Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

போர்க் குற்றவாளிகளும்…இரட்டை வேடதாரிகளும்

இறுதி யுத்தத்தில் இலங்கை பாசிச அரசின் அடாவடித்தனங்களை வெளிக் கொண்டு வரும் புகைப்படங்களும் காணொளிகளும்  புதிது புதிதாக வெளிவந்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், சிறிலங்காவின் இன அழிப்பிலிருந்து எம் இனத்தைக் காக்க ஆயுத மேந்திய எமது சகோதர சகோதரிகளை எந்த மனித நேயமும் அற்ற வகையில் அவர்களின் ஆடைகளைக் களைந்து புகைப்படங்களை எடுத்துள்ள மனித நேயமற்ற கீழ்த் தரமான இலங்கை ராணுவத்தின் செயற்பாடுள் அம்பலத்திற்கு வந்துள்ளது.

 

யுத்தப் பிரதேசத்தில் எதிரி துருப்பில் ஒருவர் இறப்பாராயின் அவரது உடலையும், கைது செய்யப்படுவாராயின் தகுந்த மரியாதைகளுடன் நடத்த வேண்டும் என்பது தான் ஜ.நாவினதும், சர்வதேசத்தினதும் பொது நியதியாகும். இதை இலங்கை ராணுவம் ஒரு பொருட்டாக எப்போதும் கவனத்தில் எடுத்துக் கொண்டது கிடையாது. மிகவும் குறிப்பாக இறுதி யுத்தத்தில் முற்று முழுதாகவே ஒரு கொடிய இன வெறியர்களாக மாத்திரமல்ல மனித நேயமற்ற காம வெறி கொண்ட ராணுவமாக நடந்துள்ளனர். கைது செய்யப்பட்ட எமது சகோதரிகளை கற்பழித்து கொலை செய்தது மாத்திரமன்றி அவர்களது இறந்த உடல்களை நிர்வாணமாக்கி புகைப்படமும் எடுத்ததன் ழூலம்  ஜ.நா மற்றும் சர்வதேசத்தின் மனித உரிமை சாசனங்களையும் மீறியுள்ளார்கள்.

மனிதாபிமான மீட்பு யுத்தம் என்ற போர்வையில் உண்மையில் நிகழ்ந்தது என்ன?. இனப் படுகொலையும், ஆக்கிரமிப்பும், போர்குற்றங்களும் தான்.இவை பற்றி போதுமான அளவிற்கு ஆதாரங்களாக புகைப்படங்கள், காணொளிகள், கண் கண்ட சாட்சியங்கள், இலங்கை அரசின் அனுமதியின்றி உள்ளே சென்ற வெளிநாட்டு செய்தியாளர்களின் அறிக்கைகள், ஏன் இறுதி யுத்தத்தில் பங்கேற்ற ராணுவத்தினரின் சாட்சியங்கள் என ஏராளம் தினமும் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன.

ஜ.நாவும், சர்வதேசமும் இந்த போர் குற்றங்களையும், அதனை நேரடியாக நடத்திய ராணுவத்தையும் பின்னால் இருந்து நிகழ்த்திய ராஜபக்ஸ குடும்பத்தையும் இந்திய  மற்றும் சீன அரசுகளையும் விசாரணை செய்யாது மௌனம் சாதிப்பதன் பின்னணி பற்றி நாம் ஒன்றும் புரியாதவர்கள் அல்ல.

குறிப்பாக மேற்குலகம், இதனை தமது அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்காக பயன்படுத்த முனைகின்றன.  பிரித்தானிய அரசினால், அங்கு விஜயம் செய்த ராஜபக்ஸவையும் இறுதிப் போரில் நேரடியாக சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரிகளையும் போர் குற்ற காரணங்களிற்காக கைது செய்திருக்க முடியும். ஆனால் இரட்டை நாடகமாடி போர்க் குற்றவாளிகளை பாதுகாப்பாக திருப்பி அனுப்பியது. பிரித்தானியா வாழ் தமிழர்களின் வாக்குகளிற்காக ஒரு நாடகம். தனது இலங்கை மீதான பொருளாதார, அரசியல் நலன்களிற்காக இன்னொரு நாடகம்.

குறிப்பாக இலங்கையில் இன ஒடுக்கு முறைக்கு உள்ளாகியுள்ள தமிழ் மக்கள் பரந்து பட்ட மக்களின் நலன்களை முதன்மையானதாக உயர்த்திப் பிடிக்கும் ஒரு புரட்சிகர அரசியல் அமைப்பின் கீழ் அணிதிரண்டு, உள் நாட்டில்அனைத்து இன ஒடுக்கப்படும் மக்களுடனும், மகிந்த பாசிச அரசிற்கு எதிரான சக்திகளுடனும் ஜக்கியப்பட்டு போராடுவதன் ழூலம், சர்வதேசத்தில் ஒடுக்கு முறைக்குள்ளாகி அதனை எதிர்த்து போராடும் புரட்சிகர அமைப்புக்களுடன் அணி சேர்வதன் ழூலமும்  தான் இந்த போர்க் குற்றவாளிகளிற்கு தண்டனையை பெற்றுக் கொடுக்க முடியும்.

இது நிகழாத வரையிலும், எமது இந்த போர் குற்றவாளிகளிற்கு எதிரான எழுச்சி மற்றும் உணர்வுகளை ஏனையோர் பயன்படுத்தி, அவர்களது நலன்களை சாதிப்பது தொடர்ந்து கொண்டேயிருக்கும்.