Sun09252022

Last updateSun, 19 Apr 2020 8am

"நல்லாட்சியில்" மோசடி ஊழல் பேர்வழிகளிற்கு ராஜயோகம்!

மைத்திரி-ரணில் கூட்டு; மகிந்த அரசால் மறுக்கப்பட்ட ஜனநாயகத்தை மக்களுக்கு உறுதி செய்வதாகவும், மகிந்த குடும்ப ஊழல் மோசடி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து நல்லாட்சியை வழங்குவதாக வாக்குறுதி கொடுத்தே ஆட்சியை கைப்பற்றியது. மேலும் மகிந்த ஆட்சியில் அரசியல் காரணங்களிற்க்காக உயிராபத்தை எதிர்கொண்டு வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியவர்கள் நாடு திரும்பி அரசியலில் ஈடுபட உத்தரவாதமும் தேர்தலின் போது வழங்கி இருந்தது இந்த நல்லாட்சி கூட்டு.

ஆனால் கடந்த மகிந்த ஆட்சியில் அரசியல் காரணங்களிற்க்காக நாட்டை விட்டு வெளியேறிய குமார் குணரத்தினம் நாடு திரும்பி தனது இலங்கை குடியுரிமையினை மீளக் கோரியதற்கு இந்த கூட்டு நல்லாட்சி கொடுத்த பதில்; தேர்தல் கால வாக்குறுதிக்கு பதிலாக அபதாரமும், பழிவாங்கும் நோக்குடன் கொண்ட சிறைத் தண்டனையும் தான்.

குமார் குணரத்தினம் உறுப்பினராக உள்ள முன்னிலை சோசலிச கட்சியானது பரந்து பட்ட மக்கள், ஜனநாயக சக்திகள், இடதுசாரிகள், தொழிற்சங்கங்களை இணைத்து இலங்கையில் மக்களின் அரசியல் நலன்களை முன்னிலைப்படுத்திய புதிய அரசியல் இயக்கம் ஒன்றை முன்னெடுப்பதனை இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை தமது கையகப்படுத்தி வைத்திருக்கும் ஆளும் மேட்டுக் குடியினரால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதனால் இந்த பழிவாங்கல் இடம்பெற்றதுடன், குமார் குணரத்தினம் விண்ணப்பித்த குடியுரிமை கோரிய விண்ணப்பம் கிடப்பில் போடப்பட்டு அவரை நாடு கடத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இலங்கையரான குமாருக்கு குடியுரிமையை மறுக்கும் ரணில்- மைத்திரி ஆளும் மேட்டுக்குடியினர், தமதும் பல்தேசிய கம்பனிகளினதும் நலன்களை உறுதி செய்வதற்காக சிங்கப்பூர் பிரஜையான அர்சுன் மகேந்திரனுக்கு அவசர அவசரமாக 24 மணி நேரத்திற்குள் இலங்கை குடியுரிமை வழங்கி மத்திய வங்கியின் ஆளுனர் ஆக்கினர். ஆனால் அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய வங்கியில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டதனால் பல பில்லியன் நாட்டின் பணத்தை களவாடியுள்ளது தெரியவந்துள்ளது. நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அர்சுன் மகேந்திரனை பாதுகாப்பதில் எப்போதும் முன்நின்றதுடன் மத்திய வங்கி ஆளுனர் பதவி நீக்கப்பட்ட பின்னர் இந்த மோசடி பேர்வழிக்கு அரசியல் வேறு ஒரு உயர்பதவியை வழங்கியிருந்தார்.

இந்த ஊழல் மோசடி விவகாரம் பகிரங்கமாகி கோப் குழு விசாரணைக்கு உள்ளாகி நாளை (28/10/2016) பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் மகேந்திரன் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உண்மையில் இலங்கையின் ஆளும் மேட்டுக்குடி தனது நண்பனான மகேந்திரன் தப்பியோட உதவி செய்துள்ளது.

பல மில்லியன் பெறுமதியான இந்த ஊழல் இழப்பானது, இறுதியில் இந்நாட்டின் சாதாரண குடிமக்களின் தலையின் மேலேயே ஏற்றப்படும். மேலும் குடிமக்களின் வாழ்க்கை செலவு அதிரிக்கும். இது குறித்து ஆளும் மேட்டுக்குடி கவலை கொள்ளப்போவது கிடையாது.

இன்னும் சில ஆண்டுகளில் மீண்டும் ஒரு தேர்தல் வரும் மக்களை ஏமாற்ற பொய் வாக்குறுதிகளுடன் இந்த மேட்டுக்குடி மலைவிழுங்கி மகாதேவன்கள் மீண்டும் வருவார்கள். இது தான் கடந்த பல சகாப்தங்களாக தொடருகின்ற கதை. 

இந்த பழைய கதையினை மாற்றி அமைத்து புதிய கதையினை எழுத வேண்டிய தேவை முன்னர் எப்போதையும் விட அவசியமானதாகி விட்டது. நவதாராளவாதம் குடிமக்களை சுரண்டக் கூடிய எல்லா வழிகளிலும் படுபயங்கரமான போராசையுடன் அலைந்து கொண்டிருக்கின்றது. இந்த நவதாராளவாதம் மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும் ஆளும் மேட்டுக்குடியினருக்கு எதிராக மக்கள் எழுச்சி அடையாத வரையும் மக்களின் பணத்தை மோசடி செய்யும் நல்லாட்சி அரசு – மகேந்திரன்களை விசாரணை அறிக்கைகள் மூலம் விரட்டிவிட முடியாது.