Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

வலுவிழந்தவர்களாக மாறிச் செல்லும் தமிழ் சமூகம்..!

இலங்கை மக்கள் மதமாற்றம், ஆங்கிலக் கல்வி என்று ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காலம் இலங்கை காலனித்துவ ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்த காலம். ஆனால் இலங்கை மக்கள் கல்வியில் சிறப்புற வளர்ச்சி கண்ட காலமும் அந்த காலனித்துவ காலமே. இலங்கை முழுவதும் காலனித்துவ ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும் யாழ்ப்பாண மேட்டுக்குடி சமூகம் கல்விக்கு கூடிய முக்கியத்துவம் வழங்கியிருந்தது. அந்த காலகட்டத்தில் அங்கு தான் கூடுதலான பாடசாலைகளும் நிறுவப்பட்டன. அந்த மக்கள் கல்வியினை நம்பி வாழ வேண்டிய தேவையும், சூழ்நிலையும் யாழ்ப்பாண சமூகத்தில் பெரியளவில் காணப்பட்டது. அல்லது அந்த மக்கள் கூலிகளாக வாழ வேண்டிய நிர்ப்பந்தமே அங்கிருந்தது.

ஏனைய பிரதேச மக்கள் போதியளவு நிலமிருந்ததால் அவர்கள் கல்வியினை சார்ந்திருக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கவில்லை. தமிழ் சமூகத்தினை பொறுத்த வரையில் வேறுபட்ட சமூக முரண்பாடுகள் பலருடைய கல்விக்கு தடையாக இருந்தது. அதே நேரம் கல்வி கற்றுக் கொள்ள வேண்டிய தேவையும், வாய்ப்பும் அங்கு அதிகமாக காணப்பட்டது. இந்த காரணிகள் தமிழ் மக்களை கல்வி கற்க தூண்டியதுடன், பல கல்விமான்களையும் உருவாக்கியது. தமிழ் மக்களை கல்வியில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்களாக்கியது. எண்பதுகளின் ஆரம்பத்தில் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தது. நாளடைவில் போராட்டம் தீவிரமடைந்து பாடசாலைகள் சீரான முறையில் இயங்க முடியாது போயின, சகல தொழிற்துறைகளும் சீர்குலைந்தன.., பல்லாயிரக் கணக்கான மக்கள் யாழ் மண்ணிலே வாழ்க்கையினை தொடர முடியாது இடம்பெயர வேண்டி கட்டாயம் ஏற்பட்டது.., இருப்பினும், இந்த மிகக் கடினமான சூழலில் கூட பல சிரமங்களுக்கும் மத்தியிலும் பெரும்பாலானவர்கள் தங்கள் பிள்ளைகளை கல்வி கற்க வைத்துள்ளார்கள்.

இன்று போர் மௌனித்து நான்கு வருடங்களை கடந்து விட்டது. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார்கள். ஆனால் போருக்கு முன்னர் இருந்த தமிழ்ச் சமூகம் இன்று தலை கீழாக மாறிவிட்டது. ஒரு காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய தமிழ் சமுதாயம் இன்று விகிதாச்சார அடிப்படையில் வீழ்ச்சியடைந்து விட்டது. அதியுயர் சித்தியினை பெற்றாலும் இடையில் சித்தியடைபவர்களின் விகிதம் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று இளைய சமூகத்தினருடையே ஏற்பட்டுள்ள மாறுதல் பெரும்பாலான இளைஞர்களை கல்வியினின்று அன்னியப்படுத்தியுள்ளது. அவர்களுக்கு இளம் வயதில் கிடைத்துள்ள ஆடம்பர வாழ்க்கையும், கட்டுப்பாடற்ற சுதந்திரமும், அதற்காக அவர்களுக்கு கிடைக்கின்ற பொருளாதார உதவியும் அவர்களை கல்வி கற்க விரும்பாதவர்களாக மாற்றியுள்ளது. உழைப்பின் கடினத்தினை உணர முடியாத இந்த இளம் சமூகம் அன்னிய வருமானத்தில் நின்று கொண்டு தன்னை மதுபோதைக்குள் மூழ்கடித்துக் கொண்டுள்ளது. இந்த பிரச்சனை ஏனைய சமூகங்களிலும் காணப்பட்டாலும், தமிழ் சமூகமே அதுவும் குறிப்பாக யாழ்ப்பாண சமூகத்திலேயே இந்தப் பிரச்சனை மிகவும் தீவிரமாக காணப்படுகின்றது.

தமிழ்ச் சமூகம் சுயமாக உழைத்து வாழ்ந்த சமூகம். கல்வி கற்க வசதியில்லாதவர்கள் கல்வியினை தொடர விரும்பாதவர்கள் கூட விவசாயம், கைத்தொழில் என்று ஏதாவது ஒரு துறையிலே ஈடுபாடுள்ளவர்களாகவே வாழ்ந்து வந்தார்கள். எவரையும் எதிர்பாராமல் தங்கள் சுய உழைப்பிலே பிள்ளைகளின் கல்வி உட்பட சகல தேவைகளையும் அவர்களே கவனித்து வந்தார்கள். இப்படி யாரையும் தங்கி வாழாத சமூகம் இன்று இன்னொருவரின் உழைப்பில் இருந்து கொண்டு சொகுசாக தனது வாழ்கையினை நகர்த்திக் கொள்ள விரும்புகிறது. ஒரு சமூகம் தனது சுய உழைப்பில் இருந்து அன்னியமாகும் போது அந்த சமூகம் தன்னுடைய சுயத்தினை இழந்து விடுகின்றது. மற்றவர்களை எதிர்பார்த்து வாழும் சமூகமாக மாறிவிடுகின்றது. இன்று எமது தமிழ் சமூகம் குறிப்பாக யாழ்ப்பாண சமூகம் தனது வலிமையினை இழந்து வாழும் சமுதாயமாக மாறிவிடும் அபாயம் அங்கு நிலை கொண்டுள்ளது.

இன்று இப்படியொரு நிலமை தமிழ் சமுதாயத்திற்கு உருவாகுவதற்கான முழுப்பொறுப்பும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களையே சார்ந்தது. பனியிலும் குளிரிலும் ஓய்வின்றி, தூக்கமின்றி இரும்படித்து, பாத்திரம் கழுவி, தொழிற்சாலைகளில் இறைச்சி வெட்டி, மலசல கூடம் துப்பரவு செய்து.., இப்படியெல்லாம் கஸ்ரப்பட்டு உழைத்து அந்த உழைப்பினை தனது உறவுகளுக்கு அனுப்பிவிட்டு மீண்டும் தன்னை உழைப்பிலே ஈடுபடுத்தி கொள்ளும் புலம்பெயர் சமூகம் தன்னையும் அழித்து, நாட்டில் வாழும் தனது உறவுகளின் வாழ்வையும் சீர்குலைக்கின்றது.

இதே புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தான், முப்பது வருடத்துக்கு மேலாக நடந்த ஆயுதப் போராட்டத்திற்கு எந்த வித விமர்சனமும் இல்லாமல் தாம் இரத்தம் சிந்தி உழைத்த பணத்தினை கோடிக் கணக்கில் அள்ளி இறைத்தார்கள். இன்று அந்த ஆயுதப்போராட்டம் மக்கள் மீது பாரிய பாதிப்பை ஏற்படுத்தி அவர்களை நடுத்தெருவில் நிறுத்தியதற்கு புலம் பெயர்ந்தவர்களும் காரணமாக இருக்கிறார்கள. இதனால் அழிந்தது புலிகள் மட்டுமல்ல பல இலட்சக் கணக்கான அப்பாவித் தமிழர்களின் உயிர். அது மட்டுமின்றி இவர்களின் உழைப்பினை சுருட்டி தமது வங்கிகணக்கில் பல கோடிகளை குவித்து இன்று கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டவர்களோ பலர். இப்படி மற்றவர்களை கோடீஸ்வரனாக்கி விட்டு தான் தொடர்ந்தும் இரும்படித்துக் கொண்டிருக்கிறது இந்த புலம் பெயர் சமூகம். மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடாது என்பதில்லை.., நாம் கொடுக்கும் பணம் எந்த வழியில் பயன்படுத்தப்படுகிறது, இது சரியானதா அல்லது தவறானதா.., என்ற பார்வை எப்போதும் எம்மோடு இருக்க வேண்டும். தவறினை சுட்டிக் காட்டி அதனை தடுத்து நிறுத்த வேண்டும். இதனை மறுத்து நாம் தவறுகளை ஊக்குவித்தால் அது எமது சமூகத்தினை சீரளிவுப் பாதையில் தான் கொண்டு செல்லும்.

இன்று தமிழ்ச் சமூகம் இப்படியொரு பெரும் சீரளிவினை நோக்கி செல்கின்றது. அது அன்னிய உழைப்பில் வாழும் சமூகமாக மாறிக் கொண்டு வருகின்றது. புலம் பெயர் சமூகத்தில் வாழும் அடுத்த சந்ததியிடமிருந்து இந்த தமிழ்ச் சமுதாயம் இதே உதவியினை எதிர்பார்க்க முடியாது. இப்படியொரு ஒரு உதவி எதிர்காலத்தில் கிடைக்கப் போவதும் இல்லை. அப்போது எமது தமிழ் சமூகம் சுயமிழந்து, பலமிழந்து முற்றிலும் இன்னொருவரிடம் கையேந்தி வாழும் சமூகமாக மாறிவிடும் அபாய நிலையே உருவாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலமையினை பெற்றோர்களும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் புரிந்து கொள்வதால் தான் எமது இளம் சமூகம் சகல வழிகளிலும் ஆரோக்கியமான சமூகமாக வாழ முடியும்.

தேவன்.

24.11.2012.