Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

(வழிபாட்டுச்) சுதந்திரமும் - (மத) அடிப்படைவாதமும்

வழிபடுவதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வும், மன ஆறுதலும் கிடைக்கின்றது என்று நம்புகின்ற ஒரு மனிதனின் உணர்வை மதிப்பதைக் கடந்து, மதத்தை யாரும் விதந்துரைக்க முடியாது. கடவுள் நம்பிக்கையுள்ள மனிதன் இதைத்தான் வாழ்வியல் நெறியாக கொள்ள வேண்டும். தனிமனித நம்பிக்கையைக் கடந்து, அதைப் பொது நம்பிக்கையாக மாற்றுவது என்பது, மனிதனை ஏமாற்றுகின்ற சுயநலமாக மட்டும் தான் இருக்க முடியும்.

மதம் மூலம் தன்னை அடையாளப்படுத்துவதும், மத அடையாளங்களைக் கொண்ட சமூகத்தில் தன்னை மதமூடாகக் காட்டிக் கொள்வதும், சமூகம் மீதான அத்துமீறல். உன்னுடைய நம்பிக்கை உன்னுடையதே ஓழிய, பிறருக்கு அதைக் காட்சிப்படுத்துவதோ, பிரச்சாரம் செய்வதோ, திணிப்பதோ மானிடத்துக்கு எதிரான குற்றமாகும்.

வழிபாடு என்பது வெறுமனே தனிமனித நம்பிக்கை. நம்பிக்கையை பிறரிடம் திணிக்க முடியாது. திணித்தல் பிறர் சுதந்திரத்தில் அத்துமீறுவது தான்.

உதாரணமாக குழந்தைக்கு பெற்றோர் அல்லது பெற்றோர்கள் தங்கள் மதத்தைத் திணிப்பது என்பது, குழந்தையின் சுதந்திரமான மானிட வாழ்வியலை பறிப்பது தான். ஜனநாயகம் குறித்த அடிப்படையான விதி இது. குழந்தைக்குக் கூட, உனது மதத்தைப் பிரச்சாரம் செய்யக் கூடாது. மத அடையாளத்தைக் கொடுக்க கூடாது. மதப் பண்பாட்டு, கலாச்சாரக் கூறுகளைக் கொண்டு வளர்க்கவே கூடாது. மத அடையாளங்களைக் கொண்டு, குழந்தையை காட்சிப்படுத்தக் கூடாது. இதுதான் மனிதனை மனிதனாகவே வளர்க்கின்ற ஜனநாயகப் பண்பாடு. வழிபாட்டுச் சுதந்திரத்தின் வரம்பு இதை தாண்டும் போது, அதிகாரமாக, ஒடுக்குமுறையாக, மதத் திணிப்பாக மாறுகின்றது.

சாதியை பிறப்பில் தீர்மானிக்கின்ற, சாதிய ஒடுக்குமுறையிலான, சாதிய சமூக அமைப்புமுறை போன்று, மதத்தை குழந்தையில் திணிக்கின்ற பயங்கரவாதம் தான், குழந்தை வளர்ப்பாக நம்பப்படுகின்றது. இது வன்முறையிலானது, பயங்கரவாதக் கூறுகளைக் கொண்டது.

ஜனநாயகம் மற்றும் வழிபாட்டுச் சுதந்திரத்தின் வரம்புகளைத் தாண்டுகின்ற போது, பிறர் வாழ்வின் மீதான அத்துமீறலாக மாறுவதுடன், பயங்கரவாதமாக விரிந்து செல்லுகின்றது.

இவ்வாறு செய்வதை வலதுசாரிய சிந்தனைமுறை, "ஜனநாயகமாக" நம்புகின்றது. மதத்தை பிரச்சாரம் செய்யும் உரிமையாக, வலதுசாரிய "ஜனநாயகம்" அங்கீகரிக்க முனைகின்றது. இதன் பொருள், குழந்தையை பெற்றோரின் தனிச்சொத்தாக அங்கீகரிக்கின்றது. இந்த சிந்தனைமுறைதான், பெண்ணை ஆணின் தனிச் சொத்தாக பார்க்கின்றது. இப்படியான வலதுசாரிய ஜனநாயகக் கூறு தான், மதப் பயங்கரவாதங்களின் அச்சாணியாக இருக்கின்றது. பெண் அடிமைத்தனத்தின் நெம்புகோலாக இருக்கின்றது.

இது இஸ்லாமிய மதத்துக்கு மட்டுமானதல்ல. யூத, இந்து, கிறிஸ்துவ, சீக்கிய, இஸ்லாமிய, பௌத்த.. என்ற எல்லா மதக்கூறுகளிலும் இந்த மதப்பயங்கரவாதம் என்பது, உள்ளார்ந்த கூறாக இருக்கின்றது. மதம் என்பது தனிமனித வழிபாட்டில் இருந்து பிரிந்த, மனிதவிரோத கூறுகளைக் கொண்டதாக இருக்கின்றது. இந்த பின்னணியில் எல்லா மதங்களும் மத பயங்கரவாதத்தில் ஈடுபட்டவை தான். மதத்தின் பெயரில் யுத்தங்களைச் செய்து, மானிடத்தை கொன்று குவித்ததுடன், மானிடத்தை பகுத்தறிவற்றனவாக அடிமைப்படுத்தியவை தான். அதைத்தான் மதம் தொடர்ந்து இன்றும் செய்கின்றது.

 

இவை அனைத்தும் மதத்தின் பெயரில் நியாயப்படுத்தப்பட்டவை தான். இப்படி நியாயப்படுத்தியவை தான், கடவுளால் தரப்பட்டதாக கூறி, நிகழ்கால மனிதனை ஒடுக்கப் பயன்படுகின்றது. ஒடுக்கும் இந்த மதவெறியென்பது, மக்களை அடிமைப்படுத்தும் போதைப் பொருளாகத்தான் எதார்த்தத்தில் இருக்கின்றது. வழிபாட்டுக்கு வெளியில், மனிதனை மனிதன் அடிமைப்படுத்துகின்ற போதை மனித சிந்தனையாக இருக்கின்றது.

கடவுள் குறித்த நம்பிக்கை, ஒரு மனிதன் முன் உண்மையானதாக இருந்தால், அதை அவள் அவன் வழிபட முடியும். ஆனால் அதை மதமாக்க முடியாது. அதை மதமாக்கும் போது, உன் நம்பிக்கை, நீ பொய்யாகி விடுகின்றாய் எனபது உண்மை.

வன்முறையற்ற நவீனமான நாகரீகமான மனித சமூகம் குறித்து சிந்திக்கக் கூடிய ஒரு மனிதன், வழிபாட்டுச் சுதந்திரத்தைக் பேணி ஆனால் மதத்தைக் கடந்து எதிர்த்து வாழ்வது மட்டும் தான், மிகச் சிறந்த ஜனநாயகவாதிக்குரிய எடுத்துக்காட்டு. தனிமனித நம்பிக்கை சார்ந்த வழிபாட்டுக்கு எதிராகத்தான், சட்டதிட்டங்கள் கொண்ட அடக்குமுறையாக மதத்தையே ஒருங்கிணைத்து, அதை வியாபாரமாக்குகின்றனர். மதத்தை எதிர்த்து தனிமனித வழிபாட்டுச் சுதந்திரத்தை முன்னிறுத்துவது தான், மத நம்பிக்கையாளனின் குறைந்தபட்ட அறமாக இருக்க முடியும். மனிதனை மனிதன் மதிக்கின்ற பண்பாட்டுக்கு, இப்படித்தான் மத நம்பிக்கையாளன் சுயமதிப்பு கொடுக்க முடியும்.

தன்னை தன் மதத்தின் மூலம் அடையாளப்படுத்துகின்ற, உணருகின்ற மனிதன், எப்போதும் மிக மோசமான பிற்போக்கான வாழ்வியல் கூறுகளை சுமந்து கொண்டு, அதைக் கொண்டு சமூகத்துக்கு நஞ்சை விதைத்து விடுபவராக இருக்கின்றனர். வேறுவிதமாக இருக்க முடியாது.

இலங்கையில் இன்று இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து இலங்கை வாழும் பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் அணுகும் போது, தங்கள் மதத்தின் மூலம் அணுக முடியாது. மாறாக மனிதனாக தன்னை முன்னிறுத்தி, தன் மதத்தில் உள்ள அடிப்படைவாதக் கூறுகளை எதிர்த்துக் கொண்டுதான், இஸ்லாமிய பயங்கரவாதத்தை அணுக வேண்டும்;. தன் மத அடிப்படைவாதங்களுடன் சமரசம் செய்து கொண்ட குறுகிய பார்வை என்பது, இஸ்லாமிய மதத்திற்கு எதிரான தான் தழுவிய பிற மத அடிப்படைவாதங்கள் தான்;. உள்ளடக்கத்தில் வலதுசாரிய சிந்தனைமுறை. மனிதனாக தன்னை முன்னிறுத்தி, மதம் கடந்து அணுகுவது, தன்னைப் போல் மதம் கடந்த இஸ்லாமிய மக்களும், தங்களைத் தாங்கள் மனிதனாக அடையாளப்படுத்த வேண்டும் என்று கோர வேண்டும்.

நாங்கள் எல்லோரும் மனிதர்கள். அதுதான் எமது அடையாளம். பிற எல்லா அடையாளங்களையும் விட உண்மையானதும், வன்முறையற்றதுமாகும், இதன் பின் நாங்கள் இலங்கையராக இருக்கிறோம். அதன் பின் (மொழி மூலம்) தேசிய இனத்தவராக இருக்கின்றோம். இதுதான் எங்கள் எதார்த்தம்.

தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்த வழிபாட்டு முறையை மதமாக்குவது, அதை அடையாளமாக்குவது என்பது, மனிதனாக இருக்கும் அடையாளத்தை வன்முறைக்குள்ளாக்குவது தான். இதுதான் எல்லா மத அடிப்படைவாதங்களினதும் பொது சாரமாகவும், மத பயங்கரவாதங்களின் தோற்றுவாயாகவும் இருக்கின்றது. தனிமனித நம்பிக்கைக்கு அப்பால், மதத்தை எதிர்த்துப் போராடுகின்ற, மத அடையாளங்களை துறக்கின்ற மானுடப் பண்புகளை முன்வைத்து போராட வேண்டும்;. பொது இடங்கள் தொடங்கி அரசு வரை உள்ள மதக்கூறுகளையும், மத அடையாளங்களை எதிர்த்தும், மதம் சார்ந்து மனிதனை அடிமைப்படுத்தும் சட்டப்பாதுகாப்புகளை எதிர்த்து போராடுவதும் தான், எல்லா மதப் பயங்கரவாதத்துக்கும் எதிரான மானிட வாழ்வாக, வாழ்வியலாக இருக்க முடியும்.