Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நாங்கள் எல்லோரும் மனிதர்கள்...... (சிறு கதை)

இந்த வார விடுமுறை நாள் நல்ல வெயிலாய் இருந்ததால், எங்கேயாவது வெளியில் போவோமா என்று யோசிச்ச போது பஜார் நினைவு தான் முதலில் வந்தது. மனைவியையும் கூட்டிக் கொண்டு பஜாருக்கு வந்து சேர்ந்தேன்.

வெளிநாட்டவர்களை சந்தோசப்படுத்த வேண்டும் என்பதற்காகவும்,  வெளிநாட்டவர்களால் நடக்கிற குற்றச்செயல்களை ஒரளவு குறைக்கலாம் என்ற நம்பிக்கையிலும் உருவாக்கப்பட்டது தான் இந்த பஜார். அரபு, ஆபிரிக்கா, ஆசிய எனப் பல நாட்டவர்களின் ஊரிப்பட்ட கடைகள். இறைச்சி முதல்  மரக்கறி மளிகைச் சாமனகள் என வீட்டுக்குத் தேவையான தடி தண்டு தளபாடங்களிலிருந்து சகலதும் வாங்கலாம்.

காரை விட்டு இறங்கி நடந்தோம். வழமையாக பக்கத்திலே சேர்ந்து வராத  மனைவி, வேகமாக நடந்து வந்து ஒட்டிக் கொண்டாள். திருப்பி என்ன என்று ஒருமாதிரிப் பார்க்க, "என்னப்பா இஞ்சை கூட்டிக் கொண்டு வந்திருக்கிறாய்.... பார் இவங்களை..... பார்க்கவே... பயமாயிருக்கு. அவங்கடை தொப்பியும்  தாடியும்....  வாப்பா வேறு எங்காவது போவோம்" என்றாள்.

ஏனப்பா இவங்கள் உனக்கு இப்ப என்ன செஞ்சவங்கள்... சும்மா பேசால் வா.... என்று நான் முடிப்பதற்குள்.... இல்லை இப்படி நிறைய முஸ்லிம்களை ஒன்றாப்  பார்த்ததில்லை. கூட்டமா பார்க்க ஏதோ பயமாயிருக்கு என்றாள். சும்மா பேசாமல் வா என்று உள்ளே நுழைந்தேன்.

அவர்களுடைய சூடான ரொட்டியோடு கிபாப் இறைச்சி வாசமும் மூக்கைத் துளைத்தது. இண்டைக்கு இஞ்சை தான் சாப்பாடு என்ற போது மனுசிக்கு முகம் மாறி விட்டது.

ஒரு கொஞ்சம் நகர்ந்திருக்க மாட்டேன்.... ஏய்.... எப்படி என்றபடி கன்டில் வந்து கட்டிப்பிடிச்சு முத்தம் தந்து தளுவிக் கொண்டான். அவனது மனைவி றெகினாவும் கை தந்தபடி இவவா உன் மனைவி என்றபடி என் மனைவிக்கும் கை கொடுத்தாள்.

இவரை நாம் எத்தனை முறை கேட்டு விட்டோம், உன்னையும் கூட்டிக் கொண்டு வீடு வரும்படி என்று  சிரித்தாள் றெகீனா. ஒருமுறை ரெலிபோன் அடித்து விட்டு கட்டாயம் வருவேன் என்றேன். நீ எப்படியும் ரெலிபோன் அடி பின்னர் கதைப்போம் என்றபடி இருவரும் விலகிச் சென்றனர். எனக்கு நீண்டகாலமாய் பழக்கமான மொறோக்கோ நாட்டு நல்ல நண்பன் தான் கன்டில்.

கொஞ்சம் திரும்பிப் போய் ஒரு கடைவாசலில் உள்ளிட,  காய்... வல்லா... என் இனிய நண்பனே என்றபடி குசையின் வந்து தோளில் தட்டினான்.. எப்படி நலமா...? என்ன இப்பவும் அரபுப் பாட்டுக்கள் கேட்கிறாயா... என்று சிரித்தான். நானும் தலையாட்டிய படியே சிரித்தேன் முடிந்தால் எங்கள் கடை பக்கம் வா என்று சொல்லிக் கொண்டே அவனும் நகர்ந்து போனான்.

இவன் தான் எனக்கு அப்துல்கலீம் என்ற எகிப்திய ஒரு மாபெரும்  இசைக்கலைஞனின் அரபுப்பாடல்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்த நண்பன். இவனும் ஓரு இவைக்கலைஞன் என்று என்வளுக்கு தெரியப்படுத்தினேன்.

அந்தக் கடை இந்தக் கடை என்று ஏறி இறங்கிய போதெல்லாம் எனக்குத் தெரிந்த பல வெளிநாட்டு முஸ்லீம் நண்பர்கள் சுகம் விசாரித்து இன்முகம் காட்டி வரவேற்று வழியனுப்பி வைத்தார்கள்.

சாப்பிட்டு விட்டு குளிர்ச்சியான மரக்கறிகளையும் வாங்கிக் கொண்டு வெளியே வந்தோம். மனிசிக்கும் நல்ல சந்தோசம்.

என்னப்பா இவர்கள் பழகுவதைப் பார்த்தால் நல்லவர்கள் போலிருக்கு... எல்லாரும் நல்லா சந்தோசமாய் அன்பாய் கதைக்கிறார்கள் பழகுகிறார்கள் என்றாள்.

ஏன்.... இல்லை.

இல்லை முஸ்லீங்கள் என்றால் எல்லாம் பயங்கரவாதிகள்...  வன்முறையானவர்கள்.... கூடாதவர்கள்.... என்று.... தான் அவ்வளவு காலமும் நினைத்துக் கொண்டிருந்தனான்..... என்றாள்.

ஆஆஆஆஆ...... எனக்குப்பத்திக் கொண்டு வந்தது. என்னைச் சாந்தப்டுத்திக் கொண்டபடியே....

அது சரி இவ்வளவு காலத்திலும் எத்தனை முஸ்லீம் ஆக்களுடன் பழகியிருக்கின்றாய்.... உனக்கு எத்தனை முஸ்லீம் ஆக்களைத் தெரியும்....

மனிசி ஒன்றும் பேசவில்லை நானும் ஒன்றும் திருப்பிக் கேட்கவில்லை.

இவையெல்லாம் நடந்து ஒரு மூன்றோ நாலுமாதமோ இருக்கலாம்.

இப்ப கொஞ்ச நாளைக்கு முதல் தமிழ் - சிங்கள உறவுகளை மேப்படுத்துவதற்காவும் இரு இனங்களுக்குமிடையிலான நட்புறவை வளர்பதற்காகவும் என்று ஒரு விழா நடைபெற்றது.

தூரத்து உறவான ஒரு அக்கா குடும்பம் என் வீட்டில் வந்து நின்றதால் அந்தக் குடும்பத்தையும் இந்த விழாவுக்கு வாங்கோ என்று விரும்பிக் கேட்ட போது அவர்கள் மிகுந்த கஸ்ரப்பட்டார்கள். ஏன் எதற்கு என்று சொல்ல முடியாமல் திணறி திண்டாடினார்கள்.

சிங்களவர்கள், தமிழர்கள், முள்ளிவாய்க்கால், புலிகள், போர்க்குற்றங்கள், கற்பழிப்புக்கள், கைதிகள், கட்சிகள், கொடிகள்  என்று ஆயிரம் ஆயிரமாய் கதை சொன்னார்கள். இல்லை கதை அளந்தார்கள்.

நான் சிரித்த படியே...

அக்கா வந்து பாருங்கோ... பிடிக்கவில்லையென்றால் எல்லோரும் திரும்பி உடனேயே வருவோம் என்ற அன்புக்கட்டளைகளோடு விழாவுக்குப் போய்ச் சேர்ந்தோம்.

மற்றவர்களைப் போல் ஆடாமல் அசையாமல் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள், அக்கா குடும்பம்.

நிகழ்சிகள் எல்லாம் இனிதே முடிவடைய அந்தச் சிங்களத் தோழர்களையும் அவர்களது குடும்ப உறவினர்களையும் எனது துணைவிக்கும் அக்கா குடும்பத்துக்கும் அறிமுகம் செய்து வைத்தேன்.

மண்டபம் எல்லாம் துப்பரவு செய்து மிஞ்சின சாப்பாடுகளை  எல்லோரும் சேர்ந்து பகிர்ந்து சாப்பிட்டு, வீடு வர இரவு ஒரு மணியைத் தாண்டி விட்டது.

அடுத்த நாள் காலை. எல்லாரும் லேற்றாத் தான் எழும்பினோம்.

எல்லாம் முடித்து சோபாவுக்கு வந்த போது.... ராத்திரி நான் நித்திரையே கொள்ளவில்லையடா... அந்த நாடகங்களும் மற்ற நிகழ்வுகளும் அந்தச் சிங்களச் சனங்கள் பழகிய விதங்களும், அவர்கள் நடந்து கொண்ட முறைகளும் எனக்கு ஏதோ மாதிரி இருக்கு பெரிய கவலையாகவும் இருக்கு.....?

ஏனக்கா......

இல்லேடா.... சிங்களவங்கள் எண்டா முரடங்கள் காடையர்கள் கொலைகாரர்கள்.... எண்டு தான் நினைச்சுக் கொண்டிருந்தனான். ஆனால் இதுகள் நல்ல சனங்கள் போல கிடக்கு.... உதுகளை நினைச்சுத் தான் எனக்கு கவலையாய் இருக்கு. அவ்வளவு காலமும் பிழையாய் விளங்கிக் கொண்டேன் என்று.

உங்கை ஏதாவது இப்படிச் ஒரு விழா நடந்தா... இவங்கள் கொஞ்சப் பேர் சிங்களவங்களோடும் அரசாங்கத்தோடும் நின்று தமிழரைக் காட்டிக் கொடுக்கிறான்கள், தமிழருக்குத் துரோகம் செய்யிறாங்கள் எண்டு,  சிலர் சொல்லிக் கொண்டு திரியினம் அதைத் தானே நாங்களும் ..... நினைச்சனாங்கள்.

ராத்திரி வந்து பார்த்ததாலே தானே தெரியுது, உந்த அரசாங்கம் எங்களுக்கு மட்டுமல்ல உந்தச் சிங்களச் சனத்துக்கும் பிழையானது விரோதமானது என்று...

அதோடை இவ்வளவு காலமும் நடந்த உந்தச் சண்டைகளை இந்தச்சனங்களும் ஆதரிக்கவில்லையென்று இப்ப தானே விளங்குது.

எனக்கு மனதிலே சந்தோச ரேகைகள் இழையோடத் தொடங்கியது.

மனதுக்குள் சிரித்தபடியே என்ரை மனிசியை அன்று கேட்டது போல அக்காவையும் கேட்டேன்....

அக்கா உனக்கு எத்தனை சிங்களச் சனங்களைத் தெரியும்... எத்தனை சிங்கள மக்களோடு பழகியிருக்கின்றீர்கள்......

ஒன்றும் பேசாமல் வாயடைத்து நின்றா....

ஒருவரையும் தெரியாதடா...?

அப்ப எப்படி அவர்களை பிழையெண்டு சொல்வாய்...?

அக்கா இப்படித் தான் உன்னைப் போன்ற ஆக்களும் என்ரை மனிசியைப் போன்ற ஆக்களும் இந்தச் சிங்களச் சனங்களும், முஸ்லீம் ஆக்கள் எல்லாம் பயங்கரவாதிகள் என்று நினைப்பதோடு மட்டுமல்லாது இந்தத் தமிழினம் தான் உலகத்திலேயே தலை சிறந்த இனமெண்டு நினைச்சுக் கொண்டிருக்கிறையள்...

டேய் நிப்பாட்டா இவங்கள் செய்யிற  வேலையள் உனக்குத் தெரியாதடா.. உந்த முஸ்லீம்கள் எத்தனை பேற்றை தலையை வெட்டுறதை இந்தத் ரீவீகளிலே நீ பாக்கையிலையோ... சும்மா அவங்களுக்கு வக்காளத்து வாங்க வந்திட்hய் என்று கோபமாய் ஏறி விழுந்தா..

இஸ்லாமியர்கள் என்றால் பயங்கரவாதிகள், வன்முறையானவர்கள் என்ற இந்த மேற்குலகச் சிந்தனையை இந்த அமெரிக்காவும் அதன் அடிவருடி நாடுகளும் உலகம் பூரா பரப்பி விட்டிருக்கிறது அதே போல் தான் சிங்களவன் என்றால் காடையர்கள் பயங்கரவாதிகள் வன்முறையாளர்கள் என்ற பரப்புரையை எங்கடை தமிழ் தலைவர்கள் எப்படியெல்லாம் விதைச்சு விட்டுப்போனது இப்போ தான் உங்கள் எல்லோர் மனதிலும் விருட்சமாய் வளர்ந்து கொண்டிருக்கோ, அதே போலவே சிங்களமக்கள் மத்தியிலும் தமிழர்கள் என்றால் பயங்கரவாதிகள் என்று அவர்கள் தலைவர்களாலும் விதைக்கப்பட்டிருக்கின்றது.

அக்கா.... முஸ்லீங்கள் தலை வெட்டிறது பற்றிச் சொன்னாய்... உந்த வெள்ளையர்கள் போய் தங்களுடைய காலனித்துவ நாடுகளாயிருந்த ஆபிரிக்க ஆசியா  நாடுகளில் செய்யாதவற்றையா...?

இவங்கள் செய்யிறாங்கள்... நாஜிகள் செய்தவைகளை விடவா.... இவங்கள் செய்து போட்டாங்கள். ஏன் எங்கடை நாட்டிலே தமிழனுக்கு தமிழன்இ செய்த செய்கிற சாதிக் கொடுமைகளை விடவா....

அக்கா... இவங்கள் செய்யிறது சரியென்றோ அல்லது முள்ளிவாய்க்காலிலே இராணுவம் செய்தது சரியென்றோ சொல்வதெல்ல எனது நோக்கம். யாரோ ஒரு குறிப்பிட்ட அமைப்புக்களோ அல்லது ஒரு சில குழுக்களோ செய்வதை வைத்துக் கொண்டு அந்த இனம் முழுவதுமே அப்படித் தான் என்று நீங்கள் கொஞ்சப் பேர் கொக்கரிக்கிறது தான் பிழையென்று சொல்லுறன்.

நீ கொஞ்சம் கண்ணை மூடி யோசிச்சுப் பார்...

எங்கடை ஊரிலே சயிக்கிள் கடை வைச்சிருக்கிற மகாலிங்கம், கார் வைச்சிருக்கிற தருமு, தோட்டம் செய்ய வாற சோமுவைப் போலவும், எங்கடை பள்ளிக் கூடத்திலே படிப்பிச்ச வாத்திமார் - ரீச்சர்மார் போலவும் இன்னும் எமக்குத் தெரிந்த ஊர்ச் சொந்தக்காரரர் பக்கத்து ஊர்க்காரர் போலவும் தான் உந்தச் சிங்களச் சனங்களும் முஸ்லீம் சனங்களும் என்பதை மறந்து போடாதையுங்கோ...

இஞ்சை வெளிநாடுகளிலே இருக்கிறவர்கள் சொல்லுற மாதிரி என்னோடு வேலை செய்யிற யெஸ்ப்பா, லாஸ், பீட்டர் லீனாவும் ரீனாவும் கரினா எல்லாரும் எந்தளவோ நல்ல சனங்கள் எண்டு சொல்லுறையளே.... அதே போலத்தான் சிங்கள ஆக்களுக்கேயும்  யெக்கொடவும், புஞ்சிபண்டாவும், ரட்னாயககா, மாலினியும், சந்திரிகா போன்றவர்களும் முஸ்லீம் ஆக்கள் மத்தியில் இக்பாலும், சலீமும் ஏப்பிரகாமும், குசைனும் இருப்பர்கள் என்பதை நினைச்சுக் கொள்ளுங்கள்

ஓத்துக் கேட்பது போல் எல்லோரும் மௌனமாய் இருந்தார்கள்.

அக்கா ஒவ்வொரு இனங்களிலேயும் உயர்ந்த பண்பு கொண்டவர்களும் மனிதநேயம் கொண்டவர்களும் நிறையவே இருப்பார்கள் என்பதை நினைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வளவு காலமும் நடந்த போராட்டங்களும் கசப்பான அனுபவங்களும் இப்படியொரு புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு நிறையக் காலங்கள் எடுக்கும் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை இருந்தாலும் சும்மா மூடிக்கொண்டிருக்காமல் உங்கள் இதயங்களை கொஞ்சமாவது திறந்து பாருங்கள்.

முற்றும்