறைந்தபட்சம் ஒரு மலையாளப்படத்தின் தரத்திற்காவது ஒரு படத்தை எடுக்கச் சொல்லி விட்டு பின்பு மற்றவர்களை தரமாக படம் எடுப்பது எப்படி என்று பாடம் நடத்தலாம்.

தன் திரைப்படமொழி மூலம் இனப்பிரச்சனை தமிழ், சிங்கள மக்களின் உறவுகள் பற்றி பேசிய பிரசன்ன விதனகேயிடம் இனப்படுகொலை பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று இவர்கள் கேள்வி கேட்கிறார்கள். பிரசன்ன விதானகே என்ன இலங்கை அரசின் பிரதிநிதியா? பிரசன்ன விதானகே மறுமொழி சொல்வது ஒருபக்கம் இருக்கட்டும். இலங்கைத் தமிழ் அகதிகளை முகாமில் அடைத்து வைத்திருக்கும் ஜெயலலிதாவிடம் அகதிகளை ஏன் அடைத்து வைத்திருக்கிறீர்கள் என்று எப்போதாவது கேட்டிருக்கிறார்களா? பிரபாகரனின் தாய், தந்தையரை தமிழ்நாட்டுக்கு வரவிடக் கூடாது என்று வழக்குப் போட்ட ஜெயலலிதாவின் ஆட்சியில் இலங்கையின் மந்திரிகள் இன்பச்சுற்றுலா வந்து போவதை பற்றி ஜெயலலிதாவிடம் கேட்கும் துணிச்சல் இருக்கிறதா?

சிங்களவர் எடுத்த படம், சிங்களமொழிப் படம் என்று பச்சையான இனவாதம் பேசுகிறார்கள். பிரசன்ன விதானகே சிங்கள உணர்வாளர் என்ற நிலையில் இருந்து என்றைக்குமே படம் எடுத்ததில்லை. மனிதாபிமானத்தையும், யதார்த்தத்தையும் பேசிய படைப்புக்கள் அவருடையவை. இவர்களின் இனவாதப்போக்கின் படியே பார்த்தால் தமிழ் மசாலா படங்களின் தத்துவாசிரியரும், மதியுரைஞருமான எம்.ஜி.ஆர் மலையாளி. இந்த மசாலாக்கள் தமிழனின் மனதையும், மண்டையும் கெடுத்தது மாதிரி எதுவும் கெடுத்ததில்லை. ஆனால் இந்த நாம் தமிழர்கள் எம்.ஜி.ஆரிற்கு வீரவணக்கம் போடுகிறார்கள். ரஜினிகாந்து ஒரு கன்னடன். காவேரிப்பிரச்சனையில் கன்னட வெறியர்களிற்கு எதிராக இவர் வாயே திறப்பதில்லையே என்று, இந்த மறத்தமிழர்கள் பிரசன்ன விதானகேயிடம் கூச்சல் போட்டது போல் ஏன் ஒரு போதும் கூச்சல் போட்டதில்லை.

இலங்கையின் மக்கள் கொடூரமான அடக்குமுறைகளிருந்து விடுபட முன்னுள்ள ஒரேவழி ஒடுக்கப்படும் மக்களின் ஒன்றிணைவு மட்டுமே. பிரசன்ன விதானகே போன்ற கலைஞர்களின் படைப்புக்கள் பொதுமக்கள் முன் ஒற்றுமைக்கான தேவையை பேசுகின்றன. தமிழ்மக்களின் மேல் அக்கறை கொண்டவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இவற்றை விளங்கிக் கொள்ள வேண்டும். விளங்கிக் கொள்ளாவிட்டால் விலகிக் கொள்ளட்டும்.{jcomments on}