Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

உரிமைகளை பெற போராடியே தீர வேண்டும்

தேர்தலின் போது மட்டும் அரசியலில் ஈடுபட்டுவிட்டு தேர்தல் முடிந்த பின்னர் வாழாதிருப்பின் மக்களால் எந்த வெற்றியையும் பெற முடியாது எனக் கூறும் முன்னிலை சோஷலிஸ கட்சி 100 நாட்களுக்குள் பாரிய மாற்றத்தை செய்ய முடியாவிட்டாலும், ஆகக் குறைந்த மறுசீரமைப்புகள் சிலதையாவது பெற்றுக் கொள்ள மக்கள் போராட வேண்டுமெனக் கூறுகிறது.

ஜனவரி 17ம் திகதி கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே முன்னிலை சோஷலிஸக் கட்சி மேற்கண்டவாறு கூறியது. அந்த ஊடக சந்திப்பின் போது மேலும் விளக்கமளித்த அதன் பிரச்சார செயலாளர் தோழர் புபுது ஜயகொட, "இந்த அரசாங்கம் தனது நோக்கத்தை இரு ஆவணங்களாக முன்வைத்துள்ளது. ஒன்று கொள்கை வெளியீடு. இது குறித்து நாங்கள் தேர்தலுக்கு முன்பும் பேசினோம். இந்த கொள்கை மீது கடுமையான விமர்சனமும் எமக்கு உள்ளது. வெற்று செக் (Blank Cheque) தாளைக் கையில் கொடுத்து விரும்பிய தொகையை எழுதிக் கொள்ளுமாறு ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டாமென நாங்கள் கூறினோம். இருந்தபோதிலும், 60 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் மைத்திரிபால சிறிசேன மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

அதேபோன்று, தேர்தலின் பின்னர் மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு விடமுடியாதெனவும், உண்மையான அரசியல் போராட்டம் 9ம் திகதிக்கு பின்புதான் தொடங்கப்படவிருக்கிறது எனவும் கூறினோம்.

அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தை முன்வைத்திருக்கிறது. இதுதான் இரண்டாவது ஆவணம். இலக்கை நிறைவேற்றும் திகதிகளுடன் வேலைத்திட்டத்தை முன்வைத்திருப்பது பயன்தரக் கூடியதாக இருக்குமென நாங்கள் கருதுகிறோம். ஆனால், அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக மக்கள் போராட வேண்டியிருக்கும்.

அதிகாரத்தை உறுதி செய்து கொள்வதற்கான செயற்பாடுகளுக்காக அவசரப்பட்டாலும். இந்த வேலைத்திட்டத்தில் குறித்திருக்கும் ஏனையவற்றை நிறைவேற்றிக் கொள்ள மக்களிடமிருந்து அழுத்தம் தேவைப்படுகிறது. உதாரணமாக, 100 நாள் வேலைத்திட்டத்திற்கு ஏற்ப, 10ம் திகதி ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும். பிரதமர் 11ம் திகதியே பதவிப் பிரமாணம் செய்ய வேண்டுமென குறித்திருந்தாலும் அவை இரண்டும் குறித்த திகதிக்கு முன்பே அதாவது 9ம் திகதி மாலை நடந்தேறியது.

அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், ஏனையவற்றுக்கும் அந்த அவசரம் உள்ளதா? அரசியலமைப்பு திருத்தம் சம்பந்தமான ஆலோசனைச்சபை 12ம் திகதி நியமிக்கப்படுமென கூறப்பட்டாலும், இதுவரை நியமிக்கப்படவில்லை. 20ம் திகதி பாராளுமன்ற கண்காணிப்புக் குழுவை நியமிப்பதாக கூறப்பட்டது. அதுவும் தாமதிக்கப்படுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

இவற்றை விரைவில் முழுமையாக நிறைவேற்றிக் கொள்ளவும் போராட வேண்டியுள்ளது. அரசியலமைப்பு திருத்தத்தை எடுத்துக் கொண்டாலும், நடைமுறையிலிருக்கும் அரசியலமைப்பிற்கு மேற்பூச்சான திருத்தத்தைக் கொண்டு வருவதற்குப் பதிலாக, ஜனநாயகத்தை பாதுகாக்கும் புதிய அரசியலமைப்பிற்காக மக்கள் போராட வேண்டும். அரசியமைப்பைத் தயாரிக்கும் சபைக்கு உண்மையான மக்கள் பிரதிநிதிகளை நியமித்துக் கொள்ள மக்கள் போராட வேண்டும். எந்தவொரு அரசியலமைப்பும் தயாரிக்கப்பட்டு நிறைவேற்றப்படுவதாயிருந்தால் அதற்கு மக்கள் விருப்பம் பெறப்பட வேண்டும். என்றாலும், மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தாமல், பாராளுமன்றத்திலேயே நிறைவேற்றிக் கொள்வதாக நூறு நாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது விடயத்தில் மக்கள் தலையிடாவிடினும், பாராளுமன்றக் குழுவின் மூலம் அரசியலமைப்பு திருத்தத்தை சமர்ப்பித்து பாராளுமன்றத்திலேயே நிறைவேற்றிக் கொள்வார்கள்.

பாராளுமன்ற சுவர்களுக்குள் நடக்கும் செயற்பாடுகளுக்கு நாங்கள் சம்பந்தப்படமாட்டோம். மக்கள் பங்களிப்போடு நடக்கும் முழுமையான அரசியலமைப்பு திருத்தத்திற்கு மாத்திரமே நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம்.

100 நாள் வேலைத்திட்டத்தின் ஒவ்வொரு விடயம் சம்பந்தமாகவும் மக்களுக்கு போராட்டமொன்று உள்ளது. அது மட்டுமன்றி, இந்த 100 நாள் வேலைத்திட்டத்திற்குள் மக்களின் ஆகக்குறைந்த எதிர்பார்ப்புகளையாவது நிறைவேற்றிக் கொள்வதாயிருந்தால், சமூக வற்புறுத்தலொன்று அவசியமாகும். கட்சி என்ற வகையில் நாங்கள் மக்கள் அமைப்புகளையும் இணைத்துக் கொண்டு அதற்கான திட்டத்தை வகுக்கவுள்ளோம்.

அவற்றை செயற்படவைக்க மக்கள் கருத்தை உருவாக்குவோம். ஊழல் சம்பந்தமாக விசாரிக்க சிறப்பு விசாரணை சபை நிறுவப்படுமென இந்த வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது மட்டும் போதாது. பாரிய ஊழல் மோசடிகள் சம்பந்தமாக மாத்திரம்தான் விசாரிக்கப்படுமா? கொலைகள் சம்பந்தமான விசாரணைகள் கிடையாதா? தண்டனை ஊழல் மோசடிகளுக்கு மட்டுமா? கொலைகாரர்களுக்கு தண்டனை கிடையாதா?

கடந்த காலங்களில் அரசியல் காரணமாக பலர் கொல்லப்பட்டனர். லசந்த விக்ரமதுங்க கொலை சம்பந்தமான விசாரணைகளுக்கு என்ன நடந்தது?

கட்டுநாயக்க தொழிலாளர் போராட்டத்தின்போது ரொஷான் சானக கொல்லப்பட்டார். துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டவர் யாரென்பதை விசாரிக்க வேண்டும். ரத்துபஸ்வல மக்கள் போராட்டத்தின்போது மக்கள் மீதா துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? மீனவர் போராட்டத்தின்போது அந்தோனியை சுட்டுத்தள்ள உத்தரவிட்டது யார்? இவைகள் சம்பந்தமாக விசாரிக்கப்பட மாட்டாதா?

மாணவர் தலைவர்களான ஜானக மற்றும் சிசித திடீர் வீதிவிபத்து என போக்குக்காட்டும் விதத்தில் கொல்லப்பட்டனர். இது சம்பந்தமாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு வழங்கிய அறிக்கை கூட தவறானது. இதன் உண்மையை அறிய விசாரணை குழு தேவைப்படுகிறது. பெருமளவானோர் காணாமலாக்கப்பட்டனர்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டார். எமது கட்சியின் லலித் மற்றும் குகன் காணாமலாக்கப்பட்டு 3 வருடங்கள் கடந்துள்ளன. இவை குறித்து விசாரிப்பதாயிருந்தால் அது சம்பந்தமான தகவல்கள் எங்களால் தர முடியும். எமது அரசியல் சபை உறுப்பினர்களான குமார் குணரத்தினம் மற்றும் திமுது ஆடிகல ஆகியோர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு அதிஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

ஜோன் த சில்வா அரங்கத்தின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை கடத்தி கடுமையாக தாக்கி மீண்டும் கொண்டு வந்து விட்டனர். விசாரணை நடத்துவதாயிருந்தால் இவர்களிடமிருந்து தகவல்களைப் பெறமுடியும். விசாரணைக்குழு நியமிக்கப்படுவதால் நியாயம் கிடைக்குமென நாங்கள் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிடினும் குறைந்தபட்சம் இதையாவது செய்யாவிட்டால் மக்களுக்கு எந்த வெற்றியும் கிடைக்கப் போவதில்லை.

பத்து நாட்களுக்குள் கணக்காய்வு சட்டம், தகவல் அறியும் சட்டம் போன்ற சட்டங்கள் போன்றவற்றை கொண்டு வருவதாக கூறுகிறார்கள். பயங்கரவாத தடுப்புச் சட்டம், வெகுஜன பாதுகாப்புச் சட்டம் போன்ற அடக்குமுறை சட்டங்கள் ரத்து செய்யப்பட மாட்டாதா? அவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

வடக்கில் இராணுவ ஆட்சியை ஒழித்து சிவில் நிர்வாகத்தை ஸ்தாபிக்க வேண்டும். அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அதன் முதற்கட்டமாக இரண்டு மூன்று நாட்களுக்குள் எவ்வித குற்றச்சாட்டுமின்றி 10, 20 வருடமாக தடுப்புக்காவலில் வைத்திருக்கும் நபர்களை விடுதலை செய்ய வேண்டும். இவற்றுக்கு பணம் செலவழிக்க வேண்டியதில்லை. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் தேவைப்படாது. அவற்றை நிறைவேற்றுமாறு மக்கள் போராட்டத்தின் ஊடாக வலியுறுத்த வேண்டும். ஒரே கடிதத்தால் சிலவற்றை செய்ய முடியும்.

இலத்திரனியல் அறிமுக அட்டை ரத்து செய்யப்படமாட்டாதா? உயர்தர மாணவர்களுக்கு, அதிபர்களுக்கு வழங்கும் கட்டாய இராணுவப் பயிற்சி இவ்வருடத்திலிருந்து நிறுத்தப்பட வேண்டும். கடந்த காலத்தில் சர்வாதிகார ஆட்சி நிலவியது. அந்த ஆட்சியை தோற்கடிப்பதாக உறுதியளித்தவர்கள் இவற்றை செய்து காட்ட வேண்டும்.

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சிலரின் சேவைகள் நிறுத்தப்பட்டன. நூற்றுக்கணக்கான மாணவர் தலைவர்கள் விரிவுரைகளுக்கு சமூகமளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டனர். அவர்களது தண்டனை ஒழிக்கப்பட வேண்டும்.

இவற்றை செய்யாமல் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது எப்படி? இதற்காக நாங்கள் மக்கள் கருத்தை உருவாக்க, மக்கள் பலத்தை கட்டியெழுப்ப, இக்கோரிக்கைகளுக்கான தீர்வை ஆட்சியாளரிடமிருந்து பெற்றுக்கொள்ள முன்னின்று செயற்படுவோம். மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாயின் பொதுவான விடயங்களிலிருந்து தொடங்க முடியும். கல்வியைப் பற்றி பெரிதாக கதையளப்பதை விட்டுவிட்டு பாடசாலைகளில் பணம் அறவிடுவதை தடை செய்து சுற்றறிக்கை அனுப்புங்கள். வடமேல் மாகாண சபையின் அதிகாரம் முற்றாக அரசாங்கத்தின் கைக்கு வந்திருப்பதால், அங்கு நீர்வளம் விற்கப்படுவதற்கு கொண்டுவரப்பட்ட நீர்ப்பாசன முகாமைத்துவ பிரகடனத்தை ரத்து செய்யுங்கள்.

மக்களின் எதிர்ப்புக்குள்ளாகியுள்ள துன்னான, போகஹகொட, கொபைகனே தொழிற்சாலைகளை அகற்றுங்கள். கொலன்னாவை தொகுதி மக்கள் அதிக பெரும்பான்மையால் மைத்திரியை வெல்ல வைத்தனர். இனியாவது 100 நாட்களுக்குள் மீதொடமுல்ல குப்பை மலையை அகற்றுங்கள்.

இவ்வாறான கோரிக்கைகளை 100 நாட்களுக்குள் நிறைவேற்றுவதற்கு நாங்கள் மக்கள் அமைப்புகளுடன் இணைந்து அழுத்தம் கொடுப்போம். இவை நடைமுறைப்படுத்தப்படாமல் மஹிந்தவை தோற்கடித்ததாகக் கூறினாலும் மஹிந்த தோற்கடிக்கப்படவில்லை என அர்த்தப்படும். உருவத்தை மாற்றினால் மட்டும் போதாது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் போஷகராக மஹிந்த உள்ளார். வெற்றிகள் மக்களுக்கு கிடைப்பதற்காக மக்கள் அரசியல் ரீதியில் அணிதிரண்டு செயற்பட வேண்டும். கட்சி என்ற வகையில் இவ்வாறான பல யோசனைகள் எம்மிடம் உள்ளன. நாங்கள் மக்கள் அமைப்புகள் மற்றும் சக்திகளுடன் இணைந்து இக்கருத்துக்களை மேலும் வளர்த்து அவற்றை நிறைவேற்றிக் கொள்ள மக்கள் கருத்தையும், மக்கள் பலத்தையும் கட்டியெழுப்புவோம்".