Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழ் மக்களே - உங்களுக்காக வலதுசாரிய யாழ். சைவ வேளாள தமிழ் மக்கள் கூட்டணி

நல்ல நாள் பார்த்து, சுப முகூர்த்தத்தில், முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். இக்கட்சியின் ஆரம்ப விழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. விக்னேஸ்வரன் அவர்கள் வடமாகாண முதலமைச்சராக பதவியேற்ற போது அவர் ஒரு பொதுவான - ஒரு தமிழ் மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராக பிரச்சாரப்படுத்தப்பட்டார். அரசியல் பின்னணி எதுவுமற்ற- அதேவேளை வலதுசாரிய யாழ். சைவ வேளாள சிந்தனையை பின்பற்றுபவராகவும்,   தானுண்டு - தன் குடும்பமுண்டு என சுயநலமாக இருந்தவரை, கூட்டமைப்பு அரசியலுக்கு கொண்டு வந்தது. ஐந்து ஆண்டுகால பதவியின் அதிகாரம் முடிவதற்கு 12 மணிதியாலங்களுக்கு முன்னரே விக்கினேஸ்வரன் ஒரு கட்சியை ஆரம்பித்துள்ளார். அதற்குப் பெயர் தமிழ் மக்கள் கூட்டணி.

தமிழ் மக்கள் கூட்டணியை ஆரம்பிப்பதற்கு அவருக்கு ஏற்பாடு செய்து கொடுத்தது- ஆதரவாக இருப்பது தமிழ் மக்கள் பேரவை என்று கூறப்படும் அமைப்பாகும். இந்த அமைப்பானது, சில வருடங்களுக்கு முன்பு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக செயற்பட்டு, தமிழ் மக்களின் தேசிய விடுதலையை பெற்றுக் கொள்வதற்கான ஒரு அழுத்தம் கொடுக்கும் முன்னணியாக ஆரம்பிக்கப்பட்டது. இவ் அமைப்பில் இணைந்து கொள்ள நான் அன்று அங்கம் வகித்த இடதுசாரிக் கட்சிகள், மார்க்சிச அடிப்படையிலான முன்னணி அமைப்புகள் கூட சேர்ந்து செயற்பட அழைக்கப்பட்டன. (கோட்பாடுகள், மற்றும் சில கருத்து வித்தியாசங்களால் இடதுசாரிகள் இணையவில்லை)

இதன் பின்னணியில் இலங்கை தமிழ் காங்கிரஸ் - பொன்னம்பலம், குதிரை கஜேந்திரன் போன்றவர்கள்  உழைத்தார்கள். அவர்களுடன் சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்களும் அவசர அவசரமாக ஓடிப் போய் சேர்ந்தார்கள். புளொட் சித்தார்த்தன் பேரவையில் இணையா விட்டாலும், தானும் அதில் அங்கம் வகிப்பது போல காட்டிக் கொண்டார். ஏன், ஈபிடிபி கூட இணைய முயற்சித்ததாக கதைகள் உண்டு.

 

பேரவையின் ஆரம்ப கூட்டம் யாழ். முற்றவெளியில் நடைபெற அழைப்பு விடுக்கப்பட்ட போது, யாழ்ப்பாணமே கலங்கியது. ஏதோவொரு புரட்சி நடக்கப்போவதாக பத்திரிகைகளில் படம் காட்டப்பட்டது. தெற்கிலிருந்து ஊடகங்கள் நேரடியாக ஒளி -ஒலி பரப்ப யாழில் கூடின. ஆனால், 2 ஆயிரம் பேருக்கு மேல் அந்தக் பேரவை அங்குரார்ப்பண கூட்டத்தில் பங்குகொள்ளவில்லை. வெறும் வெற்று வேட்டாகியது.

தமிழ் தேசிய விடுதலைக்கான அழுத்தத்தை கொடுப்பதே பேரவையின் அடிப்படை வேலைத்திட்டமாகக்    கூறப்பட்டது.  தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துடன் உறவில் உள்ளது. அதனால் சர்வதேச மட்டத்தில் இனப்படுகொலையை முன்னிறுத்தி நியாயம் கோர கூட்டமைப்பினால் முடியாமல் உள்ளது என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தது பேரவை. இப்பிரச்சாரங்கள் எந்தவித நன்மையையும் மக்களுக்கு வழங்கவில்லை. ஆனால், கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் பொன்னம்பலம் மற்றும் குதிரை கஜேந்திரன் குழு ஒப்பீட்டளவில் அதிக வாக்குகளை பெற மட்டுமே வழி கோலியது . ஆகவே, தமிழ் மக்கள் பேரவையானது அடிப்படையில் -நடைமுறையில், இலங்கை அரசாங்கத்தை எதிர்ப்பதை விட, தமிழ் தேசிய கூட்டமைப்பை எதிர்ப்பதையே முக்கியமான கடமையாக கொண்டிருந்த பொன்னம்பலம்- குதிரை கஜேந்திரன் குழுவுக்கு தண்ணி வாழி தூக்கும் முன்னணி என்றால் மிகையாகாது.

இன்று அதே தமிழ் மக்கள் பேரவை, அவசரம் அவசரமாக விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க உதவியுள்ளது.

பேரவை ஆரம்பித்த போது மக்களை திரட்டி போராட்டங்கள் மூலம் தமிழ் தேசிய விடுதலைக்கு வழி  சமைப்போம். "தேர்தல் பாதை விடுதலைக்கு உதவாது" என்ற கருத்தை முன்வைத்த பேரவையானது - இன்று தேர்தல் சாக்கடை அரசியல் செய்ய ஒரு புதிய கட்சியை ஆரம்பித்துள்ளது.

இன்றும் வழமை போல சுரேஷ் பிரேமச்சந்திரன், புதிதாக "ஈழ மக்கள் சுயாட்சி கழகம்" என்ற கட்சி தொடங்கியுள்ள அனந்தி அக்கா போன்றோரும் இன்று விக்கினேஸ்வரனின் கட்சி தொடங்கிய மண்டபத்தில் முதல் வரிசையில், விக்கியின் குடும்பத்துடன் இணைந்திருந்தனர். குதிரை கஜேந்திரன் மற்றும் பொன்னம்பலம் அங்கு பிரசன்னம் செய்யா விட்டாலும் அவர்களின் தொண்டரடிப்பொடிகள் மண்டபத்தை நிறைத்திருந்தனர். அதிகார - பதவி வெறி பிடித்த இந்தக் கும்பலுக்கு எந்தக் காலத்திலும் மக்களின் நலன் பற்றி கவலை இருந்ததில்லை.

தமிழ் தேசிய விடுதலைக்கான உண்மையான அரசியற் களம் யாருமற்று வெறிச்சோடிக் கிடக்கிறது! ஒடுக்குமுறைக்குள் அரசியல் ஏதிலிகளாக தமிழ் மக்கள்!