Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அவனும் என்னை மாதிரி ஒரு கெட்டிக்காரன் தான்!!

பொதுவுடமைக் கட்சியினரும், சிறுபான்மை தமிழர் மகாசபையும் முன்னின்று நடத்திய சாதி ஒழிப்பு போராட்டங்கள் ஐம்பது ஆண்டுகளைக் கடந்து விட்டன. இந்தக் கதையின் "கந்தையா அப்பு" நூறாண்டுகள் வாழ்ந்து அண்மையில் காலமாகி விட்டார். ஆனால் சாதி, இன்றைக்கும் தமிழ் வாழ்வில் மாறாத அவலமாக கோரமுகம் கட்டி நிற்கிறது. 07.08.2012 இல் வெளிவந்த "கந்தையா அப்பு"வின் வாழ்வு குறித்த கதையை அவரது நினைவாக மறுபிரசுரம் செய்கிறோம்.

பச்சை பசேல் என்ற சோலைகள் இல்லை, மயில்கள் தோகை விரிக்கும் காடுகள் இல்லை. நெடிய கரும்பனை கூடல்களும், அனல் காற்று வீசும் பாலை நிலமும் தான் எங்களது ஊர். ஆனால் பரதேசியிலும் பரதேசியாக பாதம் வலித்து நிற்கையில், வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடத்தில் வாருங்கள் என்று ஆறுதல் தருகிறது தவழ்ந்து விளையாடிய தாய்மண் பூமி.

எங்கள் ஊரில் கந்தையா அப்பு என்னும் முடி வெட்டும் தொழிலாளி இருந்தார். கந்தையா அப்பு என்று ஒரு கொஞ்சப்பேர் தான் கூப்பிடுவோம். மிச்சப்பேர் எல்லாருக்கும் கந்தையா தான். எனேன்றால் அம்பட்டர் எப்படி அப்புவாகவோ, அண்ணனாகவோ முடியும் என்ற சாதித்திமிர். வயது குறைந்ததுகள் எல்லாம் கந்தைய்யா என்று கூப்பிடும் போது வாட்டமோ, மனக்கசப்போ அவர் முகத்தில் தெரிவதில்லை. ஊரை நம்பி வாழும் குடிமகன் எப்படி ஊரைப் பகைக்க முடியும். கந்தையா என்று பெயர் வைத்திருந்தாலும், அவர் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர். சாதிக்கொடுமைகளினால் சமயம் மாறியிருக்க வேண்டும். என்றாலும் அவர் அதைப்பற்றி ஒரு போதும் கதைப்பதில்லை. ஊரின் கந்தசுவாமி கோவிலிற்கும், ஊராரிற்கும் அவரின் சாதியினர் செய்ய வேண்டிய வேலைகளை அவர் தான் செய்வார். பிறந்தவுடன் முப்பத்தொராம் நாள் மொட்டை அடிப்பதிலிருந்து, இறந்த பிறகு கொள்ளிக்குடம் உடைத்து வழியனுப்பி வைப்பது வரை அவர் தான் செய்வார். வாழ்வும், சாவும் அவரோடு தான்.

என்றாலும் எதாவது சடங்குகளை மறந்து போய் விட்டாலோ, சொன்ன நேரத்திற்கு அவரால் வர முடியாமல் போய்விட்டாலோ "சாதிப்புத்தியை காட்டி விட்டான்" என்று கோரமுகம் காட்டுவார்கள். அவரிற்கு மரியாதை கொடுக்காமல் நடத்துகிறீர்கள் என்று இளைஞர்கள் சண்டை போட்டால் எல்லாம் சாதிமுறைப்படி, சமயமுறைப்படி தான் செய்கிறோம் என்று மயிர் புடுங்குவார்கள் பெரிசுகள். ஆனால் ஒரு கிறிஸ்தவரைக் கொண்டு தான் தங்களது சைவமுட்டையிலே மயிர் புடுங்குகிறோம் என்பதிலே எந்த விதமான கூச்சமோ, வெட்கமோ அவர்களிற்கு வந்ததில்லை.

எல்லா முடிவெட்டும் தொழிலாளர்களையும் போல கந்தையா அப்புவும் நல்ல சுவாரசியமாக கதைப்பார். ஆனால் முடிவெட்டும் கலை தான் அவரிற்கு கை வரவில்லை. ஒவ்வொரு பெடியன்களிற்கும் ஒவ்வொரு ஸ்டைல் சொல்லி முடி வெட்டுவார். கடைசியிலே பார்த்தால் எல்லாப்பெடியன்களிற்கும் தலையிலே கரிச்சட்டியை கவிட்டு விட்டது போல இருக்கும். முடி குறைவாக இருக்கும் பெட்டைகளிற்கு அவர் சொல்லுவார் "நான் ஒரு தைலம் வைச்சிருக்கிறேன், அதை தலையிலே போட்டு தேச்சால் உடனே கரடி மாதிரி கனக்கமுடி வளரும். ஆனால் அதை உமக்கு தர முடியாது. ஏனென்றால் அதை தலையிலே வைச்சு கையாலே தேய்க்கும் போது கையிலே முடி வளர்ந்து விடும்" என்பார். "தைலம் வைக்காமல் விட்டாலும் இவளுகள் கரடி மாதிரித் தான் இருக்கிறாளுகள் என்று பெடியன்கள் சிரிச்சுக் கொள்ளுவோம்.

எங்களது மூர்த்தி மாமாவிற்கு  முடி கொட்ட தொடங்கியிருந்தது. "தலை இழுக்கும் போது முடி உதிர்ந்து தோளிலே விழுகிறது என்ன செய்யலாம்" என்று அப்புவிடம் ஆலோசனை கேட்டார். ஒரு நிமிசம் கண்ணை மூடிக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்திருந்து விட்டு ஞானக் கண் திறந்து "இதெல்லாம் ஒரு பிரச்சனையோ" என்று சிரிச்ச கந்தையா அப்பு சொன்னார், "தலை இழுக்கும் போது தோளிலே ஒரு துண்டை போட்டுக்கொண்டு இழுங்கோ, முடி துண்டிலே விழும் முதுகிலே விழாது". மூர்த்தி மாமா பல்லைக் கடிச்சுக் கொண்டு இருந்த நாலு முடியையும் பிய்ச்சுக்கொண்டு அந்த இடத்தை விட்டே ஓடிப்போனார் .

தமிழ்ச்சமுதாயத்தில் முடிவெட்டுபவர்கள் பெரும்பாலும் மருத்துவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். புதுமைப்பித்தனின் "நாசகாரக்கும்பலில்" வரும் மருத்துவரைப்போல, கந்தையா அப்புவும் ஊரிலே நாட்டு மருத்துவம் பார்ப்பதுண்டு. ஆனால் அதுவும் அவரது முடிவெட்டும் கலை மாதிரித்தான். என்னவோ எல்லாம் சொல்லி மருந்து கொடுப்பார். ஆனால் வருத்தம் கொஞ்சமும் மாறாது. ஒரு முறை பக்கத்து ஒழுங்கையில் இருக்கும் மலர் அக்காவிற்கு காய்ச்சல் வந்தது. கந்தையா அப்பு தான் எதோ மருந்து கொடுத்தார். மலர் அக்காவால் எழும்பி நிற்க முடியாத அளவிற்கு வருத்தம் கூடிவிட்டது. அந்த நேரத்தில் மிகவும் பிரபலமாக இருந்த டொக்ரர் பிலிப்பிடம் கூட்டிக்கொண்டு போவதற்கு வெளிக்கிட்டார்கள். அவரது மருத்துவமனை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இருக்கிறது.

மலர் அக்காவை காரிலே ஏற்றிக் கொண்டு இருக்கையில் பெடல்கட்டை எல்லாம் உடைஞ்சு போய் இருக்கும் தனது சைக்கிளில் கெந்திக்கொண்டு வந்த அப்பு காரை பார்த்தவுடன் நின்று, "எங்கை பிள்ளையை கூட்டிக் கொண்டு போறீங்கள்" என்று கேட்டார். "இல்லை கந்தையா,பிள்ளைக்கு காய்ச்சல் கூடி விட்டது அது தான் டொக்ரர் பிலிப்பிடம் கூட்டிக்கொண்டு போறோம்" என்று  அப்பு மன வருத்தப்பட்டு விடக் கூடாது என்பதற்காக தயங்கியபடியே சொன்னார் மலரக்காவின் அப்பா. 

அப்பு ஒரு தெளிந்த மனிசன். வஞ்சகம், போட்டி, பொறாமை என்பது அவரது நெஞ்சகத்தில் என்றைக்கும் இருந்ததில்லை. அதனால் அவர்கள் தன்னை விட்டு விட்டு டொக்ரர் பிலிப்பிடம் மலர் அக்காவைக் கூட்டிக் கொண்டு போவதைப் பற்றிய மனக்கசப்பு கொஞ்சமும் இன்றி, அதே நேரம் தன்னை, யாழ்ப்பாணத்தின் மிகப் பெரும் வைத்தியரான பிலிப்பிடம் ஒப்பிடும் சந்தர்ப்பம் இதுவென்பதை உணர்ந்த சந்தோசத்துடனும் "அவனும் என்னை மாதிரி ஒரு கெட்டிக்காறன் தான், பயப்பிடாமல் கூட்டிக்கொண்டு போங்கோ" என்றார். காய்ச்சலில் நிற்க முடியாமல் நின்ற மலர் அக்காவே விழுந்து விழுந்து சிரிச்சா.

பல வருடங்களிற்கு பிறகு ஊரிற்கு போன போது சந்தியில், வாகை மரத்து நிழலில் பஸ்சிற்கு காத்து நின்ற அப்புவை பார்த்தேன். வறுமையும், முதுமையும், போரும் அவரை உலுக்கி எடுத்திருந்தது. காலை தொடக்கம் இரவு வரை வீடுகளிற்கு போய் முடி வெட்டுதல், ஊராரின் சடங்குகள், கந்தசாமி கோயில் பூசைகள், திருவிழாக்களிற்கு குடிமகனாக செய்ய வேண்டியவைகளை செய்தல் என்று சுறுசுறுப்பாக ஓடி உழைத்து இறுகிப் போயிருந்த அவர்து உடல் மிகவும் தளர்ந்து போயிருந்தது. 

பக்கத்திலே போய் "அப்பு" என்று கூப்பிட்ட போது எப்பவும் அன்பு ததும்பும் தன் விழி மலர நடுங்கும் கைகளை அகல விரித்து கட்டிப் பிடித்துக் கொண்டார். "சுகமாய் இருக்கிறீரோ குஞ்சு" என்று எப்போதும் போல் நேசம் வழிய தலையை தடவினார்.

போர் அவரது வாழ்வை, அவரது குடும்பத்தை எப்படி எல்லாம் சிதைத்தது என்பதை சொல்லும் போது குரல் நடுங்கியது. போரினால் இடம் பெயர்ந்து போன இடங்களில் கூட சாதி பார்த்து ஒதுக்கியதைச் சொல்லும் போது, முன்பு அவரை சாதி வெறியர்கள் அவமதிக்கும் போது அவருக்காக ஊர்ப்பெடியன்கள் ஊராருடன் சண்டை பிடித்ததும், சாதி ஒழிப்பு போராட்டங்கள் நடத்தியதும் அவருக்கு நினைவிற்கு வந்திருக்க வேண்டும். "சாதி பாக்கிறது எல்லாம் எண்டைக்கும் மாறாது தம்பி, எல்லாரும் மனிசர் எண்டுற நினைப்பு வராமல் எப்படி இதெல்லாம் மாறும்" என்ற குரலில் வாழ்நாள் முழுவதும் அவமானத்தையும் , கசப்பையும் மட்டுமே கண்ட வெறுமை தெரிந்தது.

"அதெல்லாம் போகட்டும் தம்பி, இதை எல்லாம் நான் எண்டைக்கும் பெரிசாக எடுக்கிறதில்லை. ஆனால் முப்பத்தொன்றுக்கு என்ரை மடியிலே வைச்சு முடி வழிச்ச எத்தனையோ பிள்ளைகள் எனக்கு முதலே போயிட்டுதுகளே, அதைத்தான் என்னாலே தாங்க முடியாமல் இருக்கு" என்னும் போது கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. சாதி, சமயம், இனம், மொழி கடந்த அன்பு என்பதை மட்டுமே அறிந்த ஒரு கிழவனின் கண்ணீர் கட்டிப் பிடித்திருந்த என் கைகளை நனைத்தது.