Sun09252022

Last updateSun, 19 Apr 2020 8am

குமார் குணரத்தினத்தை வெள்ளை வானில் கடத்தியதை கோத்தபாய ஒப்புதல், மைத்திரி - ரணில் அரசு மௌனம்!

அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கிய முன்னணி உறுப்பினரான குமார் குணரத்தினத்தை 2012 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 7ம் திகதி கைது செய்வதற்கு; இன்றைய ஜே.வி.பி தலைவரான அநுரா குமார திஸநாயக்காவிற்கு அவசியம் இருந்ததாகவும், அதற்க்காக குமாரின் நடமாட்டங்கள் மற்றும் தங்குமிடங்கள் குறித்து தன்னிடம் தகவல்களை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய இந்த உண்மையினை இன்று சொல்வதற்கு காரணம் இருக்கினறது. அன்று மகிந்த குடும்ப ஆட்சியில் ஒன்றாக கூடியிருந்த ஜே.வி.பி இன்று புதிய அரசுடன் திரைமறைவில் மிக நெருக்கமாக செயற்படுவதுடன் கோத்தபாயவின் “அவன்கார்ட்” தனியார் கூலிப்படை குறித்து பிரச்சினையை உருவாக்கியதன் காரணமாக விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளமையே ஆகும். அநுரா குமார பற்றி சொல்ல போய் வெள்ளைவான் கடத்தல் பிரதான சூத்திரதாரி தான் தான் என ஒத்துக்கொண்டுள்ளார்.

தோழாகள் குமார் மற்றும் திமுது ஆட்டிகல இருவரும் கடத்தி செல்லப்பட்டது கொலை செய்வதற்க்காகவே. இது ஜே.வி.பி மற்றும் இலங்கை அரசின் தேவையாக அன்று இருந்தது. 2004இல் ஜே.வி.பி இடதுசாரிய பாதையிலிருந்து விலகி கூட்டணிவாதத்திற்கும், மறுசீரமைப்புவாதத்திற்கும் உள்ளான போது அதனை எதிர்த்து இடதுசாரியத்தை வலியுறுத்திய அணியில் முன்னிலைப்பாத்திரம் வகித்ததுடன், மீண்டும் 2010 இல் கட்சியில் உட்கட்சி போராட்டம் நடந்தபோது கட்சி கடந்த காலத்தில் திரிவுவாதத்திற்கும், இனவாதத்திற்கும் பலியாகிப்போனதை எதிர்த்து போராடி இடதுசாரிய வேலைத்திட்டத்தை தோழர் குமார் முன்வைத்தார். இது கட்சியின் பெரும்பான்மையால் அங்கீகரிக்கப்பட்டது. ஆனாலும் கட்சியின் தலைமையில் இருந்த உறுப்பினர்களாலும், பாராளுமன்ற சேற்றிற்குள் புதையுண்ட கட்சி உறுப்பினர்களாலும் அதற்க்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டது.

இந்நிலையில் இடதுசாரிய அரசியலை உயர்த்தி போராட்டம் நடாத்திய தோழர்களின் ஒரே தெரிவாக இருந்தது “மக்கள் போராட்ட இயக்கத்தை” தோற்றுவிப்பது. மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்பாடுகள் மக்களின் கவனத்தை ஈர்த்ததுடன் அரசிற்கும் நெருக்கடி நிலையினை தோற்றுவித்தது. இலங்கையில் இடதுசாரிகள் என்ற பனருக்குள் இயங்கிய அனைத்து திரிவுவாதிகளும் அரசில் பங்கேற்றிருந்து மக்களை கைவிட்டு இருந்த நிலையில்; மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்பாடுகளும், மக்களின் அதனை நோக்கிய அணி திரளலும் ஆளும் வர்க்க ஆட்சியாளர்களையும், திரிவுவாதிகளையும் அச்சத்திற்கு உள்ளாக்கியது. வடக்கு-கிழக்கு மக்கள் அரச பயங்கரவாத அச்சத்தில் வாழ்ந்த 2010இல், தோழர் லலித் உயிராபத்தையும் மீறி யாழ்ப்பாணம் சென்று வடக்கு அரசியல்வாதிகளால் முன்னெடுக்க முடியாதிருந்த இறுதியுத்தத்தில் சரணடைந்தவர்களை தேடும் போராட்டத்தை, தோழர் குகனுடன் இணைந்து ஆரம்பித்து வைத்தார். இது காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் வீதிக்கு வந்து தமது காணாமல் போன உறவுகளிற்க்காக போராட வழிகாட்டியது. மக்கள் எழுச்சி கண்டு அஞ்சிய மகிந்த அரசு, தனது சட்டவிரோத வெள்ளைவான் மூலம் தோழர்கள் லலித் குகனை கடத்தி சென்று போராடிய மக்களை அச்சுறுத்தியது.

வெள்ளைவான் பல நூற்றுக்கணக்கானோரை கடத்தி காணாமல் ஆக்கியதுடன், சிலரை அச்சுறுத்திய பின் வீதி ஓரங்களில் இறக்கி விட்டும் சென்றது. வெள்ளைவான் கடத்தலுக்கு உள்ளானோரில் பெரும்பாலானவர்கள் தமிழ் இளைஞர்கள் மற்றும் அரசை விமர்சித்து கேள்வி கேட்ட ஊடகவியலாளர்கள், பத்திரிக்கையாளர்கள். வெள்ளைவான் போன்று சிலகாலம் கிறீஸ் பூதம் என்றும் மக்கள் அச்சமூட்டப்பட்டு வீடுகளிற்குள் முடங்கிக் கிடந்தனர்.

தோழர் குமார் வெள்ளைவானில் கடத்தப்பட்டு அதன் பின்னர் சர்வதேச உள்நாட்டு எதிர்ப்பு காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு நாடுகடத்தப்பட்டு சென்ற பின்னர், ஸ்கைப் ஊடாக இலங்கை ஊடகவியாலாளர்களிற்கு வழங்கிய பேட்டியின் போதும் அதேகாலத்தில் கடத்தப்பட்டு விடுதலையான திமுது ஆட்டிகல அவர்களின் பேட்டியின் போதும் சில விடயங்களை இருவரும் பொதுவாக கூறியிருந்தனர்.

தம்மை கடத்தி சென்றவர்கள் நவீன ஆயுதங்களை வைத்திருந்ததுடன், அவர்களது போக்குவரத்தானது சுதந்திரமானதாக எந்த தங்கு தடைகளும் இன்றி இரவு மற்றும் பகல் வேளைகளில் இருந்தது. அவர்களை கொண்டு சென்று தடுத்து வைத்திருந்த இடமானது ராணுவ முகாமிற்குரிய கட்டமைப்பாக இருந்ததுடன் தம்மை விசாரணை செய்தவர்கள் ராணுவ அதிகாரிகளின் தோற்றப்பாடு கொண்டவர்களாக இருந்தனர். தம்மை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகள் தமது கட்சியின் அரசியல் செயற்பாடுகள் மற்றும் தலைமை உறுப்பினர்கள் பற்றியதாக இருந்தன. மேலும் லலித் குகனை தாங்கள் வைத்திருப்பதாக தம்மை கடத்தியவர்கள் தெரிவித்திதது.

அரசியல் வேறுபாடுகளை, முரண்பாடுகளை தீர்ப்பதற்க்காக அநுரா குமார திஸநாயக்கா நாடிய வழி எப்படியான அரசியலை ஜே.வி.பி இன்று அவர் தலைமையில் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். குமாரின் கடத்தலுக்கு அநுரா குமார மீது பழிபோட்டு விட்டு வெள்ளைவான் தனக்கு கீழ் இயங்கிய ஒரு சட்டவிரோத ராணுவம் தான் என எந்தவித அச்சமும் இன்றி கூறியிருப்பதை இலகுவில் விட்டு விட முடியாது.

புலிகளை 2009 ஆம் ஆண்டு வன்னி யுத்தத்தில் வெற்றி கொண்ட பின்னர், மகிந்த குடும்ப சர்வாதிகார ஆட்சியை சிங்கள பௌத்த அடிப்படைவாத மேலாதிக்கத்துடன் நிலைநாட்டுவதற்க்காக அண்மையில் தேர்தலில் மண்கவ்வும் வரை தலைமையேற்று தீவரமாக செயற்பட்டவர்தான் கோத்தபாய. இதற்க்காக பல சட்ட விரோத செயற்பாடுகளில் இறங்கி வெள்ளைவான் கடத்தல் காணாமல் ஆக்குதல் முதல் மக்கள் நடமாட்டமுள்ள இடங்களில் பட்டப்பகலில் தனக்கு வேண்டாதவர்களை படுகொலை செய்வது வரை ஒரு மாபியா பாணியில் செயற்பட்டவர். அரச பாதுகாப்பு செயலாளர் பதவியை துஸ்பிரயோகம் செய்து, சட்ட விரோத ராணுவக்குழுக்களை அமைத்து நாட்டின் ஜனநாயகத்திற்கும் அமைதிக்கும் பங்கம் விளைத்ததுடன், ராணுவத்திற்குள் ஒரு பாசிச கட்டமைப்பை உருவாக்கி அதற்கு தலைமை தாங்கி பல ஊடகவியலாளர்களை, பத்திரிக்கையாளர்களை, மனித உரிமையாளர்களை, அரசியல்வாதிகளை படுகொலைகள் செய்தது முதல் காணாமல் போக செய்யப்பட்டது வரையும் எஞ்சியோர் உயிராபத்து காரணமாக நாட்டை விட்டு தப்பி ஓட காரணமாக இருந்து ஒருவர் தான் கோத்தபாய ராஜபக்ச.

கோத்தபாயவின் ஊடக செவ்வி வெளிவந்து ஏறத்தாழ இருகிழமைகளிற்கு மேலாக ஆகின்றது. இந்த நல்லாட்சி அரசு இது குறித்த எந்த நடவடிக்கையும் எடுப்பதில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடியவில்லை. முன்னிலை சோசலிச கட்சி மட்டுமே குமார் கடத்தப்பட்ட போது புகார் கொடுத்த பொலீஸ் நிலையங்களிற்கு சென்று இந்த பேட்டி குறித்து தாம் ஏற்க்கனவே 2012 இல் கொடுத்த புகாரிற்கு அமைய விசாரணை செய்ய வேண்டும் என கேட்டுள்ளனர். கோத்தபாய ஒத்துக் கொண்ட பின்பும் இது குறித்து மௌனம் சாதிப்பது ரணில்-மைத்திரி அரசின் நல்லாட்சி லட்சணத்திற்கு நல்ல எடுத்துக்காட்டு.

மறுபக்கத்தில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் எதுக்கும் லாயக்கற்ற ஒரு தலைவர். எந்த பிரச்சினை வந்தாலும் தமிழ் மக்களிற்கு கூறுவது, நாம் வெளிநாட்டு அரசுகளுடன் இது குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம் எனும் பசப்பு மட்டுமே.

உண்மையில் கோத்தப்பாயவின் சட்ட விரோத பாசிச நடவடிக்கைகளினால் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழ் இளைஞர்களே. நூற்றுக்கணக்காணோர் காணாமல் போனமைக்கும் பலர் கடத்திச் செல்லப்பட்டு வீதி ஓரங்களில் சுட்டுப்போடப்பட்டமைக்கும் காராணமான கடந்தகால மகிந்த ஆட்சிக்கு எதிராக நீதி விசாரணையை கோரி மக்களை போராட வைத்து, கோத்தபாயவுக்கும் இதில் சம்பந்தப்பட்டிருக்கக் கூடிய ஏனையவர்களிற்கும் எதிரான விசாரணைகளை முன்னெடுக்க அரசை நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கும் எந்த ஒரு  நடவடிக்கையினையும் எதிர்க்கட்சி மேற்க்கொள்வதாக தெரியவில்லை.

நல்லாட்சி அரசு முதல் எதிர்க்கட்சி வரை மக்களின் ஜனநாயகத்தையும், உரிமைகளையும் நிலைநாட்டுவதில் எப்படிப்பட்ட கருசணையுடன் செயலாற்றுகின்றன என்பதனை இனங்கண்டு கொண்டு; மக்கள் தங்களின் உரிமைகளை நிலைநாட்டவும், ஜனநாயகத்தை உறுதி செய்யவும் அணிதிரண்டு கொள்வது இன்று அவசியமானதாகின்றது.