Sun09252022

Last updateSun, 19 Apr 2020 8am

ஜே.வி.பி…. மகிந்தா……. தமிழ் மக்கள்……..

நாம் இலங்கையர் அமைப்பினர் என்னும் பெயரில் ஜே.வி.பியினர் யாழ் நகரின் பேருந்து நிலையத்தில் காணாமல் போனோர் மற்றும் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும், அவர்களின் பெயர் விபரங்களை வெளியிடக் கோரியும், ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தி இருந்தது. அதில் கலந்து கொள்ளவென யாழ் சென்ற ஜே.வி.பி இன் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பலரை, பாசிச மகிந்த அரசின் கூலிப் படை தாக்கியது.  அத்துடன்  ஆர்ப்பாட்டத்தின் போது கல் மற்றும் கூழ் முட்டைகளை வீசியது. அதனை நடத்தவிடாது குழப்ப முயன்றதை பத்திரிக்கை செய்திகளும், காணொளிகளும, படங்களாகவும் வெளிவந்தது.

யார் இந்த ஜே.வி.பி.யினர்??

 

 

ஜே.வி.பி அமைப்பானது ரோகனவிஜயவீரா என்பவரினால் 1965 இல் ஸ்தாபிக்கப்பட்டது. இதற்கு முன்பு ரோகனா இலங்கை சீன சார்வு கம்யுனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்தவர். இவர்கள் 1971 இலும், 1987-89 இலும் ஆயுதமெந்திய போராட்டத்தை நடத்தியவர்கள். முதலில் சுதந்திரக் கட்சிக்கு, இறுதியாக ஜக்கிய தேசியக் கட்சிக்கும் எதிராக ஆயுதமேந்திய கலகங்களை நடத்தி, இரு தடைவைகளிலும் படுபயங்கரமான தோல்வியினை அடைந்தனர். அத்துடன் ரோகன விஜயவீரா உட்பட முக்கிய தலைவர்கள் கைதின் பின், அரசின் பொய்யான மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேநேரம் லட்சக்கணக்கான சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் சுட்டு, தெருவோரங்களில் சாக்குகளில் போட்டும், எரித்தும் கொல்லப்பட்டனர். இதன் பின்னனியில் ஆயுத எழுச்சிக்கு முடிவுகட்டப்பட்டது. பலர் சிறைப்பிடிக்கப்பட்டனர். சோமவன்ச போன்ற சிலர் தப்பி அந்நிய நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

இவ்வாறு எஞ்சியோர்கள் மீண்டும் 1994ம் ஆண்டு ஜே.வி.பியை அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தி, பாராளுமன்றத்தினுள் பிரவேசித்தனர். அத்துடன் அந்த சகதியில் புரண்டு எழும்புகின்றனர். இவர்கள் தான் மகிந்தா முதல் தடவை ஆட்சியை கைப்பற்ற முதுகெலும்பாக நின்றதுடன், சிறுபான்மை மக்களிற்கு எதிராக அரசுக்கு தோள் கொடுத்தனர். முதலில் சந்திரிக்கா அரசுடன் சேர்ந்து இனவொடுக்கு முறைக்கு உதவியவர்கள். அனைத்து – அரசின் சட்ட மற்றும் போர் குற்ற நடவடிக்கைகளிற்கும், சிங்கள பேரினவாத வெறியுடன் முழு ஆதரவினையும் வழங்கியவர்கள் தான் இவர்கள்.  இவர்கள் அரசுடன் இருந்த காலத்தில் தான், பல எம் சகோதரர்கள் கடத்தப் பட்டு காணாமல் போயினர்.

ஜே.வி.பி இலங்கையில் இரு மொழி பேசும் மக்கள் மற்றும் பல்வேறு இன கலாச்சாரத்தினைக் கொண்ட சிறுபான்மை இன மக்கள் உள்ளனர் என்பதனை எக் காலத்திலும் ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர். மாறான இவர்கள் இலங்கையில் வாழ்பவர்கள் அனைவரும் இலங்கையர் என்றும், சிறுபான்மை இனம் என்று ஒன்று இங்கே இல்லை என்பதன் மூலம் சிறுபான்மை இன மக்களின் கலாச்சாரம் மொழி பிரதேசம் போன்ற தேசிய அடையாளங்களை மறுதலித்தே வந்துள்ளனர். இது அடிப்படையிலேயே இனவாதமே.

இலங்கையில் வரலாற்றில் சிங்கள இனவாத ஆட்சியாளர்கள் சுதந்திரம் அடைந்த காலம் முதல், தமிழ் மக்களை இனவாதக் கண்ணோடு அனுகிவந்தனர். இது யுத்தமாக மாறிய பின் கைது செய்வது, கொலை செய்வது, இனக் கலவரங்களை தூண்டி விடுவது, இனப்படுகொலை செய்வதும் சர்வ சாதரணமாக நடந்து கொண்டிருந்த சூழலில் ஜே.வி.பி அரசுடன் நின்று அதற்கு உதவியது.

ஆனால் ஜே.வி.பியின் கூட்டோடு ஆட்சியைக் கைப்பற்றிய மகிந்தாவின் ஆட்சிக் காலத்தில் தான், தமிழ் மக்கள் வகை தொகை இன்றி கைது செய்யப்பட்டனர். நீதி விசாரணை இன்றி சிறைகளில் அடைக்கப்பட்டதுடன், பெருமெடுப்பில் வெள்ளை வாகனங்களில் கடத்திச் சென்றனர். அத்துடன் காணாமல் போவதும், கொலை செய்யப்பட்டு வீதியோரங்களிலும், பற்றைக் காடுகளிலும் வீசப்பட்டனர். இதன் போதெல்லாம் இந்த ஜே.வி.பியினர் மகிந்த மாத்தையாவுடன் கூடியிருந்து, தமிழ் இனத்திற்கு எதிராக மகிந்தாவை விட மோசமான இனவாதத்தினை முன் வைத்து சந்தர்பவாத அரசியல் செய்து கொண்டிருந்தனர். அப்போது எல்லாம் இந்த கடத்தல், காணாமல் போதல், கைது செய்து நீண்ட நாட்கள் விசாரணையின்றி சிறையில் அடைத்து வைத்திருத்தல்கள் எல்லாம், இவர்களின் கண்ணிகளிற்கு புலப்படவில்லை. தமிழ்மக்கள் படும் துயரங்கள் புரியவில்லை.

மகிந்தா முதுகில் குந்தி  இருந்த ஜே.வி.பியினை இரண்டாக பிளந்து  உதைத்த பின்பு தானோ, தமிழ் மக்களின் மேல் கரிசனை வருகின்றதோ? ஆனால் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை இன்றும் எற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்ந்தும் சந்தர்ப்பவாத அரசியல்தான். இன்று யாழில் இவர்கள் நடத்தும் நாம் இலங்கையர் கூத்து, இவர்களின் சந்தர்பவாத அரசியலிற்கு மேலும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

உண்மையில் காணாமல் போனோர் மற்றும் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும், அவர்களின் பெயர் விபரங்களை வெளியிடக் கோரியும், மகிந்தவினையும் அரசினையும், ஏன் ஜே.வி.பியினைரையும் நோக்கி குரல்களை எழுப்புவது நியாயமானதாகும்.

மகிந்த பாசிசம்

1985இல் தமிழர் பிரதேசமெங்கும் பேச்சு கருத்து சுதந்திரம், மக்களிற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுக்க புறப்பட்ட விடுதலை இயக்கங்களினால் மறுக்கப்பட்டிருந்தது. பத்திரிக்கையாளர்களின் பேனாக்கள் முறிக்கப்பட்டு, அவர்கள் சுதந்திரமாக எழுதுவது தடுக்கப்பட்டிருந்தது. கல்விமான்கள் புத்திஜீவிகள் உயிர் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். எங்கும் கோபமும் விரக்கியும் ஜனநாயகத்தினை நேசித்தவர்களிடம் காணப்பட்டது. இக் காலத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் இயக்கம் ஒன்றினால் இனம் தெரியாமல் கடத்தப்பட்ட மாணவன் விஜிதரனை விடுவிக்க கோரி, ஆரம்பிக்கப்பட்ட மாணவர் போராட்டம் அன்று தமிழ் சழூகத்திடையே மறுக்கப்படடிருந்த பேச்சு, கருத்து, ஜனநாயக மறுப்பு என்பவற்றினை இனம் கண்டு அதனைக் கோரியது. அனைத்து இயக்கங்களை நோக்கி, அது கோரிக்கையாக்கியது. ஜனநாயகத்தினை நேசித்தவர்கள், இயக்ங்களின் அராஜகத்திற்கு உள்ளனோர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அணிதிரண்டு “பாதிச் சுதந்திரமே இந்த பாடுபடுத்துதென்றால் மீதிச் சுதந்திரமும் வந்தால் எப்படி இருக்கும்” என முழக்கமிட்டு போராடினர்.

1.மாணவர்கள் தங்களின் கோரிக்கைகளையும் கடத்தப்பட்ட மாணவனையும் விடுதலை செய்யக் கோரியும் யாழ் நகரெங்கும் பெரிய சுவரொட்டிகளை எழுதி ஒட்டியிருந்தனர். குறிப்பாக புலி இயக்கத்தினர் மேற்கூறிய சுவரொட்டிகளின் ஒட்டிய பசை காயுமுன், அவற்றின் மேல் இறந்த தமது உறுப்பினர் ஒருவரின் அஞ்கலி சுவரொட்டிகளை ஒட்டினர். இப்படி  மாணவர்களின் கோரிக்கைகளை சாதாரண மக்களின் கண்களில் படவிடாமல் மறைக்க முயன்றனர்.

அண்மையில் தெற்கில் மகிந்த பாசிச அரசினை அம்பலப்படுத்தி சுவரொட்டிகளை ஒட்டிய போது, அரசு பொலீஸ்சை அனுப்பி அனைத்தையும் கிழித்தெறிந்தது.

 

2.பல்கலைக்கழக மாணவர்கள் தமது நியாயபூர்வமான கோரிக்கை முன்னிறுத்தி மக்களை தம்மோடு இணைந்துக் கொள்ள சிறு சிறு குழுக்களாக பிரிந்து யாழ் குடாநாடு மற்றும் வன்னிப் பகுதி நோக்கி கிராமம் கிராமமாக பயணித்தனர். மக்கள் அரசியல் மயப்படுதலையும் அணிதிரள்வதனையும் சகிக்க முடியாது புலிகள், தமது ஆதரவு குண்டர்களை அணிதிரட்டி இந்த மாணவர்கள் மீது வெறித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டனர். இதன் போது பல மாணவர்கள் மிக மோசமான தாக்குதல்களிற்கு உள்ளானதுடன்,  மண்டை உடைக்கப்பட்டு அடிக்காயங்களிற்கும் உள்ளானர்கள். அவர்களின் உடைமைகளும் களவாடிச் செல்லப்பட்டன.

அண்மையில் களனி பல்கலைக்கழக மாணவர்களின் அரசிற்கெதிரான ஆர்ப்பாட்டத்தினை மகிந்தா தனது ஆதரவு பொலீஸ் குண்டர்களின் துணையுடன் அடக்கி ஒடுக்கினான்.

 

இன்று  யாழ் மண்ணில் மகிந்த பாசிசத்தை, தம் சந்தர்ப்பவாத அரசியலுக்காக அம்பலப்படுத்த முனைந்த முன்னாள் கூட்டாளிகளை மகிந்தாவின் குண்டர்கள் படை பட்டப்பகலில் அடித்து மண்டையை உடைத்துள்ளது. கூழ் முட்டை எறிந்து ஆர்ப்பாட்டத்தை குழப்பவும் முயன்றிருக்கின்றது.

எம் தாய் மண்ணில் சிம்மாசனக் கனவுகளுடன் உலா வந்த அராஜகவாதிகள், விடுதலையின் பேரால் பாசிச வெறிகொண்டாடி மக்களை சொல்லொணத் துயரங்களிற்கெல்லாம் உள்ளாக்கினர். இதன் மூலம் எதிரிக்கு கொல்லக் கொடுத்தும், தாமும் கொன்றும் இறுதியில் முற்றாக அழிந்து போனார்கள். எம்மக்களை நடு வீதியில் அரசியல் அநாதைகளாக்கி விட்டுள்ளனர்.

மகிந்தா மன்னனும் இந்த மக்கள் விரோத பாசிசப் பாதையில் பவணி வருகின்றார். இந்த பாசிச மன்னனை பாடையில் கட்டி அனுப்ப மக்கள்  தயாராக வேண்டும். இல்லையெனில்  இன்னும் பல்லாயிரம் உயிர்கள் அநியாயமாக பறிக்கப்படுவது நிச்சயம்.

மக்கள்

இலங்கை அரசின் பாசிசத்திற்கு எதிராக அடக்கப்படும் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராடினால் தான், நாம் மகிந்த பாசிசத்தினையும் அதற்கு துணை புரியும் அந்நிய சக்திகளையும்  வெற்றி கொள்ள முடியும். நாம் எமது போராட்டத்தின் நியாயத் தன்மையினை பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இன மக்களுடன் பகிர வேண்டும். அவர்களுடன் பரஸ்பரம் புரிந்துணர்வுக்கு வருதல் மூலம் தான்,  சிங்கள பேரினவாதத்தினை வெற்றி கொள்ள முடியும்.

காணாமல் போன அல்லது சிறையில் விசாரணை இன்றி இருக்கும் எமது தந்தை, தாய், சகோதரன், சகோதரி மற்றும் உறவுகளுக்காக போராடுவதனையும், நியாயம் கேட்பதனையும் யாரும் தடை போட முடியாது. எமது போராட்டத்தினை ஜே.வி.பி போன்ற சந்தர்ப்பவாத அரசியல் செய்பவர்களும், பாசிச மகிந்தாவுடன் பின் கதவு வழி சென்று உறவு கொள்வோரும், மகிந்தாவின் ஒட்டுண்ணிகளும், தமது சொந்த சுயலாபத்திற்கு பயன்படுத்துவது தொடருகின்றது. இதை எப்போது மக்கள் மறுக்கின்றனரோ, அன்றுதான் எம் மக்களின் விடிவு கிடைக்கும்.